சங்க இலக்கியத் தாவரங்கள்/114-150

விக்கிமூலம் இலிருந்து
 

ஆரம்–சந்தனம்
சான்டாலம் ஆல்பம் (Santalum album,Linn.)

சங்க இலக்கியங்கள் சந்தன மரத்தை ‘ஆரம்’ எனவும், ‘சாந்தம்’ எனவும், ‘சந்தனம்’ எனவும் குறிப்பிடுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : ஆரம்
தாவரப் பெயர் : சான்டாலம் ஆல்பம்
(Santalum album,Linn.)

ஆரம்–சந்தனம் இலக்கியம்

சந்தன மரம் உயரமாக வளர்வது. குடமலை, பொதியில் மலைகளில் வளர்கிறது என்றும், மலையிடைப் பிறந்தும் இச்சந்தனம் மலைக்குப் பயன்படாது பிறருக்கே பயன்படுவது போல, மகளிரும் பருவத்தே பெற்றோருக்குப் பயன்படாது விரும்பினர் பாற் சென்று பயன்படுவர் என்று கூறும் தமிழிலக்கியம்.

“ஆரம் காழ்வை கடியிரும் புன்னை”-குறிஞ். 93

எனக் கபிலர், ஆரம் எனப்படும் சந்தன மலரையும் பிற மலர்களோடு குறிப்பிடுகின்றார். ஆயினும், ஆரத்தின் மலரில் நறுமணமில்லை. சந்தனம் பரப்பும் நறுமணம் அதன் மரத்தில்தான் உள்ளது. இம்மரம் சாந்தம், சந்தனம் என்றும் குறிப்பிடப் படுகின்றது.

சந்தன மரம், குடமலை, பொதியமலை முதலான மலைகளில் வளரும் என்பதைப் புலவர்கள் கூறுவர்.

“குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்”-பட்டினப். 188
“. . . .   . . . .   . . . .  பொதியில்
 சூரூடை அடுக்கத்து ஆரம் கடுப்ப”
-குறுந். 376 : 1-2

“பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
 மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்”

-கலி. 9 : 12-13


சந்தன மரம் உயரமாக வளரும். நீரில் கலந்த தேறலை, அறியாது உண்ட கடுவன் சந்தன மரத்தில் ஏற முடியாமல் தவித்தது என்றும், சந்தன மரத்தில் மிளகுக் கொடி ஏறிப் படரும் என்றும், இம்மரத்தினால் செய்யப்பட்ட உலக்கையால், ஐவன நெல்லைப் பாறை உரலிட்டுக் குத்துவர் என்றும் புலவர்கள் கூறுவர்.

“. . . . . . . . . . . . விளைந்த தேறல்
 அறியாது உண்ட கடுவன் அயலது
 கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது”
-அகநா. 2 : 4-6

“. . . . . . . . இனவண்டு இமிர்பு ஊதும்
 சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்”

- கலி. 43 : 2-3

சந்தன மரக்கட்டையில் மணமுள்ள சந்தன எண்ணெய் உண்டாகும். மரம் முதிர, முதிர எண்ணெய் மிகுந்து சுரக்கும். இதனால், சந்தனக் கட்டையினைத் தேய்த்து, அரைத்துச் சந்தனக் குழம்பாக்கி, உடம்பில் பூசிக் கொள்வர். மணத்துடன் சந்தனச் சாந்து உடலுக்குக் குளிர்ச்சியும் தரும். இதனைப் புலவர்கள் பாடியுளளனர்.

“நெடுவரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்ப-சிறுபா. வெ. உ.

“திண்காழ் ஆரம் நீவிகதிர் விடும்
 ஒண்காழ் ஆரம் கவைஇய மார்பின்”
-மதுரை. 715-716
(ஆரம்-முன்னது சந்தனம், பின்னது முத்தாரம்)

“நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்”-மலைப. 520

“அரையுற்று அமைந்த ஆரம் நீவி
 புரையப் பூண்ட கோதை மார்பினை”
-அகநா. 100 : 1-2

“மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம்”-கலி. 73 : 13

“வண்டுஊது சாந்தம் வடுக்கொள நீவிய”-கலி. 93 : 1

“ஆரம் நாறும் மார்பினை”-குறுந். 198 : 7

“. . . . . . . . . தன்மலை
 ஆரம் நாறும் மார்பினன்”
-குறுந் 161 : 5-6

அகில் மணமும், சந்தன மணமும் கொடிச்சியின் கூந்தலில் நாறுமென்று எயிற்றியனார் கூறுகின்றார்.

“. . . . . . . . . . . . கமழ் அகில்
ஆரம் நாறும் அறல்போல் கூந்தல்”
-குறுந். 286 : 2-3

சந்தன மரத்தின் மலர் வெண்மையானது. இதில் மணமில்லையாயினும், இதில் உண்டாகும் தேனை உண்ணுதற்கு, வண்டுகள் வந்து மொய்க்கும். இவ்வியல்பினைப் புலவர்கள் கண்டு பாடியுள்ளனர்.

ஆரம்—சந்தனம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : மானோகிளமைடியே
(Monochlamydeae) என்ற பெருந்தொகுதியில், எகிளமைடோஸ்போரியே (Achlamydosporeae) என்ற தொகுதியைச் சேர்ந்தது. இவற்றுள் அல்லியும், புல்லியும் இணைந்திருக்கும்.
தாவரக் குடும்பம் : சான்டலேசி (Santalaceae)
தாவரப் பேரினப் பெயர் : சான்டாலம் (Santalum)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆல்பம் (album)
சங்க இலக்கியப் பெயர் : ஆரம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : சாந்தம், சாந்து, சந்தனம்
உலக வழக்குப் பெயர் : சந்தனமரம்
தாவர இயல்பு : உயர்ந்து வளரும் மரம். 3000 அடி உயரமான மலைகளில் வளரும். குடகு, நீலகிரி மலைகளில் வளர்கிறது. மேலும், இதன் விதைகள் காவிரி நீரில் மிதந்து வந்து, கொள்ளிடக்கரைகளில் மிக நன்றாக உயர்ந்து செழித்து வளர்கின்றன. மேலும், சந்தனக் கன்று பிறமரங்களின் வேர்களில் ஒட்டுண்ணியாக வளரும் இயல்புடையது.
 

சந்தனம்
(Santalum album)

இலை : எதிரடுக்கில் பளபளப்பான தனி இலைகள். அடியும், நுனியும் குறுகிய முட்டை வடிவான இலை.
மஞ்சரி : கலப்பு மஞ்சரியாகவும், நுனிவளராப் பூந்துணராகவும் காணப்படும். இலைக் கோணத்தில், கிளைகளின் நுனியில் உண்டாகும்.
மலர் : வெண்ணிறமானது; இருபாலானது.
அல்லி, புல்லி வட்டங்கள் : இத்தொகுதியில் உள்ள பூக்களில் புல்லி வட்டமும், அல்லி வட்டமும் ‘பீரியாந்த்’ (Perianth) என்று வழங்கப்படும். 4 இதழ்கள், மேற்புறத்தில் நுண்ணிய மயிர்கள் நீண்டிருக்கும். இவை துய்யெனப்படும். 4 இதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாகவும், மேலே புனல் போன்றுமிருக்கும்.
மகரந்த வட்டம் : 4 அல்லது 5 குட்டையான தாதிழைகள் மலரிதழ்களின் அடியில் ஒட்டியிருக்கும். மலர்த் தட்டு உண்டு. தாதுப்பை முட்டை வடிவானது.
சூலக வட்டம் : மலரடிச் சூலகம். 2-3 தொங்கு சூல்கள். சூலகமுடி நீளமானது. சூல்முடி 2-3 பிளவானது.
கனி : சதைக்கனி ‘ட்ரூப்’ எனப்படும். ‘என்டோகார்ப்’ தடித்த கம்பளம் போன்றது. விதை சற்று உருண்டை வடிவானது. ஆல்புமின் உள்ளது. கரு மெல்லியது. கருமுளை வித்திலைகளைக் காட்டிலும் நீளமானது.

சந்தன மரம் நீலகிரி, மைசூர் மலைகளிலும், காடுகளிலும் வளர்கிறது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் வளர்ந்த பின்னர், இம்மரத்தின் பூங்கொத்தில் ஒரு நோய் உண்டாகின்றது. இதற்கு ‘ஸ்பைக்’ நோய் (துணர் நோய்) என்று பெயர். இந்நோய்க்கு ஆளான மரங்கள் பட்டுப் போகும்.

சந்தன மரத்தில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரே சந்தன எண்ணெய் அதன் மரத்தண்டில் உண்டாகின்றது. மரத்திலும் காழ் கொண்ட நடுப்பகுதியில் (Heart wood) தான் இந்த எண்ணெய் இருக்கும். புறப்பகுதியில் (Sap-wood) இருக்காது. எண்ணெய் சுரக்கும் காலத்தில், இம்மரத்தை இந்த நோய் தாக்குவதிலிருந்து தடுத்தற்குப் பலவாறான ஆய்வு முறைகள் கையாளப்படுகின்றன. எனினும், அவை நற்பயன் அளிக்கவில்லை. இந்நோய் மேலும் பிற மரங்களில் தொடராதிருக்கும் பொருட்டு, நோய் உள்ள மரத்தை வெட்டி அழிப்பதுதான் இந்நாளைய ஆய்வாளர்களின் அறிவுரை.

கடந்த பத்து ஆண்டுகளாக, அனைத்திந்திய மட்டத்தில் சந்தன மர ஆய்வு தீவிரமாக்கப்பட்டது. இதற்கு உயர் தனி ஆய்வாளராக திரு. கே. ஆர். வெங்கடேசன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர்தான் முதலில் சந்தன மரங்கள் கொள்ளிடக் கரையில் செழிப்பாக வளர்ந்து வருவதைக் கண்டார். இம்மரங்கள் ஏறத்தாழ அறுபது முதல் எழுபது ஆண்டு மரங்களாகக் காணப்பட்டன. இவற்றின் அடிமரத்தில் துளையிட்டு, நடுத்தண்டுப் பகுதியை எடுத்து ஆய்வு செய்ததில், இம்மரங்களில் சந்தன எண்ணெய் மிக அதிகமாகவும், நறுமணம் மிகுந்து இருப்பதையும் கண்டார். நன்கு முதிர்ந்த இம்மரங்களில் ஸ்பைக் நோய் உண்டாகவில்லை. இம்மரங்களின் பூக்களில், மைசூர் மலைக்காடுகளில் வளரும் சந்தன மரங்களின் தாதுக்களைக் கொண்டு வந்து, அயல் மகரந்தச் சேர்க்கை செய்தார். இதன் விளைவாக உண்டான விதைகளை முளைக்க விட்டு, இக்கன்றுகளைத் தக்க முறையில் வளர்த்து வருகின்றனர். இது போலவே, கொள்ளிடக் கரையில் வளரும் சந்தன மரத்தின் தாதுக்களைக் கொண்டு போய், மைசூர் மலைக் காடுகளில் வளரும் சந்தன மரத்தின் பூக்களில் தூவி, அயல் மகரந்தச் சேர்க்கை செய்து, அதன் பயனாக உண்டான விதைகளிலிருந்து சந்தன மரக் கன்றுகளை வளர்த்து வருகின்றனர்.

இவ்விரு வகையான சந்தன மரக் கன்றுகளும் வளர்ந்து முதிர்ந்த பின்னர், இவை இந்நோய்க்கு ஆளாக மாட்டா என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சந்தன எண்ணெய்க்காகவும், சந்தனக் கட்டைகளுக்காகவும் இம்மரங்கள் பாதுகாவலுடன் வளர்க்கப்பட்டு வருகின்றன.

சந்தன மரத்தின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 10 என ஐயங்கார் ஜி. எஸ். (1937) கணக்கிட்டுள்ளார்.