சங்க இலக்கியத் தாவரங்கள்/130-150

விக்கிமூலம் இலிருந்து
 

பனை
பொராசஸ் ஃபிளாபெல்லிஃபர்
(Borassus flabellifer,Linn.)

சேரமன்னர்களின் குடிப்பூ பனை என்பர். பனையைப் போந்தை. பெண்ணை எனச் சங்க நூல்கள் கூறும். பனைமரம் மரமன்று. அது ‘புல்லெனப்படும்’ என்பர் தொல்காப்பியர். இது புறக்காழ் கொண்டது. பனையில் ஆண் மரமும், பெண் மரமும் தனித்தனியாக வளரும். இரு வகை மரங்களும் பல்லாற்றானும் பயன்படுமாயினும் ஆண்பனை, பெண்பனையைப் போன்று அத்துணைப் பயன்தர வல்லதன்று.

பெண் பனை மரத்தில் இறக்கும் கள்ளிற்குப் ‘பதநீர்’ என்று பெயர். இதனைக் காய்ச்சிப் பனை வெல்லம், பனங்கற்கண்டு முதலியவற்றைப் பெறலாம். பனைமரம் பல்லாற்றாலும் பயன்படுவது.

சங்க இலக்கியப் பெயர் : பனை
ஆங்கிலப் பெயர் : பனைமரம் (Palmyra
தாவரப் பெயர் : பொராசஸ் ஃபிளாபெல்லிஃபர்
(Borassus flabellifer,Linn.)

பனை இலக்கியம்

சேர மன்னரது குடிப்பூவாகப் பனையின் பூ கொள்ளப் பட்டது. ‘பனை’ ‘போந்தை’ என்ற இதன் வேறு பெயர்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியத்தில் இவற்றுடன் ‘பெண்ணை’ என்ற பெயர் இடம் பெற்றுள்ளது.

பனையை நாம் மரம் என்று வழங்குகின்றோம். ஆனால், இது மர இனத்தைச் சேர்ந்ததன்று. இது புறத்தில் காழ் கொண்டு இருக்கும். இங்ங்னம் புறவயிர்ப்பு கொண்டனவற்றைப் புல்லெனப் பேசுகின்றது தொல்காப்பியம்.

“புறக்கா ழனவே புல்லென மொழிப” -தொல். பொருள். 9 : 86

பனையில் ஆண் மரமும், பெண் மரமும் காணப்படும். ஆண் பனையின் பாளையில் இருந்து கிளைத்த கதிர்கள் நீண்டு திரண்டிருக்கும். அவற்றினின்றும் சிறு ஆண் பூக்கள் விரியும். பூவில் தடித்த புறவிதழ்களும், 3 அகவிதழ்களும், 6 மகரந்தக் கால்களும் தோன்றும். பெண் பனையின் பாளையிலிருந்து பட்டையான 3 புறவிதழ்களும், 3 அகவிதழ்களும், கோளவடிவான பெண்ணகத்தைக் கொண்டிருக்கும். இதுவே மகரந்தச் சேர்க்கையின் பின்னர் பிஞ்சாகிப் பனங்காயாகும். இளங்காயில் உள்ள மூன்று நுங்குகளும், முற்றி விதைகளாகி விடும். காய் முற்றிப் பழமான பின், பனம் பழம் தானே விழும். அதற்குள் மூன்று விதைகள் இருக்கும்.

பனையின் பஞ்சு போன்ற நுங்கைப் பாடுகின்றார் திரையன்:

“பாளை தந்த பஞ்சிஅம் குறுங்காய்
 ஓங்கிரும் பெண்ணை நுங்கு”
-குறுந் . 293 : 2-3

பனையின் இவ்விருவகைப் பூக்களும் மஞ்சள் கவினிய வெண்ணிறங் கொண்டவை. இவையிரண்டுமே சூடிக் கொள்ளும் வாய்ப்பற்றவை. ஆதலின், பனையின் வெளிய இளங்குருத்து ஓலையைப் பிளந்து, அதன் கூரிய வலப்பக்கத்துப் பாதியைக் குடிப்பூச் சின்னமாகக் சூடிக் கொண்டனர்.

“இரும்பனை வெண்டோடு மலைந்தோன்” -புறநா. 45 : 1
(தோடு-தடித்த பனையோலை)
“. . . . . . . . வளர்இளம் போந்தை
 உச்சிக் கொண்ட ஊசிவெண் தோட்டு”
-புறநா. 100 : 3-4
(வளர் இளம் போந்தை-குருத்தோலை)
“மிசையலங் குளைய பனைப்போழ் செரீஇ” -புறநா. 22 : 21

மேலும்,

“இரும்பனம் போந்தைத் தோடும்” -பொருந. 143

என்ற அடிக்கு நச்சினார்க்கினியர், ‘கரிய பனங்குருத்தில் அலர்ந்த வலப்பக்கத்து ஓலையும்’ என்று உரை கண்டுள்ளார். இப்பனை ஓலையை மாலையாகவும் மார்பில் அணிவர். இதனைக் குறிக்கும் இடங்களில் ‘புடையல்’ என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இப்புடையல் குறிக்கப்படும் இடங்களில் பெரிதும், கழல் அணிந்த கால் கூறப் படுகின்றது.

“இரும்பனம் புடையல் ஈகைவான் கழல்” -பதிற். 42 : 1
“புடையல் அம்கழற்கால்” -அகநா. 295 : 14

போர்க்களத்தில் போரிட்டுக் குருதி தோய்ந்துள்ளதைப் பாடும் இடத்திலும்,

“இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்ப
 குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே”
-பதிற். 57 : 2-3

சேரர்க்குரிய வீரச் சின்னங்களில் புடையலும், கழலும் இணைத்துப் பேசப்படுதலின், சேரர்க்குத் தாயமாக-உரிமைப் பொருளாக-தொன்மை மரபாக-முன்னோர் பழக்கமாகப் பாடுகின்றார் அவ்வையார்.

“தொன்னிலை மரபின் நின்முன்னோர் போல
 ஈகையங் கழற்கால் இரும்பனம் புடையல்”
-புறநா. 99 : 4-5

இத்துணைக்கும், இப்பனங்குருத்து மலரமைப்போ, மணமோ, சுவையோ அற்றது என்பதையும் கபிலர் அறியாமலில்லை.

“வண்டு இசைகடவாத் தண்பனம் போந்தை” -பதிற். 70 : 6

எனினும், ‘கண்ணிப்பூ நிலையில்’ போந்தையாகவும், தார்ப்பூ நிலையில் ‘புடையலாகவும்’ பெயர் பெற்றுள்ள சிறப்பிடம் இதற்கொரு தனித்தகுதியைத் தந்துள்ளது என்பார் கோவை இளஞ்சேரனார்[1].

பனையின் புடையலொடு வாகை மலரை இணைத்து வெற்றி கொண்டாடினார் என்று கூறும் பதிற்றுப்பத்து.

இவ்வடிகளுக்குக் “கிழித்துக் குறுக நறுக்கி, வாகையொடு இடை வைத்துத் தொடுத்த பனங்குருத்து, முல்லை முகைக்கு ஒப்பாகவும் வாகை வீ அம்முல்லையைச் சூழ்ந்த வண்டிற்கு ஒப்பாகவும்” உவமம் கொண்டதை இதன் உரைகாரர் விளக்கியுள்ளார்.

பனையிலையின் காம்பு தடித்து, சற்று பட்டையாக இருக்கும். இருமருங்கும் கரிய வாள் போன்ற விளிம்புமிருக்கும். இம்மட்டைகளைக் கொண்டு, குதிரை வடிவாகக் கட்டிய ‘மா’வில் ஏறி ஊர்ந்து செல்லுதல் மடலூர்தல் எனப்படும். தான் விழைந்த மகளை மணங் கொள்ள வேண்டி, தலைமகன் மடலூர்ந்தாயினும் மணங்கொள்ளுதல் வழக்கம். இதனைப் பெருந்திணை என்றும், ஏறிய மடல் திறம் என்றும் கூறும் தொல்காப்பியம். {தொல். பொரு. 54)
பனை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசினே (Calycinae)
தாவரக் குடும்பம் : பாமே (Palmae)
தாவரப் பேரினப் பெயர் : பொராசஸ் (Borassus)
தாவரச் சிற்றினப் பெயர் : ஃபிளாபெல்லிஃபர் (flabellifer)
சங்க இலக்கியப் பெயர் : பனை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : போந்தை, பெண்ணை
பிற்கால இலக்கியப் பெயர் : தாலம், புற்பதி, தாளி, புற்றாளி
உலக வழக்குப் பெயர் : பனை, பனைமரம்.
தாவர இயல்பு : மரம் மிக உயர்ந்து பருத்துக் கிளைக்காது வளரும். புறத்தில் காழ் கொண்டு இருக்கும்.
இலை : தனியிலை. அங்கை போன்று அகன்றது. இலை விளிம்பு பல பிளவுகளை உடையது
இலைக் காம்பு : .தடித்தது. நீளமானது. இரு புறத்தும், கரிய, கூரிய வாள் போன்றது. பனை மட்டை எனப்படுவது. இதில் வலிய நார்த் திசு நிறைந்திருக்கும்.
மஞ்சரி : வலிய ‘ஸ்பாடிக்ஸ்’ எனும் பாளையுள் காணப்படும். ஆண் பனையுள் ஆண் பூக்கள் தடித்துக் கிளைத்து, நீண்ட கதிர்களில் ஒட்டியிருக்கும். பெண் மரத்தில், பெண் பூக்கள் வலிய பாளையுள், தடித்த பூந்துணரில் உண்டாகும். இதில் உள்ள பெண் பூக்களைக் குரும்பை என்பர். இவை கொழுவிய உருண்டை வடிவானவை.
மலர் : ஆண் பூக்கள் மிகச் சிறியவை. பெண் பூ குரும்பையாக வளரும். ஆண் பூவில் 3 குறுகிய, மெல்லிய புறவிதழ்கள் இருக்கும்.
புல்லி வட்டம் : பெண் பூவில் 3 தடித்த, வலிய, புறவிதழ்கள், குரும்பையில் தழுவி ஒட்டியிருக்கும்.
அல்லி வட்டம் : ஆண் பூவில் 3 அகவிதழ்கள்; 6 மகரந்தத் தாள்கள். காணப்படும். 3 முள் போன்ற மலட்டுப் ‘பிஸ்டிலோட்’ காணப்படும். பெண் பூவில் 3 சிறிய அகவிதழ்களும், 6-9 மலட்டு மகரந்தங்களும் காணப்படும்.
சூலக வட்டம் : சூற்பை உருண்டையானது. 3 - 4 செல்லுடையது. சூல் நேரானது. சூல்முடி 3 பிளவாகச் சூற்பையில் ஒட்டியிருக்கும்.
கனி : சதைக்கனி-ட்ரூப் எனப்படும். 1-J ‘பைரீன்’ விதைகளை உடையது.
கனி : இளம் பனங்காயின் விதைகளில் உண்டாகும் நுங்கு, உண்பதற்கினிதாக இருக்கும். விதைகள் முளைத்தற்குச் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருளை இதன் இளங்காயில் நுங்காக நுகர்கிறோம்.

பனையின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 36 என வெங்கடசுப்பன் (1945) பி. போஷ் (1947), சர்மா, ஏ. கே. சர்க்கார் (1956 பி, ) (1957) சர்க்கார் எஸ். கே. (1957) என்பவர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இயல்பாகவே பெரிய பனந்தோப்புகளில், ஆண் பனை மரங்கள் மிகுதியாகவும், பெண் பனை மரங்கள் குறைவாகவும் காணப்படுகின்றன. பெண் பனை மரத்தில்தான் ‘பதநீர்’ இறக்கப்படுகிறது; காய்களும் பயன்படுகின்றன. இவை காய்க்கத் தொடங்கும் போதுதான், இவை ஆண் மரமா, அன்றிப் பெண் மரமா என்று அறியலாம். இவை பூப்பதற்கு ஏறத்தாழ 10-12 ஆண்டுகள் ஆகின்றன. ஆண் பனை மரங்கள் கட்டிட வேலைக்கு உதவும். எனினும் பெண் பனையே மிகுதியும் பயன் தர வல்லது. ஆண் பனையைப் பெண் பனையாக்கிய அடிகளார் திருஞானசம்பந்தர் என்ப. குடந்தை அருணாசலப் புலவர் பனையின் 801 வகையான பயன்களைப் புலப்படுத்தி, தாலாவிலாசம் என்றொரு நூல் எழுதி உள்ளார். பெண் பனை மரங்கள் கருவுறுவதற்கு நூற்றுக்கு மேலுள்ள பனந்தோப்பில் ஓர் ஆண் மரம் இருந்தால் போதுமானது. இதனைக் கன்றிலேயே அறிய இயலாமையால், ஆண் மரங்களே மிகுந்து விடுகின்றன.

பனைமரம் ஆணா, பெண்ணா என்று அறிவியில் முறைகளால் ஆய்ந்து கூற முடியுமா என்று சில ஆண்டுகட்கு முன்னர் யாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சில ஆய்வுகளை மேற் கொண்டோம். பனை மட்டைகளில் (இலைக் காம்பு) வலிய நார்த்திசு மிகுந்திருக்குமென முன்னர்க் கூறினோம். ஆண் பனை மட்டைகளையும், பெண் பனை மட்டைகளையும் தனித் தனியாக வெவ்வேறு நாள்களில் கொண்டு சேர்த்து, அவற்றின் நார்த்திசுக்களைத் தனித்தெடுத்துக் கொண்டோம். அவற்றைத் தனித் தனியாகப் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறையில் உள்ள எக்ஸ்ரே கருவியில் இடையில் வைத்து நிழற்படம் எடுத்தோம். ஆண்பனை மர நாரில் இரண்டு வட்டமான கற்றைகளும் (bands), பெண்பனை நாரில் மூன்று கற்றைகளும் இருப்பதைக் கண்டு வியந்தோம். உடனே பால் வேறுபாடு தெரியாத, சற்று முதிர்ந்த பல பனங்கன்றுகளிலிருந்து அடையாளமிட்டு, அவற்றின் நார்த்திசுவைக் கொண்டு வந்து, தனித்தனியாக எக்ஸ்ரே படம் எடுத்து வைத்திருந்தோம். நான்கு ஆண்டுகள் கழிந்த பின்னர், மூன்று கற்றைகளைக் கொண்ட பனங்கன்று பெண் பனையாகவும், இரண்டு கற்றைகளைக் கொண்டவை ஆண் பனையாகவும் பூத்ததை அறிந்து மகிழ்ந்து வியந்தோம்.

இதனால் ஓரிரு ஆண்டுகளிலேயே, ஒரு பனங்கன்று ஆணா, பெண்ணா என்று அறிய முடியுமென்ற ஆய்வு பயனளித்தது. ஆனால், ஆய்வாளர்க்குப் பயனில்லை. ஆய்வு செய்யப்பட்டவிடம் தமிழ்நாடுதானே! நொந்து கொண்டதில் வியப்பில்லை.



  1. இலக்கியம் ஒரு பூக்காடு : ப. 345