சங்க இலக்கியத் தாவரங்கள்/044-150

விக்கிமூலம் இலிருந்து
 

ஆவிரை
காசியா ஆரிகுலேட்டா (Cassia auriculata, Linn.)

கபிலர் ‘விரிமலர் ஆவிரை வேரல் சூரல்’ (குறிஞ். 71) என்று ஆவிரையைக் குறிப்பிடுவர். ‘ஆவிரை’ என்பதற்கு, நச்சினார்க்கினியர் ‘ஆவிரம்பூ’ என்று பொருள் கண்டார். இதனை ‘ஆவிரம்’ எனவும், ‘ஆவாரை’ எனவும் கூறுவர். இது ஒரு புதர்ச் செடி. ஓரிரு ஆண்டுகள் வாழும். மலர்கள் மஞ்சள் நிறமானவை. புலவர்கள் இம்மலர் பொன்னை ஒத்த மஞசள் நிறமானது என்பர்.

சங்க இலக்கியப் பெயர் : ஆவிரை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : ஆவிரம்
பிற்கால இலக்கியப் பெயர் : ஆவாரை
உலக வழக்குப் பெயர் : ஆவாரை, ஆவாரம்பூ,, ஆவாரம்
தாவரப் பெயர் : காசியா ஆரிகுலேட்டா
(Cassia auriculata, Linn.)

ஆவிரை இலக்கியம்
கபிலர் “விரிமலர் ஆவிரை வேரல் சூரல்” (குறிஞ், 71) என்று கூறிய பகுதியில் உள்ள ஆவிரை என்பதற்கு ஆவிரம்பூ என்று நச்சினார்க்கினியர் பொருள் கண்டார். தொல்காப்பியத்தில் ‘ஆவிரை’ என்னும் சொல் குறிக்கப்பட்டு, புணர்ச்சி விதி பெற்து உள்ளது. ஆவிரை பூ என்புழி, வல்லின முதல் மொழியோடு புணரும் போது ஆவிரையின் இறுதி ஐ கெட்டு ‘அம்’ சாரியை பெற்று ஆவிரம்பூ என்றாகும். இது கலித்தொகையில் ஆவிரம் என்றும், பிற்காலத்தில் ஆவாரை என்றும் பேசப்படும். பிங்கலம் [1] இதற்குப் பகரி என்றதொரு பெயரைப் பகரும்.

ஆவாரை ஒரு குற்றுச்செடி. இதன் மலர் மஞ்சள் நிறமானது. ‘விரிமலர்’ ‘ஆவிரை’ என்பதற்கேற்ப இப்பூவில் உள்ள ஐந்து (அல்லியிதழ்கள்) அகவிதழ்களை நன்கு விரித்து, இது மலரும். மலர் பொன்னையொத்த மஞ்சள் நிறமானது என்பர் புலவர்.

“பொன்னேர் ஆவிரப் புதுமலர்”-குறுந். 173 : 1

“அடர்பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங்கண்ணி”
-கலி. 140 : 7


இதனைக் ‘களரிஆவிரை’[2] என்றதனால், சங்க நூல்கள் கூறும் ‘கள்ளிபோகிய களரியம் பறந்தலை’ என்ற வண்ணம் களர் நிலத்திலும் இது வளரும் என்ற உண்மை கூறப்படுகிறது.

இம்மலர் அகத்துறையில், மடல் ஏறுவான் சூட்டும் பூவெனக் குறிப்பிடப்படுகின்றது. ஆதலின், இப்பூவின் தொடர்புடைய இந்நிகழ்ச்சியைச் சங்கத் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு விளக்குவாம்.

காமம் மிக்க தலைவன் மடல் ஏறியாவது இவளை மணப்பேன் என்று சூளுரைப்பதுண்டு. பனை மடலால் குதிரையைப் போல ஓர் உருவத்தைச் சமைத்து, அதன் கழுத்தில், “அணிப்பூளை, ஆவிரை, எருக்கொடு” (கலி. 138 : 8) பிணித்த மாலையும், மணியும் அணிவித்துத் தலைவியின் உருவத்தை ஒரு படத்தில் எழுதிக் கையில் ஏந்தி, அதன் மேல் யாவரும் அறிய நாணை ஒழித்து, அழிபடர் உள்ளமொடு மல்லர் ஊர் மறுகின்கண் இவர்ந்து ‘எல்லீரும் கேண்மின்’ என்று கூறிக் கொண்டு வருதலை மடல் ஏறுதல் என்பர். அங்ங்னம் அவன் மடலேறி வருவதைக் கண்ட ஊரினர் ‘இவன் மடல் ஏறும்படி செய்தவள் இத்தலைவி’ என்று அவளை அவனுக்கு மணம் முடித்து வைப்பர். இவ்வுண்மையை உணர்ந்த ஒரு தலைவன், பாங்கியற் கூட்டத்தை விழைந்தான். பாங்கியோ அவன் குறையிரத்தலை மறுத்தாள். அவளை நோக்கி ‘தலைவியை அடைவதற்கு மடலேறுதல் என்றதொரு பரிகாரம் உண்மையின், நீ மறுத்தமையாற் கவலாது மடலேறத் துணிகின்றேன்’ என்று கூறுவானாயினன் (கலி. 139). இவ்வாறு கூறியவன் மேற்கொண்ட செயலைக் குறுந்தொகைப் பாடல் ஒன்று கூறும். ‘பொன்னைப் போன்ற இதழ்களையுடைய ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக் கட்டிய பல நூல்களையுடைய மாலைகளை அணிந்த பனங்கருக்கு மட்டைகளால் உண்டாக்கப்பட்ட மனச்செருக்கையுடைய குதிரையை, அதன் கழுத்திற் பூட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து, நாணத்தைத் தொலைத்து, மிகுந்த நினைவை உடைய உள்ளத்துள்ள காமநோய் மேன்மேலும் பெருக, இன்னவளால் உண்டாயிற்று இக்காம நோய் என்று யான் கூற, அக்கோலத்தைக் கண்ட இவ்வூரில் உள்ளார் எல்லோர்க்கும் முன்னே நின்று தலைவியினது பழியைக் கூறுவர். இவ்வுண்மையை உணர்ந்தவனாகலின் இவ்விடத்தினின்று போகின்றேன்’ என்று கூறிப் போகின்றான் என்பார் மதுரைக்காஞ்சிப் புலவர்.

“பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
 பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
 பூண்மணி கறங்க ஏறிநாண் அட்டு
 பழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப
 இன்னவள் செய்தது இதுஎன முன்நின்று
 அவள் பழி நுவலும் இவ்வூர்
 ஆங்குணர்ந்தமையின் இங்கு ஏகுமாறு உள்ளே”

-குறுந். 173


இஃதன்றி இதனை ஆடவர் கண்ணியாகவும், மகளிர் இதனைக் கோதையாகவும் அணிந்து விளங்கியதைக் காணலாம்.

“அடர்பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங்கண்ணி ”
-கலி. 140 : 7
“களரி ஆவிரைக் கிளர்பூங் கோதை
 வண்ண மார்பின் வனமுலைத் துயல்வர”

-அகநா. 301 : 14-15


ஆவிரை என்ற செடி தாவரவியலின் சிசால்பினியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. காசியா என்ற பேரினத்தைச் சார்ந்தது. இதனை உள்ளிட்ட இப்பேரினத்தில், பல சிற்றினங்கள் இந்தியாவில் வளர்கின்றன என்று ‘ஹூக்கர்’ என்பாரும், 20 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் உள்ளதாகக் ‘காம்பிள்’ என்பாரும் கூறுவர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=14, 16 என ஜாக்கப் (1940) என்பவரும், 2n=14, 16, 28 என இர்வின், டர்னர் (1960) என்போரும் கூறுவர்.

இது ஒரு நல்ல மருந்துச் செடி என்பர் சித்த மருத்துவ நூலார்.

ஆவிரை
(Cassia auriculata)

ஆவிரை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அகவிதழ் பிரிந்தவை-காலிசிபுளோரே
தாவரக் குடும்பம் : சிசால்பினியே (Caesalpineae)
தாவரப் பேரினப் பெயர் : காசியா (Cassia)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆரிகுலேட்டா (auriculate)
தாவர இயல்பு : ஓரிராண்டுகள் வாழும் புதர்ச் செடி.
தாவர வளரியல்பு : மீசோபைட். மற்றும் அளர் நிலத்திலும் வளரும்.
இலை : அடியிலும், முடியிலும் குறுகிய 8-12 சிற்றிலைகளைக் கொண்ட பசிய கூட்டிலை.
இலையடிச் செதில் : சிறப்பானது. இலையடிக் காம்பின் இரு புறத்திலும் அகன்ற இதய வடிவான (காது வடிவான) பசிய இலையடிச் செதில்கள் காணப்படும்.
மஞ்சரி : கிளை நுனியில் ஆனால் இலைக் கோணத்தில் நுனி வளராப் பூந்துணர் கொத்தாகத் தோன்றும். ‘காரிம் போஸ்’ எனப்படும்.
மலர் : பளிச்சென்ற மஞ்சள் நிறமானது. பெரியது. 2-3 செ.மீ. நீள, அகலமுடையது. ‘விரிமலர் ஆவிரை’ என்பது பொருந்தும் அளவுக்கு அகவிதழ்கள் விரிந்து மலரும்.
புல்லி வட்டம் : 5 சிறிய பசிய புறவிதழ்கள் அடியில் இணைந்து மேலே பிரிந்து இருக்கும்.
அல்லி வட்டம் : சிறந்த மஞ்சள் நிறமான அகன்ற 5 அகவிதழ்கள் அடி தழுவிய அமைப்பில் ஏறக் குறைய ஒரு மாதிரியாகவே இருக்கும். இதழ்கள் நன்கு பிரிந்து, பளபளப்பாகவே தோன்றும்.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள் பல வேறு உயரத்தில் உண்டு. அடியில் உள்ள மூன்று தாதிழைகள் சற்று நீளமானவை.
சூலக வட்டம் : இரு சூலக ஓரறைச் சூலகம். பல சூல்கள்.
கனி : பாட் (Pod) எனப்படும் உலர்கனி. காம்புடையது. 10-15 செ. மீ. நீளமானது.

இந்தியாவில் மத்திய மாநிலங்களிலும், கருநாடகத்திலும், சீலங்காவிலும் சாதாரணமாகத் தானே வளர்கிறது. தமிழ் நாட்டில் பலவிடங்களிலும், மலைப்புறத்திலும் பரவலாகக் காணப்படும். இது ஓர் அழகான புதர்ச் செடி. இதன் பட்டையில் ‘டானின’என்ற வேதிப்பொருள் உள்ளது என்பர்.



  1. பிங். நி. 2862
  2. க. நா. 301