சங்க இலக்கியத் தாவரங்கள்/125-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

 

காந்தள்
குளோரியோசா சுபர்பா (Gloriosa superba, Linn.)

‘ஒண்செங்காந்தள்’ என்றும், ‘சுடர்ப் பூந்தோன்றி’ என்றும்; ‘கோடல்’ என்றும் சங்க இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறும் காந்தள் ஒரு சிறு ஏறுகொடி. பச்சைநாவி எனப்படும் கிழங்கைத் தரைக்கு அடியில் கொண்டது. இலைகள் அகன்று நுனி குறுகி, பற்றுக் கம்பியாக மாறிச் சுருண்டு இருக்கும். மிக அழகான பூக்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : காந்தள்
தாவரப் பெயர் : குளோரியோசா சுபர்பா
(Gloriosa superba,Linn.)

காந்தள் இலக்கியம்

காந்தள் கொடிக்கு, தோன்றி, கோடல், என்ற வேறு பெயர்களும் கூறப்படுகின்றன. ஆசிரியர் நச்சினார்க்கினியர் தாமெழுதிய உரைகளிலெல்லாம் காந்தள் என்பதற்குக் ‘காந்தள்பூ’ என்றும் (கலி. 45), ‘வெண்கோடல்’[1] என்றும் (பெரும்பா. 372); (மலைபடு. 519) செங்காந்தள் என்பதற்குச் ‘சிவந்த கோடற்பூ’ என்றும் (குறிஞ். 62) கோடல் என்பதற்குச் ‘செங்காந்தள்’ என்றும் (கலி.101); ‘கோடற்பூ’ என்றும் (கலி.103); ‘வெண்கோடற்பூ’ என்றும் (குறிஞ். 83), ‘தோன்றி’[2] என்பதற்குத் ‘தோன்றிப்பூ’ என்றும் (முல்லைப். 86) உரை கூறியுள்ளார்.

பெருங்குறிஞ்சி எனப்படும் குறிஞ்சிப் பாட்டினுள் குறிஞ்சிக் கபிலர் ஒண்செங்காந்தள் (62) எனவும் கோடல் (83) எனவும் சுடர்ப்பூந்தோன்றி (90) எனவும் தனித்தனியாகப் பிரித்தே பாடுகின்றார். பரிபாடலில் நல்லந்துவனார்,

“. . . . . . . . கணவிரி காந்தள்
 தாய தோன்றி தீயென மலரா ”
–பரி. 11 : 20-21

எனவும்; கேசவனார்

“நீரயற் கலித்த நெறிமுகைக் காந்தள்
 வார்குலை அவிழ்ந்த வள்இதழ் நிரைதொறும்
 விடுகொடிப் பிறந்த மென்தகைத் தோன்றி
 பவழத் தன்ன செம்பூத் தாஅய்”
-பரி. 4 : 13-16

எனவும், நப்பண்ணனார்

“கைபோல் பூத்த கமழ்குலைக் காந்தள்
 . . . . . . . . . . . . . . . .
 உருவமிகு தோன்றி ஊழ்இணர் நறவம்”
-பரி. 19 : 76-78

எனவும் காந்தளையும், தோன்றியையும் வெவ்வேறு மலர்களாகக் கூறியுள்ளவாறு போல நப்பூதனார்,

“கோடற் குவிமுகை அங்கை அவிழ
 தோடார் தோன்றி குருதி பூப்ப”
-முல்லைப். 95-96

என்பர்.

“காலங்கருதித் தோன்றி கை குனிப்பக்
கோடல் வளைந்த வள்ளலர் உகுப்ப [3]

எனவும் தோன்றியையும், கோடலையும் கல்லாடனார் வெவ்வேறாகக் காட்டியுள்ளார். பிங்கல நிகண்டு.

“தோன்றி பற்றை இலாங்கூலி செங்காந்தள்” எனவும்
கோடல் தோன்றி கோடைவெண் காந்தள்”[4]

எனவும் கூறுதலின், தோன்றி என்பது செங்காந்தள், வெண்காந்தள் என இரண்டையும் குறிக்கிறது.

“வெண்காந்தளின் செங்காந்தள் என்றிரு விகற்பமும்
 கொண்டே வழங்கும் சோடைப் பெயரே [5]

எனக் கோடலைச் செங்காந்தள், வெண்காந்தள் இரண்டிற்கும் பெயராகச் சூடாமணி நிகண்டு கூறியுள்ளது.

“காந்துகம், தோன்றி, பற்றை கோடல் என்
 றாய்ந்த நான்கும் காந்தள் ஆகும் [6]

எனச் சேந்தன் திவாகரமும் கூறும்.

காந்தளுக்கு இலாங்கலி, கோடை, காந்துகம், பற்றை என்ற பெயர்களும் சூட்டப்படுகின்றன. இவற்றுள் கோடை என்பது கோடலின் மரூஉ மொழி என்றும், காந்துகம் என்பது நிறங் கருதி எழுந்த கற்பனைப் பெயர் என்றும் கருதலாம். காந்தள் கொடியின் அடியில் உள்ள கிழங்கு கலப்பை வடிவினது. இலாங்கலி என்பதற்குக் கலப்பை என்று பெயராதலின், காந்தட் கொடியைக் ‘கலப்பைக் கிழங்குக் கொடி’ எனவும், இலாங்கலி எனவும் கூறுவதுண்டு. பற்றை என்ற சொல், தொல் இலக்கிய வழக்கில் இல்லை. பற்றை என்றால் நேரத்திற்கு நேரம் மனம் மாறும் இரு மனப் பெண்டிர். பற்றைச்சி எனவும், தகாத பிறவிகள் எனவும் கூறப்படும். காந்தள் மலரின் நிறம் அது முதிருங்கால் மாறுவதுண்டு. அதனால், இதனைப் பிற்காலத்தோர் பற்றை எனப் பகர்ந்தனர் போலும்.

சங்க நூல்கள் செங்காந்தளையே பெரிதும் பேசுகின்றன.

“வள்ளிதழ் ஒண்செங் காந்தள்” -குறிஞ். 62
“காந்தட்குருதி ஒண்பூ” -நற். 34
“குருதிப் பூவின் குலைக்காந் தட்டே” -குறுந். 1 : 4

என்பன செங்காந்தளைக் குறிப்பன. ஒண்செங்காந்தள் என்னுமிடத்து ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘ஒள்ளிய சிவந்த கோடற்பூ’ என்றாரேனும், கோடல் என்பதைச் செம்மை அடை மொழியுடன் யாண்டும் கூறவில்லை. அதனால், காந்தள் என்பது கோடலைக் குறிக்கும் எனவும், கோடல் என்பது பொதுவாக வெண்கோடலையும், ஒரோவழி வெண்காந்தளையும் குறிக்கும் எனவும் அறியலாம். கோடலைப் பற்றிப் பின்னர்க் காண்போம். செங்காந்தள் மலையிடத்தே பூக்கும் குறிஞ்சி நிலப்பூ என்பதைப் பின்வருவனவற்றால் அறியலாம்.

“ஒண்செங்காந்தள் வாழையஞ் சிலம்பு” ーநற். 176 : 6
“மலைச்செங் காந்தள் கண்ணி தந்தும்” -நற். 173 : 2
“. . . . . . . . . . . .ஒண்செங் காந்தள்
 கல்மிசைக் கவியும் . . . . . . . .”
-குறுந். 185 : 6-7
“மன்றத் துறுகல் மீமீசைப் பலவுடன்
 ஒண்செங் காந்தள் அவிழும் நாடன்”
-குறுந் . 284  : 2–3
“நெடுவரை மிசைய காந்தள்” -பொருந. 33

“. . . .. . . .. . . . உறந்தைக் குணாஅது
 நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள்”
-அகநா. 4 : 14-15

“சிலம்பு கமழ்காந்தள் நறுங்குலை” -ஐங். 293 : 1

எனினும், இது தமிழ் நாட்டில் எல்லாவிடங்களிலும் நிலப் பூவாகக் காணப்படுகிறது. இதனுடைய வேர்த்தொகுதியில் கிழங்கு இருக்கும்.இதனை ‘முழுமுதற் காந்தள்’ (குறுந். 361) என்பர். இதன் தண்டு வலியுடையதன்று. இலை அடியில் அகன்றும் வர வரக் குறுகியும், நடுநரம்புடன் பளபளப்பாகத் தோன்றும். இதன் இலையின் நுனி பற்றுக் கம்பியாகச் சுருண்டும், நீண்டுமிருத்தலின் வேறு செடிகளைப் பற்றிக் கொண்டு மேலேறிப் படரும். காயாம்பூச் செடியின் (காயா) மேலேறிக் காந்தள் படர்ந்திருந்ததைத் திருமைலாடிச் (தஞ்சை மாவட்டம்) சிறுபுறவில் யாம் கண்டதுண்டு. இதனை,

“. . . . . . . . . . . . அரவின்
 அணங்குடை அருந்தலை பைவிரிப் பவைபோல்
 காயா மென்சினை தோய நீடிப்
 பல்துடுப் பெடுத்த அலங்குகுலைக் காந்தள்”
-அகநா. 108.12-15

என வரும் அடிகளில் கண்டு ம்கிழலாம்.

காந்தளின் மொட்டு, இலையின் கணுக் குருத்தாகத் தோன்றும். நுனியில் குலையாகவும் இருப்பதுண்டு. இதனைக்

“. . . . . . . . . . . . . . . . காந்தள்
 கமழ்குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் ”
-நற். 313 : 6ー7

“செழுங்குலைக் காந்தள்” -சிறுபா. 167

என்பர். இதன் அரும்பு புறத்தில் பச்சையாகவும், போதாகி முதிருங்கால் மஞ்சளாகவும் இருக்கும். பூக்காம்பு (Padicel) நுனியில் நேர்கோணமாக ஒரு பக்கம் வளைந்திருக்கும். காந்தள் முகை மூன்று முதல் நான்கு அங்குல நீளமுடையதாய், அடியில் சற்று பருத்தும், நுனி சிறுகிக் காணப்படுதலின், துடுப்பு எனப்படுகிறது.

“காந்தள் துடுப்பின் கமழ் மடல்” -மலைபடு. 366
“காந்தள் நீடிதழ் நெடுந்துடுப்பு ஒசிய” -அகநா. 78 : 8-9

எனப்படும். இத்துடுப்பு மகளிருடைய முன் கைக்கு உவமிக்கப்படும்.

“அடுக்கம் நாறலர்காந்தள் நுண்ணேர் தண்ணேர்உருவின்
 துடுப்பெனப் புரையும் நின்திரண்ட நேரரிமுன்கை ”
-கலி. 59 : 3-4
“கொடிச்சியர் கூப்பி வரைதொழு கைபோல்
 எடுத்த நறவின் குலையலங் காந்தள்”
-கலி. 40 : 11-12
“காந்தளந் துடுப்பின் கவி குலையன்ன
 செறிதொடி முன்கை கூப்பி”
-பட்டின. 153-154

என்பனவற்றால், மகளிரின் கூப்பிய கைகளுக்கு எதிரிணைந்த காந்தள் முகைகள் நன்கு உவமிக்கப்படுகின்றன. இதில் கவிதல் என்பதற்கு ‘ஒன்றோடொன்று சேர்தல்’ என நச்சினார்க்கினியர் மிகப் பொருத்தமாக உரை வகுத்துள்ளார்.

காந்தள் பூ மிக மெல்லிய, நீண்ட, ஆறு, தனித்தனியாகப் பிரிந்த இதழ்களை உடையது. இதழ் விளிம்பு அலை வடிவினது; இதழ்களின் அடிப்புறம் பொன்னிறமாகவும், மேற்புறம் (நுனி) குருதிச் சிவப்பாகவும் இருக்கும். காந்தட்பூவை மகளிர் கைக்கும், இதழ்களைக் கைவிரல்களுக்கும் உவமித்துப் புலவர்கள் நெஞ்சை அள்ளும் கவி மழை பொழிந்துள்ளனர். மலர்ந்த காந்தட்பூ மருதோன்றி இட்டுக் கொண்ட மகளிரின் விரல்களாகவே காட்சி தரும். இதனைக் கண்டு மகிழ்வதல்லது, எழுதிப் புலப்படுத்துவது எளிதன்று. காந்தள் முகையை மகளிர் கைக்கும், மலரிதழ்களை அவர்தம் கை விரல்களுக்குமாகக் கண்டு மகிழ்ந்தனர் நமது செந்தமிழ்ச் சான்றோர். ஓர் எடுத்துக்காட்டு.

“சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை யன்ன
 நலம்பெறு கையின் என்கண்புதைத் தோயோ!
 பாயல் இன்றுணையாகிய பனைத்தோள்
 தோகைமாட்சிய மடந்தை!
 நீயல துளரோ என்நெஞ்சமர்ந் தோரே”
-ஐங். 293

என்ற கபிலர் பாடிய இச்செய்யுளில் குறியிடத்தே வந்த தலைவன் அறியா வண்ணம் பின்புறமாக வந்த தலைவி அவனது.கண்களைத் தனது கைகளால் பொத்திக் கொள்கிறாள். அவளே இது செய்தற்குரியள் என்பதுணர்ந்த அவன், ‘நீயலதுளரோ என்நெஞ்சு அமர்ந்தோரே’ என்று மகிழ்மிதப்பக் களிப்புற்றுக் கூறுகின்றான். ‘காந்தள் நறுங்குலையன்ன நலம்பெறு கையின் என் கண் புதைத்தோயே’ என்புழி, அவளது கைகள் அவனது கண்களைப் பொத்துங்கால், முன் கைகள் இரண்டும் எதிரிணைந்த இரு காந்தளின் முகைகள் போலக் குவிந்து, சிறிது உள் மடிந்து வளைந்திருத்தலின், உவமை நலம் மிகச் சிறந்து விளங்குகின்றது. ‘தோகை மாட்சிய’ என்றவதனால், ‘மெல்ல இயலும் மயிலுமன்று’ (கலி. 55) என்பது போல, தலைவன் தன்னை அறிந்து கொள்ளாதபடி, மெல்லென அசைந்து வந்தாள் என்பது புலனாகும். ‘இன்துணையாகிய மடந்தை’ என்ற அதனால், ‘உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு’ (குறள். 1122) என்றதற்கேற்பத் தலைமகள், அவனது நெஞ்சமர்ந்து இருத்தலைக் காதற் சிறப்புரைக்கும் முகத்தால் வெளிப்படக் கூறியதோடன்றித் தனது உடலை ஒன்றிய உயிர் போலவும் உள்ளாள் எனக் கருதியவாறுமாம். இனி,

“இம்மை மாறி மறுமை யாயினும்
 நீயாகியர் எம் கணவனை
 யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே ”
-குறுந். 49 : 3-5

எனத் தலைமகள் உளமாரக் கூறுதலுண்மையின் தம்மை விழையும் மகளிருடைய உள்ளக் கிடக்கை இங்ஙனம் என்றுணர்ந்த தலைமகன், ‘என்நெஞ்சு அமர்ந்தோர் நீயலது உளரோ’ எனக் கூறினான் என்பதும் ஒன்று.

காந்தள் முகை வாய் அவிழ்ந்து அரும்புங்கால், முகையின் சிவந்த உட்புறம் சிறிது வெளிப்படும். அது தீக்கடைக்கோல் போலத் தோன்றும். இதனை,

“களிபட்டான் நிலையேபோல் தடவுபு துடுப்புஈன்று
 ஞெலிபுஉடன் நிரைத்த ஞெகிழ்இதழ்க் கோடலும்

(ஞெலிபு-தீக்கடைக்கோல்) -கவி. 101 : 3-4

என மிக அழகாகக் கூறுவர். மேலும்,

“தொன்றுஉறை துப்பொடு முரண்மிகச் சினை இக்
 கொன்ற யானைக் கோடு கண்டன்ன
 செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள்”
ーநற். 294 : 5ー7
“மறம்மிகு வேழம்தன் மாறுகொள் மைந்தினான்
 புகர்நுதல் புண்செய்த புய்கோடு போல
 உயர்முகை நறுங்காந்தள் நாள்தோறும் புதிதுஈன ”
-கலி. 53 : 3-5

என்பனவற்றுள் இரண்டு யானைகள் ஒன்றொடொன்று போரிடும் செய்தி கூறப்படுகின்றது. அங்ஙனம் ஒரு யானையைக் குத்திய மற்றொரு யானையின் கோடு நுனியில் குருதி படிந்து சிவந்துள்ளது. அதனைக் கண்ட புலவர்கள், காந்தளின் முகை உடைந்து, அரும்பு நுனியில் சிவந்து காணப்படுவதற்கு ஒப்பிடுகின்றனர். இவர்களின் உண்மை அறிவியல் நுண்புல ஆழத்தை எண்ணி மகிழலாம்.

ஒரு சில அரும்புகள் போதாகி மலர்வதற்கு, வண்டின் சுமை வேண்டப்படும். வண்டு வந்தமரும் அமுக்கத்தால், போது அவிழ்ந்து விரியும்.

இதனை நன்கறிந்த செந்தமிழ்ச் சான்றோர்.

“குருதி ஒப்பின் கமழ் பூங்காந்தள்
 வரியணி சிறகின் வண்டுண மலரும்”
-நற். 399 : 2-3
“நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள்
 கொங்குண் வண்டின் பெயர்ந்து”
-ஐங், 226 : 2-3
“சிலம்புடன் கமழும் அலங்குகுலைக் காந்தள்
 நறுந்தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி ”
-குறுந். 239 : 3-4
“மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
 கடும் பறைத் தும்பி. . . . . . . . ”
-பதிற். 67 : 19-20
“. . . . . . . . . . . . கார்தோற்றும்
 காந்தள் செறிந்த கவின்
 கவின் முகைகட்டு அவிழ்ப்ப தும்பி ”
-பரி. 18 : 34-36
“. . . . . . . . . . . . காந்தள்
 கொழுமடல் புதுப்பூ ஊதுந் தும்பி ”
-அகநா. 138 : 17-18

என்றெல்லாம் கூறுவாராயினர்.

அரும்பில் வண்டு வந்து முகர்வதும், போது மலர்ந்து விரிவதும் பெரும்பாலும் ஒரே காலத்தில் நிகழும்[7]. எனினும், இவற்றிற்கிடையே உள்ள இமைப்பொழுதும், வண்டுகளுக்கு நெடும் பொழுதாகத் தோன்றும். ஆதலின், வண்டுகள் போது விரியும் படியாக அதன் மேற் படிந்து மலரச் செய்யும் என்பதை,

“காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
 வண்டு வாய் திறக்கும் பொழுதில்”
-குறுந். 265 : 1-2

என வரும் அடிகளில் காணலாம்.

காந்தள் மலரும் போது, மணம் வெளிப்படும். இதனை ‘மாரிக் குன்றத்து அருவி ஆர்த்த தண்நறுங் காந்தள்’ என்பதாலும், அந்த மணம் தலைமகளது நெற்றியில் பிறக்கும் மணத்திற்கு உவமிக்கப்படுவதை,

“சினை ஒண்காந்தள் நாறும் நறுநுதல்” -அகநா. 338 : 7

என்பதாலும் அறியலாம்.

காந்தள் மலரில் தாது மிகுதியாக உண்டாகுமாயினும், தேன் சுரப்பிகள் காணப்படவில்லை. எனினும், கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில் பூத்த காந்தளில் தேனீக்கள் பாய்ந்து, தேனை நுகர்ந்து அடைகளில் தொகுத்தன எனவும், அந்த தேன் அடைகள் பல தொகுதியாக இருந்தன எனவும் நற்றிணை பகரும்.

“உரைசால் உயர்வரைக் கொல்லிக் குடவயின்
 அகல் இலைக்காந்தள் அலங்குகுலைப் பாய்ந்து
பறவை இழைத்த பல்கண் இறாஅல்
தேனுடை நெடு வரை. . . . . . . .”
ーநற். 185 : 7ー10

தேனுண்ணும் வண்டினம், தேனுடன் மலரில் உண்டாகும் தாதையும் சேர்த்து நுகரும். தேனை துண்ணோக்கியில் வைத்து உற்று நோக்கினால், தேனுடன் தாது மிகுதியும் இருப்பது தெரியும். இவ்வுண்மையை.

“சிலம்புடன் கமழும் அலங்குகுலைக் காந்தள்
 நறுந்தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி”
-குறுந் 239 : 3-4
“நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள்
 கொங்குண் வண்டின் பெயர்ந்து. . . . . . . .”
-ஐங். 226 : 2-3

என்று புலவர்கள் கூறுமாறு காண்க.

“சோலை அடுக்கத்துச் சுரும்புண விரிந்த
 கடவுட்காந்த ளுள்ளும் பலவுடன்”
-அகநா. 152 : 16-17
“சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
 பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்”
-திருமுரு. 42-43

என்பனவற்றால், காந்தள் மலர் கடவுளுக்கு உரியது என்று பரணரும், ‘சுரும்பு மூசாத அதன் மலர்களாலான கண்ணியைச் சென்னியில் சூடியவன் முருகப் பெருமான்’ என்று நக்கீரரும் கூறுவர். ஆதலின், காந்தள் கடவுள் மலர் என்பது விளங்கும். கடவுள் மலரில் வண்டு மொய்க்காது என்ற கொள்கை ஒன்று உண்டு. எனினும், ‘சண்பகமும் வேங்கையும் வண்டுணா மலர்’[8] என்றாற் போல், காந்தள் மலருக்குக் கூறப்படவில்லை. இருப்பினும்,

“மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
 கடும்பறைத் தும்பி சூர்நசைத் தாஅய் ”
-பதிற். : 67 : 19-20

என்ற அடிகளுக்கு ‘மலர்ந்த காந்தளினது மலரை, இது தெய்வத்திற்கு உரியதென்று அறிந்து, அதன்பால் நின்றும் நீங்காமல் ஊதிய விரைந்த பறத்தலை உடைய தும்பி.....’ என்று பழைய உரை கூறும். மேலும்,

“குருதி ஒப்பின் கமழ்பூங் காந்தள்
 வரிஅணி சிறகின் வண்டுண மலரும்”
-நற். 399 : 2-3
“சோலை அடுக்கத்துச் சுரும்புண விரிந்த
 கடவுட் காந்தளுள்ளம்”
-அகநா. 152 : 15-17

என வண்டினம் நுகரும் பொருட்டே காந்தள் மலரும் எனச் சங்க நூல்கள் கூறுமாறுங் காண்க.

காந்தள் என்றாலே கை என்று கொள்ளும்படி இலக்கியங்களில் உவமை அமைந்துள்ளது. கையிலும், விரல்களின் மருதோன்றிச் சாந்து இட்டுக் கொண்ட மெல்லிய மகளிர் கை என்பது மிகவும் பொருந்தும். துடுப்பாக நீண்ட காந்தள் மலர்க் காம்பு, மகளிரின் முன்னங்கை போன்றதென்பதை முன்னர்க் கண்டோம். பூக்காம்பு நேர் கோணமாக மடிந்திருந்தலின், பூ கவிழ்ந்து மலரும். இதனை,

“. . . . . . . . . . . .மலர் கவிழ்ந்து
 மாமடல் அவிழ்ந்த காந்தளஞ் சாரல்”
-நற். 14 : 6-7

என்று மாமூலனார் நன்கறிந்து கூறுவர். மலரில் மிக மெல்லிய, நீண்ட ஆறு இதழ்கள் விரியும். இதழ்கள் அடியில் வெளிர் மஞ்சள் நிறமாகவும், நுனியில் குருதிச் சிவப்பாகவும் இருப்பதால், வண்ணந்தீட்டிய கைவிரல்களுக்கு உவமிக்கப்படுகின்றது:

“கைபோல் பூத்த கமழ்குலைக் காந்தள்” -பரி. 19 : 76
“செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்” -சிறுபா. 167
“நெடுவரை மிசைய காந்தள் மெல்விரல்” -பொரு. 33
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் ” -குறுந். 167 : 1

மலை நாட்டுப் பெண்டிர் மலையைத் தொழுவது ஒரு மரபு. அம்மரபை வைத்துக் காந்தள் தொழுவதாகப் பாடினார்.

“கொடிச்சியர் கூப்பி வரை தொழுகைபோல்
 எடுத்த நறவின் குலையலங் காந்தள்”
-கலி. 40 : 11-12

காந்தள் முகை மகளிர் முன் கைக்கு அன்றி, பாம்பின் தலைக்கும் பொருத்தமாக உவமிக்கப்படுகிறது. காந்தள் பூவினை நுகர, ஒரு வண்டு அதனை ஊதியது. நீண்டிருக்கும் காந்தளின் துடுப்பு, பாம்பின் தலை போன்றிருக்க, அதனை அணுகி ஊதிய நீல நிறத் தும்பி “பாம்பு உமிழ் மணி” போன்று தோன்றிற்று, ஆசிரியர் பெருங்கண்ணாரின் கண்களுக்கு.

“சிலம்புடன் கமழும் அலங்குகுலைக் காந்தள்
 நறுந்தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி
 பாம்பு உமிழ் மணியிற் றோன்றும்”
-குறுந். 239 : 3-5

காந்தளை ஊதிப் பறந்து போன தும்பியைப் பார்த்த பாம்பு, தான் கக்கி வைத்திருந்த மணிதான் பறந்து போயிற்றோ என்று மருண்டதாகக் கூறுவார் நாகன் குமரனார்.

“நெறிகெட வீழ்ந்ததுன் அருங்கூர் இருள்
 திருமணி உமிழ்ந்த நாகம் காந்தள்
 கொழுமடல் புதுப்பூ ஊதும் தும்பி
 நல்நிறம் மருளும். . . . . . . .”
-அகநா. 138 : 16-19

காந்தள் பூவில் தாது நிரம்ப உகுமென்பதை விளக்குகின்றார் கபிலர். மேய்ந்து நின்ற செந்நிறப் பசு ஒன்று, எரியென மலர்ந்த காந்தள் செடியினைத் தன் கொம்புகளால் அலைக்கிறது. அதன் காது பசுவின் முகமெல்லாம் பரவி நிறம் வேறு ஆயிற்று. இதைக் கண்ட கன்று தன் தாய்ப்பசுதானோ என ஐயுற்று மருண்டதாம். இதோ அப்பாடற்பகுதி :

“சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா
 அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுக
 கன்றுதாய் மருளும் குன்ற நாடன்”
-நற். 359 : 1-3

காந்தள் மலை நிலத்தைச் சேர்ந்த குறிஞ்சித் தாவரம். இது

“விண்பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்” -குறிஞ். 196

என்ற வண்ணம் மலையின் தலை உச்சியிலும்

“நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரல் -பொருந. 33

என்ற வண்ணம் மலையின் உடற் பகுதியிலும்,

“. . . . . . . . நறுங்கார் அடுக்கத்துப்
 போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்”
-அகநா. 238 : 15-16

என்ற வண்ணம் பக்க மலைகளிலும்

“. . . . . . . . . . . .காந்தள்
 கொழமடல் புதுப்பூ ஊதும் தும்பி
 நல்நிறம் மருளும் அருவிடர்”
-அகநா. 138 : 17-19
“. . . . . . . . . . . .விடர் முகைச்
 சிலம்புடன் கமழும் அலங்கு குலைக்காந்தள்”
-குறுந். 239 : 2-3

என்ற வண்ணம் மலைப் பிளவுகளிலும்

“நெடும்பெருங் குன்றத்தமன்ற காந்தள்” -அகநா. 4 : 15

என்ற வண்ணம் பெருங்குன்றுகளிலும் வளருமென்தை அறியலாம். மேலும்,

“மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும்” -நற். 173 : 2
“போதுபொதி உடைந்த ஒண் செங்காந்தள்
 வாழையஞ் சிலம்பின் வம்புபடக் குவைஇ”
-நற். 176 : 6-7
“. . . . . . . . . . . .ஒண் செங்காந்தள்
 கல்மிசைக் கவியும். . . . . . . . . . . .”
-குறுந்., 185 : 6-7

“மன்றத்து துறுகல் மீமிசைப் பலவுடன்
 ஒண்செங் காந்தள் அவிழும் நாடன்”
-குறுந் 284 : 2-3

எனவும் மலைத்தொடர்புடனே செங்காந்தள் கூறப்படுவது புலானகும்.

இவற்றை எல்லாம் நோக்குமிடத்து செங்காந்தள் ஒன்றே மலைத் தொடர்புடைய குறிஞ்சி நிலத் தாவரமென்பது, காந்தளின் பெயரால் குறிக்கப்படும் செங்கோடலும், தோன்றியும் இங்ஙனம் மலைத் தொடர்புடன் கூறப்படாமையின், இவை செங்காந்தளினின்றும் வேறுபட்டவை போலும் என்பதும் சிந்திக்கற்பாலது.

மேலும் காந்தள் நிலப்பரப்பிலிருந்து 6000 அடி உயரம் வரையிலான மலைகளில் வளரும் என்ற இற்றை நாளைய தாவரவியல் உண்மை வலியுறுத்தப்படுவது காண்க.

காந்தள் மலரின் எழில் கருதியும் மகளிரோடு ஆடவரும் விரும்பிச் சூடிக்கொண்டனர். பெரிதும் இது கண்ணியாகவே சூடப்பட்டது.

முருகப் பெருமானுக்குரிய அடையாளப் பூ காந்தள் என்பதும், முருகன் காந்தளின் பெரிய நறுங்கண்ணியைச் சென்னியில் சூடியவன் என்பதும் முன்னரே கண்டோம்.

“காந்தள்அம் கண்ணிச்செழுங் குடிச்செல்வர்” -பதிற். 81 : 22

என்பதால், செழுங்குடிச் செல்வரும்,

“காந்தள் அம்கண்ணி கொலைவில் வேட்டுவர்” -பதிற் 30 : 9

என்பதால், கொலைகார வேட்டுவரும் சூடினர் என்பர்.

“. . . . . . . . காந்தள் நாறும்
 வண்டிமிர் சுடர் நுதல் குறுமகள்”
-ஐங். 254 : 2-3

என்றவதனால், ஒருத்தி காந்தளின் மலரைச் சூடி துதலில் மணமேறப் பெற்றாள்.

“மலர்ந்த காந்தள் நாறிக்
 கலிழ்ந்த கண்ணள்”
-ஐங். 259 : 5-6

என்றவதனால், ஒருத்தி காந்தள் நாறுபவளாகத் தலைவனால் குறிக்கப்பட்டாள் என்பதும் அறியலாம்.

இலக்கணத்திலும் காந்தள்

புறத்திணையில் இதன் பெயரில் ஒரு துறை அமைந்தது. இதனைத் தொல்காப்பியம்,

“நெறியறி சிறப்பின் வெல்வாய் வேலன்
 வெறியாட் டயர்ந்த காந்தளும்,”
தொல் : பொ : புறத்திணை. 62 : 1-2

எனப் பெயர் சூட்டியுளது. மேலும் மடல் ஏறுவதற்குப் பெயராகவும், இக்காந்தள் கூறப்படுகிறது. இதனை இளப்பூரணர்,

‘காந்தள் என்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவார்’ என்றாராகலான், ‘வெறியாட்டயர்ந்த காந்தள்’ என்றார். அன்றியும், காந்தள் என்பது மடலேறுதலான் அத்துணை ஆற்றாளாகிய பெண்பால் மாட்டு நிகழும் வெறி ‘காந்தள் எனவும் பெயராம்’ என்று அகத்தினை இயலில் காந்தள் பெற்ற இரண்டு இடத்தைக் குறித்துள்ளார். இரண்டில் வெறியாடும் வேலன் ‘காந்தள் சூடி ஆடுதலில் காந்தள் என்றார்’ என நச்சினார்க்கினியர் காந்தள் சூடுவதைக் குறித்தார். இது போன்று, மடலேறும் போதும் காந்தள் சூடப்படும். எனவே, இரு துறைகளுக்கும் காந்தள் ‘சின்னப்பூ’ (Emblem) ஆயிற்று.

தொல்காப்பியத்தில் ‘தெய்வம் உணாவே’ (தொல். பொருள் : 18) என்னும் நூற்பா அகத்திணைகளின் கருப்பொருள்களைக் குறிக்கும். இதன் உரையாசிரியர் குறிஞ்சி நிலப் பூவாக – வேங்கை, குறிஞ்சி, காந்தள் எனக் காந்தளையும் கூறியுள்ளனர். இது கார்காலத்தில் பூப்பது என்று கேசவனார் கூறுவர்.

“. . . . . . . . நெரிமுகைக் காந்தள்
 கார்மலிந் தன்றுநின் குன்று”
-பரி 14  : 13-17

 

காந்தள்
(Gloriosa superba)

காந்தள் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : கோரனாரியே (Coronarieae)
தாவரக் குடும்பம் : லிலியேசி (Liliaceae)
தாவரப் பேரினப் பெயர் : குளோரியோசா (Gloriosa)
தாவரச் சிற்றினப் பெயர் : சுபர்பா (superba)
சங்க இலக்கியப் பெயர் : காந்தள்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : கோடல்; தோன்றி
உலக வழக்குப் பெயர் : கார்த்திகைப்பூ, கலப்பைக் கிழங்கு, கண்ணுவெல்லி
ஆங்கிலப் பெயர் : குளோரி லிலி (Glory Lily)
தாவர இயல்பு : சிறு ஏறு கொடி.
சிற்றினப் பெயர் கண்டவர் : லின்னேயஸ் (1707-1778)
பேரினத்தில் உள்ள பாகுபாடு : 11 சிற்றினங்கள்
பேரினம் வளருமிடம் : இந்தியா, ஆப்பிரிக்கா, பர்மா, மலாக்கா, ஸ்ரீலங்கா இவற்றின் வெப்பம் மிகுந்த இடங்கள்.
சிற்றினம் வளருமிடம் : வடமேற்கு இமயம் முதல் அஸ்ஸாம் வரையிலும் தென்னிந்தியா முழுவதிலும்.
நில மட்டம் : கடல் மட்டத்திலிருந்து 7000 கி.மீ. உயரம் வரையிலும்.
செல்லியல் மதிப்பீடு : இப்பதினோரு சிற்றினங்களில் 6 சிற்றினங்கள் குளோரியாசா சுபர்பா எனும் காந்தளினின்றும் வேறுபட்டுப் பிரிந்தன.
நீளம் : ஒரு மீட்டர் முதல் 20 மீட்டர் வரை நீண்டு, உயர்ந்து, கிளைத்துப் படர்ந்து வளரும்.
வேர்த் தொகுப்பு : வெண்மையான, பருத்த, கிளைத்த கிழங்கு கொண்டிருக்கும்.
கிழங்கு : பச்சை நாவி எனப்படும். கலப்பை வடிவமாகவும் இருத்தலின், காம்பிள், அரங்காச்சாரி முதலியோர் இத்தாவரத்திற்குக் கலப்பைக் கிழங்கு என்பர். கிழங்கில் கால்சிசின் (Colchicine) என்னும் கொடிய நச்சுப் பொருள் உள்ளது.
வேர்கள் : சற்றுத் தடித்து, நீண்டுள்ள சல்லி வேர்த் தொகுதி பல வேர்களையும் உடையது.
தண்டு : வலியுடையதன்று. இலை அமைப்புள்ளது.
இலை : 8 முதல் 18 செ.மீ. வரை நீளமான குத்து வாள் வடிவானது. அடியில் அகன்று, வரவரக் குறுகி, நுனி நடுநரம்புடன் பற்றுக் கம்பியாகச் சுருண்டு, பற்றிக் கொண்டு வளரப் பயன்படும். இலையடித் தண்டில் ஏறக்குறைய நேரடியாக மாற்றடுக்கு முறையில் ஒட்டியிருக்கும். நடு நரம்புடையது. பளபளப்பான, பச்சை நிறமுடையது.
பூக்கும் காலம் : கார்த்திகைத் திங்கள் (செப்டம்பர்–அக்டோபர்). இதனால் கார்த்திகைப் பூ என்றும் வழங்குவர்.
இணர் அல்லது மஞ்சரி : மலர்க் காம்பு இலைக் கோணத்தில் தோன்றும், காம்பு 10 முதல் 18 செ.மீ. வரை நீண்டு தடித்தது. மஞ்சரி தனி மலர் உடையது.
மலர் : பெரியது. இருபால் பூ. மூவங்கப் பூ கீழ்ச் சூலகப்பூ, பூக்காம்பில் நுனி பின்புறமாக நேர் கோணத்தில் வளைந்திருக்கும். முகை 8 முதல் 10 செ. மீ வரை நீளமுள்ளதாய், அடியிற் சற்று பருத்தும், நுனி சிறுத்தும்,
இருக்கும். இதனால் துடுப்பு எனப்படும். அரும்பு புறத்தில் பச்சையாகவும், போதாகுங்கால் மஞ்சளாகவும் தோன்றும். பூவின் புறவிதழ் அடுக்கும், அகவிதழ் அடுக்கும் (அல்லி) தனியாக இல்லாமல், ஒன்றாக இணைந்திருக்கும். இதற்குப் பூவுறை என்று பெயர். இவ்வியல்பு காந்தளைப் போன்ற ஒரு வித்திலைத் தாவரப் பூக்களில் பெரிதும் உள்ளது. பூவுறை ஆறு தனித்த இதழ்களாக உள்ளது. வெளிப்புறம் மலர்வதற்கு முன் பொன்னிறமாகவும், உட்புறம் குருதிச் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.
பூவுறையும் மலரும் : பூவுறை ஆறு பிரிவானது; நிலையானது. பிரிந்தது; அவை விரிந்தோ, பின்புறம் வளைந்தோ காணப்படும். இதழ் விளிம்பு அலை வடிவானது. நெளிந்து தோன்றும். 6 இதழ்களின் அடிப்புறம் பொன் மஞ்சள் நிறம். நுனி குருதிச் சிவப்பானது.
மலர் நிறம் : மலர்கள் முதலில் பச்சை நிறமாகத் தோன்றி, மஞ்சள் நிறமாக மாறிப் பின்னர் தீ நிறமாகி, குருதிச் சிவப்பு நிறமாகவும், கிரிம்சன் நிறமாகவும் மாறும்.
மகரந்தத்தாள் வட்டம் : 6 மகரந்தத் தாள்கள்; சூலக அடித் தளமுடையன. தாள்கள் மெல்லிய இழை போன்றவை. மகரந்தப் பைகள் நீளமானவை. பின்புறம் ஒட்டியவை. சுழல் அமைப்பில் வெளி நோக்கித் தாதுகும். தாது மஞ்சள் நிறமானது.
சூலகம் : சூற்பை மூன்று அறை கொண்டது; பல சூல்கள் உண்டு. சூல் தண்டு இழை போன்றது. பின்புறம் வளைந்தது. சூல்முடி 3 பிளவுள்ளது. உள்ளடங்கியது.
கனி : கனியை அரை வெடி காப்சூல் என்பர். விதைகள் சற்று உருண்டை வடிவானவை . விதையின் புறவுறை, கடற் பஞ்சு போன்றது. கரு-உருளை வடிவானது.
நிலம் : குறிஞ்சி

காந்தள் கொடியில் வேருடன் கிழங்கு உண்டாகும். அதற்குப் பச்சை நாவி என்று பெயர். அதில் கால்சிசின் (Colchicine) என்ற கொடிய நச்சுப் பொருள் (வேதிப் பொருள்) காணப்படுகின்றது. இக்கிழங்கிலிருந்து வேதியியல் முறையில், அந்த நச்சுப் பொருளைப் பிரித்து எடுத்துப் பல்வேறு செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். முதற்கண், இது சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. தாவர இயலில்-செல்லியலில்-இந்தக் கால்சிசின் பெரிதும் வேண்டப்படுகிறது. இந்த வேதிப் பொருளை 5 பி. பி. என்.- அதாவது, பத்து லட்சம் பகுதியில் ஐந்து பகுதியான நீர்க் கரைசலைத் தாவரங்களின் நுனிக் குருத்திலும், முகைக் குருத்திலும் முறையாகத் தெளித்து வந்தால், அத்தாவரத்தின் செல்களிலுள்ள (Cells) குரோமோசோம்கள் (Chromosomes) இரு மடங்காகப் (பிளந்து) பெருகி விடும்.

காந்தள் கொடியைத் தாவர இரட்டைப் பெயர் முறையில் குளோரியோசா சுபர்பா என்பர். குளோரியோசா என்னும் இப்பேரினத்தில், பதினொரு சிற்றினங்கள் உள்ளன. இவற்றுள் ஆறு சிற்றினங்கள் ஒரு வகையாகவும், ஐந்து சிற்றினங்கள் ஏனையதொரு வகையாகவும் பிரிந்தன என்பர். சுபர்பா என்னும் சிற்றினம் (காந்தள்) இந்த ஐந்து வகையுள் ஒன்றாகும். காந்தள் கொடியில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை n = 11 ஆகும். இதனை 2n = 22 எனச் சானகி அம்மையாரும் (1945), 2n = 88 என லாகோர் (La-Cour) அம்மையாரும் (1951) அறுதியிட்டனர். 2n = 22, 90 என ஏ. கே. ஷர்மா (1961) கணித்தார்.


 1. வெண்கோடல்: சீவக. சிந், 17
 2. தோன்றிப்பூ: சீவக. சிந். 73:1563
 3. கல்லாடம். 20 : 7-11
 4. பிங்கல நிகண்டு. 1892; 2893
 5. சூடாமணி நிகண்டு மரம். 24:1:2
 6. சேந்தன் திவாகாரம்: : மரப் பெயர்
 7. “விரியும் மணம்அவிழ்க்கும் மலர்முகிழ் மேல்எல்லாம்
  கரிய வரிவண்டு முத்தமிடல் காணாய்”
  -மறைமலை அடிகள் : சாகுந்தல நாடகம்
 8. பிங்.- நி. 2767