உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/100-150

விக்கிமூலம் இலிருந்து

எண்–எள்
செசேமம் இன்டிகம் (Sesamum indicum,Linn.)

மலைபடுகடாத்திலும், இலக்கண நூல்களிலும், ‘எள்’, ‘எண்’ எனக் கூறப்படும். எள்ளுச் செடியில் உண்டாகும் விதைக்கு ‘எள்’ என்று பெயர். இதில் ‘நெய்’ சேமிக்கப்பட்டிருக்கும். எள்ளின் நெய்தான் எண்ணெய் எனப்பட்டது.

சங்க இலக்கியப் பெயர் : எண்
உலக வழக்குப் பெயர் : எள், எள்ளுச்செடி
தாவரப் பெயர் : செசேமம் இன்டிகம்
(Sesamum indicum,Linn.)

எண்–எள் இலக்கியம்

பெருங்கௌசிகனார் எள்ளை, ‘எண்’ என்று குறிப்பிடுகின்றார். ‘எள்’ ஒரு சிறு வித்தாகும். நெய்ப் பிடிப்புள்ளது. எள்ளின் நெய்தான் எண்ணெய் எனப்பட்டது. மிகச் சிறிய அளவைக் குறிக்கும் போது - எள்துணை - எட்டுணை என்று கூறுவர். திருவள்ளுவர், எள்ளின் பிளவைச் சிறிய அளவாக்கிக் கூறுவர்[1]. இஃது ஒரு சிறிய செடியாகும். இச்செடியில் விழும் நோய்க்கு ‘மகுளி’ என்று பெயர் கூறுகிறார் கௌசிகனார். ‘மகுளி பாயாது’ என்பதற்கு ‘அரக்குப் பாயாமல்’ என்று உரை கூறுவார் நச்சினார்க்கினியர். எள்ளின் செடி பலவாகக் கிளைத்து வளரும் என்றும், இதன் இளங்காயைக் ‘கவ்வை-கௌவை’ என்றும், ஒரு கைப்பிடிக்கு ஏழு காய்கள் விளையுமென்றும், இளங்காய்கள் முற்றியவுடன் நெய்யை உள்ளே கொண்டு கருநிறமாக மாறுமென்றும், கொல்லையின் பக்கத்தில் எள்ளை விளைவிப்பர் என்றும் அவர் கூறுகின்றார்.

“மகுளி பாயாது மலிதுளி தழாலின்
 அகளத்து அன்ன நிறைசுனைப் புறவின்
 கௌவை போகிய கருங்காய் பிடிஏழ்
 நெய்கொள ஒழுகின பல்கவர் ஈர்எண்”
-மலைப. 103-106

எள்ளின் பூ வெண்ணிறமானது. இப்பூ கவிழ்ந்து பூக்கும். பூ அடியில் குழாய் வடிவானது. மேற்புறத்தில் அகவிதழ்களில் மூன்று மடல் விரிந்து நீண்டும், அடியில் இரு அகவிதழ்கள் சற்றுக் குட்டையாக இருபுறத்தும் இருக்கும். பூவின் அமைப்பு குமிழம் பூவை ஒத்திருக்கும். இதனால் இது மூக்குக்கு உவமிக்கப்படும்.

“எட்பூ ஏசிய நாசியாய்”என்றார் கம்பர்[2]

இப்பூ கண் நோய்க்கு நல்ல மருந்தென்பர்.

எண்—எள் தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே பர்சொனேலீஸ்
(Bicarpellatae Personales)
தாவரக் குடும்பம் : பெடாலியேசி (Pedaliaceae)
தாவரப் பேரினப் பெயர் : செசேமம் (Sesamum)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகம் (indicum)
சங்க இலக்கியப் பெயர் : எண்
பிற்கால இலக்கியப் பெயர் : எள்.
உலக வழக்குப் பெயர் : எள்.
ஆங்கிலப் பெயர் : ஜிஞ்ஜிலி (Gingelly seed)
தாவர இயல்பு : சிறு செடி. கிளைத்து 2 அடி உயரம் வரையில் ஓங்கி வளரும்.
இலை : தனி இலை. அகன்று நீண்டது. அடியிலை பிளவுடையது.
மலர் : .மலர்கள் இலைக் கோணத்தில் தனித்து உண்டாகும். தூய வெண்ணிற மலர் கவிழ்ந்து மலரும். அடியில் அகவிதழ்கள் குழாய் வடிவாகவும், நுனியில் இரு உதடுகளாகவும் இருக்கும்.
புல்லி வட்டம் : சிறிய புறவிதழ்கள் 6 சிறு பிளவுகளாக இருக்கும்.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் இணைந்து, 1 முதல் 1.25 அங்குல நீளமாக இருக்கும். நுனியில் மடல் இரு உதடுகளாக விரியும். மேல் உதடு 3 இதழ்களை உடையது. சற்று நீளமானது. அடி உதடு இரு இதழ்கள் இரு பக்கங்களிலும் இருக்கும்.
மகரந்த வட்டம் : 4 தாதிழைகள்; 2 தாதிழைகள் உயரமானவை. மடலுக்குள்ளே அடங்கியிருக்கும். தாதுப்பை சற்று நீண்டது. அடியில் மலர்க் கிண்ணம் வட்ட வடிவானது.
சூலக வட்டம் : இரு செல் உள்ளது. சூலகத்தின் நடுவே உள்ள பிரிவுச் சுவர் இதனை 4 ஆகப் பிரிக்கும். பல சூல்கள் உண்டாகும். ஒவ்வொரு செல்லிலும் ஒரு விதை வரிசை உண்டாகும்.
கனி : காப்சூல் என்ற உலர்கனி: இரு பகுதியாக வெடிக்கும். பல விதைகள் உதிரும்.
விதை : இதுதான் ‘எள்’ எனப்படும். இதில் மெல்லிய வித்திலைகள் சற்று நீண்டு இருக்கும்.


எள்ளில் உண்டாகும் நெய்தான் எண்ணெய் எனப்படுவது. இதற்கு நல்ல எண்ணெய் என்று பெயர். இந்த எண்ணெய் உணவாகவும், வேறு பல முறைகளாகவும் பயன்படும். இதற்காக எள்ளுச் செடி வயல்களில் விதைத்துப் பயிரிடப்படும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 26 என மொரிநாகாவும் பிறரும் (1929), சுகியூரா ( 1931 ) (1936 பி) நொகாரா (1934) கோபாயாஷி (1956) என்போரும் கணக்கிட்டுள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தாவரத் துறையில் பல ஆண்டுகட்கு முன்னர் (1945) எள்ளுச் செடியில் நல்லதொரு ஆய்வு செய்தனர் பேராசிரியர் டி. எஸ். இராகவனும், கே. வி. கிருஷ்ணமூர்த்தியும். எள்ளைப் போன்றதொரு காட்டு எள்ளை விளைவிக்கும் காட்டு எள் செடி ஒன்று கடலோரப் பகுதிகளில் வளர்கிறது. அதற்குச் செசேமம் பிராஸ்ட்ரேட்டம் என்று பெயர். இச்செடி பல கிளைகளை நீளமாக விட்டு, நிலத்தில் படர்ந்து வளரும். எவ்வித வெப்பத்தையும், எத்துணை மழையையும் தாங்கும் இயல்பிற்று. இதற்கு நிலத்திலும் அதிகமான சத்து இருக்க வேண்டுமென்பதில்லை. ஆண்டிற்குக் குறைந்தது இரண்டு முறை பூத்துக் காய்க்கும். காய்களும் மலிய உண்டாகும். இதன் வித்தில் எண்ணெய் மிகக் குறைவுதான். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 32.

எள்ளின் செடியோ அங்ஙனமன்று. இதற்கு வெப்பமும், நீரும் அளவாகத்தான் இருக்க வேண்டும். ஒரு முறைதான் பூத்துக் காய்க்கும். காய்களும் ஒரு கைப்பிடிக்கு ஏழு காய்களாக விளையும். இவையிரண்டையும், செல்லியல் பரம்பரைக் கலப்பு முறையில் இணைத்து, புதியதொரு எள்ளுச் செடி உண்டாக்கினால், காட்டு எள்ளின் பண்புகள் இதில் ஏறும் என எண்ணி, இச்செடி உருவாக்கப்பட்டது. இதனுடைய குரோமோசோம் எண்ணிக்கை 2n = 29 ஆகி விட்டது. இந்த எண் ஒற்றைப் படையாகி விட்டபடியால், இதன் விதை முளைத்தாலும் பூக்காது. பூத்தாலும் காய்க்காது. காய்த்தாலும் விதையுண்டாகாது. விதை உண்டானாலும், அது முளைக்காது. அதனால், இந்தக் கலப்புச் செடி(Hybrid)யின் வளர் குருத்தில் கால்சிசீன் என்ற வேதிப்பொருளின் நுண்ணிய கரைசல் தெளிக்கப்பட்டு வளர்ந்தது. அப்போது இச் செடியில் 2n = 29 என்றிருந்த இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 58 என இரு மடங்காகி விட்டது. அப்போது இதன் பூக்கள் காய்த்து எள்ளை விடச் சற்றுப் பெரிய விதைகளைத் தந்தன. இவ்விதைகளைத் தெளித்து, அடுத்த தலை முறையில் இச்செடிகளை வளர்த்து, இதன் விதைகளைச் சோதனை செய்தனர். ஆனால், இயற்கையன்னையின் திருவிளையாடல்தான் என்னே! இந்தக் கலப்பு எள்ளுச் செடி எவ்வித மழையையும், வெய்யிலையும் தாங்கும் பண்பினைப் பெற்றதாயினும், இதன் விதைகளில் எண்ணெய் மிக மிகக் குறைந்து விட்டது. புண்ணாக்குப் பொருள்தான் மிகுந்தது. அதனால் இவ்வாராய்ச்சி அவ்வளவில் கைவிடப்பட்டது.



  1. “எட்பகவன்ன சிறுமைத்தே ஆயினும்” -திருக்குறள். 889 : 1
  2. கம்பராமாயணம்.