சங்க இலக்கியத் தாவரங்கள்/122-150

விக்கிமூலம் இலிருந்து
 

இஞ்சி
சிஞ்ஜிபெர் அபிசினேல் (Zingiber officinale,Rosc.)

இஞ்சி இலக்கியம்

மதுரைக் காஞ்சியில் இஞ்சி கல்தரையிடத்தே குவிக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்படுகின்றது.

“இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்
 பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி”
-மதுரைக். 289-290

பட்டினப்பாலை இஞ்சி, கழனியில் விளைவதைக் கூறுகின்றது

“முதற் சேம்பின் முளை இஞ்சி” -பட்டின. 19

இஞ்சி ஓராண்டுச் செடி. அகன்ற நீண்ட இலைகளை உடையது. பெரிதும் மஞ்சள் செடியை ஒத்தது. மஞ்சளின் கிழங்கைப் போல இஞ்சியும் செடிக்கு அடியில் மண்ணில் புதைந்து வளரும். இஞ்சிச் செடியின் தண்டு என்பது இஞ்சிக் கிழங்கே ஆகும். இஞ்சியில் கணுக்கள் இருப்பதால் இஞ்சியைத் தரைமட்டத் தண்டு என்று கூறுவர். இதன் நுனியில் வளருங் குருத்து தரையிலிருந்து மேனோக்கி வளர்ந்து இலை விட்டுத் தளிர்க்கும். காய வைத்த இஞ்சிதான் சுக்கு எனப்படுவது. இதில் உள்ள சாறு காரமானது பலவாற்றானும் மருந்தாகப் பயன்படுகிறது. திரிகடுகத்தின் ஒரு மருந்துப் பொருள் சுக்கு ஆகும்.

இஞ்சி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : எபிகைனே (Epigynae)
சைடாமினே (Scitaminae)
தாவரக் குடும்பம் : சிஞ்சிபெரேசி (Zingiberaceae)
தாவரப் பேரினப் பெயர் : சிஞ்ஜிபெர் (Zingiber)
தாவரச் சிற்றினப் பெயர் : அபிசினேல் (officinale)
சங்க இலக்கியப் பெயர் : இஞ்சி
தாவர இயல்பு : பல்லாண்டு வாழும் செடியாயினும், ஓராண்டில் இஞ்சிக் கிழங்கு முற்றி விடுவதால், தரையின் மேல் வளரும். தண்டும், இலைகளும் காய்ந்து விடும். ஆகவே ஓராண்டுச் செடி.
தண்டு : தரை மட்டத் தண்டு நுனியில் முளைத்து, தரைக்கு மேல் வளர்ந்து, இலைகளை விடும். இத்தண்டுதான் இஞ்சி எனப்படும் கிழங்கு.
இலை : நீளமானது. 5-13 அங்குல நீளமும், 4-6 அங்குல அகலமும் உள்ளது. காம்பில்லாதது; நுனி கூரியது; பளபளப்பானது.
மஞ்சரி : மேல் தண்டின் நுனியில் கம்பி போல் நீண்டு, மடலுடன் விரியும். 1.3-3 அங். நீளமானது. மடல், அகன்ற செதில் போன்றது. பளபளப்பானது. ஓர் அங்குல நீளமானது. நுனி மூன்று பிளவாக இருக்கும். இரு பக்கத்துப் பிளவுகள் குட்டையானவை.
மலர் : மலர்த் தண்டில் நேராக ஒட்டியிருக்கும் ‘ஸ்பைக்’ என்ற துணர். பசிய மஞ்சள் நிறமானது.
புல்லி வட்டம் : பொதுவாக ஒரு மலர் குழல் வடிவமானது. 3 பிளவானது
 

இஞ்சி
(Zingiber officinale)

அல்லி வட்டம் : 3 குத்துவாள் வடிவாக நீண்டவை. மேற்புறத்தில் உள்ளது உட்குழிவானது. பக்கத்தில் உள்ளவை மலட்டுத் தாதிழைகள் எனப்படும்.
மகரந்த வட்டம் : குட்டையான தாதிழை ஒன்று. நீண்ட, தாதுப் பைகளை உடையது.
சூலக வட்டம் : மூன்று செல் உள்ளது. பல சூல்கள் உண்டாகும். சூல்தண்டு இழை போன்றது. சூல்முடி சற்று உருண்டையானது.
கனி : ‘காப்சூல்’ என்னும் வெடிகனி: உருண்டை வடிவானது ‘ஏரில்’ உள்ளது.

உலர்ந்த இஞ்சிக்குச் ‘சுக்கு’ என்று பெயர். இது சிறந்த மருந்துப் பொருள். இஞ்சிக்காகவே இச்செடி பயிரிடப்படுகின்றது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என சுகியூரா (1928 ஏ) இராகவன. டி. எஸ்; வெங்கடசுப்பன் (1943) முதலியோர் கணக்கிட்டுள்ளனர்.