சங்க இலக்கியத் தாவரங்கள்/120-150

விக்கிமூலம் இலிருந்து
 

பலா
அர்ட்டோகார்ப்பஸ் இன்டெகிரிபோலியா
(Artocarpus integirifolia,Linn.)

‘பலவு’ எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பலா மரம் இந்திய நாட்டைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் 40 சிற்றினங்கள் உள்ளன. 1500 முதல் 4000 அடி உயரம் வரையிலான மலைப் பாங்கில் நன்கு வளரும். வள்ளல் பாரியின் பறம்பு மலையில் உழுது பயிரிடாத பயனுள்ள இம்மரம் தானே வளர்ந்து பயன் கொடுத்தது என்பர் கபிலர்.

சங்க இலக்கியப் பெயர் : பலவு, பலா
தாவரப் பெயர் : அர்ட்டோகார்ப்பஸ் இன்டெகிரிபோலியா
(Artocarpus integirifolia,Linn.)

பலா இலக்கியம்

இம்மரக்கனியில் உண்டாகும் சுவை மிக்க சுளைகள் உணவாகப் பயன்படும். சுளைகளில் 75 விழுக்காடு சருக்கரை உள்ளது. இதன் பிஞ்சுகளைக் கறி சமைப்பார்கள்.இதன் அடிமரம் வலியது. அழகான மஞ்சளும் இளஞ்செம்மையும் கலந்த நிறமானது. இதன் பலகை பலவாறு பயன்படுகின்றது.

அர்ட்டோகார்ப்பஸ் என்ற இதன் பேரினப்பெயர் கிரேக்க மொழியில் ‘ரொட்டிக்கனி’ (Bread fruit) என்று பொருள்படும் சொல்லிலிருந்து உண்டாயிற்று என்பர். ‘ஜாக்’ என்ற ஆங்கிலப் பெயர் ‘சக்கா’, ‘ஜக்கா’ என்ற மலையாளச் சொல்லிலிருந்து உண்டாயிற்றாம்.

பலாமரம் இந்தியாவில் பலவிடங்களில் இதன் பழத்திற்காகப் பயிரிடப்படுகிறது. பலாப்பழத்திலிருந்து சுவையான ‘குடிநீர்’ தயாரிக்கப்படுகிறது. இதில் 22.5 விழுக்காடு சருக்கரை; 10 விழுக்காடு பலாச்சுளைச் சாறு; 7.5 விழுக்காடு சிட்ரிக் அமிலம்; 15 விழுக்காடு தண்ணீர்; சிறிது ( ஓர் அவுன்ஸ்) பொட்டாசியம் மெட்டாபைசல்பைட் சேரும் என்பர்.

செந்தமிழ் நாட்டின் சிறப்பு மிக்க முக்கனிகள் வாழை, மா, பலா எனப்படும். தனித் தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டி, நற்கருப்பஞ் சாற்றுடன் கலந்து, தேங்காய்ப் பாலுடன் விரவிக் காய்ச்சி, இளஞ்சூட்டில் இறக்கி வைத்து, ஐந்தமுதம் (பஞ்சாமிர்தம்) செய்து உண்ணத் தருகிறார்கள் வடலூர்ப் பெரு வெளியிலே. இதனைக் காட்டிலும் சுவையுடைத்தாம் இறைவன் தரும் அருளமுதம். இத்தாவரங்கள் அனைத்தும் சங்கப் பாடல்களில் பயிலப்படுவன.

பலா மரத்தைச் சங்கப் பாடல்கள் ‘பலவு’ என்று குறிப்பிடுகின்றன. பலாமரம் குறிஞ்சி நில மரமாகக் கூறப்படுகிறது.

“சாரற் பலவின்” -ஐங். 214 : 1
“பல்கோட் பலவின் சாரல்” -நற். 102 : 5
“நெடுவரை, முடவு முதிர் பலவு” -நற். 353 : 4
“பனிவரை நிவந்த பாசிலைப் பலவு” -புறநா. 200 : 1
“பலா அமல் அடுக்கம்” -அகநா. 8 : 7

குறிஞ்சி திரிந்த பாலையிலும் வளரும் என்பதை ஐங்குறுநூறு கூறும்.

“அத்தப்பலவின் வெயில் தின் சிறுகாய்”-ஐங். 351 : 1
“முடமுதிர் பலவின் அத்தம்” -நற். 26 : 6

பலா மரம் இல்லின் முன்பும் வளரும்; பருத்து வளரும், வேர்கள் வெளிப்பட வளரும்; கிளைத்து வளரும்; பசிய, அகன்ற இலைகளுடன், தழைத்து வளரும். மரத்தின் மேல் மிளகுக் கொடி படர்ந்து வளரும். பலா மரத்தின் நிழலில் எருமை பாயல் கொள்ளும் என்றெல்லாம் புலவர்கள் கூறுவர்.

“முன்றில் நீடிய முழவு உறழ் பலவின்” -அகநா. 172 : 11
“முன்றிற் பலவின் படுசுனை மரீஇ” -நற். 373 : 1
“தடவுநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட”
-பெரும்பா. 77


“அலங்கு சினைப் பலவே” -மலைப . 144
“அகல் இலைப்பல வின் சாரல் முன்னி” -குறு. 352
“. . . . . . . . . . . . முன்றில்
 பலவின்இருஞ் சினைக்கலை பாய்ந்து உகளினும்”
-குறு. 153 : 1-2
“அள்இலைப் பலவின் கனிகவர் கைய
 கல்லா மந்தி கடுவனோடு உகளும்”
-அகநா. 378 : 20-21
“. . . . . . . . . . . . பலவின்
 பழந்தூங்கு கொழுநிழல் ஒளிக்கும்”
-ஐங் 216 : 3-4
“. . . . . . . . . . . . எருமை
 பைங்கறி நிவந்த பலவின் நீழல்
 . . . . . . . . . . . . பாயல் கொள்ளும்”
-சிறுபா 42-46
(கறி-மிளகு)

பலா, அத்தி, ஆல் முதலிய மரங்களில் பூக்கள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. எனினும் இவற்றில் பிஞ்சுகள் உண்டாகிப் பழமாகும். இதனால், பிற்காலத்தில் இவற்றைப் பூவாமல் காய்க்கும் மரங்கள் என்று கருதினார்[1]. இவற்றில் பூ உண்டாகும். ஆயினும், காட்சிக்கரியது என்பதையும் மக்கள் உணர்ந்தனர் என்பதை ‘அத்தி பூத்தாற் போல’ என்ற பழமொழியினாலும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் ‘பலாப் பூ’ என்று குறிப்பிடுதலாலும் அறியலாம். [2]

ஆல், அத்தி மரங்களின் பூக்கள் ‘குடத்து மலர்களாக’ உள்ளே பொதிந்து மறைந்திருக்கும். இவற்றின் பிஞ்சுகளே, இவற்றின் இணராகும். இதனைக் ‘கோளி’ என்று கூறுவர். பலா மரத்தின் பெண் துணரைக் கோளி என்று கூறலாம். ஏனெனில், இதன் பெண் பூக்கள் ‘தொத்தை’ எனவும், ‘பலாமுசு’ எனவுங் கூறப்படும். மிகச் சிறிய விரல் போன்ற இதன் பிஞ்சினுள்ளே காணப்படும் பலாவின் ஆண் பூக்களைக் காணுதல் மிக அரிது. பூக்களில் உண்டாகும் மகரந்தம் பெண் பூந்துணரில் பட்டு, மகரந்தச் சேர்க்கை வெற்றி பெறுமாயின், அப்பிஞ்சு பருத்துக் காயாகிப் பழுக்கும். இல்லையெனில், பலாப் பிஞ்சுகள் கருகிப் போய் உதிர்ந்து விடும். இப்பூக்களின் தாவர இயல்பைப் பின்னர்க் கூறுவாம்

பெரும்பாணாற்றுப் படையில், பலவின் பூந்துணரைக் கோளி எனவும், மலைபடுகடாத்தில் ‘காய்த்துணர்’ எனவும் கூறுவர். இதில் வரும் துணர் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘தொத்தை’ என்று உரை கூறுவர்.

“கொழுமென் சினைய கோளி யுள்ளும்
 பழமீக் கூறும் பலாஅப் போல”
-பெரும்பா. 407-408
“கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப” -மலைபடு. 12
“சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம்” -ஐங். 214 : 1

பலாவின் பெண் பூக்கள்-பிஞ்சு, இதன் வேரிலும் தோன்றும், அடிமரத்திலும் தோன்றும்; கிளைகளிலும் தோன்றும்; தோன்றும் இடத்திற்கேற்ப இவை ‘வேர்ப்பலா’, ‘சூலடிப்பலா’, ‘கோட்டுப் பலா’ எனப்படும்.

“வேரல் வேலி வேர்க் கோட்பலவின்
 சாரல் நாட”
-குறுந். 18 : 1-2
“வேரும் முதலும் கோடும் ஓராங்குத்
 தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
 கீழ்தாழ்வு அன்ன வீழ்கோட்பலவின்”
-குறுந். 257 : 1-3
“தம்மில் தமது உண்டன்ன சினைதொறும்
 தீம்பழம் தூங்குழ் பலவின்”
-குறுந் . 83  : 3-4
“. . . . . . . . . . . . செவ்வேர்ச்
 சினைதொறும் தூங்கும் பயங்கெழு பலவின்”
-நற். 77 : 4-5
“செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி” -அக. 209 : 15

முதிர்ந்த பலாப்பழம் மத்தளம் போன்று பெரிதாக இருக்கும். பெரிய குடம் போலவுமிருக்கும். வணிகர் கழுதைகளின் மேல் ஏற்றிச் செல்லும் மிளகு மூட்டைகளைப் போன்றுமிருக்கும் என்பர் புலவர்கள்.

“. . . . . . . . . . . . முழவு உறழ் பலவில்” -அகநா. 172 : 11
“கானப்பலவின் முழவு மருள் பெரும்பழம்” -மலைபடு. 511
“சுரஞ் செல் கோடியர் முழவின் தூங்கி
 முரஞ்சுகொண்டு இறைஞ்சின அலங்குசினைப் பலவே”

-மலைபடு. 143-144


“தடவுநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
 சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப, மிரியல்
 புணர்ப் பொறை தாங்கிய”
-பெரும்பா. 77-79

மேலே எடுத்துக் காட்டிய பெரும்பாணாற்றுப்படையின் ஒரு சொற்றொடருக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் உரை நுனித்தறிந்து மகிழ்தற்பாலது. அந்த நல்ல சொற்றொடர்

“சிறுசுளைப் பெரும்பழம்” என்பது.

பலாப்பழத்தைத் தாவர இயல். ரிசெப்டகிள் (Receptacle) என்று விளக்கும். ரிசெப்டகிள் என்பதற்குக் ‘கோளி’ என்ற சொல் மிகப் பொருத்தமானதாகும். பலாப் பிஞ்சின் (துணர்) பெண் பூக்கள் மகரந்தச் சேர்க்கையுற்ற பின், பலாச் சுளைகளாகி விடும். இவற்றைச் சதைப் பற்றுள்ள பழவுறை மூடிக் கொள்ளும். பலாச் சுளைகள் பழத்தின் இயல்புக்கேற்ப மலிந்திருக்கும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப் படையில், பலாவின் பெரிய பழத்தைக் குறிப்பிடுகின்றார். ஆனால், அவர் ‘சிறுகளை’ என்று, பழத்தை நோக்கிச் சிறு சுளை என்றார் போலும். இதற்கு உரை கண்ட நச்சினார்க்கினியர் தமது கூர்த்த மதியினைப் புலப்படுத்தி, ‘சிறுமை எண்ணின் மேற்று’ என்னுமாப் போல, ‘சிலவாகிய’ சுளையினை உடைய பெரிய பழம் என்றார். இதனால் சிறிய எண்ணையுடைய பெரிய சுளைகளைக் கொண்ட பெரிய பலாப்பழம் என்பதாயிற்று. மேலும் இவர், ‘நல்ல பழம் சுளை மிக இராது என்றார்’ என்ற குறிப்பும் எழுதியுள்ளார். ஆகவே ‘சிறு’ என்ற சொல்லுக்குப் ‘பெரிய’ என்னும் பொருள்படும் படியாக இவர் உரை கூறிய திறம் போற்றுதற்குரியது.

பலாப்பழம் முதிர்ந்தவுடன், மலர் மணம் போல நறுமணம் பரப்பும். பலாச்சுளைகள் மிக இனியவை. நன்கு முதிர்ந்த பழத்திலிருந்து தேன் வடியும். இதன் சுளைகளை மக்களும், குரங்குகளும், பறவைகளும் விரும்பியுண்ணுப. பலாச் சுளையை விருந்தினர்க்களிப்பர் என்று மதுரைக்காஞ்சி கூறும்.

“கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி” -குறுந். 90
“வண்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம்” -மலைபடு. 337
“தீம்பழப் பலவின் சுளைவிளை தேறல்
 விளை அம்பின் இளையரொடு மாந்தி”
-அகநா. 182 : 3-4

“சேறும் நாற்றமும் பலவின் சுளையும்” -மதுரை. 527
“நெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேறல்” -குறிஞ். 189
“புடைத்தொடுபு உடையூப் பூநாறு பலவுக்கனி
 காந்தளஞ் சிறுகுடி கமழும்”
-குறுந். 373  : 6-7
“பலவில் சேர்ந்த பழமார் இனக்கலை” -குறுந் 385 : 1
“பலாஅம் பழுத்த பசும்புண் அரியல்” -பதிற். 61 : 1
(அரியல்- தேன்)

பாரியின் பறம்பிலே உழவர் உழாத நான்கு பயன்கள் உண்டென்று கூறிய கபிலர், பலவின் பழத்தை இரண்டாவது பயனாகக் கூறுவர்.

“இரண்டே தீஞ்சுளைப் பலவின்பழம் ஊழ்க்கும்மே”
-புறநா. 109 : 5


பலா மரத்தின் தொடர்பான நற்றிணைப் பாடலொன்று சுவையான உள்ளுறை உவமங் கொண்டுள்ளது. இதனைப் பாடியவர் மதுரை மருதன் இளநாகனார். இப்பாடல் தோழி, தலைவனை நோக்கித் தலைவியைக் கடிமணம் புரிந்து கொள்ளுமாறு வேண்டுவதாக அமைந்துள்ளது.

பலாமரத்தின் கிளைகளில், கொழுவிய சுளைகளையுடைய பழங்கள் பருத்துத் தொங்குகின்றன. அவற்றைக் கவரக் குரங்கும் வந்துளது. பழங்களின் பளுவைத் தாங்க மாட்டாமல், பலவின் கிளைகள் வளைந்துள்ளன. அக்கரிய கிளைகளில் கொக்கு ஒன்று, மீனைக் கொணர்ந்து அதனைக் குடைந்து தின்னுகிறது. அதனால் உண்டாகிய புலவு நாற்றத்தைப் பொறுக்கவியலாத பெண் குரங்கு தும்மா நிற்கும். இத்தன்மையான “வளம் மிக்க நாடனே! வண்டுகள் விரும்புகின்ற அழகுடைய எமது பொழிலின் கண் யாங்கள் நண்ணாநிற்பு நீயும் வருகின்றாய். ஆண்டுறையும் வண்டுகள், எங்கள் கண்ணிணைகளை மலரெனக் கருதித் தேன் நுகர அணுகி வருதற்குக் காரணமான இவள் கண்களில் பீர்க்கின் பழம்பூ போன்ற பசலை உண்டாகா நிற்கும். இதனை நினக்குச் சொல்லவும் யான் நானுவன். ஆதலின் இவளுக்கு இத்தகைய துன்பம் வராமற் காப்பாயாக!” என்று கூறுகின்றாள்.

“கொழுஞ் சுளைப்பலவின் பயங்கெழு கவாஅன்
 செழுங்கோள் வாங்கிய மாச்சினைக் கொக்கின்

 மீன்குடை நாற்றம் தாங்கல் செல்லாது
 துய்த்தலை மந்தி தும்மும் நாட
 நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே
 நுண்கொடிப் பீரத்து ஊழ்உறு பூஎனப்
 பசலை ஊரும் அன்னோ”
-நற்றி. 326 : 1-7

இதனுள்ளே வரும் உள்ளுறை: பலாமரம் தினைப்புனமாகவும், கொக்கு தலைவனாகவும், மீன் தலைவியாகவும், குடைதல் இன்பம் துய்த்தலாகவும், நாற்றம் அலராகவும், மந்தி அன்னையாகவும் கொண்டு, பலா மரத்தின் மேலிருந்து கொக்கு மீனைத் தின்னுதலால் உண்டாகிய நாற்றத்தைத் தாங்க மாட்டாது, மந்தி தும்முதல் போல, புனத்து நீ வந்து இவளைக் கலந்து செல்லுதலால் உண்டாகிய அலரைத் தாங்க மாட்டாது, அன்னை சினந்து பலகாலும் நோக்கி நிற்கும் என்று உள்ளுறை உவமங் கொள்ளலாம்.

மேலும், பலாச் சுளைகளைத் தேனில் தொட்டு, ஆண் குரங்கு பெண் குரங்கின் வாயில் ஊட்டி வளர்க்கும் நாடன் என்று கூறும் ஒரு சிறந்த பாடலைத் திருக்கோவையில் காணலாம்.[3]

பலா தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : மானோகிளைமைடியே
மலரில் புல்லி வட்டமும், அல்லி வட்டமும் இணைந்து, பீரியாந்த் (perianth) என்ற பூவுறையிருக்கும். ஏகிளமைடோஸ்போரியே தொகுதியில் அடங்கும்.
தாவரக் குடும்பம் : மோரேசி
தாவரப் பேரினப் பெயர் : அர்ட்டோகார்ப்பஸ்
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டெகிரிபோலியா
சங்க இலக்கியப் பெயர் : பலா, பலவு
ஆங்கிலப் பெயர் : ஜாக் மரம் (Jack Tree)
தாவர இயல்பு : நன்கு தழைத்துக் கிளைத்து வளரும் மரம். 4000 அடி உயரம் வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நன்கு வளர்கிறது. பலவிடங்களிலும் வளர்க்கப்படுகிறது.
இலை : அகன்ற, பளப்ளப்பான, தடித்த, தனியிலைகள் சுற்றடுக்கில் உண்டாகும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில் பெண் பூக்களைக் கொண்ட ‘கோளி’ என்ற சிறு விரல் போன்ற கதிர் உண்டாகும். இதற்கு ரிசப்டகிள் என்று பெயர்.
மலர் : பெண் பூக்களும், ஆண் பூக்களும் தனித் தனியே உண்டாகும். ஆண் பூக்களைக் காணுதல் அரிது. ஆண் பூக்களில், 4 பிளவுள்ள பூவுறையும், ஒரு மகரந்தத் தாளும் இருக்கும். பெண் பூக்களில், பூவுறை (கோளி) குழாய் வடிவில் கதிரின் அடியில் ஒட்டியிருக்கும்.
சூலகம் : சூற்பை நேரானது. தொங்கு சூல். சூல் தண்டு நீண்டு, வெளியில் தோன்றும். சூல்முடி பிளவில்லாதது.
கனி : பலாப் பிஞ்சு நீள் உருண்டை வடிவானது. ‘பலா முசு’ எனப்படும். ‘கோளி’ எனப்படும் இப்பிஞ்சு, மகரந்தச் சேர்க்கையின் பிறகு, பருத்து வளர்ந்து பலாக்காய் ஆகும். காயில் காம்புண்டு. இதில் பால் சுரக்கும். காய் முதிர்ந்து பழமாகும். கனியின் புறவுறை தடித்த, சதைப் பற்றானது. புறத்தில் தடித்த முட்கள் உண்டாகும்.
முதிர்ந்த கனி 9 அங்குலம் முதல் 1 அடி அகலமும், நீளம் 1 அடி முதல் இரண்டடியும் இருக்கும்.
விதை : முதிர்ந்த பெண் பூக்கள் இனிய பலாச் சுளைகளாகும். இதனுள் விதையிருக்கும். விதையைத் தடித்த உறை மூடியிருக்கும். இது மலரின் பகுதியாகும். விதையில் மெல்லிய பழுப்பு நிறமான உறையிருக்கும். விதையில் சதைப் பற்றான இரு வித்திலைகள் இருக்கும். இவையிரண்டும் வடிவில் வேறுபட்டவை. கரு நேரானது. முளைக் கரு குட்டையானது.



  1. நல்வழி: 35
  2. தொல் . எழு : 227 உரை
  3. “அந்தியின் வாய்எழில் அம்பலத்
    தெம்பிரான் அம்பொன் வெற்பில்
    பந்தியின் வாய்ப்பல வின்களை
    பைந்தே னொடும் கடுவன்
    மந்தியின் வாய்க்கொடுத்து ஓம்பும்
    சிலம்ப மனங் கனிய
    முத்திஇன் வாய்மொழி நீயேமொழி
    மொழிசென்று அம்மொய் குழற்கே”
    திருக்கோவையார் : 92