சங்க இலக்கியத் தாவரங்கள்/104-150
நொச்சி–சிந்துவாரம்
வைடெக்ஸ் நிகண்டோ (Vitex nequndo,Linn.)
முற்றுகையைத் தகர்த்தெழும் வீரர்கள் சூடும் போர் மலர் இது. இதன் பூங்கொத்து அகத்துறையிலும் புறத்துறையிலும் பேசப்படுகின்றது.
நொச்சியை ஒரு சிறுமரமெனக் கூறலாம். இதன் கூட்டிலையில் 3 முதல் 7 வரையிலான சிற்றிலைகள் காணப்படும். மலர்கள் சிறியவை, நீல நிறமானவை.
சங்க இலக்கியப் பெயர் | : | நொச்சி |
தாவரப் பெயர் | : | வைடெக்ஸ் நிகண்டோ (Vitex nequndo,Linn.) |
நொச்சி–சிந்துவாரம் இலக்கியம்
முற்றுகையைத் தகர்த்து எழும் வீரர்கள் சூடும் பூ நொச்சி மலர். ஆதலின் இதுவும் போர் மலராகும். நொச்சி ஒரு சிறு மரம். இது வீட்டின் முற்றத்திலும் வளரும். இதன் மேல் மௌவல் கொடி ஏறிப் படரும்.
நொச்சியில் மனை நொச்சி, கரு நொச்சி, மலை நொச்சி, வெண்ணொச்சி என்ற வகைகள் உள்ளன. இதன் கூட்டு இலை மயிலடியைப் போன்றது. இந்நொச்சியே இலக்கியத்தில் கூறப்படுகின்றது. குறிஞ்சிப் பாட்டில் (89) குறிப்பிடப்படும் சிந்துவாரம் என்பதற்குக் கருநொச்சி என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர்.
மூன்றிலை நொச்சி. ஐந்திலை நொச்சி, ஏழிலை நொச்சிகள் உண்டு. இவற்றுள் கருநொச்சியில் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலைகள் உள்ளன. மயிலடி போன்றதெனின் கருநொச்சியே புறத்திணை நொச்சியாகும். இது கார் காலத்தில் கொத்தாகப் பூக்கும். மலர்கள் நீல மணி போன்ற நிறமுடையவை. அரும்புகள் நண்டின் கண்களை யொத்தவை.
“மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
மனைநடு மௌவலொடு ஊழ்முகை யவிழ
கார்எதிர்ந் தன்றால்”-நற். 115 : 5-7
“மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென் கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே”-குறுந். 138 : 3-5
“அலவன் கண்ணேய்ப்ப அரும்புஈன்று அவிழ்ந்த
கருங்குலை நொச்சி”[1]
“நொச்சிமா அரும்பன்ன கண்ண
எக்கர் ஞெண்டு”-நற். 267 : 1-2
நீல நிறமான இதன் மலர்கள் கொத்தாகப் பூக்கும்.
இதனை அணியும் போது நொச்சி மலர்க் கொத்தாக அணிவர். திருவிழாவை அறிவிக்கும் போதும், காக்கைக்குக் கோயில் படைப்பைப் பலியிடும் போதும், குயவன் நொச்சிப் பூங்கொத்தை மாலையாகச் சூடுவான். நொச்சிப் பூ சிவபெருமானுக்கும் சூட்டப் படுவது[2] என்றும், நொச்சியிலை கொண்டு சிவனைப் பரவுவர் என்றும் [3]கூறுவர்.
“மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி
பலிக்கள் ஆர் கைப்பார் முதுகுயவன்
இடுபலி நுவலும் அகன்தலை மன்றத்து
விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்”-நற். 293 : 1-4
மேலும், நொச்சியிலை தழையுடை தொடுக்கவும் பயன்படுமென்பர்.
“ஐதுஅகல் அல்குல் தழையணிக் கூட்டும்
கூழை நொச்சி”-அகநா. 275 : 16-17
மற்று, பொன்னேர் பூட்டும் முதல் உழவின் போது, நொச்சித் தழையை மாலையாகச் சூடிக் கொள்வர் என்றார் கண்ணங் கூத்தனார்.
“கருங்கால் நொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புனம் ஏர்க்கடி கொண்டார்.”[4]
தழையுடையாகவும், தொடலையாகவும் மகளிருக்குப் பயன்படும் நொச்சிப் பூங்கொத்தை, மாலையாகச் சூடிப் போர் புரிந்த மறக்குடி மகனின் மார்பில் பகைவனின் வேல் பாய்ந்தது. குருதி கொப்புளித்தது. நீல நிற நொச்சி மாலை குருதியால் சிவந்து புரண்டது. இதனைப் பார்த்த பருந்து இஃதோர் நிணத் துண்டமெனக் கருதி, மாலையை இழுக்க முனைந்தது என்கிறார் வெறிபாடிய காமக்கண்ணியார்.
“நீர் அறவு அறியா நிலமுதற் கலந்த
கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
மெல்லிழை மகளிர் ஐதுஅகல் அல்குல்
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவுகரந்து
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்து
பருந்து கொண்டு உகப்பயாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே”-புறநா. 271
இங்ஙனம் அகத்துறையிலும், புறத்துறையிலும் பங்கு கொள்ளும் நொச்சிமரத்திற்குக் ‘காதல் நன்மரம்’ என்று பட்டங் கொடுத்துப் பாராட்டுரை பகர்கின்றார் மோசி சாத்தனார்.
“மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி!
போதுவிரி பல்மா னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீ நிழற்றிசினே
கடியுடை வியல் நகர்க்காண் வரப்பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்
ஊர்ப் புறங் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே ”-புறநா: 272
நொச்சி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae) லாமியேலீஸ் (Lamiales) அகவிதழ் இணைந்தவை. |
தாவரக் குடும்பம் | : | வர்பினேசி (Verbenaceae) |
தாவர இயல்பு | : | பெரும் புதர்ச்செடி என்பர். எனினும், இது சிறு மரமாகும். வெற்றிடங்களில் தழைத்துக் கிளைத்து வளரும். |
சங்க இலக்கியப் பெயர் | : | நொச்சி, சிந்துவாரம். |
இலை | : | கூட்டிலை; எதிரடுக்கில் 3 முதல் 7 சிற்றிலைகள் வரை காணப்படும். பசிய சிற்றிலைகள் நீண்டு, நுனி கூரியதாக இருக்கும். சிற்றிலைகளுக்குக் காம்பு உண்டு. |
மஞ்சரி | : | கலப்பு மஞ்சரி. கிளை நுனியில் மலர்கள் கொத்துக் கொத்தாக, ஓர் அடி நீண்ட இணர்க் காம்பில் உண்டாகும். |
மலர் | : | நீல நிற மலர்கள். அரும்புகள் உருண்டை வடிவானவை. மலரடிச் செதில் சிறியது. |
புல்லி வட்டம் | : | புனல் வடிவானது. மேலே 5 பிளவானது. முக்கோண வடிவானது. |
அல்லி வட்டம் | : | இரு உதடுகளாலானது. அகவிதழ்கள் ஐந்தும் இணைந்து, அடியில் குழல் போன்றிருக்கும். மேல் உதடான மடல் 2 இதழ்களால் ஆனது. அடி உதடான மடல் 3 இதழ்களைக் கொண்டது. விளிம்பில் 3 பிளவுகள் காணப்படும். அடி உதடான மடல்களில் நடுமடல் பெரியது. சற்று நீண்டது. |
மகரந்த வட்டம் | : | 4 தாதிழைகளில் 2 உயரமானவை. 2 குட்டையானவை. இவை எல்லாம் |
மலரின் மடலுக்கு வெளியே நீண்டு காணப்படும். | ||
தாதுப்பை | : | தாதிழைகளின் நுனியில் உள்ள தாதுப் பைகள் முதலில் நேராகத் தொங்கும். பின்னர் விரிந்து இரு புறமும் நீளும். |
சூலக வட்டம் | : | 2 செல்லால் ஆனது. நடுவில் தடுப்புச் சுவர் உண்டாகி நான்கு பகுதிகளாகி விடும். |
விதை | : | நான்கும் நான்கு சூலறைகளில் உண்டாகும். முட்டை வடிவானவை. விதையுறை கடினமானது. வித்திலைகள் சதைப்பற்றானவை. |
இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என மாலிக் என். ஏ, ஆமத் (1963) என்போரும், 2n = 26 என சோப்தி, சிங் (1961) என்போரும் கணித்துள்ளனர். இதன் அடி மரம் வலியது. வெண்கருப்பு (யானை) நிறமானது. இதன் பட்டையும் இலைகளும் மருந்துக்குப் பயன்படும்.