சங்க இலக்கியத் தாவரங்கள்/102-150

விக்கிமூலம் இலிருந்து
 

முள்ளி

1. நீர் முள்ளி : ஆஸ்டெரகாந்தா லாஞ்சிபோலியா
(Asteracantha longifolia,Nees.)
2. சுழி முள்ளி : அக்காங்தெஸ் இலிசிபோலியஸ்
(Acanthus illicifolius,Linn.)

சங்க இலக்கியங்களில் கூறப்படும் முள்ளிச் செடிகள் இரு வேறு சிற்றினங்களைச் சார்ந்தவை. இவை இரண்டிலும் முட்கள் உண்டு. இவை இரண்டும் நீலநிறப் பூக்களை உடையன.

முள்ளி 1 : நீர் முள்ளி

இது மருத நிலச் சார்புள்ளது. இதன் முள் சற்று வளைந்திருக்கும். மலரின் அடிப்புறம் குழல் போன்றிருக்கும். வெண்ணிறமானது.

சங்க இலக்கியப் பெயர் : முள்ளி
தாவரப் பெயர் : ஆஸ்டெரகாந்தா லாஞ்சிபோலியா
(Asteracantha longifolia,Nees.)
முள்ளி 2 : சுழி முள்ளி

உப்பங்கழியிலும் கடலோரப் பகுதிகளிலும் செழித்துப் புதர் போன்று வளரும் செடி. இதிலும் முட்கள் உண்டு. இலை விளிம்புகளிலும் முட்கள் உள்ளன. இதன் மலர் நல்ல நீல நிறமானது.

சங்க இலக்கியப் பெயர் : முள்ளி
தாவரப் பெயர் : அக்காங்தெஸ் இலிசிபோலியஸ்
(Acanthus illicifolius,Linn.)

முள்ளி–1 . நீர்முள்ளி இலக்கியம்

முள்ளை உடையது முள்ளி என்றாலும், சங்க இலக்கியங்களில் இரு முள்ளிச் செடிகள் கூறப்படுகின்றன. ஒன்று, மருத நிலத்து வயல் வரப்புகளிலும், வாய்க்கால் கரைகளிலும் வளரும் வலிய சிறு செடி. இதற்கு நீர்முள்ளி என்றும், முள்ளி என்றும், மீன் முள்ளி என்றும் பெயர்கள் உண்டு.

மற்றொன்று, கடலோரத்தில் மணல் மேடுகளிலும், உப்பங்கழியில் நீர் நிலைகளிலும் புதர் போன்று செழித்து வளரும் மிக வலிய பெருஞ்செடி. இதற்குக் கழிமுள்ளி, கழுதை முள்ளி என்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.

இவையிரண்டும் சங்கப் பாடல்களில் கூறப்படுகின்றன.

இவையிரண்டிலும் நீல நிறப் பூக்களும், முட்களும் நிறைந்திருக்கும். நீர்முள்ளி என்ற மருத நில முள்ளிச் செடியில் உள்ள முள் சற்று வளைவாக இருக்கும். கழிமுள்ளி எனப்படும் நெய்தல் நில முள்ளிச் செடியில் மலிந்து உள்ள முட்கள் நேரானவை. இதனைக் கொண்டு, இவை இரண்டும் வேறெனக் கொள்ளலாம்.

முதற்கண் மருதநில முள்ளிச் செடியைப் பற்றிய விளக்கங்களைக் காண்பாம்.

“கூன்முள் முள்ளிக் குவிஇலைக் கழன்ற
 மீன்முள் ளன்ன வெண்கால் மாமலர்
 பொய்தல் மகளிர் விழவு அணிக்கூட்டும்”
–அகநா. 26 : 1-3

“கூன்முள் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
 நூலறு முத்தின் காலொடு பாறித்
 துறை தொறும் பரக்கும்”
-குறுந். 51 : 1-3

“. . . . . . . . . . . . முட்சினை
 முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக்
 கொடுங்கால் மாமலர் கொய்துகொண்டு, அவண”

-பெரும். 214-216


இம்முள்ளிச் செடி வளைந்த முட்களை உடையது எனவும், அரும்புகளைச் சூழ்ந்த கொம்புகளை உடையதெனவும், வளைந்த காலையுடைய மறிந்த வாயையும், நீல நிறத்தையுமுடைய பூவைக் கொண்டது எனவும், இம்மலர்களை மகளிர் கொய்து விழவு அணிக் கூட்டுவர் எனவும், மலரின் அகவிதழ்க் காம்பு மீன் முள்ளை ஒத்து வெள்ளியதாக இருக்குமெனவும், மலர்கள் குலையாகப் பூக்குமெனவும், முதிர்ந்த மலர் மட்டும் கழன்று, நீர்த் துறையில் பறக்குமெனவும் அறிய முடிகின்றது. இவ்வுண்மைகள் தாவரவியல் உண்மைகளோடு ஒத்திருத்தலின், இதன் தாவர இரட்டைப் பெயர் ஆஸ்டெரகாந்தா லாஞ்சிபோலியா என்று ஐயமறக் கணிக்க முடிகின்றது.

இம்முள்ளிச் செடி நிறைந்த கரையில் நண்டுகள் வந்து ஆம்பல் அறுக்கும் என்றும், இதன் வேர்களிடத்தே நண்டுகள் வந்து தங்கும் என்றும், இவற்றை மகளிர் பிடித்தும், முள்ளியில் பூத்த மலர்களைக் கொய்தும் விளையாடுவர் என்றும் இலக்கியம் கூறும்.

“முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
 புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும்”
-ஐங். 21 : 1-2

முள்ளி 1 நீர்முள்ளி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae)

பர்சொனேலீஸ் (Personales)

தாவரக் குடும்பம் : அக்காந்தேசி (Acanthaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஆஸ்டெரகாந்தா (Asteracantha)
தாவரச் சிற்றினப் பெயர் : லாஞ்சிபோலியா (longifolia)
சங்க இலக்கியப் பெயர் : முள்ளி
உலக வழக்குப் பெயர் : நீர்முள்ளி, முள்ளி, மீன்முள்ளி
தாவர இயல்பு : ஒரு வலிய செடி. ஈரமுள்ளவிடங்களிலும், மருத நில வரப்புகளிலும் வாய்க்கால்களிலும் வளரும்.
இலை : மெல்லிய பசிய நீண்ட இலை. 7 அங்குல நீளமும், ஓர் அங்குலம் வரை அகலமும் உள்ளது. கணுவில் 5-6 இலைகள்

தண்டைச் சுற்றி வளரும். அவற்றுடன் சற்று வளைந்த நீண்ட பல முட்கள் இருக்கும். ஒவ்வொரு கணுவிலும் மேற்புறத்தில் உள்ள இலைகள் சற்றுப் பெரியனவாக இருக்கும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில் பல நீலநிறப் பூக்கள் சற்று வளைந்த முட்களுடன் கூடி மலரும். காண்போருக்கு ஒரு பூங்கொத்துப் போலவே காணப்படும்.
மலர் : மலரடிச் செதில் இலை போன்றது. நீண்ட இரு சிறு செதில்களும் உண்டு. மலர் நீல நிறமானது.
புல்லி வட்டம் : நான்கு பிளவானது. மேற்புறத்தில் உள்ள புறவிதழ் பெரியது.
அல்லி வட்டம் : இரு உதடுகளை உடையது. மேல் உதட்டில் 2 அகவிதழ்கள் (இணைந்தவை) அடி உதட்டில் 3 அகவிதழ்கள் (இணைந்தவை) அடியில் இந்த 5 அகவிதழ்களும் இணைந்து, குழல் வடிவாக இருக்கும்.
மகரந்த வட்டம் : 4 தாதிழைகள், 2 நீளமானவை. தாதுப் பைகள் இரு செல்லுள்ளவை.
சூலக வட்டம் : 2 செல் உள்ள சூலகம் ஒவ்வொரு அறையிலும் நான்கு சூல்கள் உண்டாகும். சூல்தண்டு நுண்மயிர் அடர்ந்தது.
கனி : நீண்ட காப்சூல் என்ற வெடிகனி.
விதை : 4-8 விதைகள் வலிய விதைக் காம்பில் உண்டாகும். தட்டையானவை. நீரில் நனைந்தால், வெள்ளிய நுண்மயிர்கள் தோன்றும்.

இதனை ஒரு மருந்துச் செடி என்ப.

இதனுடைய முள்ளின் உள்ளமைப்பு இலையமைப்புடையதாக விருத்தலின், இதனை (ஸ்பைன்-Spine) மென்முள் என்றுதான் கூற வேண்டுமல்லாமல், (தார்ன்-Thorn) வன்முள் என்று அழைத்தல் கூடாது என்னும் கருத்தைப் புலப்படுத்தும் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது.

முள்ளி–2. கழிமுள்ளி இலக்கியம்

இந்த முள்ளிச் செடி உப்பங்கழியிடத்தே மிகுதியும் வளர்தலின், நெய்தல் நிலத்ததாகும். இதிலும் முட்கள் செறிந்திருக்கும். ஆயினும், முட்கள் வளைந்திரா. இதன் மலர் நீலமணி போன்று வண்ண வடிவ உவமங்களை உடையது.

“கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்”
-சிறுபா. 148


என்ற இவ்வடிகட்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘முதற் சூலை உடைய கழிமுள்ளி நீல மணி போலப் பூக்கும்’ என்பார்.

“மணிமருள் மலர முள்ளி அமன்ற”-அகநா. 236 : 1

என்றார் பரணரும்.

“மணிப்பூ முண்டகத்து மணல் மலிகானல்
 பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப”
-மதுரை. 96-97

என்ற அடிகளுக்கு ‘நீலமணி போலும் பூக்களை உடையவாகிய கழிமுள்ளிகளை உடைய மணற்குன்றுகள் மிக்க கடற்கரையிலிருக்கும் பரதவருடைய மகளிர் குரவைக் கூத்தின் ஒசையோடே கூடி ஆரவாரியா நிற்ப’ என்பார் நச்சினார்க்கினியர்.

முள்ளி—2. கழிமுள்ளி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae)
அகவிதழ் இணைந்தவை
பர்சொனேலீஸ் (Personales)
தாவரக் குடும்பம் : அக்காந்தேசி (Acanthaceae)
தாவரப் பேரினப் பெயர் : அக்காந்தெஸ் (Acanthus)
தாவரச் சிற்றினப் பெயர் : இலிசிபோலியஸ் (illicifolius)
சங்க இலக்கியப் பெயர் : முள்ளி
உலக வழக்குப் பெயர் : முள்ளி, கழிமுள்ளி, கழுதை முள்ளி.
தாவர இயல்பு : புதர் போன்று செழித்து வளரும் பெரிய செடி. பெரிதும் கடற்கரையிலும், உப்பங்கழியிலும், நிலத்திலும், நீரிலும் செழித்து அடர்ந்து வளரும் வலியதொரு செடி. முட்களை உடையது.
இலை : இறகன்ன பிளவுகளை உடைய நீண்ட இலை. இலை விளிம்பு முட்களை உடையது. இலைக் காம்பிற்கு மேல் முள் உண்டாகும்.
மஞ்சரி : செடி நுனியில் ‘ஸ்பைக்’ என்ற பூந்துணர் உண்டாகும். மலர்கள் நேரே மலர்த் தண்டில் ஒட்டியிருக்கும்.
மலர் : பெரிய நீல நிறமான மலர். மலரடிச் செதில் முட்டை வடிவானது.
புல்லி வட்டம் : 4 பிளவுகளை, பிரிவுகளை உடையது. வெளிப்புறத்து இரு புறவிதழ்கள் பெரியவை.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இணைந்தவை. அடியில் குட்டையாக, குழல் வடிவானதாக இருக்கும். மேல் உதடு அருகியிருக்கும். கீழ் உதடு 3 பிளவானது.
மகரந்த வட்டம் : 4 தாதுக்கால்கள். இரு தாதுக்கால்கள் நீளமானவை. தடித்தவை. தாதுப்பை ஒரு செல் உள்ளது.
சூலக வட்டம் : 2 செல் உள்ள சூலகம். ஒவ்வொரு செல்லிலும் 2 சூல்கள் உண்டாகும். சூல்தண்டு மெல்லியது. சூல்முடி இரு பிளவானது.
கனி : ‘காப்சூல்’ என்ற வெடி கனி. நீண்டு தட்டையானது. பளப்பளப்பானது.
விதை : 4 விதைகள் உண்டாகும். வட்ட வடிவானவை. விதையுறை மிக மெல்லியது.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 44, 48 என நாராயணன் (1951 ஏ, பி.) கணித்துள்ளார்.