சங்க இலக்கியத் தாவரங்கள்/049-150
திலகம்
அடினாந்தீரா பவோனினா (Adenanthera pavonina, Linn.)
கபிலர் ‘போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி’ (குறிஞ். 74) என்று திலகத்தைக் குறிப்பிடுகின்றார். ‘திலகம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘மஞ்சாடி மரத்தின் பூ’ என்று உரை கண்டார். திலகம் எனப்படும் மஞ்சாடி மரத்தின் பூ செந்நிறமானது. இதன் விதையும் செந்நிறமானது.
சங்க இலக்கியப் பெயர் | : | திலகம் |
உலக வழக்குப் பெயர் | : | மஞ்சாடி மரம், மஞ்சாடி; யானைக் குண்டுமணி |
தாவரப் பெயர் | : | அடினாந்தீரா பவோனினா (Adenanthera pavonina, Linn.) |
திலகம்
இலக்கியம்
மலைபடுகடாத்தில் நன்னன் சேய் நன்னனது அரண்மனை வாயிலில் காணப்படும் சந்தனம் முதலிய பொருள் வளத்தில் திலகப்பூவும் குறிப்பிடப்படுகின்றது.
“நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்”-மலைபடு. 520
இவ்வடியில் உள்ள ‘திலகம்’ என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘திலகப்பூ’ என்றாராயினும், ‘போங்கம் திலகம் தேங்கமழ் பாதிரி’ (குறிஞ். 74) என்புழி இதற்கு ‘மஞ்சாடி மரத்தின் பூ’ என்று உரை கூறியுள்ளார்.
சேர முனிவன் செய்தளித்த சிலம்பினை[1] அணிந்த சீரடிகளிலும் பெருங்கௌசிகனாரின் மலைபடுகடாத்துள்ளும் இவ்வடி அங்ஙனமே காணப்படுகின்றது. இதனுள் வரும் திலகத்திற்கு அரும்பத உரைகாரரும், அடியார்க்கு நல்லாரும் ‘மஞ்சாடி’ என்றே பொருள் கொண்டனர். நிகண்டுகளும்[2] ‘திலகம் மஞ்சாடி’ என ஒரே தொடரில் மஞ்சாடி மரமாகக் குறிப்பிடுகின்றன.
நிறுத்தல் அளவைப் பெயர்களுள், பொன்னை நிறுக்கும் அளவைகளுள் ‘மஞ்சாடி’ என்பதும் ஒன்று. இது மஞ்சாடி மரத்தின் விதை; செந்நிறமானது. இதனை, ‘ஆனைக் குன்றிமணி’ என்றும் வழங்குவர். இது இரண்டு குன்றிமணி எடை கொண்டது. 32 குன்றிமணி எடையை ஒரு வராகனெடை என்பர் (ஒரு கிராம்). மாணிக்கக் கல் வகைகளில் ‘குருவிந்தன்’ என்பது ஒன்று. இதன் நிறத்திற்குத் திலக மலரின் நிறத்துடன், எட்டுப் பொருள்களின் நிறத்தைக் கூறியுள்ளனர். இதனை விளக்கும் பாடல் சிலப்பதிகார உரை[3] மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திலகம் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | காலிசிபுளோரே |
தாவரத் துணைக் குடும்பம் | : | மைமோசாய்டியே (Mimosoideae) |
தாவரப் பேரினப் பெயர் | : | அடினாந்தீரா (Adenanthera) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | பவோனினா (pavonina, Linn.) |
தாவர இயல்பு | : | மரம், வளமாக வளரும் இலையுதிர் மரம். |
இலை | : | இரட்டைப் பிரிவுள்ள சிறகன்ன கூட்டிலை. |
சிற்றிலை | : | ஓர் அங். நீள்முட்டை வடிவானது. பல சிற்றிலைகள் உள. இலையடிச் செதில் நுண்ணியது. விரைவில் உதிரும். |
மஞ்சரி | : | நுனி வளர் பூந்துணர். இலைக்கட்கத்திலும் கிளை நுனியிலும் கலப்பு மஞ்சரி போன்றது. |
மலர் | : | வெளிர் மஞ்சள் நிறமானது. அகவிதழ்கள் பிரிந்தவை. |
புல்லி வட்டம் | : | 5 பிளவுள்ள குறுகிய புனல் போன்ற புறவிதழ்கள். |
அல்லி வட்டம் | : | 5 அகவிதழ்கள். அடியில் கூம்பு போன்றது. |
மகரந்த வட்டம் | : | 10 தாதிழைகள்; அகவிதழ்களில் அடங்கியிருக்கும். ஒன்று, மூன்று, ஐந்து முதலிய அடுத்தடுத்த தாதிழைகள் நீளமானவை. தாதுப்பை சற்று நீளமானது. நுனியில் சிறு சுரப்பியுடன் இருக்கும். |
சூலக வட்டம் | : | ஓரறைச் சூலகம். பல சூல்களை உடையது. |
கனி | : | பாட் (Pod) எனப்படும் உலர் கனி. விதைகள் சற்றுத் தட்டையானவை. சிவப்பு நிறமானவை. அணிகலன்களுக்கும் பொன்னை நிறுத்தற்கும் பயன்படும். சிவந்த விதையுறை வலியது. |
மரம் வலியது. கட்டிட வேலைக்கும் மரப் பொருள்கள் செய்யவும் பயன்படும். தோட்டங்களில் வளர்க்கப்படும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை கணிக்கப்படவில்லை.