சங்க இலக்கியத் தாவரங்கள்/132-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

கண்பு–சம்பு–சண்பு
டைபா அங்கஸ்டடா (Typha angustata,Bory & Chaur.)

‘கண்பு’ என்பது பல்லாண்டு வளர்ந்து வாழும் சதுப்பு நிலச் செடி. இது ‘சம்பு’ என்று இந்நாளில் வழங்கப்படும். இதற்குச் ‘சண்பு’ என்ற பாடபேதமும் உண்டு. இதன் ‘இணர்’, கம்பின் கதிர் போன்றது.

சங்க இலக்கியப் பெயர் : கண்பு
தாவரப் பெயர் : டைபா அங்கஸ்டடா
(Typha angustata,Bory & Chaur.)

கண்பு–சம்பு–சண்பு இலக்கியம்

பெரும்பாணாற்றுப்படையில் சிறுபிள்ளைகள் கண்பினது புல்லிய காயாகிய கதிரை முறித்து அக்காயில் தோன்றிய தாதை மார்பிலே அடித்துக் கொண்டு விளையாடுவர் என்று கூறுகின்றார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

“பொன்காண் கட்டளை கடுப்ப கண்பின்
 புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்”
-பெரும்பா. 220-221


இவ்வடிகளுக்கு நச்சினார்க்கினியர் ‘பொன்னை உரைத்து மாற்றுக்காணும் உரை கல்லை ஒப்பக் கண்பினது புல்லிய காயில் தோன்றிய தாதை, அக்கதிரை முறித்து அடித்துக் கொண்ட மார்பினை உடைய சிறுபிள்ளைகள்’ என்று உரை கூறுகின்றார். இவ்வுரையைக் கொண்டு விளக்கம் ஏதும் அறியப்படாமையின் எமது இனிய ஆசிரியர் தவத்திரு கந்தசாமியார் அவர்களிடம் அணுகி வினவினோம். பல நாள் கழித்து ஓர் நாள் அவர் எம்மை அண்ணாமலை நகரில் வடபாலிருக்கும் ஒரு சதுப்பு நிலக் குட்டை போன்ற கால்வாயிடத்து அழைத்துப் போனார். ஆங்கண், சம்பு எனப்படும் இக்‘கண்பு’ நெடிதோங்கிச் செழித்து வளர்ந்து, கதிர் விட்டிருந்தது. அக்கதிர்கள் கம்பங்கதிர்களைப் போன்றிருக்கும். அவற்றில் ஒன்றிரண்டு கதிர்களைக் கொண்டு வரச் சொல்லித் தாம் வாங்கிக் கொண்டார். அக்கதிர்தான் கண்பினது பூந்துணர். அவற்றில், ஒரு கதிரைக் கையில் வைத்துக் கொண்டு, ஏதேதோ அளவளாவிக் கொண்டே, அதனில் உள்ள மலர்களைப் பிசைந்து மூடி வைத்துக் கொண்டார் போலும். மெய்ப்பை அணிந்திருந்த எம்மை, அவற்றைக் கழற்றச் சொல்லித் தாம் கையில் மூடி வைத்திருந்த இணர் மலர் பிசைந்த உருண்டையை எமது மார்பிலே ஓங்கி அடித்தார். மார்பகம் முழுதும் கெட்டிச் சந்தனம் பூசியது போலாயிற்று. உடனே அவர் ‘புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பினை’ என்று கூறி நகையாடினர். அப்போதுதான் கண்பினது காயாகிய கதிர், அதனுடைய பூந்துணர் என்றும், அதில் உள்ள ஆண் பூக்களில் உண்டாகும் மஞ்சள் நிறமான தாதுக்கள் எல்லாம், பெண் மலரின் சூல்முடியில் உண்டாகும் பசைப் பொருளால் இணைந்து பிசையப் பெற்று, அரைத்த சந்தனம் போன்றாகி விட்டது என்றும், அதனை மார்பில் அடித்த போது சந்தனம் அப்பிய மார்பாகி விட்டது என்றும், தனித்திருந்த மஞ்சள் நிறத் தாது மார்பிலெல்லாம் பரவி, பொன்னுரைத்த உரைகல் போன்று மஞ்சள் நிறமாக்கி விட்டதென்றும் அறிந்து மகிழ்ந்தோம். இங்ஙனம் சங்க இலக்கியத்திற்குச் செயல் முறை விளக்கம் தந்து, அறிவூட்டிய அப்பெரும் பேராசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தை வியந்து போற்றுவாம்.

கண்பு—சண்பு—சம்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : நூடிபுளோரே (Nudiflorae)
தாவரக் குடும்பம் : டைபேசி (Typhaceae)
தாவரப் பேரினப் பெயர் : டைபா (Typa)
தாவரச் சிற்றினப் பெயர் : அங்கஸ்டடா (angustata)
சங்க இலக்கியப் பெயர் : கண்பு
உலக வழக்குப் பெயர் : சம்பு
தாவர இயல்பு : நீரிலும்,சதுப்பு நிலத்திலும் வளரும் பல்லாண்டுச் செடி 10 அடி உயரம் வரையில் ஓங்கி வளரும்.
தண்டு : தரை மட்டத் தண்டு-கிழங்கு-செதில்கள் மூடியிருக்கும்.
இலை : 8 அடி நீளமும், 0.2-1 அங். அகலமும் உள்ள மிக நீண்ட இலை-தட்டையாக இருக்கும்.
மஞ்சரி : கம்பின் கதிர் போன்றது. 12 அங். நீளமும் 0.25-9 அங். குறுக்களவும் உள்ளது. ‘ஸ்பைக்’ என்ற பூந்துணர் பழுப்பு நிறமானது.
மலர் : ஆண் மலர், மெல்லியதாகவும், வெளுத்துப் போயுமிருக்கும்; இணரின் மேலே இருக்கும். பெண் மலர், மலட்டு மலர்களுடன் சேர்ந்து, அடியில் இருக்கும். மலட்டு மலரில், மலட்டுச் சூலகமும், மலரடிச் செதில்களும் கூடியிருக்கும்.
புல்லி, அல்லி வட்டங்கள் : இல்லை.
மகரந்த வட்டம் : ஆண் மலரில் 2-7 தாதிழைகள் உண்டு. பெரிதும் 3 தாது இழைகளில் தாது உண்டாகும். தாதுக் காம்புகள் நுனியில் கம்பியிருக்கும்.
தாதுப் பை : தாதுப்பைகளின் இணைப்பு நீண்டு, தடித்து இருக்கும். தாதுப்பை 4 செல் உடையது. அடியில் ஒட்டியிருக்கும். மகரந்தம் நல்ல மஞ்சள் நிறமானது.
சூலக வட்டம் : பெண் மலர் ஒரு மெல்லிய மடலின் உள்ளே இருக்கும். சூலகம் ஒரு செல் உடையது. சூல்தண்டு நீண்டு, உதிராது இருக்கும். சூல்முடி பிளந்திருக்கும்.
சூல் : தனித்துள்ள தொங்கு சூல்.
கனி : மிக மெல்லியது. விதை-கனிச் சுவரில் ஒட்டியிருக்கும். கரு உருண்டையானது

இதன் நீண்ட இலைதான் ‘சம்பு’ எனப்படும். இதனைக் கொண்டு தட்டிகள், பந்திப் பாய்கள், குடலைகள் முதலியவற்றை வேய்வர்.