சங்க இலக்கியத் தாவரங்கள்/128-150

விக்கிமூலம் இலிருந்து
 

சூரல்–பிரம்பு
காலமஸ் ரோடங் (Calamus rotang, Linn.)

சூரல்–பிரம்பு இலக்கியம்

‘விரிமலர் ஆவிரை வேரல் சூரல்’ என்றார் கபிலர் (குறிஞ். 71). சூரல் என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘சூரைப்பூ’ என்று உரை கொண்டார். சூரல் என்பது சூரற்கொடி என்றும் சூரை என்றும் சூரையாவது பிரம்பு என்றும் உரை காண்பர். தாவரவியலில் இது காலமஸ் ரோடங் (Calamus rotang, Linn.) எனப்படும். காம்பிள் என்பாரும் இதனுடைய தமிழ்ப் பெயர் ‘சூரல்’ என்று குறிப்பிடுகின்றார். மலையாளத்திலும் பெரிய பிரப்பங்கொடியை ‘வலிய சூரல்’ என்றும் சிறுபிரப்பங் கொடியைச் ‘செறுசூரல்’ என்றும் கூறுவர். இதனால் சூரல் என்பது பிரம்பு என்பது வலியுறும்.

“சூரல் மிளைஇய சாரல்ஆர் ஆற்று” -அகநா. 228 : 9
“கொடுமுள் ஈங்கை சூரலொடு மிடைந்த” -அகநா. 357 : 1

என்ற இவ்விரு அகநானூற்று அடிகளில் சூரல் குறிப்பிடப்படுகின்றது. சூரற்கொடி மிக நீளமாக வளரும். ஆற்றங்கரைகளிலும், மலைச்சாரல்களிலும் பிரம்பு வளரும். இது ஈங்கையுடன் வளரும் என்றார் தாயங்கண்ணனார்.

சூரல்—பிரம்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசினே (Calycinae)
தாவரக் குடும்பம் : பாமே (Palmae)
தாவரப் பேரினப் பெயர் : காலமஸ் (Calamus)
தாவரச் சிற்றினப் பெயர் : ரோடங் (rotang)
சங்க இலக்கியப் பெயர் : சூரல்
உலக வழக்குப் பெயர் : பிரம்பு
தாவர இயல்பு : மிக நீளமான முட்கொடி. கொடி முழுவதும் முட்கள் உள்ளன. இவை ஸ்பைன்ஸ் எனப்படும்.
இலை : இறகன்ன பிளவுபட்டது. இலைக் காம்பின் நுனியில் சாட்டையைப் போன்ற, நீண்டு வளர்ந்த, முள்ளுடைய ‘சிர்ரஸ்’ காணப்படும். இலைக் காம்பெல்லாம் முட்கள் நிறைந்திருக்கும். இலைக் காம்பின் அடிப்பாகம் தண்டுடன் தழுவி நீண்டிருக்கும். இதற்கு ‘ஷீத்திங் பேஸ்’ என்று பெயர். இலைக் காம்பு மிகவும் சிறியது.
சிற்றிலை : பல சிற்றிலைகள். நீண்ட குத்து வாள் போன்ற வடிவானவை. இலையின் இருபுறத்தும் முட்கள் இருக்கும். இலை விளிம்பு 12 அங்குல நீளமான முள் போன்றது. கூர்மையானது. 8 அங்குல அகலமுள்ளது. கூரிய சாட்டை போன்றது.
மஞ்சரி : இக்கொடியில் உள்ள மஞ்சரியைப் பாளை என்று கூறலாம். இதனை ‘ஸ்பாடிக்ஸ்’ என்பர். இலைக்கட்கத்தில் உண்டாகும். மிகவும் கிளைத்திருக்கும்.
பாளை : பாளை குழல் வடிவாகி, மேலே பிளந்து இருக்கும். இப்பிளவுகள் இலைச் செதில்களாக விரியும்.
மலர் : ஆண் பூக்களும், பெண் பூக்களும் தனித்தனி உள்ளன.
புல்லி வட்டம் : 3 பல் விளிம்புகளை உடையது. அடியில் இணைந்திருக்கும்.
அல்லி வட்டம் : 3 இதழ்கள் பிரிந்திருக்கும். ஆண் மலரில், இவை அடியில் இணைந்திருக்கும். பெண் பூவில், இவை இணைந்திருக்கும்.
மகரந்த வட்டம் : ஆண் பூவில் 6 கூம்பிய தாதிழைகள். பெண் பூவில் இவை ஒரு கிண்ணம் போன்று மருவி, மேற்புறத்தில் 6 மலட்டு மகரந்தப் பைகளைக் காணலாம்.
சூலக வட்டம் : பெண் பூவில் சூலகம் 3 செல்களை உடையது. 3 சூல்கள் உள்ளன. சூல்கள் நேரே நிமிர்ந்திருக்கும்.
சூல் தண்டு : பெண் மலரில் சூல் தண்டு குட்டையானது. சூல்முடி மூன்று கிளையானது
கனி : சற்று நீண்ட உருண்டையானது. பளபளப்பான கனியுறை உண்டு. இதில் செதில்கள் அடர்ந்துள்ளன. ஒரு விதைதான் இருக்கும். கனி சற்றுப் புளிப்பானது. உண்ணப்படுவது.

பிரம்பில் இருவகை உண்டு, ஒன்று மெல்லிய, மிக நீண்ட தண்டு உடையது. இது கூடை. நாற்காலிகளுக்கு அடி பின்னுவதற்கும் (பிளெய்ட்டிங்) பலவாறாகப் பயன்படும். இதனையே மலையாளத்தில் செறுசூரல் என்பர்.

இதுவன்றி, மிகவும் தடித்த, பெரும் பிரம்பு ஒன்றுண்டு. இது புதராகத் தோன்றி வளரும். நீண்டு, கொடி போன்று வளரும். இந்தப் பிரம்பு மிக வலியது. இது பல வேறு வகையாகப் பயன் படுகிறது. இதனை காலமஸ் த்வெயிட்டிஷ் (Calamus thwaitesh var. canarana) என்றழைப்பர். இது கேரளத்தில் மலைகளில் வளர்கிறது.