உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/121-150

விக்கிமூலம் இலிருந்து

வஞ்சி
சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா (Salix tetrasperma,Roxb.)

பகைவரிடம் போருக்குச் செல்வோர் வஞ்சிப் பூவைச் சூடுவர். ஆகவே, இது ஒரு போர் மலர். இதனைச் சங்கப் பாடல்கள் மரம் எனக் குறிப்பிடுகின்றன. ‘வஞ்சி’ என்பது ஒரு கொடி என்போரெல்லாம் பிரம்பின் கொடியைக் குறிப்பிடுகின்றனர். வஞ்சிக் கோட்டில் நாரை தன் துணையொடு உறங்குமென்று கூறும் புறநானூறு. லஷிங்டன் என்பாரும், காம்பிள் என்பாரும் வஞ்சி என்பதற்குச் சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா என்ற தாவரப் பெயரைக் கூறுகின்றனர். ஆகவே இது ஒரு சிறு மரம்.

சங்க இலக்கியப் பெயர் : வஞ்சி
தாவரப் பெயர் : சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா
(Salix tetrasperma,Roxb.)

வஞ்சி இலக்கியம்

‘வட்கார்மேல் செல்வது வஞ்சி’ என்றபடி, போருக்கு எழுவார் வஞ்சிப் பூவைச் சூடிச் செல்வர். ஆதலின். இது ஒரு போர் மலர் ஆகும். ‘வஞ்சி’ என்பது பற்றிப் புலவர்கள் கூறுவன:

“மென்பாலான் உடன் அணைஇ
 வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை”
-புறநா. 384 : 1-2

“வஞ்சி ஓங்கிய யாணர் ஊர” -ஐங். 50 : 2

இவற்றைக் கொண்டு பார்க்குமிடத்து வஞ்சி என்பது ஒரு மரமென்றும், இதன் கிளையில் நாரை தன் பெடையோடு துயில் கொள்ளும் என்றும் அறியலாம்.

பகைவர் மேல் படையெடுத்துப் போருக்குப் போம்போது சூடுவதும், ‘புதலும், மங்கையும், ஓர்பதியும், மாற்றார் குடையும் வஞ்சி ஆகும்’ என்று பிங்கல நிகண்டு[1] கூறுகின்றது. இவற்றுள் வஞ்சி என்பது ஒரு புதர் என்று கொள்ளக் கிடக்கின்றது.

‘வஞ்சியில் மரமும் உண்டு, வஞ்சிக் கொடியும் உண்டு. எதன் பூவைப் புறப்பூவாகக் கொண்டனர்? இலக்கண இலக்கியங்களில் எது என்று குறிக்கப்படாததால், இது வினாவில் இடம் பெறுகின்றது’, என்கிறார் கோவை இளஞ்சேரனார்.[2]

இங்ஙனம் கூறியவர் வஞ்சியைக் கொடி என மதித்து, அதன் தாவரப் பெயர் காலமஸ் ரோடங் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தாவரப் பெயர் பிரம்பின் கொடியைத்தான் குறிக்கும். சங்கச் சான்றோரும், பழந்தமிழரும் பிரப்பங்கொடியை வஞ்சியெனக் கொண்டனரா என்பதும், முட்கள் நிறைந்த இப்பிரம்பின் மலரை வஞ்சியாகச் சூடிக் கொண்டனரா என்பதும் சிந்திக்கற்பாலன.

தவிர, மரஞ்செடி கொடிகளின் தமிழ்ப் பெயர்களையும், தாவரப் பெயர்களையும் தொகுத்துப் பட்டியலிட்ட லஷிங்டன் (1915)என்பார் (பக். 140)வஞ்சி என்பது சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா என்ற சிறு மரம் எனக் குறிப்பிட்டுள்ளார். இங்ஙனமே, சென்னை மாநிலத் தாவரங்களைப் பற்றிப் பெருநூல் எழுதிய காம்பிள் (1928) என்பாரும், வஞ்சி என்பது இதே தாவரம் என்று குறிப்பிடுவதுடன், இதன் மலையாளப் பெயரும் வஞ்சி என்று கூறுவாராயினர்.

ஆதலின் வஞ்சி என்பது ஒரு சிறு மரமெனவும், சங்கப் புலவர்கள் கூறுவதும் இம்மரத்தையே எனவும், பிங்கலம் கூறும் ‘புதல்’ என்பதும் ஒரு சிறு மரமாகலாம் எனவும் கொண்டு, இதன் தாவரப் பெயர் சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா எனக் கோடலே அமையும்.

இனி, போர்த் தொடர்பான அறிவிப்புகளின் போதும், விழாக் காலங்களிலும் ‘கிணை’ எனப்படும் பறை ஒன்று முழங்கப்படும். இப்பறையை அடித்துப் பாடலும் பாடப்படும். இப்பாடல் இசை வஞ்சிப் பெயர் பெற்றது.

“பனிக்கயத்து அன்ன நீள் நகர் நின்றுஎன்
 அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
 எஞ்சா மரபின் வஞ்சி பாட”
-புறநா. 378 : 7-9

இவ்விசையை மருத யாழ்த்திறத்து ஓர் ஓசையாக வகுத்தனர் இசைநூலார். மேலும், ‘வஞ்சிப்பா’ என்ற பாடல் வகையினை யாப்பிலக்கணத்தில் காணலாம்.

வஞ்சி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : ஆர்டினேஸ் அனாமலி (எந்தத் தாவரக் குடும்பத்திற்கும் தொடர்பில்லாதது)
தாவரத் துணைக் குடும்பம் : சாலிசினே (Salicineae)
தாவரப் பேரினப் பெயர் : சாலிக்ஸ் (Salix)
தாவரச் சிற்றினப் பெயர் : டெட்ராஸ்பர்மா (tetrasperma)
ஆங்கிலப் பெயர் : இந்திய ‘வில்லோ’ (Indian willo)
தாவர இயல்பு : பெரும் புதர் அல்லது சிறு மரம்; 8000 அடி உயரம் வரையில் ஆற்றோரத்தில் வளரும.
சங்க இலக்கியப் பெயர் : வஞ்சி
இலை : நீளமானது; நுனி குத்து வாள் போன்று கூரியதாக இருக்கும். இலையடி அகன்று உருண்டிருக்கும்; 2-6 அங்குல நீளமும், .4-2.25 அங்குல அகலமும் உடையது. இலை வரம்பு வாள் போன்ற பற்களை உடையது. இலைக் காம்பு, 1 அங்குல நீளமானது.
மஞ்சரி : காம்பற்ற மலர்கள் நிறைந்த கொத்தாக இருக்கும்.
மலர் : பால் வேறுபட்டது; பளபளப்பானது; மெல்லியது; இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்திருக்கும்.
அல்லி, புல்லி வட்டங்கள் : இல்லை.
மகரந்த வட்டம் : ஆண்மலரில் இரண்டு தாதிழைகளே உள்ளன.
சூலக வட்டம் : பெண்மலரில் 1 செல் உள்ள சூலகம். பல 4-8 சூல்கள் உள.

இம்மரத்தின் பட்டை சொரசொரப்பானது; நீண்ட வெடிப்புள்ளது; கரும் பழுப்பு நிறமானது; மரம் செந்நிறமானது; மிருதுவானது; இதனைச் சுட்டுக் கரியாக்கி, துப்பாக்கி மருந்துக்குப் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 38 என சோப்தி, சிங் (1961) என்போர் கணித்துள்ளனர்.



  1. பிங். நி. 4015
  2. இலக்கியம் ஒரு பூக்காடு. பக். 277