சங்க இலக்கியத் தாவரங்கள்/124-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

 

வாழை
மூசா பாரடைசியாக்கா—சாப்பியென்டம்
(Musa paradisiaca,Linn. var. sapientum)

உலகில் தொன்று தொட்டு வளர்ந்து இனிய பழம் நல்கும் வாழைச் (மரம்) செடியைச் சங்க நூல்கள் ‘வாழை’ எனவே குறிப்பிடுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : வாழை
தாவரப் பெயர் : மூசா பாரடைசியாக்கா—சாப்பியென்டம்
(Musa paradisiaca,Linn. var. sapientum)

வாழை இலக்கியம்

நந்தமிழ் நாட்டின் தலை சிறந்த முக்கனிகளுள் (வாழை, மா, பலா) ஒன்றானது வாழை. இதில் பூவன், மொந்தன், பேயன் என்ற மூவகையான வாழைப்பழங்கள் முறையே அயன், அரி, அரன் மூவர்க்கும் உரியன என்பர். வாழைக்காய், கனி, தண்டு, இலை முதலிய அனைத்தும் பயன்படும் பொருள்கள். இதன் கிழங்கு, நடுத்தண்டு முதலியவை மருந்துக்குதவும். அயல் நாடுகளில் வளரும் ஒரு சில வாழையின் கனிகள் நோய் செய்தலும் உண்டு.

சோழ நன்னாட்டின் வளத்தையும் வனப்பையும் பாடும் முடத்தாமக் கண்ணியார்

“கோள் தெங்கின் குலை வாழை” -பொருந. 208

என்று குறிப்பிட்டார். இதே சோழ நாட்டின் சிறப்பினைக் கூற வந்த உருத்திரங்கண்ணனார்

“கோள் தெங்கின் குலை வாழை” -பட். பா. 19

என்று அந்த அடியினை அப்படியே கூறுவார் போன்று பாடுவாராயினர். ஆதலின், தென்னையும், வாழையும் ஒரு நாட்டின் செழுமையைக் குறிக்கும் மரங்கள் என்பது பெற்றாம். வாழைப் பழம் தமிழ் நாட்டின் தலை சிறந்த முக்கனிகளுள் ஒன்றாகும்.

வாழை மரம் தோட்டங்களில் வளர்க்கப்படுவதன்றி, மலைப்புறத்தில் தானாகவே வளரும் இயல்பிற்று என்பதைப் புலவர்கள் கூறுவர்.

“வாழையஞ் சிலம்பில் வம்புபடக் குவைஇ” -நற். 176 : 7
“படுநீர்ச் சிலம்பில் கலித்த வாழை” -நற். 188 : 1
“வாழை ஓங்கிய வழைஅமை சிலம்பில்” -நற். 222 : 7
“வாழை மென்தோடு” -நற். 400 : 1

வாழை மரம் வீட்டின் பக்கலிலும் வளர்க்கப்பட்டது போலும். உரலில் அவல் இடிக்கும் மகளிர், அவலிடித்த பின்னர், உலக்கையை வாழை மரத்தின் மேல் சேர்த்தி விட்டு, வள்ளைப் பூவைக் கொய்தனர் என்று பதிற்றுப்பத்து கூறும்.

“அவல்எறி உலக்கை வாழைச் சேர்த்தி
 வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்”
-பதிற்.29 : 1-2

சந்தன மரக் கட்டைகளைக் கொண்டு எரித்த அடுப்பில் அட்ட சோற்றை, வாழையினது அகன்ற இலையில் பலருடன் பகுத்துண்ணும் செந்தமிழ் நாட்டின் பண்பினைப் புலப்படுத்துவர் கந்தப்பிள்ளை சாத்தனார்.

“சாந்த விறகின் உவித்த புன்கம்
 கூதளங் கவினிய குளவி முன்றில்
 செழுங்கோள் வாழை அகலிலைப் பகுக்கும்”
-புறநா. 168 : 11-13

வாழை மரம் ஒரு தடவைதான் பூக்கும். வாழைக் குலையில் கருஞ்செம்மையான மடல்கள் இருக்கும். மடல்களுக்குள் வாழை மலர்கள் சீப்புச் சீப்பாக அமைந்திருக்கும். வாழைக் குலையை வாழைத்தார் என்றழைப்பர். தாரின் நுனிப்பகுதியில் ஆண் பூக்களும், அடிப்பகுதியில் பெண் பூக்களும் உண்டாகும். மடல் விரிந்து ஆண் பூக்களின் தாதுக்கள், பெண் பூக்களின் நுனியில் சேர்ந்த பின்றை, பெண் பூக்கள் பிஞ்சாகிப் பழமாகும்.

மலைப்பாங்கில் கலித்து வளரும் வாழையின் பழங்களை, மந்தி கவர்ந்துண்ணுவதைப் பெருமருதிளநாகனார் பாடுவர்.

“நெடுநீர் அருளிய கடும்பாட்டு ஆங்கண்
 பிணிமுதல் அரைய பெருங்கல் வாழைக்
 கொழுமுதல் ஆய்கனி மந்தி கவரும்”
-நற். 251 : 1-4

தறுகண்மையை உடைய புலியின் அடியைப் போல வாழையினது வளைந்த காய் குலைகள் தோறும் தொங்குமென்பதைக் கலித்தொகையில் காணலாம்:

“கடுங்கண் உழுவை அடிபோல வாழைக்
 கொடுங்காய் குலை தொறுஉம் தூங்கும்”
-கலி. 43 : 24-25

வாழையினால் யானை வலியழிதலும், பிடி அதனை ஆற்றுவித்தலும் ஆகிய செய்தியைச் சங்க நூல்கள் கூறுகின்றன.

“சோலை வாழைச் சுரி நுகும்பினைய
 அணங்குடை யிருந்தலை நீவலின் மதனழிந்து
 மயங்கு துயருற்ற மையல் வேழம்”
-குறுந் 308 : 1-3

“வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில்
 படுகடுங் களிற்றின் வருத்தம் சொலிய
 பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்”
-அகநா. 8 : 9-11

வாழையின் மலரைச் சூடிக் கொள்வதில்லையாயினும், குறிஞ்சிப்பாட்டில் இதன் பூ இடம் பெற்றுள்ளது!

“வாழை வள்ளி நீள்நறு நெய்தல்” -குறிஞ். 79

வாழை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : சைடாமினே
தாவரக் குடும்பம் : மூசேசி (Musaceae)
தாவரப் பேரினப் பெயர் : மூசா (Musa)
தாவரச் சிற்றினப் பெயர் : பாரடைசியாக்கா சாப்பியென்டம்
(paradisiaca var. sapientum)
ஆங்கிலப் பெயர் : பனானா (Banana)
தாவர இயல்பு : நேராக வளரும் செடி. 5-10 அடி உயரம்.
சங்க இலக்கியப் பெயர் : வாழை
உலக வழக்குப் பெயர் : வாழை
இலை : மீக நீளமான, அகன்ற தனியிலை. இளம் இலை குருத்தெனப்படும். இதில் நடு நரம்பின் ஒரு புறத்து அகலிலை உட்புறமாகச் சுருண்டும், அதன் மேலே மறு புறத்து இலைப் பகுதி சுருண்டு, சுற்றியும் இருக்கும். 6-8 அடி நீளமும், 1-2 அடி அகலமும் உளளது.
மஞ்சரி : குலை, தார் எனப்படும். இதில் மலர்கள் காம்பின்றி, மலர்த் தண்டில் ஒட்டி வளரும்; குலையில் இணர்த் தண்டில், மலர்கள் சீப்புச் சீப்பாகவும், ஒவ்வொரு சீப்பையும் ஒரு மடல் மூடியும் இருக்கும். மடல்கள் சுற்றொட்டு முறையில் உண்டாகும்.
மலர் : வாழைக் குலையில் ஆண் பூக்ககள் நுனியிலும், பெண் பூக்கள் அடியிலும் உண்டாகும்.
அல்லி, புல்லி வட்டங்கள் : 2 அல்லியும், புல்லியும் இணைந்தவை. மேற்புறத்தில் 3-5 பிளவாகவும்,
அடியில் குழல் வடிவாகவும் இருக்கும். மற்றொரு அகவிதழ் தனியாகப் பிரிந்து நீண்டு வளர்ந்திருக்கும்.
மகரந்த வட்டம் : பொதுவாக, 5 நேரான தாதிழைகளே இருக்கும். மற்றொன்று குறைபட்டிருக்கும். தாதுப்பைகள் நேரானவை.
சூலக வட்டம் : சூலகம் ஏனைய மலர்ப் பகுதிகட்கு அடியில் இருக்கும். பல சூல்களைக் கொண்டது. சூல்முடி 3-6 பிளவானது.
கனி : சதைக்கனி. இனிமையானது. பூவும், காயும், பழமும் உணவுப் பொருள்கள்.
விதை : கனியில் உருண்டையான விதைகள் உண்டாகும். இவ்விதைகள் முளைத்து வளர்ந்து, செடியாகும் தன்மையை இழந்து விட்டன.

வாழை மரத்தை ‘மானோகார்ப்பிக்’, அதாவது ஒரு தரம் காய்க்கும் தாவரம் என்பர். வாழை மரத்தடியில் கிழங்கிருக்கும். இதுவே வாழையின் அடிமட்டத் தண்டாகும். இதிலிருந்து முளைகள் வெளிப்பட்டு, வாழைக் கன்றுகள் வளரும்.

வாழை தொன்று தொட்டு உலகமெல்லாம் வளர்க்கப்பட்டு வரும் பயன்படும் தாவரம். இந்தியாவில் மாமரத்திற்கு அடுத்து வாழையே அதிகமான நிலப்பரப்பில் பயிரிடப்படுகின்றதென்பர்.

உலகிலேயே மிக இனிமையான பொருள் வாழைப்பழமென்றார் டிஸ்ரெயிலி. வாழை முதல் முதலில் எங்கு உண்டாயிற்று என்பதைத் திட்ட வட்டமாகச் சொல்ல இயலவில்லை. இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்றதென்றும், எகிப்து நாட்டில் கி. மு. 1000 ஆண்டுகட்கு முன்னரே அருமையாக வளர்க்கப்பட்டதென்றும் ஹேயீஸ் கூறுகின்றார்.

உலகின் பல்வேறு நாடுகளிலும், இதன் கனிக்காகப் பல நூறு வேறு வகையான வாழைகள் வளர்க்கப்படுகின்றன,

வாழையின் மூசா டெக்ஸ்டிலிஸ் (Musa textilis) என்ற ஒரு சிற்றினம், அதன் நாருக்காகப் பிலிப்பைன்ஸ் நாட்டில் வளர்க்கப்டுகிறது. நார்ப்பட்டு என்று கூறப்படும் பட்டிழைகள் இதன் நாரில் உண்டாவன. வாழையின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22, 32, 33, 34, 35 என அகர்க்கார், பாதுரி (1935) என்பாரும், 2n = 32 என, டி.அங்கிரிமான்ட் (1945) என்பாரும் கூறியுள்ளனர்.

டானின் என்ற வேதிப் பொருள் மிகுந்திருத்தலின், வாழை மரத்தின் சாறு தீப்புண்ணை ஆற்றும் இயல்பிற்று. வாழைத் தண்டில் உள்ள ஒரு வகை வேதிப் பொருள் சிறுநீரகத்தில் ஒரோ வழி உண்டாகும் வேதிக் கற்களைக் கரைக்கும் ஆற்றலுடையது.