சங்க இலக்கியத் தாவரங்கள்/131-150
கைதை–தாழை
பாண்டனஸ் டெக்டோரியஸ்
(Pandanus tectorius,Linn.)
கைதை–தாழை இலக்கியம்
‘கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை’ என்ற குறிஞ்சிப் பாட்டடியில் (83) வரும் ‘கைதை’ என்பதற்கு நச்சினார்க்கினியர் தாழம்பூ என்று உரை கூறியுள்ளார்.
‘தாழை தளவம் முட்டாள் தாமரை’ என வரும் குறிஞ்சிப் பாட்டடியில் (80) தாழை என்பதற்கு அவர் ‘தெங்கிற்பாளை’ என்று உரை கூறினார். இவர் இங்ஙனம் உரை வகுத்ததின் காரணம்.
“வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிர”
-திருமுரு. 307-308
என்று நக்கீரர் கூறியதேயாம். அதனால் ஈண்டு ‘தெங்கினது இளநீரை உடைய சீரிய குலை உதிர’ என்று அவர் உரை கூறினார். எனினும்,
“வீழ்த்தாழைத்தாள் தாழ்ந்த”
-பட்டி. 84
“மடல் தாழை மலர் மலைந்தும்”
-பட்டி. 88
என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் தாழையைக் குறிப்பிடுதலின், நச்சினார்க்கினியர் ‘விழுதை உடைய தாழையின் அடியிடத்தே’ என்றும் ‘மடலை உடைய தாழையினது மலரைச் சூடியும்’ என்றும் உரை வகுத்தார். ஆதலின் தாழையின் அடி மரத்தில் விழுது உண்டென்பதும், தாழை மடலாகப் பூக்கும் என்பதும் கூறப்பட்டமை காண்க. மேலும்,
“வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை
குருகுளர் இறகின் விரிபுதோடு அவிழும்”
-குறு. 228 : 1-2
“வீழ்தாழ் தாழைப் பூக்கமழ் கானல்”
-நற். 78 : 4
என்பவாதலின், தாழையின் அடி மரத்தில் விழுது உண்டென்பது தாழையின் மலர் குருகிறகினை ஒத்து, மடலவிழுமென்பதும் வலியுறும்.
இங்ஙனங் கூறியவற்றால், கைதை என்பது தாழை என்பதும், தாழை என்பது தென்னையைக் குறிக்குமென்பதும் பெற்றாம்.
இவையன்றி, நற்றிணைப் பாடல்களில் காணப்படும் ‘கண்டல்’ என்னும் சொல் தாழையைக் குறிக்கும் என்பர் ஒரு சிலர். கண்டல் என்பது தாழையுடன் உப்பங்கழியில் வளரும் வேறு ஒரு மரம்.
பிற்கால இலக்கியங்கள் தாழைக்குப் பல வேறு பெயர்களைக் கூறுகின்றன.
தாழையின் அடிப்பகுதி பருத்தது. செதில் செதிலான சருச்சரை கொண்டது. அதனால், இராலின் முதுகினை ஒத்தது. இதன் இலை முட்களை உடையது. அதன் அமைப்பு சுறா மீனின் ‘கோடு’ போன்று இரு புறமும் கூரிய வாள் விளிம்புகளை உடையது. இதன் அரும்பு வெண்மையானது. கூரிய முனை உடையது. இத்தோற்றம் யானையின் மருப்புப் போன்றது. மலர் மடல்களை உடையது. மலர் சற்றுத் தலை சாய்ந்து நிற்பது, அழகிய மான் தலை சாய்த்துப் பார்ப்பது போன்றது. மலர்ந்து மணம் பரப்பும். அதனால், விழாக் களம் போல் கமழ்கின்றது என்றெல்லாம் தாழைக்கு விளக்கவுரை தருகின்றார் வெண்கண்ணனார்.
“இறவுப் புறத்தன்ன பிணர்படு தடவுமுதல்
சுறவுக் கோட்டன்ன முள்ளிலைத் தாழை
பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்புமுதிர்பு
நன்மான் உளையின் வேறுபடத் தோன்றி
விழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப”
-நற். 19 : 1-5
மடல் பெரிய தாழம்பூவைத் ‘தடமலர்த் தாழை’ (கலி. 131 : 10) என்று கூறும் கலித்தொகை. பூ நீளமானது. அகன்ற மடல்களை உடையது. தாழம்பூவின் புறத்தோடுகள் தாழையின் இலைகளைப் போன்றவை. இதன் விளிம்புகளிலும், நடுநரம்பின் மேலும் கூரிய, சற்று வளைந்த முட்கள் நிறைந்திருக்கும். இக்கூன் முள்ளைக் கொண்டு வாள் போல்வாய என்றும், அரவு வாள்வாய் என்றும் இவை பேசப்படுகின்றன. மலரின் புற ஓலைகளுக்கு, மடல், ஓலை, ஓடு, தோடு என்று பெயர். இதன் மலரில், மடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். இவையன்றி, வேறு இதழ்கள் இல்லை. அகமடல்கள் நீண்டும், மஞ்சள் நிறமாகவும், நறுமணம் உடையனவாகவும் இருக்கும். இவற்றின் கட்கத்தில் ‘சோறு’ எனப்படும் மகரந்தத் தொகுதி இருக்கும். இதில் சாம்பல் நிறமான மகரந்தம் உண்டாகும். இத்தாது நறுமணமுடையது. இதனை மகளிர் தூவியும், பூசியும் களிப்பர். தாழையின் மலரைத் தலையில் சூடிக் கொள்வர்.
“தாதுதுகள் உதிர்த்த தாழையங் கூந்தல்” -அகநா. 353 : 19
தாழையின் மலர் ஒன்று கைக்கெட்டாத உயரத்தில் மடல் விரிந்துள்ளது. அதனைத் தன் தலைவிக்குச் சூட்டி மகிழ எண்ணிய தலைமகன், அவளைத் தனது கைகளாலே தூக்கி நிறுத்திக் கொய்யச் செய்தான் என்பதைக் ‘கைதை தூக்கியும்’ (நற். 349 : 3) என்றார் நல்வேட்டனார்.
தாழம்பூவின் மணம் கடற்கரைப் பாக்கத்துச் சிறுகுடியில் பரவியுள்ள புலால் நாற்றத்தைப் போக்குவதைப் புலவர்கள் கூறுவர்.
“. . . . . . . . . . . .வெண்பூத்தாழை
எறிதிரை உதைத்தலின் பொங்கித்தாது சோர்பு
சிறுகுடிப் பாக்கத்து மறுகுபுலா மறுக்கும்
மணங்கமழ் கானல். . . . . . . . ”
-நற். 203 : 4-7
“புலவுப் பொருது அழித்த பூநாறு பரப்பின் ”
அகநா. 130 : 8
தாவரவியலில் பூக்களுக்கு ஓர் அடிப்படைக் கோட்பாடு உண்டு. பூக்கள் ஒரு செடியின் இலைகள் போன்றவை என்றும், பூவில் உள்ள புறவிதழ்களும், அகவிதழ்களும் நெருக்கமாக இணைந்து தோன்றிய இலைத் தொகுதிகளே என்றும் கூறுவா. இக்கொள்கையை வலியுறுத்துமாப் போலே உள்ளது தாழையின் மடல்கள் நிறைந்த தாழம்பூ. மேலும் இதன் மடல்களைத் தாவரவியலில் அகன்று நீண்ட செதில்கள் (Bracts) பிராக்ட்ஸ் என்று கூறுவர். இதன் கட்கத்தில் அடர்ந்து கிளைத்த மகரந்தக் கிளைகள் தாது உகுத்திருப்பதும் இக்கோட்பாட்டை வலியுறுத்தும்.
கைதை—தாழை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | நூடிபுளோரே |
தாவரக் குடும்பம் | : | பாண்டேசி |
தாவரப் பேரினப் பெயர் | : | பாண்டனஸ் (Pandanus) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | டெக்டோரியஸ் (tectorius) |
தாவர இயல்பு | : | 25 அடி உயரமாகவும், கிளைத்தும் வளரும் புதர்ச் செடி. சிறு மரமென்றுங் கூறுவர். |
சங்க இலக்கியப் பெயர் | : | கைதை |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் | : | தாழை |
பிற்கால இலக்கியப் பெயர் | : | கைதை, முண்டகம், முடங்கல், முரலி |
ஆங்கிலப் பெயர் | : | ஸ்குறுபைன் (Screw-pine) |
தாவர வளரியல்பு | : | மீசோபைட். பெரும்பாலும் கடலோரப் பகுதியிலும், உப்பங்கழியிலும் வளரும். |
இலை | : | பசியது. மிக நீளமானது. 3-5 அடி வரையிலும் காணப்படும். அகலம் 1-2 அங்குலம். இலை விளிம்பில், மேல் நோக்கிய கூரிய முட்கள் நெருங்கி இருக்கும். இலையின் நடுநரம்பில், பின் நோக்கிய முட்கள் காணப்படும். |
மடல் | : | இரு பாலான பாளைகள் உண்டாகும். ஆண் பாளை நீண்டு கூரியது. 5-24 அங். வரையிலான மூடிய மடல்களையுடைய ஆண் பூ உண்டாகும். நறுமணம் உடையது. மடல்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. பெண் பாளையில், பெண் பூ உண்டாகும் 2 அங். அகலமான தனிமலர். |
மகரந்த வட்டம் | : | ஆண் பூவில் மடல்களின் கட்கத்தில் கிளைத்த சோற்று மகரந்தக் கிளைகள் எண்ணற்ற மகரந்தப் பைகளைத் தாங்கி நிற்கும். இவற்றில் சாம்பல் நிறமான நறுமண மகரந்தம் உதிரும். |
சூலக வட்டம் | : | பெண் பூவில் 5-12 சூலறைகளைக் கொண்ட தொகுதியான சூலகம் உண்டாகும். சூல்-ஒரு செல் உடையது. |
கனி | : | பருத்த சதைக்கனி. 2-4 அங். நீளமும், 6-10 அங். அகலமும் உள்ளது. மஞ்சளும், சிவப்புமான நிறமுள்ளது. |
இதன் அடிமரத்திலிருந்து விழுதுகள் உண்டாகும். இதன் இலைகள் பாய், குடை முடையப் பயன்படும். மரத்தின் நார் பலவாறு பயன்படும். மலரின் மடலிலிருந்து, நறுமண எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது மருந்துக்குப் பயன்படும். இதனுடைய குரோமோசோம் எண்ணிக்கை 2n = 51, 54, 60 என ஸ்காட்ஸ் பர்க் (1955) என்பவரும், 2n = 60 என ஆர். எஸ். இராகவனும் (1959) கணித்துள்ளனர்.