சங்க இலக்கியத் தாவரங்கள்/099-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

பாதிரி
ஸ்டீரியோஸ்பர்மம் சுவாவியோலென்ஸ்
(Stereospermum suaveolens,Dc.)

‘போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி’ என்று பாதிரிப் பூவைப் பாடினார் (குறிஞ். 74) கபிலர். ‘தேங்கமழ் பாதிரி’ என்பதற்குத் ‘தேன் நாறும் பாதிரிப்பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறினர். தேன் போன்று இனியமையான நறுமணம் கமழும் பாதிரிப் பூ என்று இதற்கு உரை கொள்ளுதல் பொருந்தும். ஏனெனில், பாதிரிப்பூ சிறந்த நறுமணம் உடையது பாதிரிப்பூவின் உள்ளகம் பிளந்து இதன் அமைப்பைக் கூர்ந்து நோக்கி அறிந்து உள்ளனர் சங்கப் புலவர்கள். பாதிரிப்பூவின் உள்ளமைப்பை, யாழின் பத்தரில் ஒட்டிய ‘பச்சை’க்கு உவமிக்கிறார் ஒரு புலவர். பாதிரிப்பூவின் அகவிதழில் காணப்படும் மயிர் ஒழுங்கினை, மகளிரின் வயிற்றில் அமைந்த மயிர் ஒழுங்கிற்கு உவமிப்பார் இன்னொரு புலவர்.

‘பாதிரி’ ஓர் உயரமான மரம். பாலை நிலப்பகுதியில் வளருமியல்பிற்று. எனினும் வேறிடங்களிலும் வளர்க்கப்படும். வேனிற் காலத்தில் கொத்துக் கொத்தாகப் பூக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : பாதிரி
உலக வழக்குப் பெயர் : பாதிரி, பாதிரி மரம்
தாவரப் பெயர் : ஸ்டீரியோஸ்பர்மம் சுவாவியோலென்ஸ்
(Stereospermum suaveolens,Dc.)

பாதிரி இலக்கியம்

வீதி வழியே பூக்காரி பாதிரிப்பூ விற்கிறாள். காதலனைப் பிரிந்து ஆற்றியிருக்கும் ஒரு தலைவி நெஞ்சம் சோர்கிறாள். பூக்காரியின் சொற்களோடு, பாதிரிப் பூவின் மணமும் புகுந்து அவளைத் தாக்கி விட்டன. பாதிரிப் பூவின் நறுமணம் பிரிந்தோர் உள்ளத்தில் காம உணர்வைத் தூண்டி விடும் தன்மைத்து. அதனால், நொந்து போன அவள், தன்னையும் மறந்து பூக்காரிக்காக நெஞ்சம் நொந்து பேசுகிறாள். ‘காதலனைப் பிரிந்துள்ள என்னை பாதிரிப் பூவின் மணம் ஒரு தரம் தாக்கியதிலேயே, நெஞ்சத்தில் சோர்வை உண்டாக்கி விட்டதே! தன் பூக்கூடையிலேயே இதன் மணத்தைச் சுமந்து செல்பவள், தன் கணவனை விட்டுப் பிரிந்தன்றோ போகின்றாள். இவளை இம்மணம் எவ்வாறு தாக்குமோ?’ என்று வினவி அவளுக்காக நொந்து கொள்கிறாள்.

“. . . . . . . . துய்த் தலைப் பாதிரி
 வால்இதழ் அலரி வண்டுபட ஏந்தி
 புதுமலர் தெருவு தொறும் நுவலும்
 நொதும லாட்டிக்கு நோம்என் நெஞ்சே”
-நற். 118 : 8-11

பாதிரிப் பூ குடி நீருக்கும் தன் மணத்தை ஏற்றுவது. மலர்ந்த மலரைப் புதிய மண் பானையில் பெய்து வைப்பர். பின்னர் எடுத்து விட்டு, அப்பானையில் நீரை ஊற்றி வைப்பர். இதன் மணத்தைப் புதிய பானை வாங்கிக் கொள்ளும். பின்னர் தன்பால் ஊற்றிவைக்கப்பட்ட நீருக்கு ஏற்றும் எனக் கூறும் நாலடியார்[1].

‘பாதிரிப்பூ வாடி அழியும். புதிய பானை ஓடும் ஓர் நாள் உடைந்து அழியும். ஆனால், அதிலிருந்த பாதிரியின் மணம், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இடம் மாறினாலும், அழியாதது போன்று, உயிரும் அழிவில்லாதது’ என்று கூறி நீலகேசி, குண்டலகேசியுடன் வாதிட்டாள் என்பர். கபிலரும், ‘தேங்கமழ் பாதிரி’ (குறிஞ். 74) என்பர். இத்துணை நறுமணமுள்ள பாதிரிப்பூ மரத்தில் பூக்கும் சினைப் பூவாகும். இம்மரம் பருத்த அடியினை உடையது. இது வேனிற் காலத்தில் பூக்கும்.

அதிலும், வேனிற்காலத்தில் கடுங்கதிர் தெறுதலின், இதன் இலைகளெல்லாம் உதிர்ந்து போகும். மேலும், இதனை ‘அத்தப் பாதிரி’, ‘கானப் பாதிரி’, ‘வேனிற் பாதிரி’ என்றெல்லாம் கூறுப. ஆதலின் இது பாலை நிலப்பூ.

 

பாதிரி
(Stereospermum suaveolens)

பாதிரி மலர், நீண்ட இணர்த்தண்டில், காம்பிற்கு ஒரு பூவாக 20 பூக்கள் வரை மலரும். இதன் மலரைப் புலவர் பெருமக்கள் நன்கு பிரித்தறிந்து கூறுகின்றனர். இதன் புறவிதழ்கள் மஞ்சள் நிறமானவை. புறவிதழ்களுக்குள் 5 அகவிதழ்கள் செந்நீல ஊதா நிறமாகக் காணப்படும். இவை அடியில் இணைந்து,புனலாகவும் மேலே மடல்கள் விரிந்துமிருக்கும். அகவிதழ்ப் புனல் சற்று வளைந்து காணப்படும். இதனை,

“வேனிற் பாதிரிக் கூனி மாமலர்” -அகநா. 257 : 1

என்றும்,

“வேனிற் பாதிரிக் கூன் மலரன்ன” -குறுந் 147 : 1

என்றும் கூறுவர். அகவிதழ்களின் அடிப்புற இதழ்கள் இரண்டும் சற்றுத் தாழ்வாகவும், மேற்புற இதழ்கள் மூன்றும் சற்று நீண்டு நிலையாகவும் அமைந்திருக்கும். இதழ்கள் மென்மையானவை, மேற்பகுதியில் நான்கு மகரந்த இழைகள் விரிந்திருத்தலின், துய்யென்றிருக்கும். இதனை,

“அத்தப் பாதிரி துய்த்தலைப் புதுவீ”-அகநா. 191 : 1

என்று கூறுவர். இம்மலரின் கருஞ்செந்நீல நிறத்தையும், இதழ்களின் பஞ்சுத் தன்மையையும், இதழ்களின் உள்ளமைப்பையும், உளத்துட் கொண்டு

“ஒவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய
 துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி”
-நற். 118 : 7-8

என்று ஓவியர் அரக்கு வண்ணத்தில் தோய்த்த ‘துகிலிகை’ என்னும் எழுதுகோலை உவமை கூறுவர், பாலை பாடிய பெருங்கடுங்கோ.

பாதிரிப் பூவின் உள்ளமைப்பை உவமித்தற்குத் தோல் போர்த்தப்பட்ட யாழை விளக்க முனைந்தார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

யாழினது பத்தர் மேல் முட்டமாகத் தோல் போர்த்தப்பட்டு இருக்கும். அதனை இலக்கியம் ‘பச்சை’ என்று கூறும். யாழின் பத்தரைத் தோலின் பொதிந்து, தோலின் பொருந்துவாய் தைக்கப்பட்டிருக்கும். அத்தோலுக்குத் ‘துவர்’ என்னும், காவி நிறம் ஊட்டப்படும். காவி நிறத்தோடு தைக்கப்பட்டுள்ள பொருத்துவாயின் தையல் ஒழுங்கிற்கும், பாதிரிப் பூவின் அகவிதழ் அமைப்பை, உவமை கூறி விளக்குகின்றார் இப்பெரும்புலவர்.

பாதிரிப் பூவைக் கூர்ந்து நோக்கியறிந்த அவர், அதனை வகிர்ந்தும் பார்த்துள்ளார் போலும்! பாதிரியினது அகவிதழ்களின் உட்புறமாகத் தோலின் மயிர் போன்று, பஞ்சிழை போன்ற நுண்மயிர் நிறைந்திருக்கும். இதழின் நடுநரம்பு இணைத்துத் தைக்கப்பட்டது போன்று அமைந்தது. இதனையே யாழின் ‘பச்சை’க்கு உவமையாக்கினார்.

“பாசிலை ஒழித்த பராரைப் பாதிரி
 வள்இதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன்
 உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை”
-பெரும்பா. 4-6

மற்றொரு புலவர் இதனை மகளிரது வயிற்றில் அமைந்த மயிர் ஒழுங்கிற்கு உவமையாகக் கூறுவர்.

“வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
 மயிர்ஏர்பு ஒழுகிய அம்கலுழ் மாமை
 நுண்பூண் மடந்தை”
-குறுந். 147 : 1-3

இவ்வாறு மயிரொழுங்காகத் தோன்றும் அகவிதழ்கள் இணைந்துள்ள பகுதி, நல்ல மஞ்சள் நிறமுள்ளதாக இருக்கும். எனவே, இம்மலரின் புறவிதழ்கள் பொன் தகடு போன்ற மஞ்சள் நிறமுடையன. அகவிதழ்கள் புறத்தே கருஞ் செந்நீல நிறமும், உட்புறத்தில் பட்டு போன்ற பஞ்சமைப்புடன் செந்நீல நிறமும், இவற்றின் அடிப்புறம் மஞ்சள் நிறமும் கொண்டு, பன்னிறப் பாங்கில் மிக அழகாக விளங்கும்.

கேரளத்தில் திருவாதிரைத் திருநாளில் பெண்கள் ஒரு நோன்பு மேற்கொள்வர். அதனால் மங்கல நாண் நீடிக்க வேண்டிப் பாதிரிப் பூவைச் சூடிக் கொள்வர். அந்நாளில் திருமணம் ஆகாதோரும், மங்கலம் பெற வேண்டி இப்பூவைச் சூடிக் கொள்வர்.

நல்ல மனைவி கிடைப்பதற்காகப் பாதிரிப் பூவை அம்பிகைக்கு அணிவிப்பர் என்று புட்ப விதிகள் கூறும்.

“பாதிரி அம்பிகைக்கு அணியின் இல்லாள்எய்தும்”[2]

பாதிரியின் பெயரால் திருப்பாதிரிப்புலியூர் அமைந்துள்ளது. ஞானசம்பந்தர்,

“பூக்கமழும் புனற்பாதிரிப் புலியூர்”[3]

என்கிறார்.

இதற்குப் பாடலம் என்ற பெயரும் உண்டு. இப்பெயரால், வட நாட்டில் ‘பாட்னா’ என்னும் ‘பாடலிபுத்திரம்’ பெயர் பெற்றது. சேக்கிழார் இதனைப்

“பாடலிபுத்திர மென்னும் பதி”[4]

என்கிறார்.

இம்மரத்தின் கிளை, முருங்கை போன்று எளிதில் ஒடியும். புல்லியது. இதனால், இதற்குப் ‘புன்காலி’ என்றறொரு பெயர் உண்டென நிகண்டுகள் கூறும்.

பாதிரி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae)

பர்சொனேலீஸ் (Personales)

தாவரக் குடும்பம் : பிக்னோனியேசி (Bignoniaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஸ்டீரியோஸ்பர்மம் (Stereospermum)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்வாவியோலென்ஸ் (suaveolens, Dc.)
தாவர இயல்பு : பெரு மரம்; மைசூர், மலபார், திருவிதாங்கூர் முதலிய மாநிலங்களில் மலைப் பகுதிகளில் உள்ள இலையுதிர் காடுகளில் வளர்கிறது.
இலை : கூட்டிலை; எதிரடுக்கானது
மஞ்சரி : நீண்ட காம்புள்ள கலப்பு மஞ்சரி.
மலர் : செந்நீல ஊதா நிறமான, நீண்ட, பெரிய பூ; நறுமணமுள்ளது. ஐந்தடுக்கானது. இரு பாலானது.
புல்லி வட்டம் : 5 முக்கோண வடிவான, மஞ்சள் நிறமான, புறவிதழ்கள் குவிந்திருக்கும்.
 

பாதிரி
(Stereospermum suaveolens)

அல்லி வட்டம் : 5 (கிரிம்சன் நிறமான) செந்நீல ஊதா நிறம். அகவிதழ்கள் அடியில் இணைந்து, வளைந்த குழல் போன்றது; 2.அடியிதழ்கள் சிறியவை; மேலிதழ்கள் சற்றே பெரியவை. பூத்தவுடன், மடல்கள் விரிந்து, புனல் போன்ற துய்யுடன் தோன்றும். அகவிதழ்களின் உட்புறத்தில் நுண்ணிய பஞ்சு போன்ற நுண் மயிர் அடர்ந்திருக்கும்.
மகரந்த வட்டம் : 4 தாதிழைகளில், 2 சற்று குட்டையானவை. ஐந்தாவது தாதிழை சுருங்கிப் போயிருக்கும். தாதுப்பைகள் பளபளப்பானவை.
சூலக வட்டம் : சூலகம் அடி ஒட்டியது. இரு சூலிலைச் சூலகம். பல சூல்கள்; சூல்தண்டு மெல்லியது. இரு பிளவுள்ளது சூல்முடி.
கனி : 18 அங்குல நீளமான காப்சூல் எனும் வெடிகனி; அடிமரம் வலியது; மஞ்சள் கலந்த பழுப்பு நிறமானது. பயன்படுத்தப்படவில்லை.  1. “ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
    தண்ணீர்ககுத் தான்பயந் தாங்கு” -நாலடி. 139:2-4
  2. புட்பவிதி. 40 : 1
  3. ஞான. தே. திப்பாதிரி. 8
  4. பெரி. பு: திருநா. 38