உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/119-150

விக்கிமூலம் இலிருந்து

ஆல்
பைகஸ் பெங்காலென்சிஸ் (Ficus bengalensis,Linn.)

ஆல் இலக்கியம்

‘ஆல்’ எனவும், ‘ஆலம்’ எனவும் சங்க இலக்கியங்கள் கூறும் ஆலமரம் மிகப் பரவி வளரும் பெருமரமாகும். இதன் கிளைகள் நீண்டு தழைத்து நாற்புறமும் பரவி நிழல் பரப்பி நிற்கும். கிளைகளிலிருந்தும் அடி மரத்திலிருந்தும் விழுதுகள் கீழ் நோக்கி வளர்ந்து நிலத்தில் ஊன்றிப் பருத்து விடும். இவ்வேர்களுக்கு ஊன்றுவேர்கள் ‘ஸ்டில்ட் ரூட்ஸ்’ (Stilt Roots) என்று பெயர். தாய் மரத்தினின்று இக்கிளைகள் தறிக்கப்பட்டுவிடினும் கிளைகள் தாமாகவே வளர்ந்து வாழும் இயல்புடையன.

இறைவன், ‘அன்று ஆலின் கீழ் இருந்து அறமுரைத்தான்’ என்பர் மணிவாசகர்[1]. இதனால் இம்மரத்தைக் ‘கடவுள் ஆலம்’ என்று நற்றிணையில் பெரும்பதுமனார் கூறுவர் (நற். 199 : 1) சிவபெருமானை ஆலமர் செல்வன் என்று கூறும் சங்க நூல்கள்.

“ஆல்கெழு கடவுள்”-திருமு. 256
“ஆல் அமர் செல்வற்கு”-சிறுபா. 97
“ஆல் அமர் செல்வன் அணிசால் பெருவிறல்”
-கலி. 81 : 9
“ஆல்அமர் செல்வன் அணிசால் மகன்விழா”
-கலி. 83 : 9


முல்லை நிலத்தே ஏறு தழுவுதற்குத் திரண்ட ஆயர் குல மறவர் நீர்த்துறையிலும், ஆலமரத்தின் கீழும், மராமரத்தின் கீழும் உறையும் தெய்வங்கட்குச் செய்யும் முறைமைகளைப் பரவித் தொழுவிலே பாய்ந்தார் என்று கூறும் கலித்தொகை.

“துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்
 முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ”

-கலி. 101 : 13-14

இறைவன் தங்கியிருக்கும் இடமாவதன்றி, ஆலமரம் பேரரசர்கள் தமது பெரும்படையுடன் தங்கியிருக்கவும் நிழல் பரப்பும்[2]. பெரியவர் என்று பேர் படைத்த அலெக்சாண்டர், தமது ஏழாயிரம் போர் வீரர்களுடன் இளைப்பாறுதற்கு இடம் தந்தது ஆலமரம் என்பர்.

புணர்ந்து உடன் போகா நின்ற தலைவன், ‘வெப்பம் மிக்க இவ்விடைச் சுரத்தில் நடந்து வந்த களைப்பை ஆற்றுதற்கு, ஆல மரத்து நீழலில் அசைவு நீக்கிச் செல்லலாம்’ என்கின்றான்.

“ஆல நீழல் அசைவு நீக்கி”ーநற். 76 : 3

ஆல், அரசு, அத்தி முதலிய மரங்களும் பூத்துக் காய்ப்பனவே. எனினும், இவற்றின் பூக்கள் வெளிப்படையாகக் காணப்பட மாட்டா. இவை காண்பதற்கு அரியனவாதலின், ‘பூவாதே காய்க்கும் மரமும் உள’[3] என்ற கூற்றும் எழுந்தது.

ஆலமரத்தின் பூக்களைக் கொண்டது இதன் இளங்காயாகும். இது உருண்டை வடிவானது. சதைப்பற்றுள்ளது; உட்கூடு உடையது. உட்கூட்டின் ஓரங்களில் மலர்கள் உண்டாகும். மலர்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ்ந்த பின், இக்காய்கள் முதிர்ந்து பழமாகும். இங்ஙனம், மலர்களை அகத்தே கொண்டிருக்கும் ஆல மரங்களைப் புலவர்கள். ‘கோளி ஆலம்’ என்று கூறுகின்றனர்.

“கோடுபல முரஞ்சிய கோளி ஆலத்து”-மலைப. 268
“முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்து”
-புறநா. 58 : 2
“முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து”-புறநா. 254 : 7

ஆலமரத்தின் கனி செந்நிறமானது. இது புதிய மட்கலத்தைப் போன்று செம்மையானது என்கிறார் ஓதலாந்தையார்.

“புதுக்கலத் தன்ன கனிய ஆலம்”-ஐங். 303 : 1

ஆலமரத்தின் கிளைகளினின்று விழுதுகள் உண்டாகி, கீழ் தோக்கி வளர்ந்து, மண்ணில் ஊன்றிப் பருத்து, நிழல் பரப்பும் கிளைகளைத் தாங்கி நிற்கும் என்ற உண்மையைப் புலவர்கள் கூறுகின்றனர்.

“. . . . . . . . . . . . கோளி ஆலத்துக்
 கொழுகிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்கு”

-புறநா. 58 : 2-3
“பல்வீழ் ஆலம்போல”-அகநா. 70 : 16
“. . . . . . . . . . . .பொரிஅரை ஆலத்து
 ஒருதனி நெடுவீழ் உதைத்த கோடை”

-அகநா. 287 : 7-8
“. . . . . . . . . . . . பெருங்கிளை
 பிணிவீழ் ஆலத்து அலங்குசினை ஏறி”

-அகநா. 319 : 1-2
“அழல்புரை குழைகொழு நிழல்தரும் பலசினை
 ஆலமும் கடம்பும்”
-பரி. 4 : 66-67

ஆல் தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
இவை மானோகிளமைடியே எனப்படும்.
தாவரத் தொகுதி : ஆர்டர்
அர்டிசிபுளோரே (urticiflorae)
தாவரக் குடும்பம் : மோரேசி (Moraceae)
தாவரப் பேரினப் பெயர் : பைகஸ் (Ficus)
தாவரச் சிற்றினப் பெயர் : பெங்காலென்சிஸ் (bengalensis)
சங்க இலக்கியப் பெயர் : ஆல், ஆலம்
உலக வழக்குப் பெயர் : ஆலமரம்
தாவர இயல்பு : மிகப் பரவிக் கிளைத்துத் தழைத்து வளரும் பெரிய மரம்.
தாவர வளரியல்பு : மீசோபைட். எல்லாவிடங்களிலும் வளர்கிறது. இதன் பழத்தை உண்ணும் காக்கையின் எச்சத்தில், இதன் விதைகள் இருக்கும். அவை பிற மரங்களின் மேலே முளைத்து அல்லது பிற மரங்களைத் தழுவி வளருவதும் உண்டு.
இலை : தனி இலை. பளபளப்பானது. தடித்தது. நீள்.முட்டை வடிவானது. 4.8" X 2.5" இலைக் குருத்தை மூடி, இரு இலைச் செதில்கள் உள.
மஞ்சரி : இலைக்கோணத்தில் ஒன்று முதல் இரண்டு அங்குல உருண்டை வடிவான பசிய இளங்காயின் உள்ளிடத்தே சுவர்களில் பல பூக்கள் உண்டாகும். இதுவே இதன் பூவிணராகும். தமிழ் இலக்கியத்தில் இதனைக் கோளி என்று கூறுவர். தாவிரவியலார். இதனை ஹைபந்தோடியம் (Hypanthodium) என்று கூறுவர்.
மலர் : இதனை ரிசப்டகிள் (Receptacle) என்றுரைப்பதுமுண்டு. இதே பொருள் கொண்ட சங்க இலக்கியச் சொல் “கோளி” என்பதாகும். மலர்களைத் தன்னகத்தே கொண்டிருத்தலின், கோளி எனப்பட்டது. இதற்கு அடியில் இரு மலரடிச் செதில்கள் உள்ளன. இதனுள் ஆண் மலர்களும், பெண் மலர்களும் காயின் உட்சுவரில் ஒட்டியிருக்கின்றன. ஆண் மலர்கள் மேற்பகுதியில் உள்ளன.
ஆண் மலர் : இம்மலரின் புல்லியும், அல்லியும் இணைந்து, 2 பீரியாந்த் (Perianth) என்ற இதழ்கள் உள்ளன. ஒவ்வொரு மலரிலும், 5 நேரான மகரந்தக் கால்கள் உள்ளன. மகரந்தப் பையிலிருந்து தாது முதிர்ந்து, அடியில் உள்ள பெண் மலரின் சூல்முடியின் மேல் விழும்.
பெண் மலர் : இதிலும் 2 பீரியாந்த் (Perianth) என்ற இதழ்கள் காணப்படுகின்றன. அடியில் சூலகமும், அதிலிருந்து மேலே ஒரு புறமாகச் சாய்ந்துள்ள சூல்முடியும் இருக்கும். சூலகத்தில் ஒரு சூல் காணப்படும். மகரந்தச் சேர்க்கையின் பின் சூல் கருவுறும்.
கனி : கோளி முதிர்ந்து, பசிய காயாகிப் பின் செந்நிறமான கனியாகும். இக்கனிகளைக் காக்கை உகக்கும். மருந்துக்கும் உதவும்.
விதை : கரு வளைந்திருக்கும். இரு சமமான வித்திலைகள் உள்ளன.



  1. “அன்றாலின் கீழிருந்து அறமுரைத்தான் காணேடி”
    -திருவாசகம்: திருச்சாழல்
  2. தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
    சிறுமீன்சினையினும் நுண்ணிதே யாயினும்
    அண்ணல் யானை அணிதேர்ப் புரவி
    ஆட்பெரும் படையொடு மன்னர்க்கிருக்க நிழலாகும்மே.
  3. நல். 35