சங்க இலக்கியத் தாவரங்கள்/133-150

விக்கிமூலம் இலிருந்து
 

சேம்பு
டைபோனியம் பிளாஜெல்லிபார்மி
(Typhonium flagelliforme,Bl.)

சேம்பு என்பது ஓராண்டுச் செடி. இதன் அடியில் உண்டாகும் சேப்பங் கிழங்கிற்காக இச்செடி தொன்றுதொட்டுப் பயிரிடப்பட்டு வருகின்றது. இக்கிழங்கு சத்துள்ள உணவுப் பொருள்.

சங்க இலக்கியப் பெயர் : சேம்பு
தாவரப் பெயர் : டைபோனியம் பிளாஜெல்லிபார்மி
(Typhonium_flagelliforme,Bl.)

சேம்பு இலக்கியம்

சேம்பின் தண்டு குழல் வடிவானதென்றும், அகன்ற இலையை உடையதென்றும் சேம்பு மலையில் வளருமென்றும், மடல் விரிந்து மலர்கள் வெளிப்படும் என்றும் சேம்பு கழனியில் விளையும் என்றும் சேம்பினது இலையோடே கிழங்கு உணவு கொள்வர் என்றும் சேம்பும் மஞ்சளும் விளைகின்ற நிலத்தே அவற்றைப் பன்றி முதலிய விலங்குகள் அழித்து விடாமல் காவல் புரிவோர் பறை ஒலி எழுப்புவர் என்றும், ‘யானைத் தந்தத்தை உலக்கையாகவும் சேம்பின் இலையைச் சுளகாகவும் கொண்டு மூங்கில் நெல்லை உரலில் அட்டுப் பாடுவோம் வாரீர்’ என்று மகளிர் தோழியரை அழைப்பதாகவும் சங்க நூல்கள் கூறுகின்றன.

“குழற்காற் சேம்பின் கொழுமடல் அகல்இலை” -அகநா. 336 : 1
“விளைவு அறாவியன் கழனி
 . . . . . . . . . . . . . . . .
 முதற் சேம்பின் முளை இஞ்சி”
-பட்டின. 8 : 19


“. . . . . . . . . . . . சேம்பின்
 முளைப்புற முதிர் கிழங்கு ஆர்குவிர்”
-பெரும்பா. 361-362
“சிலம்பின் சேம்பின் அலங்கல் வள்இலை” -குறுந். 76 : 3

சேம்பு தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : நூடிபுளோரே (Nudiflorae)
தாவரக் குடும்பம் : ஆரேசி (Araceae)
தாவரப் பேரினப் பெயர் : டைபோனியம் (Typhonium)
தாவரச் சிற்றினப் பெயர் : பிளாஜெல்லிபார்மி (flagelliforme)
சங்க இலக்கியப் பெயர் : சேம்பு
தாவர இயல்பு : பல்லாண்டு வாழக் கூடிய, ஆனால், ஓராண்டில் முதிரும் செடி. 2-3 அடி உயரம் வரையில் ஓங்கி வளரும்; அடியில் கிழங்கு இருக்கும். இதுவே இதன் தரை மட்டத் தண்டாகும்.
இலை : அகன்ற நீண்ட முக்கோணமான மூன்று பிளவுடைய பெரிய இலை. 1-7 அங். நீளமும் 6 அங். அகலமும் உடையது. இலைக் காம்பு 4-12 அங். நீளமானது.
மஞ்சரி : நீண்ட வாள் போன்ற வடிவுள்ள பாளை போன்ற மெல்லிய உறையினுள் மஞ்சரி உண்டாகும். பாளையின் நுனி கூரியது. மஞ்சரி முதிரும் போது பாளை உதிர்ந்து விடும். மஞ்சரிக்கு ஸ்பாடிக்ஸ் குலை என்று பெயர். கலப்பு மஞ்சரியில், ஆண் மலர்களும், பெண் மலர்களும் தனித் தனியாக உண்டாகும். மலட்டு
மலர்களும் இருக்கும். இவை மஞ்சரி மேலே உண்டாகும் பெண் மலர்கட்கு மேலேயும், ஆண் மலர்கட்கு அடியிலேயும் உண்டாவதும் உண்டு.
புல்லி, அல்லி வட்டங்கள் : இல்லை.
மகரந்த வட்டம் : ஆண் மலரில் 1-3 தாதிழைகள் தாதுப் பைகளைத் தாங்கி நிற்கும்.
சூலக வட்டம் : பெண் மலரில் ஒரு செல் சூலகம்; சூல் தண்டு சூலகத்தையொட்டி இருக்கும். 1-2 சூல்கள் உண்டாகும். இலை ‘ஆர்த்தோட்ரோபஸ் ஓவியூல்’ எனப்படும்.
கனி : பெர்ரி என்ற சதைக்கனி. முட்டை வடிவானது. 1-2 விதைகளை உடைய விதை உருண்டையானது. மிகுந்த ‘ஆல்புமின்’ உள்ளது. கரு-சூல் தண்டில் ஒட்டியிருக்கும்.

சேம்புச் செடி சேப்பங்கிழங்கிற்காகப் பயிரிடப்பட்டு வருகின்றது உணவுப் பொருள். இது முன்பு டைபோனியம் கஸ்பிடேடம் என்று கூறப்பட்டது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 16 என சர்மா, ஏ. கே. கணக்கிட்டுள்ளார்.

உலகிலேயே மிகப் பெரிய மஞ்சரியை உடையது ஒரு வகையான சேம்பு ஆகும். மஞ்சரி ஏறத்தாழ 6 அடி உயரமானது. இதற்கு டைபோனியம் ஜைஜாண்டியம் என்று பெயர்.