உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/127-150

விக்கிமூலம் இலிருந்து

கமுகு
அரீகா காட்சூ (Areca catechu,Linn.)

கமுகில் பாளை உண்டாவதிலிருந்து, இளம் பாக்குப் பிஞ்சில் உண்டாகும் சுவையான நீர் வரையில் மதுரைத் தத்தங்கண்ணனார் அகநானூற்றில் மிக அழகாகத் தொகுத்துப் பாடியுள்ளார்.

சங்க இலக்கியப் பெயர் : கமுகு
தாவரப் பெயர் : அரீகா காட்சூ
(Areca catechu,Linn.)

கமுகு இலக்கியம்

கடியலூர் உருத்திரங்கண்ணனார், ‘கமுகு’ மரம் பரிய தாளினை உடையது எனவும், பாளையாகிய அழகினை உடைய பசிய பூ விரியாமல் கருவாய் (பாளைக்குள் மூடப் பெற்று) இருக்குமெனவும் கூறுகின்றார்.

“பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்
 கரு இருந்தன்ன”
-பெரும்பா. 7-8

இக்கமுகு நெடிது ஓங்கி வளரினும் ‘புல்’ எனப்படும்.

இதனுடைய மலர் வரலாறு கூறுவார் போல மிக அகழாக மதுரைத் தத்தங்கண்ணனார் பாடியுள்ளார்.

கமுகின் பாளை, மலர்கள் தொடுத்த தொடையல் போன்றது: இணர்க்கிளை பல மலர்களைக் கொண்டது; பாளை முதிர்ந்த போது மலர்க் கொத்து பிடிப்பு விட்டு விழும்; பூங்குலை வாள் வடித்தது போல இருக்கும்; இத்தோற்றம் மிக அழகானது: அலர்ந்த பல பூக்கள் மாலை போலத் தோன்றும்; நரம்புகளோடு கவரி போன்று வண்டுகள் உண்ணும் பொருட்டு விரியும்; முத்தின் அன்ன வெள்ளிய மலர்கள், ஆலக்கட்டி விழுவது போல உதிரும்; பூவொடு வளர்ந்த இதன் பிஞ்சு சுவையுள்ள நீரைக் கொண்டது. ‘அத்தீஞ்சுவையுள்ள நீரைக் காட்டிலும், தனது காதலியின் வாய் எயிற்றில் ஊறிய நீர் அமுதம் போன்றதென்று செலவழுங்கிய தலைவன் சொல்கிறான்’ என்கிறார்:

“தொடையமை பன்மலர்த்தோடு பொதிந்து யாத்த
 குடையோரன்ன கோள்அமை எருத்தின்
 பாளைபற்று அழிந்து ஒழிய புறம்சேர்பு
 வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய
 நாள்உறத் தோன்றிய நயவருவனப் பின்
 ஆரத்து அன்ன அணிகிளர் புதுப்பூ
 வார்உறு கவரியின் வண்டுண விரிய
 முத்தின் அன்ன வெள்வீ தாஅய்
 அலகின் அன்ன அரிநிறத்து ஆலி
 நகைநனி வளர்க்கும் சிறப்பின் தகைமிகப்
 பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்
 நீரினும் இனியவாகி கூர் எயிற்று
 அமிழ்தம் ஊறும் செவ்வாய்
 ஒண்தொடி குறுமகள் கொண்டனம் செலினே”
-அகநா. 335 : 13-26

இதன் முற்றிய காய்தான் அடைகாய் எனவும், பாக்கு எனவும் கூறப்படும். இதனை வெற்றிலை, சுண்ணாம்பு முதலிய பிற வாசனைப் பொருள்களுடன் தாம்பூலம் கொள்வர்.

கமுகு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசினே (Calycinae)
தாவரக் குடும்பம் : பாமே (Palmae)
தாவரப் பேரினப் பெயர் : அரீகா (Areca)
தாவரச் சிற்றினப் பெயர் : காட்சூ (catechu)
சங்க இலக்கியப் பெயர் : கமுகு
உலக வழக்குப் பெயர் : பாக்கு மரம்
தாவர இயல்பு : 500 முதல் 3000 அடி உயரமான இடங்களில் வளரும் வழவழப்பான மரம்; ஓர் அடி அகலமாக மெலிந்து, மிக ஓங்கி, 100 அடி உயரம் வரை வளரும் அழகிய மரம். ஆண்டு வளர்ச்சி காட்டும் வளையம் மரத்தில் காணப்படும். மரத்தின் நுனியில் முடி போன்று பசிய பல இலைகள் விரிந்து, பாளை விட்டுக் குலைகளுடன் இருக்கும்.
மஞ்சரி : இலைகள் விழுந்த இலைக் கணுவில் ‘ஸ்பாடிக்ஸ்’ என்ற பூங்குலை, பாளையுள் உண்டாகும்; பாளை பிளந்து குலை விரியும் போது, முதிர்ந்த பாளை கீழே விழுந்து விடும்.
இலை : 4 முதல் 6 அடி நீண்ட இலை; சிற்றிலைப் பிரிவுகள் சிறகு போன்றிருக்கும்; இலையின் அடி அகன்று ‘ஷீத்திங் பேஸ்’ எனப்படும்.
மலர் : ஆண் மலர்களும், பெண் மலர்களும் தனியாக உண்டாகும். ஆண் மலர்கள் மஞ்சரிக் குலையின் கிளைகளான வலிய நரம்புகளின் மேலே அமர்ந்திருக்கும்; பெண் பூக்கள் இந்நரம்புகளின் அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆண் பூக்களை விட இவை சற்றுப் பெரியனவாக இருக்கும்.
புல்லி, அல்லி வட்டங்கள் : இணைந்து ‘பீரியாந்த்’ எனப்படும்.
மகரந்த வட்டம் : 3 தாதிழைகள்;
சூலக வட்டம் : பெண் மலரில் உருண்டை வடிவான 1 செல் சூலகம; ஒரு சூல் முதிரும்.
கனி : சற்று நீண்ட முட்டை வடிவினது: மஞ்சள் நிறமானது; புறவுறை நார் உடையது; விதையின் அடிப்புறம் சற்று அகன்றது; விதைக் கரு அடிப்புறத்தில் இருக்கும்.

இக்கனியில்தான் பாக்கு விதையாக விளைகிறது. இதற்காகப் பாக்கு மரம் (கமுகு) தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 32 என வெங்கட சுப்பன் (1945 பி) சாட்டோ, டி 1946 (டி 1955) டிலே (1947) சர்மா, ஏ. கே. சர்க்கார் (1957) என்போர் கணக்கிட்டுள்ளனர். இப்பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு, வாசனைப் பொருள்களுடன் சேர்த்து மெல்லப்படும். பாக்கும் வெற்றிலையும் மங்கலப் பொருள்கள்.