சங்க இலக்கியத் தாவரங்கள்/045-150
கொன்றை–கடுக்கை
காசியா பிஸ்டுலா (Cassia fistula, Linn.)
‘கொன்றை’யைத் ‘தூங்கிணர்க் கொன்றை’ என்றார் கபிலர் (குறிஞ். 86). தொங்குகின்ற இயல்பை உடைய இதன் நீண்ட பூங்கொத்தை மேல் நோக்கி வளைத்துக் கட்டி வைத்தாலும் இதன் இணர் திரும்பத் திரும்ப கீழ் நோக்கியே வளரும். இதன் இயல்பைப் பல சோதனைகள் செய்து கண்டு கொண்டோம். இதற்குச் ‘சரக்கொன்றை’ என்ற பெயரும் உண்டு. கொன்றை மரம் சிறியது. மலர்களில் பொன் நிறமான மஞ்சள் இதழ்கள் உள்ளன. பூத்த நிலையில் இம்மரம் மிக அழகாக இருக்கும். இது கார் காலத்தில் பூக்கும்.
சங்க இலக்கியப் பெயர் | : | கொன்றை |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் | : | கடுக்கை |
பிற்கால இலக்கியப் பெயர் | : | இதழி, தாமம், மதலை, ஆர்க்குவதம் |
உலக வழக்குப் பெயர் | : | சரக்கொன்றை, கொன்றை |
தாவரப் பெயர் | : | காசியா பிஸ்டுலா (Cassia fistula, Linn.) |
கொன்றை–கடுக்கை
இலக்கியம்
கொன்றை இலை பல்லலகுடைய கூட்டிலை; இதில் எட்டு முதல் பதினாறு வரையிலான சிற்றிலைகள் காணப்படும். சிற்றிலைகள், சற்று நீண்ட முட்டை வடிவானவை. இம்மரம் முல்லை நிலத்தைச் சார்ந்தது. கார்காலத்தில் பூக்கும். தலைவியைப் பிரியும் கலைவன், இம்மரம் பூப்பதற்கு முன் வருவதாகக் கூறிச் செல்லுதலும், வருந்துணையும் தலைவி ஆற்றியிருத்தலும், அவன் வாராவழி ஆற்றொணாது அவலம் உறுதலும், ஒரோவழி அவன் கூறிய பருவத்திற்குள் வந்து அவளுடன் கூடியுறைதலும் ஆகிய இவை பற்றிய பண்டைத் தமிழ்ப் பாக்களில் கொன்றை பல படியாகப் பயிலப்படுகின்றது. இந்நாளில் வைகாசி, ஆனி மாதங்களிலேயே கொன்றை பூத்து விடுகின்றது. பூக்கள் நல்ல மஞ்சள் நிறமானவை; நீண்ட கொத்தாகப் பூக்கும் இயல்பு உடையவை. பூங்கொத்து மரத்தில் கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். இதனைத் ‘தூங்கினர்க் கொன்றை’ (குறிஞ். 86) என்று கபிலர் கூறுவர்.
“நீடுசுரி இணர சுடர்வீக் கொன்றை”-நற். 302
“வயங்கிணர்க் கொன்றை”-கலி. 102
“மெல்லிணர்க் கொன்றை”-கலி. 103
“முறியிணர்க் கொன்றை ”-முல்லைப். 94
“நள்ளிணர்க் கொன்றை”-அகநா. 197
“நீடிணர்க் கொன்றை”-அகநா. 384
என்றெல்லாம் வருவனவற்றைக் காண்க. மேலும் கொன்றை மரம் மலையிடத்தே பூத்திருப்பதைப் பார்க்கிறார் இளவேட்டனார் :
“பொன்தொடர்ந் தன்னதகைய நன்மலர்க் கொன்றை
ஒள்ளிணர் கோடுதோறும் தூங்க”-நற். 221 : 3-4
“பொற்காசினைத் தொங்க விட்டாற் போன்ற அழகினை உடைய நல்ல மலர்களுடன் கூடிய சரக்கொன்றையின் ஒள்ளிய பூங்கொத்துக்கள் அதன் கிளைகள் தோறும் தொங்குகின்றன” என்கின்றார்.
சங்கத் தமிழில் கொன்றை மலரைப் பொன் மலராகப் பேசும் மரபு மிகுந்து காணப்படுகின்றது. ‘கொன்றை நன்பொன்கால’ (முல்லைப் : 94) என்று கொன்றைப் பூ பொன்னின் ஒளியை வீசுவதாகக் கூறுவர். அதிலும் பொன்னின் மாற்றுப் பார்த்தவர் போல், ‘நன்பொன்’ என்றார். மேலும்,
“பொன் கொன்றை”- பொருந: 201
“கொன்றைப் பொன்னேர் புதுமலர்”-அகநா. 242 : 1
“பொன்னெனக் கொன்றை மலர”-நற்: 242 : 1
“பொன்வீக் கொன்றை”-ஐங். 246 : 8
“பொன்னென மலர்ந்த கொன்றை”-ஐங். 420 : 1
“சுடுபொன் அன்ன கொன்றை சூடி”-ஐங். 432 : 2-3
“நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன”
-பரிபா. 14 : 10
என்றெல்லாம் புலவர் பெருமக்கள் புகழ்ந்துரைப்பர். அதற்குக் காரணம். கொன்றை மலரின் இதழ்கள் பொற்காசு போன்று வண்ணமும், வடிவமும் உடைமையின் எனலாம். மேலும், பேயனார் பொன் நிறைத்து வைத்த பேழை ஒன்றைக் காண்கின்றார். “கவலைக் கிழங்கு தோண்டி எடுத்ததால், ஓர் அகன்ற குழி உண்டாகிறது. அதில் கொன்றையின் பூக்கள் விழுந்து நிறைந்திருக்கின்றன. இத்தோற்றம் பொன்னைப் பெய்து வைத்த பேழையைத் திறந்து வைத்தது போலத் தோன்றுகிறது” என்கிறார்.
“கவலைக் கெண்டிய கல்வாய்ச் சிறுகுழி
கொன்றை ஒள்வீ தாஅய், செல்வர்
பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன”-குறுந். 233 : 1-3
(மூய்-மூடி)
கொன்றை மலரின் பொன்னிறப் பொலிவும், புதுமலர் மெருகும், கொய்து சூடிக் கொள்ள அழைக்கும். முல்லை நிலத்துக் கோவலர் இதனைச் சூடி அணிந்து மகிழ்வர். இடைக்குலத்து மகளிர் குழலில் சூடிக் கொள்வர் இப்பொன் நேர் புது மலர் நறு நாற்றமும் உடைத்தாகலின், இதனை,
“பொன்செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் பூதுப்பூங் கொன்றை ”
-குறு. 21 : 2-3
என்றார் ஓதலாந்தையார்.
ஏறுதழுவலின் போது கொன்றைப் பூச்சூடிய ஆயர் மகள் அடையாளங் கூறப்படுகிறாள்.
“வென்றி மழவிடை ஊர்ந்தார்க் குரியள்இக்
கொன்றையம் பூங்குழலாள்”[1]
உழவர் முதலில் பொன் ஏர் பூட்டு ஞான்று கொன்றை மலரைச் குடிக் கொள்வர் எனப் பதிற்றுப்பத்து கூறும் .
“கடி ஏர்பூட்டுநர் கடுக்கை மலைய”-பதிற். 43 : 16
(கடுக்கை-கொன்றை)
போர்க்களத்து வீரரும் பனங்குருத்தைப் பிளந்த மடலுடன் கொன்றையைச் சூடினர்.
“நாறு இணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர் ”
-பதிற். 67 : 13
கொன்றை மலர் சிவபெருமானுக்கு உரியதாக்கப்பட்டது. சிவ பரம் பொருளுக்குரிய பூக்களில் கொன்றையே முதலிடம் பெற்றது. சங்க இலக்கியங்களில் சிவபெருமானை வாழ்த்தும் பாடல்களில் எல்லாம் சிவன் கொன்றை மலரைக் கண்ணியாகவும், தாராகவும், மாலையாகவும் சூடியிருப்பதாகக் கூறப்படுகின்றது. சிவனைக் கொன்றை வேய்ந்தான் என்பர்.
“கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
தாரன், மாலையன், மலைந்த கண்ணியன்”
-அகநா. 1 : 1-2
“எரி எள்ளுஅன்ன நிறத்தின் விரிஇணர்க்
கொன்றையம் பைந்தார் அகலத்தன்”-பதிற். 1 : 1-2
“கொலை உழுவைத் தோல் அசைஇ
கொன்றைத்தார் சுவல் புரள ”-கலித். 1 : 11
(சுவல்-தோள்)
“கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பிற் தாருங் கொன்றை ”-புறநா. 1 : 1-2
“கொன்றை வேய்ந்த செல்வன் இணையடி”
-தொல். பொருள். செய். 149 : பேரா. உரை
பாரதக் கதையில், எதிரிகளால் சூழப்பட்டு நிற்கும் அபிமன்யுவிற்காக வீமன் புகுந்தான். அவனைத் தடுக்க நினைத்த சயத்திரதன் சிவனிடத்துப் பெற்ற கொன்றையை வீமன் எதிரே ஏவினான். வீமன் அம்மாலையைக் கண்ட அளவில், கை தொழுது வீழ்ந்தான். இது கண்ட திட்டத்துய்மன் வீமனைப் பழித்தான். அதற்கு வீமன் அம்மாலையின் பெருமையைப் பேசுகின்றான் :
“எங்கள் குடிப்பிறந்தார் எல்லாம் இறந்தாலும்,
சங்கரன் நன்மாலைதனைக் கடவோம்”[2]
சிவனுக்கு எந்த அடியார் கொன்றையைச் சூட்டி, அவருக்கு அதனை உரியதாக்கினாரோ அறியோம். ஆனால், ஆத்தி மலரைச் சூட்டியவர் விசாரசருமர் என்பர் சேக்கிழார். தம் வழிபாட்டிற்குத் தடை செய்த தந்தையைத் தடிந்தவர் விசாரசருமர். அதனைப் பாராட்டிச் சிவபெருமான் இவரைச் சிவனடியார் அனைவருக்கும் தலைவராக்கினார்; தமக்கு ஒப்பாக அதிகாரம் கொடுத்தார். தாம் உண்ட கலன், உடுப்பவை, சூடுபவை யாவற்றையும் விசாரசருமருக்கு வழங்கி, சண்டேசுவரப் பதவியையும் அளித்தாராம். அப்பதவி வழங்கப்பட்டதன் சான்றிதழ் போன்று,
“. . . . . . . . . . . . . . . . . . அவர் முடிக்கு
துண்டமதி சேர்சடைக் கொன்றை
மாலை வாங்கிச் சூடினார்”[3] என்பர்
இது கொண்டு, கொன்றை ஒரு சான்றுப் பொருள் ஆகுமளவில், சிவபெருமான் முடி ஏறியதாயிற்று. விசாரசருமரும், ஆத்தியைச் சூட்டிக் கொன்றையைப் பெற்றுக் கொண்டார்.
இத்துணைச் சிறப்பிற்றாகிய கொன்றை ‘சரக்கொன்றை’ எனப்படும். இதனைப் பிங்கல நிகண்டு.[4] இதழ், கடுக்கை, தாமம், கொன்றை என்று சொல்லும். ‘மதலை, ஆர்க்குவதம் என்றாகும்’ என மேலும் இரண்டு பெயர்களைக் குறித்தது. எனினும், ‘கொன்றை’, ‘கடுக்கை’ என்ற பெயர்களே சங்க இலக்கியங்களில் காணப்படும் பெயர்களாகும்.
குறிஞ்சிக் கபிலர் குறிஞ்சிப் பாட்டினுள் “தூங்கிணர்க் கொன்றை” (86) என்று ‘பூங்கொத்துக்கள் தொங்கிக் கொண்டிருக்கும்’ இதன் இயல்பினைக் குறிப்பிடுகின்றார். இதன் உண்மையை நன்கறிதற் பொருட்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தாவரப் பூங்காவில் 1956-ஆம் ஆண்டில் ஒரு சிறு சோதனை செய்யப்பட்டது. கீழ் நோக்கித் தொங்குகின்ற இதன் பூங்கொத்து மேல் நோக்கித் தூக்கி வைத்துக் கட்டப்பட்டது. இங்ஙனம் மேனோக்கிக் கட்டப்பட்ட இவ்விணரின் நுனிப் பாகம் இரண்டு நாள்களில் திரும்பவும் கீழ் நோக்கி வளரத் தொடங்கிற்று. சற்று வளர்ந்த பின்னர், இவ்விணரின் நுனிப் பாகம், இரண்டு நாள்களில் திரும்பவும் கீழ் நோக்கி வளரத் தொடங்கிற்று. மறுபடியும், இவ்விணரின் நுனியைத் தூக்கி மேல் நோக்கிக் கட்டி வைத்துப் பார்த்ததில் திரும்பவும் இதன் நுனி இணர், கீழ் நோக்கியே வளர்ந்தது. அரும்புதலும், வளர்தலும் சிறிதும் குன்றவில்லை. இவ்வரும்புகளும், அதே மரத்தில் தொங்கிய ஒப்பிணர் அரும்புகளும் போதாகி, ஒரே நாளில் மலர்ந்தன. இச்சோதனையை, வேறு வேறு கொன்றை மரங்களில், வெவ்வேறினங்களில் பன்முறை செய்த பார்த்த போதிலும், இதன் பூங்கொத்து தன்னியல்பு மாறாது கீழ்நோக்கியே வளர்ந்தது. கொன்றையின் இவ்வரிய இயல்பினைத் தமிழிலக்கியம் ‘தூங்கிணர்க் கொன்றை’ என அங்ஙனமே கூறுவதை எண்ணுங்கால் உளம் பூரிக்கின்றது.
பூக்களில் பச்சை நிறமுள்ள ஐந்து புறவிதழ்களும், பொற்காசு போன்ற மஞ்சள் நிறமான ஐந்து அகவிதழ்களும் உள்ளன. அகவிதழ்களும் மகரந்தக் கால்களும் வடிவில் வேறுபாடு உடைமையின், ஒருபுறச் சமச்சீர் (Unilateral Symmetry) உடையதாக இருக்கும். மொட்டின் அடிப்பாகத்து அகவிதழ் சற்றுப் பெரியதாகவும், மேற்பாகத்து அகவிதழ்களை மூடிக் கொண்டுமிருத்தலின், இம்முகை அவிழுங்கால், தவளையின் வாய் போலத் தோன்றும் என்பார் இளங்கீரந்தையார்.
“செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாஅய பொலஞ் செய்கிண்கிணிக்
காசின் அன்ன போதீன் கொன்றை
குறுந்தொடு அலம்வரும் பெருந்தண் காலையும்
கார் அன்று என்றியாயின்
கனவோ மற்றுஇது வினவுவன் யானே ”-குறுந். 148
கொன்றை மரம் பொதுவாக மே, சூன் மாதங்களில் பூக்குமெனத் தாவரவியலார் கூறுப. கொன்றை மலர்தலைக் கார் காலத் தொடக்கத்தின் அறிகுறியாகக் கருதினர் தமிழ் மக்கள். இவ்வுண்மையை மேற்குறித்த குறுந்தொகைப் பாடலிலுங் காணலாம்.
“நாண் மலர்க்கொன்றையும் பொலந்தார் போன்றன
. . . .. . . .. . . .. . . .
கார்மலிந்தன்று நின்குன்று”-பரிபா. 14
என்பர் கேசவனார்.
தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், குறித்த பருவத்தில் திரும்புதல் உண்டு. எனினும், ஒரோவழி காலந் தாழ்ப்பானாயின் தலைவி துன்புறுதலும் அவன் வருந்துணையும் ஆற்றியிருக்குமாறு தோழி கூறுதலும் தமிழ் மரபு. தலைவியை ஆற்றப்புகும் தோழி அவள் ஏற்கும் வண்ணம் தக்க சான்று கூறித் தேற்றுதல் வேண்டும். பருவம் வருமளவும் ஆற்றுவித்த தோழி, அவன் குறித்த பருவ வரவின் கண், இனி ஆற்றுவிக்குமாறு எங்ஙனம் எனக் கவன்று ஒரு சிறு சூழ்ச்சி செய்கின்றாள். பருவங்கண்டழிந்த தலைவியை நோக்கி, ‘இது, அவன் குறித்த பருவமன்று’ எனக் கூறி ஆற்றுதல் வேண்டுமென வற்புறுத்தும் வகையில் எழுந்த பாட்டொன்றுளது. உண்மையில் மிகச் சிறந்த இக்குறுந்தொகைப் பாடலைக் கோவர்த்தனர் நன்கு பாடியுள்ளார்.
“மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங்கு அத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா வளவை தெரிதரக்
கொம்பு சேர்க் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே”-குறுந். 66
‘பிரிந்து சென்ற தலைவன், தான் திரும்புதற்குக் குறித்த காலம் இன்னும் வரவில்லை. காலமில்லாக் காலத்தில் பெய்த மழையைக் காரென மதித்து, இக்கொன்றை பூத்து விட்டது. முதுமையில் தட்டுத் தடுமாறி, வழி நடப்போர் போலக் கீழ் நோக்கி வளரும் பூங்கொத்துக்களை உடைய இக்கொன்றை மரம் மிக்க அறியாமை உடையது. ஆதலின் வருந்தற்க’ என்று தோழி கூறுவதாக அமைந்துள்ளது. இச்செய்யுளில் இயற்கை உண்மையை மறைக்க முனைகின்றது புலவர் உள்ளம். இதனால், பாட்டின் சுவை நலம் சிறிதும் குன்றாது சிறக்கின்றது. இக்கருத்தில் எழுந்த மேலுஞ் சில பாக்களும் உள:
“மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
கார்என் றயர்ந்த உள்ளமொடு தேர்வில்
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ வாகலின் மலர்ந்தன பலவே”-நற். 99 : 6-10
“ஏதில பெய்ம்மழை கார்என மயங்கிய
பேதையங் கொன்றைக் கோதைநிலை நோக்கி
எவன்இனி மடந்தை நின் கலிழ்வே”-ஐங். 462 : 1-3
“காசின் அன்ன போதீன் கொன்றை
குருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலையும்
காரன்று என்றி யாயின்
கனவோ மற்றிது வினவுவல் யானே ”-குறுந் . 148 : 3-6
பருவம் அன்று எனக் கூறிய தோழியிடம் தலைவி வினவுகின்றாள்: “கிண்கிணிக் காசினை ஒத்த முகையீன்று கொன்றை மலர்ந்துள்ளது. கொன்றை குருந்த மரத்துடன் காற்றினால் சுழல்வதாயிற்று. மிக்க தண்மையுடன் கார்ப்பருவம் தொடங்கி விட்டது. இப்பருவத்தைக் காரன்று என்றியாயின், இங்ஙனமெல்லாந் தோன்றுவது கனவோ? நானேதான் கேட்கின்றேன் தோழி” என்று.
இதற்கும் மேலாக, நெஞ்சையள்ளும் குறுந்தொகைப் பாடலும் ஒன்றுண்டு. உண்மையில் கார்காலம் தொடங்கி விட்டது. தலைவன் வரவில்லை.
தோழிக்குக் கவற்சி பெரிதாயிற்று. இதனை ஓர்ந்து உணர்கின்றாள் தலைவி. தனது தமிழ்ப் பண்பு புலப்படக் கூறுவாளாயினள்.
“தோழி! இது காண்! அவர் பொய் கூற மாட்டார். ஆகலின், புதுப் பூங்கொன்றைக் கானம் காரெனக் கூறுமாயினும், யானோ தேறேன். இது பருவமன்று” என்றுரைப்பதாக ஓதலாந்தையார் மிகத் திறம்படப் பாடுகின்றார்.
“பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானம் காரெனக் கூறினும்
யானோ தேறேன் அவர்பொய் வழங்கலரே”
-குறுந் , 21:2-5
இச்செய்யுளைப் பருவங் கண்டுழியும் அவர் பொய் கூறாரென்று தலைவி ஆற்றியிருந்ததற்கு மேற்கோளாகக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். அகத்: 14). மற்று, குறித்த பருவத்தில் தலைவன் வருவான் என்ற தோழி, தலைவிக்கு அறிவிப்பதுமுண்டு.
“வருவர் வாழி தோழி, புறவின்
பொன்வீக் கொன்றையோடு பிடவுத் தலையவிழ
இன்னிசை வானம் இரங்கும், அவர்
வருதும் என்ற பருவமோ இதுவே”-நற். 246 : 7- 10
தாவரவியலில் கொன்றை மரம், ‘சீசல்பினியே’ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் 133 பேரினங்கள் உள்ளன. கொன்றை உள்ளிட்ட காசியா என்ற பேரினத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்றினங்கள் உலகில் உள்ளன. இவற்றுள், தமிழ் நாட்டில் 20 சிற்றினங்கள் உள்ளன என்பர் ‘காம்பிள்’ (Gamble). காசியா பிஸ்டுலா எனப்படும் சரக்கொன்றையின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என டிஷ்லரும் (1922), இர்வின், டர்னர் என்போர் (1960) 2n=24, 28 எனவும், நந்தா (1962) 2n=24 எனவும், பந்துலு (1962) 2n= 28 எனவும் கூறுப.
கொன்றையின் காய் முற்றியவுடன் ஓரடி முதல் ஒன்றரையடி வரை நீண்டு, கருநிற முடையதாகவிருக்கும். விதைகள் தனித்தனி அறைகளில் முற்றுதற்கு ஏற்ப, காய் உள்ளீடு உடையதாக இருக்கும். இக்காயைப் பாணர் பறை அடித்தற்குப் பயன்படுத்தும் கோல் போன்றதென்பர்.
“புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியினர்
ஏகல்மிசை மேதக மலரும்”-நற். 296 : 4-5
“. . . . . . . . . . . . . . . . பாணர்
அயிர்ப்பு கொண்டன்ன கொன்றை அம்தீங்கனி
பறைஅறை கடிப்பின் அறைஅறையாத் துயல்வர”
-நற்.46:5ー7
கொன்றை—கடுக்கை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுப்பு | : | பைகார்ப்பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | சிசால்பினே (Caesalpineae) |
தாவரப் பேரினப் பெயர் | : | காசியா (Cassia) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | பிஸ்டுலா (fistula) |
தாவர இயல்பு | : | சிறு மரம் |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
கொன்றை
(Cassia fistula)
இலை | : | 20 முதல் 30 செ. மீ. நீளமுள்ள கூட்டிலை. |
சிற்றிலைகள் | : | 4 முதல் 8 இணையான இலைகள் இறகு அமைப்பில் உள்ளன. |
சிற்றிலை | : | 5 முதல் 15 செ.மீ. நீளமானது. நீள் முட்டை வடிவானது. |
மஞ்சரி | : | 30 முதல் 35 செ.மீ. நீளமான நுனி வளர் பூந்துணர். தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். இலைக் கோணத்தில் வளரும். |
மலர் | : | மஞ்சள் நிறமானது. 2 முதல் 3 செ.மீ. நீளமானது. மலர்க் காம்புடையது. 5 அடுக்கானது. சமச்சீரில்லாதது. பசுமையாக இருக்கும். மலர் பொன்னிற மஞ்சள் நிறமானது. நறுமணமுள்ளது. பொலிவானது. |
புல்லி வட்டம் | : | 5 பசிய எளிதில் உதிரும் இயல்புடைய இதழ்கள். |
அல்லி வட்டம் | : | 5 அழகிய பொற்காசு போன்ற இதழ்கள் அடியிதழ் சற்றுப் பெரியது. திருகு இதழமைப்பு ஆனது. |
மகரந்தத் தாள் | : | இயற்கையில் 10. சமமில்லாதன. 3 கீழ் மகரந்தத் தாள்கள் நீளமானவை . இரண்டு மிகவும் சிறியன. மலட்டு மகரந்தப்பையுடையன. 5 தாள்கள் அருகியிருக்கும். |
மகரந்தப் பை | : | நீண்ட தாள்களில் இரு பைகள் உச்சியில் உள்ள துளை வழியாக வெடிக்கும் இயல்பின. |
சூலக வட்டம் | : | சூற்பை-காம்புடன் காணப்படும். பல சூல்களை உடையது. சூல்தண்டு உள் வளைந்தது. சூல்முடி நுண்ணிய மயிர் இழைகளை உடையது. |
கனி | : | 30 செ.மீ. முதல் 50 செ.மீ. நீளமான வெடியாக் கனி. விதைகளுக்கு இடையே தடுப்புக்களைக் கொண்டது. விதைகள் குறுக்கே அமைந்துள்ளன. விதையில் முளை சூழ்தசை உள்ளது. |
காசியா பேரினத்திலுள்ள 340 இனங்களுக்குப் ‘பென்தம்’ என்பவர் தனி நூல் எழுதியுள்ளார். காசியா என்னும் இத்தாவரப் பேரினம், இமயம் முதல் கன்னியாகுமரி வரையிலும், மலேயா, பிலிப்பைன்ஸ் தீவுகளிலும், இலங்கையிலும், சீனாவிலும் வளர்கின்றது. இப்பேரினத்தில் 340 சிற்றினங்கள் உள்ளன என்பர் ஹூக்கர்.
சரக்கொன்றை இயல்பாக வளர்வதன்றி, அழகுக்காகப் பல தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றது. இதன் பூ, சிவனுக்குரியதாகலின், இதனைத் தெய்வ மலரென்பர்.
இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என டிஷ்லர் (1924) நந்தா (1962) என்போரும், 2n=26 என, பிரிசித்து (1966), 2n=28 என, பந்துலு (1946, 1960) என்போரும் 2n=24, 28 என இர்வின், டர்னர் (1960) என்போரும் கூறுவர்.