சங்க இலக்கியத் தாவரங்கள்/051-150

விக்கிமூலம் இலிருந்து
 

வாகை
அல்பீசியா லெபக் (Albizzia lebbeck, Benth.)

போரில் வெற்றி பெற்றோர் சூடுவது வாகை மலர்க்கொத்து. இது இலையுதிர் பெருமரம். எங்கும் வளர்கிறது. மலர் மங்கிய வெண்ணிறமானது. நெற்று நீண்டு பட்டையானது.

சங்க இலக்கியப் பெயர் : வாகை
தாவரப் பெயர் : அல்பீசியா லெபக்
(Albizzia lebbeck, Benth.)

வாகை இலக்கியம்
போரில் வெற்றி பெற்றவன் ‘வாகை சூடினான்’ என்பதே பெருவழக்காகும். வாகைப்பூவை ‘வெற்றிப்பூ’ என்று கூறும் சேந்தன் திவாகரம்.[1] போர்க்களத்தில் பேரரசர்களின் பெரும் படைகள் மோதிக் கொண்டு போர் புரிவதன்றி வேறு பல போர்களும் உண்டு. அவை ‘சொல்லானும், பாட்டானும், கூத்தானும் மல்லானும், சூதானும் பிறவற்றானும் வேறலாம்’ என்பர் நச்சினார்க்கினியர். இவ்வகையான போர்களில் வெற்றி எய்தினார் ‘வாகை’ சூடினாராவர். வாகைமலர் குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்றுள்ளது.

“வடவனம் வாகை வான்பூங் குடசம்-குறிஞ். 67

‘வாகை’ ஒரு பெரிய மரம். உயர்ந்து பரவிக் கிளைத்து வளரும். மலர் சற்று மங்கிய வெண்ணிறமானது. பளப்பளப்பானது. நறுமணமுடையது. மயிலினது குடுமி போன்ற துய்யினை உடையது. மலர்கள் கொத்தாகப் பூக்கும். கிளை நுனியில் இலைகளுடன் இப்பூவிணர் உண்டாகும். இதன் இலையைச் கவட்டிலை என்றும், இலையின் மேற்புறம் பசுமையாகவும், அடிப்புறம் புல்லென்று சற்று வெள்ளியதாகவும் இருக்குமென்றுங் கூறுவர் சங்கப் புலவர். இதன் காய், பட்டையானது; முதிர்ந்த இதன் நெற்று வெண்ணிறமானது; காற்றடிக்கும் போது, இதன் முற்றிய நெற்றிலுள்ள விதைகள் கலகலவென்று சிலம்பின் அரி போல ஒலி செய்யும் எனவும், ஆரியக் கூத்தர் கழையிற் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும் பொழுது கொட்டப்படும் பறையைப் போல, காற்றடிக்குங்கால், வாகை நெற்று ஒலிக்கும் எனவும் கூறுவர். வாகைப்பூ கொற்றவைக்குரியதாகலின் ‘கடவுள் வாகை’ எனப்படும்.

“மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை ”-அகநா. 136 : 10

“மல்குசுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல்
 குமரி வாகைக் கோலுடை நறுவீ
 மடமாந் தோகைக் குடுமியின் தோன்றும்
 கான நீளிடை”
-குறு. 347 : 1-4

“போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
 கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்ப
 பூத்த முல்லை புதல்சூழ் பறவை”
-பதிற்.ப. 66 : 14-16

“கூகைக் கோழி வாகைப் பறந்தலை”-குறுந். 303 : 3

“வாகை வெண்பூப் புரையும் உச்சிய
 தோகை”
-பரிபா. 14 : 7-8

“அத்தவாகை அமலைவால் நெற்று
 அரிஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக்
 கோடை தூக்கும் கானம் ”
குறுந். 369 : 13

“கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி
 வாகை வெண்ணெற்று ஒலிக்கும்
 வேய்பயில் அழுவம் முன்னியோரே”
-குறுந். 7 : 3-6

சிற்றரசன் நன்னனது கொங்கண நாட்டில் வாகை மரம் மிகுதி. அவன் வாகை மரத்தைக் காவல் மரமாகக் கொண்டான். அதனைக் கழங்காய்ச் சென்னி நார் முடிச் சேரல் என்பான் வெட்டி வீழ்த்தினான் என்றுரைப்பார் மூதெயினனார்.

“பொன்படு கொண்கான நன்னன் நன்னாடு ”-நற். 391 : 6

“பொன்அம் கண்ணி பொலந்தேர் நன்னன்
 சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த
 தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்”
-பதிற்.ப. 40 : 14-16

பாலை நிலப் பாதையில் வாகை மரம் நிழல் பரப்பி வளருமாகலின், இதன் நிழலில் வழிப் போகுநர் தங்குவர். மேலும், இவ்வாகை மரம் எங்கணும் வளர்கின்றதாகலின், இதன் நிழலில் ஊர் மன்றம் கூடும்.

வாகையைப் போன்று மிகப் பெரிய மரம் ஒன்றையும் இந்நாளில் எங்கும் வளரக் காண்கிறோம். இதுவும் வாகையின் தாவரக் குடும்பத்தைச் சார்ந்ததே. இது வாகை மரத்தைப் பல்லாற்றானும் ஒத்தது. இது கருவாகை எனப்படும்.

வாகை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : லெகுமினேசி (Leguminosae)
தாவரத் துணைக் குடும்பம் : மைமோசாய்டியே (Mimosoideae)
தாவரப் பேரினப் பெயர் : அல்பீசியா (Albizzia)
தாவரச் சிற்றினப் பெயர் : லெபக் (lebbeck)
சங்க இலக்கியப் பெயர் : வாகை
உலக வழக்குப் பெயர் : வாகை (மரம்)
தாவர இயல்பு : மிக உயர்ந்து கிளைத்துப் பரவிச் செழித்து வளரும் இலையுதிர் பெரு மரம். வறண்ட நிலத்தில் காடுகளிலும் வளரும். எல்லா மாநிலங்களிலும் வளர்கிறது.
இலை : கூட்டிலை, சிற்றிலைகள் அகன்று நீண்டிருக்கும் (1-2" X .5-.75") விளிம்பு மேற்புறமாக வளைந்திருக்கும். இலைக் காம்பின் நடுநரம்பிற்கு அடியிலுள்ளது மிகப் பெரியது. அடிப்புறத்தில் மென்மையான வெள்ளிய நுண் மயிர்கள் உள்ளன. அதனால் வெண்ணிறம் போலத் தோன்றும்.
மஞ்சரி : கிளை நுனியில் இலைக்கோணத்தில் கொத்தாகப் பூக்கும். இதன் இணரை ‘ஹெட்’ என்பர். மஞ்சரிக் காம்பு உள்ளது.
மலர் : பளபளப்பானது. மங்கிய வெண்ணிறமானது. மலரடிச் செதில்கள் 2 உள்ளன.
புல்லி வட்டம் : புனல் வடிவானது. மேற்புறத்தில் 5 பிளவுகளை உடையது.
அல்லி வட்டம் : புனல் வடிவானது. 5 அகவிதழ்கள் பிரிந்தவை.
மகரந்த வட்டம் : எண்ணற்ற மிக நீண்ட பசுமையான தாதிழைகள் அடியில் ஒரு கொத்தாக இணைந்திருக்கும். பூத்த மலரில் இவை அகலமாக விரிந்து பட்டிழைகள் போன்று அழகாகக் காணப்படும். நுனியில் சிறிய மகரந்தப் பைகளை உடையன. மெல்லிய நறுமணம் வீசும்.
சூலக வட்டம் : ஓரறைச் சூலக அறையில் பல சூல்கள் உண்டாகும்.
கனி : இதன் காய் நீளமானது. பட்டையானது. பசுமையானது. முற்றிய நெற்று வெள்ளிய வைக்கோல் நிறமானது. இலைகள் உலர்நத பின் நெற்றுகள் மட்டும் இருக்கும்.

இதன் பட்டையும், மரமும் கரும் பழுப்பு நிறமானவை. மரம் வலியது. பலகை கட்டடங்களுக்குப் பயன்படும்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=26 என பட்டீல் ஆர்.பி (1958) கணித்துள்ளார்.



  1. “வெல்லுநர் அணிவாகை வெற்றிப்பூவே”
    -சேந். திவா. மரப்பெயர்