சங்க இலக்கியத் தாவரங்கள்/101-150

விக்கிமூலம் இலிருந்து
 

குறிஞ்சி
பீலோபில்லம் குந்தியானம்
(Phelophyllum kunthianum,Nees.)

‘தண்கயக் குவளைக் குறிஞ்சி வெட்சி’ (குறிஞ். 63) என்பது கபிலர் வாக்கு. குறிஞ்சி என்னும் சிறிய புதர்ச் செடி ஐயாயிரம் அடிக்கு மேலான மலைப் பாங்கில் வளர்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் இயல்புடையது. குறிஞ்சி மலர் நீல நிறமானது. இச்செடி 1898, 1910 ஆகிய ஆண்டுகளில் பழனி மலைப்புறத்திலும், 1887, 1899, 1910 ஆகிய ஆண்டுகளில் நீலரியிலும் (நீலமலை) பூத்திருந்ததாகப் பைசன் (Fyson) என்னும் வன அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதன் தண்டு கரியதாகவும் வலியதாகவும் இருக்கும். இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதின் தாவரவியலுண்மை யாது என்பதையும், இது இங்ஙனம் பூப்பதற்கு இச்செடியில் சுரக்கும் ஊக்கி நீர் (Hormone) எவ்வியல்பிற்று. என்பதையும் இன்னும் யாரும் ஆய்வு செய்திலர்.

சங்க இலக்கியப் பெயர் : குறிஞ்சி
உலக வழக்குப் பெயர் : குறிஞ்சிச்செடி. கட்டதடா
தாவரப் பெயர் : பீலோபில்லம் குந்தியானம்
(Phelophyllum kunthianum,Nees.)

குறிஞ்சி இலக்கியம்

தமிழில் தாவரம் என்ற தலைப்பில் குறிஞ்சியைப் பற்றிய எமது முதல் கட்டுரை தமிழ்ப் பொழிலில் (1959-துணர். 34: மலர்: 11) வெளியிடப்பட்டது. குறிஞ்சியின் தாவரப் பெயர் அப்போது ஸ்ட்ரொபிலாந்தெஸ் குந்தியானஸ் (Strobilanthes kunthianus, And.) என்றிருந்தது. அக்கட்டுரையைத் தழுவியே இவ்வாய்வுரை எழுதப் பெறுகின்றது. நிலத்தை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நான்கு வகைகளாகத் தொல்காப்பியம் கூறுமாயினும், உரிப்பொருள் கூறுங்கால் பாலையையுஞ் சேர்த்து ஐம்புலங்களை விரிக்கும். முல்லையும், குறிஞ்சியும் தம்மியல்பு திரிந்து, இயைந்த நிலத்தைப் பாலை என்பர். குறிஞ்சி நிலமென்பது மலையும், மலை சார்ந்த இடமுமாகும். குறிஞ்சி ஒழுக்கமாவது புணர்தலும், புணர்தல் நிமித்தமும் பற்றியது. இம்மலைப் பாங்கில் வளரும் குறிஞ்சிச் செடியைக் கொண்டு இந்நிலத்தைக் குறிஞ்சி நிலமென்றார் போலும். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் குறிஞ்சி நிலம், குறிஞ்சி ஒழுக்கம் , குறிஞ்சிச் செடி. குறிஞ்சிப் பண் முதலியவற்றைச் சிறப்பித்துப் பாடியுள்ள பாக்கள் சங்க இலக்கியத்தில் மலிந்துள்ளன. பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டு என்றதோர் நெஞ்சையள்ளும் செழுஞ் சுவைச் செம்பாடல் ஒன்றுண்டு. அதனை யாத்தவர் கபிலர். அவரைக் குறிஞ்சிக் கபிலர் என்று குறிப்பிடுகின்றது தமிழிலக்கியம். ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தற் பொருட்டு அவர் இதனைப் பாடினார் என்ப. தமிழறிவுறுத்தலாவது, பண்டைத் தமிழிலக்கியக் களவியல் நெறியை அறிவித்தல் என்று கூறுவது ஒக்கும். 262 வரிகளில், தோழி அறத்தொடு நிற்றல் கூறும் இப்பாட்டின் கண், முப்பத்தைந்து வரிகளில் நூறு மலர்களை மிக அழகாகத் தொடுத்துள்ளமை வியத்தற்குரியது. சங்க விலக்கியத்துள் கூறப்படும் பூக்களில் பெரும் பகுதி இம்மலர்க் களஞ்சியத்தில் பயிலப்படுகிறது. மேலும், குறிஞ்சியொழுக்கம் பற்றிய பாடல்கள் அகநானூற்றில் 80 (இரண்டும். எட்டும்) கலித்தொகையில் - குறிஞ்சிக் கலி 29 பாக்களும், ஐங்குறுநூற்றில் குறிஞ்சி பற்றிய 100 பாக்களும் குறிஞ்சித் திணை பற்றியன. அன்றியும், குறுந்தொகை, நற்றிணை, கீழ்க்கணக்கு நூல்களில் திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது முதலியவற்றிலும் குறிஞ்சி பற்றிய பாக்கள் பலவுள.

மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் பாண்டியன் நெடுஞ்செழியனது நாட்டின் ஐம்புலங்களின் இயல்புகளைப் பாராட்டிப் பாடியுள்ளார். குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளத்தை, 286 முதல் 301 வரையிலான வரிகளில் கூறுமுகத்தால், முதலில் அங்கு விளையும் தோரை, ஐவனம், வெண்ணெல் முதலிய நெற் பயிர்களைக் குறிப்பிடுகின்றார். இவற்றுடன் ஐயவியும் விளையும் என்றார். மலைப்பக்கத்தில் விளையும் தினைப் பயிரில் கிளியை ஓட்டும் ஆரவாரம் ஒரு பால் கேட்கும். பூத்த அவரையின் தளிரைத் தின்னும் ஆமாவை ஓட்டும் கானவரது ஆரவாரம் ஒரு பால். குறவன் தோண்டி மூடியுள்ள பொய்க் குழியில் விழுந்த பன்றியைக் கொன்றதனாலுள்ள ஆரவாரம் ஒரு பால், வேங்கை
 

குறிஞ்சி
(Phelophyllum kunthianum)

மரத்தின் சிறிய கொம்புகளில் பூத்த நறிய பூக்களைப் பறிக்கும் மகளிர், “புலி! புலி!” என்று பூசலிடும் ஆரவாரம் ஒருபால். இவற்றுடன் கரிய பன்றியைக் கொல்லுகின்ற புலியினது ஆரவாரம் ஒருபால் கேட்கும். மேலும் குறிஞ்சிக் காற்றறையில் இஞ்சி, மஞ்சள், மிளகு முதலிய பண்டங்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கும் என்பார்.

அன்றி, குறிஞ்சிப் பண்ணைப் பரதவர் பாடுவர் என்று முடத்தமாக் கண்ணியார் கூறுவர். ‘குறிஞ்சிப் பரதவர் பாட’ (பொருந. 218). இது திணை மயக்கம்.

குறிஞ்சி, பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை பூக்கும் என்ற கருத்து தமிழ் நாட்டில் நிலவி வருகின்றது. இஃது ஓர் தாவரவியல் உண்மையாகும். தமிழ்ச் சான்றோர் அளவிகந்து புனைந்துரையார் என்பது உண்மை. குறிஞ்சிப் பூ நன்றாகப் பூத்துள்ள நாளில், மலை முழுதும் அழகொழுகும். நல்ல நீலமாகக் காணப்படும். நீலகிரி இதனாற்றான் இப்பெயர் பெற்றது எனலாம். இக்காலத்தில் இம்மலைப்பாங்கில் வளரும் யூகலிப்டஸ் (Eucalyptus) மரத்தைப் புளு கம் (Blue Gum) என்று கூறி, இதனால், நீலகிரி இப்பெயர் பெற்றதென்பார். இது பொருந்தாது. இம்மரம் நீலமலையில் தொன்று தொட்டு வளர்ந்து வரும் மரமன்று. இது குறிஞ்சி பூக்கும் நீலமலையில் அண்மைக் காலத்தில் பயிரிடப்பட்டது. குறிஞ்சி தமிழ் நாட்டுக்குரிய செடி. (indigenous plant) ஆகும். இது இரண்டு முதல் மூன்றடி உயரம் வரை (60 முதல் 100 செ. மீ.) பல்லாண்டு வளரும் புதர்ச் செடியாகும். இதனைத் தாவர நூலார் ஸ்ட்ரொபிலாந்தெஸ் குந்தியானஸ் என்பர். தற்போது இதன் பெயர் பீலோபில்லம் குந்தியானம் என்று மாற்றப்பட்டுள்ளது என்று கோவையிலுள்ள இந்தியத் தாவர மதிப்பீட்டு மையம் அறிவித்துள்ளது. இப்பெயர் குறிஞ்சியின் வேறு பெயராக ஹூக்கர் குறிப்பிட்டுள்ளார். இது அக்காந்தேசி (Acanthaceae) என்னும் தாவரக் குடும்பத்தின் பாற்படும். பல்லாண்டுகள் வளர்ந்து முற்றுதலின் குறிஞ்சியின் தண்டு மிக வன்மையுடைத்தாக இருக்கும்.

“கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு”-குறுந். 3 : 2
“கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாட”-புறநா. 374 : 8
“கருங்கோற் குறிஞ்சி நும் உறைவின் ஊர்க்கே”-அகநா. 308 : 16
“கருங்கோற் குறிஞ்சி மதனில் வான்பூ”-நற். 268
“நீள்மலைக் கலித்த பெருங்கோற் குறிஞ்சி”-நற். 301 : 1
“கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து”-மதுரைக். 300

குறிஞ்சியின் தண்டு ‘கருமை. வலிமையுமாம்’ என்னும்படி கரிய நிறமுடையதோடன்றி, வலிமையுடையதாகவும், தடித்தும் உள்ளதென்பதைப் புலவர் பெருமக்கள் அங்ஙனமே கூறியுள்ளனர். ஸ்ட்ரொபிலாந்தெஸ் எனப்படும் இப்பேரினத்தில், இதுகாறும் நூற்றுத் தொண்ணூற்றிரண்டு சிற்றினங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் ஆசியாவில் நூற்றெண்பதும், இந்திய நாட்டில் நாற்றைம்பத்தி நான்கும், ஆப்பிரிக்கா கண்டத்தில் ஒன்றும் (Hooker V 1; 4, p 429-477), தண்டமிழ் நாட்டில் நாற்பத்தாறும் (Gamble II, 73) உள்ளன. நீலமலையிலும், கோடைக்கானல், பழனி மலைகளிலும் வளரும் ஸ்ட்ரொபிலாந்தெஸ் பேரினத்தை, பத்தொன்பது இனங்கள் நான்கு முதல் பதினைந்து ஆண்டுகட்கு ஒரு முறை பூத்து அழியும் இயல்பின என்பர் பைசன் (Fyson). இவற்றுள் குறிஞ்சியை முதன்முதலாகக் குந்தியானஸ் என்ற இனப்பெயர் தந்து, ஆய்வுரை எழுதியவர் டி. ஆண்டர்சன் (T. Anderson) என்பவர். இப்போது குறிஞ்சிச் செடியில் ஆய்வு செய்து, இதன் பெயரை மாற்றியவர் நீஸ் என்பவர். இதனால், இதன் இப்போதைய பெயர் பீலோபில்லம் குந்தியானம் என்பது. ஒரு தாவரத்திற்கு இனப் பெயர் சூட்டி, ஆய்வுரை எழுதுபவரின் பெயரைத் தாவரப் பெயரிடும் முறைக்கான விதிகளின் படி, அத்தாவரப் பெயருடன் சேர்த்து எழுதுவது மரபு. அதனால் குறிஞ்சி என்பது பீலோபில்லம் குந்தியானம், நீஸ் (Phelophyllum kunthianum, Nees.) என்று எழுதப்படுவதே முறையாகும். இப்பேரினத்தில் உள்ள பிற இனங்கள், வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பூக்காத நிலையில், குறிஞ்சியை இவற்றினின்றும் பிரித்தறிதல் அத்துணை எளிதன்று. வேறினங்களின் பூக்கள் வெள்ளியனவாகவும், வெண்மை கலந்த நீலமாகவும், ஊதா நிறமாகவும் இருக்கும். பீலோபில்லம் செடிகள், பெரும்பாலும் மூவாயிரம் அடி உயரத்திற்கு மேல் வளரும் இயல்பின. லஷிங்டன் (Lushington) தாவரத்தின் தமிழ்ப் பெயர் பட்டியல் நூலில் ஸ்ட்ரொபிலாந்தெஸ் கான்சாங்குனேயஸ் (Strobilanthes Kansanguineus, C. B. Clarke) என்பதைப் பெருங்குறிஞ்சி எனவும், ஸ்ட்ரொபிலாந்தெஸ் குந்தியானஸ் என்பதைக் குறிஞ்சி எனவும், ஸ்ட்ரொபிலாந்தெஸ் சீலியேடஸ் (Strobilanthes cilliatus, Nees.) என்பதைச் சிறு குறிஞ்சி எனவும் கூறுகின்றார். ‘எஸ். கான்சாங்குனேயஸ்’ வெள்ளிய அல்லது நீலப் பூக்களைப் பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை விரியப் பூக்கும் இயல்பிற்று. மேற்குறித்த ‘சருங்காற் குறிஞ்சி மதனில் வான்பூ’ (நற். 268 : 1) என வரும் அடியில் உள்ள ‘மதனில் வான்பூ’ என்ற தொடருக்கு ‘வலிமையில்லாத வெளிய பூ’ என உரை கூறுவர். வான்பூ என்றது, வெண்ணிறத்தைக் குறிக்குமாயினும், சிறந்த பூ என்பதும் பொருந்துவதாகும். ‘குறிஞ்சி, நாள் மலர் புரையும் மேனி’ (நற். 301 : 2) என்னுமிடத்து ‘அன்றலர்ந்த குறிஞ்சிப் பூவின் நிறத்தை ஒத்த மேனியாள்’ என்று உரை கூறுவர். குறிஞ்சி மலர் பூத்த பின்னரும், இரண்டு மூன்று நாள் வரை அங்ஙனமே வாடாதிருக்கும் இயல்பிற்று. எனினும், அன்றலர்ந்த குறிஞ்சி மலரை ஒத்த மேனியாள் என்பது சிறப்புரையாகும்.

ஸ்ட்ரொபிலாந்தெஸ் குந்தியானஸ் என்னும் குறிஞ்சி 1898, 1910 ஆகிய ஆண்டுகளில் பழனி மலைப்புறத்திலும், 1887, 1899, 1910 ஆகிய ஆண்டுகளில் நீலமலையிலும் பூத்திருந்ததாக, பைசன் (Fyson) என்பவர் குறிப்பிடுகின்றார். 1956-ஆம் ஆண்டில் மைசூரிலிருந்து நீலகிரிக்கு (நீலமலை), யாம் தாவரவியல் மாணவர்களுடன் சுற்றுலா வந்த ஞான்று, ஸ்ட்ரொபிலாந்தெஸ் குந்தியானஸ் ஆகிய குறிஞ்சி நன்றாகப் பூத்திருந்தது. மலைப் பாங்கெல்லாம் ஒரே நீல நிறமாக விளங்கியது கண்டு, மட்டிலா மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் 1958ஆம் ஆண்டில், அதே வழியில் வரும் போது, ஒரு குறிஞ்சி மலரைக் கூடக் காண இயலவில்லை. ஆனால், 1958ஆம் ஆண்டில் தொட்டபெட்டா என்னும் மலைச் சிகரத்திற்கு ஏறிப் போகுங்கால், எண்ணாயிரம் அடி உயரத்திற்கு மேல் ஸ்ட்ரொபிலாந்தெஸ் கஸ்பிடேடாஸ் (S. cuspidatus) பூத்திருந்தததைக் காண முடிந்தது. சிறிது வெண்மை கலந்த நீலமான இப்பூ, குறிஞ்சிப் பூவன்று என்று தாவரவியலார் கூறுப. ஒருக்கால், இதனையே ‘கருங்காற் குறிஞ்சி மதனில் வான்பூ’ என்று (நற். 268) காமக்கண்ணியார் கூறினார் போலும்.

குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை பூக்கும் இயல்பை மும்முறை கண்டு கூறும் பைசன் (Fyson) பாராட்டுதற்குரியர். குறிஞ்சி பூத்த ஆண்டில், மலை நாட்டு மக்கள் தம் நல்வாழ்வு குறித்து யாதானும் ஒரு திசையில் ஊர்ப்புறம் சென்று, காட்டைக் காவலர் (Kattai-Kavalar) எனும் சிறு தெய்வத்திற்கு வழிபாடு செய்வர் என்றும், அங்ஙனம் செய்யாவழி தமது நாடு, கன்று முதலியன இறந்தொழிவதுடன், பயிர் விளைவு குன்றுமென்றும், கோடைக்கானலின் பாங்குறையும் மக்கள் கூறுவதாக எஸ். சீத்தாராமையா (Indian Antiquity-vol. XL : 1911-68) எழுதியுள்ளார். 1958ஆம் ஆண்டில், நீலமலையில் குறிஞ்சி பூக்கவில்லையாயினும், கோடைக்கானலில் பூத்திருந்தது. சீலங்கா முன்னாள் அமைச்சர் சுன்னாகம் திரு. க. நடேசபிள்ளை அவர்கள் பன்னிரு ஆண்டுகட்கு ஒரு முறை குறிஞ்சி பூக்கும் போதெல்லாம்
 

குறிஞ்சி
இப்புகைப்படம் இலங்கை முன்னாள் அமைச்சர் திரு. க. நடேசபிள்ளை அவர்களால் கோடைக்கானலில் எடுத்து அனுப்பப்பட்டது.



குறிஞ்சி
(Phelophyllum kunthianum)

கோடைக்கானலில் கோயில் கொண்டு அருளிய குறிஞ்சித் தெய்வமாகிய முருகப் பெருமானுக்கு, வழிபாடு செய்து வரும் வழக்கம் உள்ளது. 1958ஆம் ஆண்டில் அவர் கோடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோயிலின் மலைப்புறத்தில் பூத்த குறிஞ்சிச் செடிகளின் புகைப்படமொன்றினைத் தமிழ்ப்பொழிலுக்கு அனுப்பி வைத்தார். அதே நேரத்தில் யாம் ‘தமிழில் தாவரம்’ என்ற தலைப்பில், குறிஞ்சிச் செடியினைப் பற்றி எழுதிய கட்டுரையைச் சேர்த்து, தமிழ்ப்பொழில் வெளியிட்டது.

பல ஆண்டுகட்கு ஒரு முறை பூக்கும் இயல்புடைமையின், இம் மலர் உகுக்கும் தேன் நல்ல மணமும், மிக்க இனிப்பும் உடையதாக இருக்கும். இது போல் இனிக்கும் குறுந்தொகைப் பாடல் ஒன்றுண்டு.

“கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
 பெருந்தேனி ழைக்கும் நாடனொடு நட்பே”

-குறுந். 3 : 2-3


“பெருந் தேன் இழைக்கும் நாட னொடு நட்பே” என்புழி, தேனீ தோன்றா எழுவாயாக நிற்பது போலப் பால்வரைத் தெய்வம் கட்புலனாகாது இருவரையும் கட்டி வைத்தது என்பதும், பெருந்தேன் என்ற அதனால் சிறு பூக்கள் என்பது பெறப்படுமாதலின், சிறு செயலாக நாடனுடன் இளநகை செய்த ஒன்று, பெருஞ் செயலாகிவிட்டதென்றும் குறிப்புத் தோன்ற, இயற்பட மொழிந்தாள் என்பதும் அறிந்து இன்புறுதற்குரியன.

குறிஞ்சி மலரின் தேன் மிக இனிப்பாக இருக்கும். இச்செடி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது. ஆகலின், இதன் மலரில் சுரக்கும் தேன்-அதாவது மலரின் செல்களிலுள்ள சாறு (cell-sap) மிக முதிர்ந்து, தேன் சுரப்பிகளின் மூலமாக வெளிப்படுவது இனியதாக இருப்பதில் வியப்பில்லை.

குறிஞ்சி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : அக்காந்தேசி (Acanthaceae)
 

பெருங்குறிஞ்சி
(Phelophyllum ciliatus)

தாவரப் பேரினப் பெயர் : பீலோபில்லம் (Phelophyllum)
தாவரச் சிற்றினப் பெயர் : குந்தியானம் (kunthianum,Nees.)
தாவர இயல்பு : பல்லாண்டு வாழும் புதர்ச் செடி அல்லது குறுஞ்செடி. 60 செ.மீ முதல் 100 செ.மீ. வரை உயரமானது.
தாவர வளரியல்பு : கூட்டங் கூட்டமாக வளரும். பல ஆண்டுகட்கு ஒரு முறை மலரும்; பெரிதும் 12 ஆண்டுகட்கு ஒரு முறை பூக்கும்; பின்னர் மடிந்து விடும்.
தண்டு : கரிய நிறமுள்ளது. நாற்பட்டையானது. மிக வலிமையானது. எனினும், மெல்லியது. அடிமட்டத் தண்டு உண்டு. அதிலிருந்து பல தண்டுகள் வளர்ந்து எழும்.
இலை : தனி இலை. எதிர் அடுக்கானவை. 3 செ.மீ. - 5 செ.மீ. வரை நீளம். 2 செ.மீ. முதல் 2.5 செ.மீ. வரை அகலமும் உள்ளது. அடி குறுகி, நீளமானது. இவை பெரிதும் சமமாக இல்லை. இலைக்காம்பு ஒரு செ.மீ. நீளமானது.
விளிம்பு : பற்கள் போன்று அல்லது முழுமையாக இருக்கும் இலைகளில் ராபைட்ஸ் (Raphides) என்ற நுண்ணிய வேதிப் படிமங்கள் இருக்கும். மேற்புறம் சொரசொரப்பாக இருக்கும்.
நரம்பு 
: அடிப்படை நரம்புகள் ஒரு போக்கு முறையிலும், அடுத்துக் கிளைப்பன பின்னல் முறையிலும் வெளிப்படையாகக் காணப்படும்.
காம்பு
: 5-7 மி.மீ. நீளமானது, அகன்றது.
மஞ்சரி
: கதிர்கள் அல்லது ‘டானிக்கிள்’ கலப்புப் பூந்துணர். 7 செ.மீ. நீளமானது.
மலர் : ‘தலை’ வடிவிலோ, ‘ஸ்ரொபிலேட்’ வடிவிலோ, இடைவிட்டோ அமைந்திருக்கும். 2.5 செ.மீ. முதல்

8 செ. மீ. நீளமானது. நீல நிறமுள்ளது. வெண்மையான மென்மயிர் அடர்ந்திருக்கும். இரு அகன்ற முட்டை வடிவான பூவடிச் செதில்கள் உடையது. மலர்கள் செதில் காம்பில் நேரே ஒட்டியுள்ளன.
புல்லி வட்டம் : 5 புல்லியிதழ்கள் பிரிந்தவை. மடல்கள் குறுகலானவை. 5 மி.மீ. நீளமானவை.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் நீளமாகவும், சற்று ஊதா நிறமாகவும் இருக்கும். 1 செ.மீ அகலம். அடியில் இதழ்கள் இணைந்து, குழல் வடிவாய் இருக்கும். குழல் 2.5 செ.மீ. நீளமுள்ளது.
மகரந்த வட்டம் : 2 மகரந்தத் தாள்கள். மகரந்தத் தாள் 1 செ.மீ. நீளமானது. அல்லி ஒட்டியவை.
மகரந்தப் பைகள் : ஒவ்வொன்றிலும் இரண்டு. 2.5 மி.மீ. நீளமானவை.
சூலக வட்டம் : சூற்பை 2 சூலக அறைகளை உடையது. ஒவ்வொரு அறையிலும் 2 சூல்கள் காணப்படும்.
வட்டத்தட்டு : சிறியது.
சூல் தண்டு : மெல்லியது. 2 செ.மீ. நீளமுள்ளது.
கனி : காப்சூல் 1.2 - 4 செ.மீ.

குறிஞ்சி 12 ஆண்டுகட்கு ஒரு முறை பூத்ததென்பதை J.B.N. His Soc. 38 (1935) : 117-122, என்ற ஆய்வு இதழ் கூறுகின்றது. அதாவது, 1838ஆம் ஆண்டு தொடங்கி 1934ஆம் ஆண்டு வரையில் 9 முறை குறிஞ்சி பூத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மலர் பூக்கும் காலம் நவம்பர் முதல் டிசம்பர் முடிய என்பர்.