உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/046-150

விக்கிமூலம் இலிருந்து

ஞாழல்
காசியா சொபீரா (Cassia sophera, Linn.)?

சங்க இலக்கியங்கள் ஞாழலை ஒரு சிறு மரம் போலச் சித்தரிக்கின்றன. இதன் தாவரப் பெயரைக் கலைக்களஞ்சியம் காசியா சொபீரா என்று குறிப்பிடுகின்றது. இதற்கு உலக வழக்குப் பெயர் ‘பொன்னாவாரை’ என்பது. ஆகவே ‘ஞாழல்’ என்பது பொன்னாவாரைதானா என்பது சிந்திக்கப்பாற்பாலது. இதன் பூ மிகச் சிறியது. மஞ்சள் நிறமானது. நறுமணமுள்ளது. காமனின் இளவல் சாமவேள் நிறத்தை ஒத்தது என்கிறார் கலித் தொகையில் நல்லந்துவனார்.

சங்க இலக்கியப் பெயர் : ஞாழல்
தாவரப் பெயர் : காசியா சொபீரா
(Cassia sophera, Linn.)

ஞாழல் இலக்கியம்

‘ஞாழல்’ ஒரு பெரிய புதர்ச் செடி போலும்! சங்க நூல்களில் இது சிறு மரம் போலப் பேசப்படுகிறது. இதன் தழைகள் பசுமையானவை. இவற்றை இளமகளிர் தழையாடையாக உடுப்பர். இளந்தழைகளைக் கொய்த பின்னர், திரும்பவும் தழைக்கும். இத்தழை மேலும் அழகுடையது. அதனால் இதனைக் ‘குமரி ஞாழல்’ என்றார் சேந்தங் கண்ணனார். கணணஞ் சேந்தனார் என்னும் புலவர் ‘கன்னி இளஞாழல்’ [1] என்று குறிப்பிடுகின்றார். இளங்கோவடிகள் இதனைக் ‘கன்னிநறுஞாழல்’ [2] என்று கூறுகின்றார். இறையனார் அகப்பொருளுரைகாரர். இதனைப் ‘பாவைஞாழல்’ என்றுரைக்கின்றார்.

“கானல் ஞாழல் கவின் பெறுதழையன்”-ஐங். 191: 8

“. . .. . .. . .. . . . தழையோர்
 கொய்குழை அரும்பிய குமரிஞாழல்”
-நற். 54 : 9-10

“பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையொடு”
இறை. அகப். நூற்பா உரை.


ஞாழல், நெய்தல் நிலத்துக் கடற்கரையில் மணற்பாங்கில் நீர் ஓடுகின்ற காவிடத்தே நிழல் பரப்பித் தழைத்து வளரும் என்றும், இதன் முதிர்ந்த பூங்கொத்தைத் தலை முடியில் கமழ முடிப்பர் என்றும் புலவர்கள் கூறுவர்.

“கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
 தெண்திரை மணிப்புறம்தை வரும்”
-நற். 54 : 10-11

“எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ”-ஐங். 141

“ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்
 கொழுநிழல் முதிர் இணர் கொண்டு
 கழும முடித்து. . . . . . . . . . . . . . . . ”
-கலி, 56 : 1-3

‘ஞாழல் ஓங்கிய’ , ‘கருங்கால் ஞாழல்’ ‘சிறியிலைப் பெருஞ்சினை’ , ‘கருங்கோட்டு இருஞ்சினை’, ‘கொழுநிழல் ஞாழல்’ என்றெல்லாம் கூறப்படுதலின் ‘ஞாழல்’ ஒரு சிறுமரம் எனக் கொள்ள இடமுண்டு.

மேலும், நல்லந்துவனார் இளவேனிற் காலம் வந்த அழகைப் புலப்படுத்துவதற்கு இணர் ஊழ்த்த பல மரங்களைக் கூறுகின்றார். அவற்றுள் ஒன்று, சாமனைப் போல மஞ்சளும், செம்மையுமான நிறம் விளங்கிய ஞாழல் மலர்ந்துள்ளது என்று கூறுகின்றார். இவர் இங்கே குறிப்பிடும் மலர்கள் அனைத்தும் சங்க இலக்கிய மரங்களின் மலர்கள் ஆகும்.

“ஒருகுழை ஒருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்
 பருதியம் செல்வன்போல் நனைஊழ்த்த செருந்தியும்
 மீன்ஏற்றுக் கொடியோன்போல் மிஞிறுஆர்க்கும் காஞ்சியும்
 ஏனோன்போல் நிறம்கிளர்பு கஞலிய ஞாழலும்
 ஆன்ஏற்றுக் கொடியோன்போல் எதிரிய இலவமும் ஆங்குத்
 தீதுசீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோல
 போதுஅவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற
 நோதக வந்தன்றால் இளவேனில் மேதக”
-கலித். 26 : 1-6

ஞாழல் பூ செவ்விய நிறமுள்ளது; ஐயவியன்ன மிகச் சிறிய பூ; பொன்னிறங் காட்டுவது; நறுமணம் உள்ளது; தினையரிசியைப் போன்றது. ஆரல் மீனின் முட்டைகளை ஒத்தது. அம்முட்டைகள் தொகுப்பாக உள்ளபோல ஞாழல் மலர்க் கொத்துமிருக்கும் என்கின்றனர் புலவர்கள்.

“நறுவீ ஞாழல்”-குறுந். 318 : 2

“பொன்வீ ஞாழல்”-அகநா. 70 : :9

“செவ்வீ ஞாழல்”-அகநா. 240 : 1

“சிறுவீ ஞாழல்”-நற். 315 : 6

„ „-குறுந். 328 : 1

“ஐளவின்ன சிறுபூ ஞாழல்”-குறுந். 50 : 1

“நனைமுதிர் ஞாழல் தினை மருள் திரள்வீ”-குறுந். 397 : 1

கடற்கரையின் மணல் மேட்டில் வளர்ந்த ஞாழல் மரத்தின் மலர்கள் உதிர்ந்துள்ளன. நண்டுக் கூட்டம் அவற்றின் மேல் ஓடுகின்றன. அது நண்டுகளின் கால்களால் கோலமிட்டது போன்றுளது. இதனை உவமிக்கிறார் ஒரு புலவர். காய வைத்துள்ள தினையை அழகிய மகளிர் கையால் துழாவுவது போன்றுள்ளது எனறு.

“எக்கர் ஞெண்டின் இருங்கிளைத் தொகுதி
 இலங்கு எயிற்று ஏஎர்இன் நகைமகளிர்
 உணங்குதிணை துழவும் கைபோல் ஞாழல்
 மணங்கமழ் நறுவீ வரிக்கும் துறைவன்”
-நற். 267 : 2-5

இத்துணைச் சிறப்பிற்றாகிய ஞாழல் பூ, புலி நகத்தை ஒத்தது என்று கூறும் கல்லாடம்[3]. இதனை வைத்துக் கொண்டு புலிநகக்கொன்றை என்றார் உ. வே. சா. சேந்தன் திவாகரம் இதற்கு ‘நறவம்’, ‘கள்ளி’ என்ற பெயர்களைக் கூறுகின்றது [4].இவையன்றி, கோவை. இளஞ்சேரனாரும் இது பொன்னாவாரை அன்று என்று குறித்துள்ளார். ஆனால், அந்நூலின் பிற்சேர்க்கையில் ஆங்கிலப் பெயராகக் ‘காசியா சொபீரா’ என்று காட்டப்பட்டுள்ளது. இப்பெயரையே கலைக்களஞ்சியமும் கூறுகிறது.

ஆனால் ‘ஞாழல்’ பொன்னாவாரையாக இருக்க முடியுமா என்பது சிந்திக்கற்பாலது. பொன்னாவாரை மரமன்று; ஒரு புதர்ச்செடி எனினும், இப்போதைக்கு இதனை இப்பெயர் கொண்டே தாவரவியல் குறிப்புகள் தரப்பட்டுள்ளன, கேள்விக் குறியிட்டு.

ஞாழல் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflora)
ரோசேலீஸ் (Rosales)
தாவரக் குடும்பம் : சிசால்பினாய்டியே (Caesalpinoideae)
தாவரப் பேரினப் பெயர் : காசியா (Cassia)
தாவரச் சிற்றினப் பெயர் : சொபீரா (sophera)
சங்க இலக்கியப் பெயர் : ஞாழல்
தாவர இயல்பு : புதர்ச்செடி. மிக அழகானது.
இலை : சிறகன்ன கூட்டிலை; இரண்டிரண்டாக 5-10 அடுக்கான சிற்றிலைகள்.
மஞ்சரி : கலப்பு மஞ்சரி
மலர் : மஞ்சள் நிறமானது. பொதுவாக மலர்கள் பெரியவை.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள்
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள்
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள், இவற்றுள் 3-5 மலட்டு இழைகளாகி விடும்.
சூலக வட்டம் : ஒரு செல், பல சூல்கள்.
கனி : ‘பாட்’ என்ற வெடியாக்கனி, தட்டையானது.
விதை : கனியின் குறுக்கே அமைந்துள்ளன.


  1. திணை. ஐ: 49
  2. சிலப்: 7:9:2
  3. “பொன்று ஞாழல் புலிநகம் கடுக்கும்”-கல்லாடம். 50 : 6
  4. “நறவம் சுள்ளி நாகம் ஞாழல்”- சேந்தன் திவாகரம்.