சங்க இலக்கியத் தாவரங்கள்/126-150

விக்கிமூலம் இலிருந்து
 

கோடல்
குளோரியோசா சுபர்பா (Gloriosa superba, Linn.)

கோடல் இலக்கியம்

சங்க இலக்கியங்களில் காந்தள் மலருக்குக் கோடல், தோன்றி என்ற வேறு பெயர்களும் குறிப்பிடப் படுகின்றன. நல்லந்துவனாரும் (பரி. 11 : 20-21) கேசவனாரும் (பரி. 13-16) நப்பண்ணனாரும் (பரி. 19 : 76-78), காந்தளையும் தோன்றியையும் வேறு வேறு மலர்களாகக் கூறியுள்ளனர். நப்பூதனாரும் (முல்லைப். 95-96) கல்லாடனாரும்[1] தோன்றியையும் கோடலையும் வெவ்வேறு மலர்களாகக் கூறியுள்ளனர்.

குறிஞ்சிப்பாட்டினுள் கபிலர் ‘ஒண்செங்காந்தள்’ (62) எனவும், ‘கோடல் (கைதை)’ (83) எனவும், ‘சுடர்ப்பூந்தோன்றி’ (90) எனவும் தனித் தனியாகப் பிரித்தே பாடுகின்றார். எனினும் ஒண்செங்காந்தள் என்ற அச்சொற்றொடருக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘ஒள்ளிய சிவந்த கோடற்பூ’ என்று உரை கூறியுள்ளார். அவர் தாமெழுதிய உரைகளில் எல்லாம் காந்தள் என்பதற்குக் காந்தட்பூ என்றும் (கலி. 45), செங்காந்தள் என்பதற்குக் ‘கோடற்பூ’ என்றும் (குறிஞ். 62). கோடல் என்பதற்குச் ‘செங்காந்தள்’ என்றும் (கலி. 101) ‘கோடற் பூ’ என்றும் (கலி. 103), ‘வெண்கோடற்பூ’ என்றும் (குறிஞ். 83), தோன்றி என்பதற்குத் ‘தோன்றிப்பூ[2]’ என்றும் (முல்லைப். 96) சுடர்ப்பூந்தோன்றி என்பதற்குச் ‘செங்காந்தள்பூ’ (குறிஞ். 90) என்றும் உரை வகுத்துள்ளார். ஆகவே காந்தள், கோடல், தோன்றி என்பன வெவ்வேறான மூவகை மலர்கள் என்பது புலனாகும். கோடல் என்பது பெரும்பாலும் வெண்கோடலையே சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. வெண்மை அடைமொழியுடன் குறிக்கப்படும் இக்கோடல் செம்மை அடைமொழியோடு சொல்லப் படவில்லை. எனவே கோடல், கோடை என்னும் பெயர்கள் வெண்கோடலுக்கே உரியவை. ஒண்செங்காந்தள் (குறிஞ். 62) என்பதற்கு ஒள்ளிய சிவந்த கோடற்பூ என்று கூறிய நச்சினார்க்கினியர் அங்குச் செங்காந்தளைக் கூற முனைந்து, காந்தளுக்குக் கோடல் என்ற பெயரும் உண்டு என்பதைக் குறிப்பிட்டு, அச்சொற்றொடருக்கு ‘ஒள்ளிய சிவந்த கோடற்பூ’ என்றாரல்லது, வெண்கோடலினின்றும் வேறுபடுத்திச் செங்கோடல் ஒன்றுண்டு எனக் கருதினார் என்பது பொருந்துமாறில்லை. மேலும்,

“களிபட்டான் நிலையேபோல் தடவுபு துடுப்புஈன்று
 ஞெலிபுஉடன் நிரைத்த ஞெகிழ்இதழ்க் கோடலும்”
-கலி. 101 : 3-4

என்னுமிடத்து ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘கள்ளுண்டு களித்தலுற்றவன் நிலைமை போல, அசைந்து வளைந்து துடுப்புப் போலும் முன்கையை முன்னர் ஈன்று, பின்னர் தீயில் கடைந்து, அதிற்பிறந்த நெருப்பைச் சேர நினைத்தாற் போன்ற, அலர்ந்த இதழினை உடைய செங்காந்தாள் பூவும்’ என்று உரை கூறியுள்ளனர். இவ்விடத்து, தீக்கடைக் கோலுடன் நிரைத்தாற் போன்ற இதழ்கள் செங்காந்தளுக்கு உரியவாதலின், கோடல் என்பதற்குச் செங்காந்தள் என்று உரை கூறுவது பொருந்தும். இதனால் இங்ஙனம் அடையெடுத்து வருமிடத்துக் கோடல் என்பது செங்காந்தளைக் குறிக்குமாயினும், கோடல் என்பது பெரிதும் வெண்கோடலைப் பற்றியதென்று அறியலாம். மேலும் இது வெண்கோடல் என்றும் பேசப்படும். இதனை,

“வரிவெண்கோடல் வாங்கு குலை வான்பூப்
 பெரிய சூடிய கவர்கோல் கோவலர்”
-அகநா. 264 : 3-4

என்று உம்பற்காட்டு இளங்கண்ணனார் கூறாநிற்பர். இதனால் கோடல் குலையாகப் பூக்கும் என்பதும், இதழ்களில் வரிகள் காணப்படும் என்பதும், இது வெண்கோடல் என்று கூறப்படுமென்பதும், ‘வான்பூ’ என்றமையின் வெண்மை நிறம் வலியுறுத்தப்படும் என்பதும், ‘பெரிய’ என்றமையின், மலர் சற்றுப் பெரியதாக இருக்கக் கூடுமென்பதும் பெற்றாம்.

பசிய கோடல் செடி மலைப்பாங்கில் தண்ணியவிடங்களில் வளரும். இதனைக்

“கமழ்தண் தாதுஉதிர்ந்து உகஊழ்உற்ற கோடல்வீ
 இதழ்சோரும் குலைபோல இறைநீவு வளையாட்கு”
-கலி. 21 : 13-14
“தண்கமழ் கோடல் தாது பிணிஅவிழ” -அகநா. 154 : 7
“வெண்குடையாம் தண்கோடல்”[3]
“தண்கமழ் கோடல் துடுப்புஈன்”[4]

“தண் நறுங்கோடல் துடுப்பு எடுப்ப”[5]

எனக் கீழ்க்கணக்கு நூல்கள் கூறுமாற்றால் அறியலாம்.

கோடல் முளைத்து எழும் போது, அது அறுகம் புல்லின் கிழங்கு போன்று இருக்குமெனவும், பின்னர் பசிய இலை விட்டு வளரும் எனவும் கூறுவர்.

“. . . . . . . . கோடற் பைம்பயிர்
 பதவின் பாவை முனைஇ”
-அகநா. 23 : 6-7

செங்காந்தளைப் போலவே கோடல் செடியும் துடுப்பீன்று மலரும் இயல்புடையது.

“தண்கமழ் கோடல் துடுப்புஈன”[6]
“தண்ணறுங் கோடல் துடுப்பு எடுப்ப”[7]

எனக் கோடலின் முகை, துடுப்பை ஒத்திருக்குமென வலியுறுத்தும். இனி, கோடல் முகை அவிழ்தலைக் காண்போம்.

“கோடல் குவிமுகை அங்கை அவிழ” -முல்லை. 95

என்றவிடத்துக் கோடலினது குவிந்த முகை அகங்கை போல விரிய என்று நச்சினார்க்கினியர் உரை கூறினார். கோடலைப் போல அகம்கை வெளிர் மஞ்சள் நிறமும், ஐந்து விரல்களைப் போன்ற (ஆறு) இதழ்களும் உடையதாதலின், உவமை நலம் சிறந்து விளங்கும். துடுப்புப் போன்ற முகை அவிழ்ந்து, போது ஆகும். அது சினமுற்ற பாம்பின் பை விரித்துப் படமெடுத்தாற் போலக் காட்சி தரும். இதனை,

“வெஞ்சின அரவின் பை அணந்தன்ன
 தண்கமழ்க் கோடல் தனது பிணிஅவிழ”
-அகநா. 154 : 6-7
“கோடல்அம்கார் முகைகோன் அராநேர் கருதா”[8]
“அணர்த்துஎழு பாம்பின் தலைபோல் புணர்கோடல்”[9]
“கோடல், முகையோடு அலமர” நெடுநல். பாடல்: 1

என்றவாறு கூறுப. இனி.

இது பொதுவாகக் கார்காலத்தில் பூக்குமாயினும், ‘வம்ப மாரியைக் கார் என மதித்துக் காலமல்லாக் காலத்தில் மலரும் பிடவம், கொன்றை முதலியவற்றைப் போல இதுவும் வேறு காலங்களிலும் பூக்கும் மடமை உடையது’ என்கிறார் இளந்திரையனார்.

“. . . . . . . . கமஞ்சூல் மாமழை
 பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
 கார்என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வுஇல
 பிடவமும், கொன்றையும், கோடலும்
 மடவ ஆகலின் மலர்ந்தன பலவே”
-நற். 99 : 6-10

இது நன்கு மலர்ந்து நிற்கும் நிலையில், இதன் வெள்ளிய இதழ்கள் அடியிலிருந்து விரிந்து, ஒவ்வோர் இதழும் வளைந்து, கீழ் நோக்கிக் கவிந்திருக்கும். அதன் அடியில் உள்ள மகரந்தக் கால்கள் தாது உகுத்து விட்டுக் கம்பிகள் போல நீண்டிருக்கும். மலரின் நடுவிலிருக்கும் சூல்முடி நீண்டு குடைக் காம்பு போலக் காணப்படும். இப்போது கோடல் மலர் ஒரு வெண்கொற்றக் குடை வடிவில் காட்சி தரும். ஆகவே, வெண்கோடலின் முகை துடுப்புப் போலவும், போதாகி மலருங்கால், பாம்பு போலவும், இதழ்கள் விரிந்தவுடன் கை விரல்கள் போலவும், தனித்த இதழ்கள் உடைந்து போன சங்கு வளையல் போலவும் காட்சி தரும் எனக் கணிமேதாவியார் கோடல் பூவுக்கு இலக்கணங் கூறுகின்றார்.

“வண்துடுப்பாய்ப் பாம்பாய், விரலாய், வளைமுறியாய்
 வெண்குடையாம் தண்கோடல்”
[10]

இவ்வுண்மையை ஆசிரியர் நல்லந்துவனார் மூன்றாகச் சுருக்கி வலியுறுத்துகின்றார்.

“கொடியியலார் கைபோல் குவிந்த முகை
 அரவுஉடன் றவை போல் விரிந்தகுலை
 குடை விரிந்தவை போலக் கோலுமலர்”

பரி. 20 : 98-100


கோடல மலரின் மணம் கருதியும், எழில் நோக்கியும், பல்வகை ஆடவரும், மகளிரும் இதனைத் தனியாகவும், கண்ணியாகவும், கோதையாகவும் புனைந்து சூடினர். இதனை

“கோடல் நீடிதழ்க் கண்ணி” -நெடுநல். 5-6


“கோடல் வாங்கு குலைவான் பூப்
 பெரிய சூடிய கவர்கோல் கோவலர்”
-அகநா. 264 : 2-3
“கோடல்எதிர் முகைப் பசுவீ முல்லை
 நாறிதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ
 ஐதுதொடை மாண்ட கோதை”
-குறு. 62 : 1-2
“கோடற் கண்ணி குறவர் பெருமகன்” -புறம். 157 : 7

நன்கு முதிர்ந்த இதன் மலரும், இதழ்களும் தனித்தனியாக உதிர்ந்து விழும். அவை உடைந்து போன வளையல் போன்று காட்சி தருமென்பர் புலவர்.

கலித் தொகையில் இதற்கொரு காட்சியைக் காணலாம். தலைவன் தலைவியை மணந்து கொள்ளாமல், களவொழுக்கத்தை நீடிக்கிறான். இவனது செயலைப் புறத்தார் அறியத் தலைப்படுகின்றனர். நற்றாய் வெகுண்டு கவல்கின்றாள். தாழிட்டு அடைத்தாற் போலத் தலைவி இச்செறிக்கப்படுகிறாள். அதனால், மனமுடைந்த தலைவியின் உடலும், சோர்வுற்ற மெலிகிறது. அவள் அணிந்துள்ள சங்கு வளையல்கள், நற்றாய்க்கு முன்னர் தாமே கழன்று விழுகின்றன. இந்நிலையைத் தோழி, தலைவனிடம்,

‘நின் வரையினிடத்தே மலர்ந்த வெண்கோடல் இதழ்களைப் போலத் தலைவியின் வளையல்கள் தாமே கழன்று உகுப. அவளது தோள்களின் பேரில் உமக்குச் சினமுண்டா?’ என்று கேட்பது போலத் தலைவியின் தாங்கொணாத் துயரைப் புலப்படுத்தி, அவளைக் கடிமணங் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றாள்:

“தாழ்செறி கடுங்காப்பின் தாய்முன்னர் நின்சாரல்
 ஊழுறுகோடல் போல்எல் வளைஉகுப வால்”
-கலி. 48 : 10-11

என்பர். இக்கருத்தைப் பின் வருவனவற்றுள்ளுங் காணலாம்:

“இவட்கே அலங்கிதழ்க் கோடல்வீ உகுபவைபோல்
 இலங்குஏர் எல்வளை இறை ஊரும்மே”
-கலி. 7 : 15-16
“கமழ்தண் தாது உதிர்ந்துக ஊழற்ற கோடல்வீ
 இதழ்சோரும் குலைபோல இறைநீவு வளையாட்கு”
-கலி. 121 : 13-14

ஆதலின் கோடற்பூ காந்தளின் பொது அமைப்புடையது. வெண்மை நிறமானது. நறுமணமுடையது. துடுப்பாய் முகையீன்று, பாம்பாய்ப் போதாகி, விரலாய் இதழ் அவிழ்ந்து, வெண்குடையாய் மலர் பரப்பி, வளைமுறியாய் இதழ் உகுந்து, மாரிக்காலத்தில் தண்ணிய மலைப்பாங்கில் காணப்படுவதென்பதைச் சங்கச் சான்றோர் கூற்றால் அறியலாம். ஆயினும், காந்தளும், கோடலும் ஒன்றுதானா; அல்லது வேறுபட்டவையா என்ற ஐயம் உளது.

காந்தள் மலர்ந்து, சில நாள்களுக்குப் பின்னர், இதன் இதழ்கள் செந்நிறம் மாறி வெளுத்துப் போகும். இந்நிலையில் இச்செங்காந்தள் வெண்கோடலாகக் காட்சி தந்ததா என்ற எண்ணம் எழுகிறது. ஆகவே இப்போதைக்கு இதனை மலர்ந்து, முதிர்ந்த காந்தளாகவே கருதவும் இடமுண்டு.

மேலும், தாவரவியலில் காந்தளை ஒத்த வெண்ணிற மலர் ‘குளோரியோசா’ என்னும் பேரினத்தில் காணப்படவில்லை.



  1. கல்லா. 20
  2. சீவக. சிந். 73 : 1563
  3. திணை. மா. நூ. 119 : 4
  4. திணை. ஐ. 21
  5. ஐந். எ . 17
  6. திணை. ஐ. 21
  7. ஐந். எ. 17
  8. திணை. ஐ. 29
  9. கார். நா. 11
  10. திணை. மா. நூ. 119 : 3-4