உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/138-150

விக்கிமூலம் இலிருந்து

அறுகை–அறுகம்புல்
சைனோடான் டாக்டிலான் (Cynodon dactylon, Pers.)

அறுகை–அறுகம்புல் இலக்கியம்

அறுகம்புல் மழை பெய்தவுடன் நன்கு தழைத்துத் தானே வளருமெனவும், இதனைக் கன்றுகளும், மான் இனம் பிணையொடும் கறித்து உண்ணும் எனவும், பாழ்படுத்தப்பட்ட பகைவர் நாட்டிலே நடந்து வந்த பெரிய திருநாளின்றாகிய அச்சம் முதிர்ந்த மன்றத்திடத்தே நெருஞ்சிப் பூக்களுடன் அறுகம்புல் வளர்ந்துள்ளது எனவும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

“பழங்கன்றுகறித்த பயம்பு அமல் அறுகைத்
 தழங்கு குரல்வானின் தலைப்பெயற்கு ஈன்ற”
-அகநா. 136 : 11-12
“மணிவார்ந் தன்ன மாக்கொடி அறுகை
 பிணங்குஅரில் மென்கொம்பு பிணையொடு மாந்தி
 மான்ஏறு உகளும் கானம் பிற்பட”
-குறுந். 256 : 1-3
“பெருவிழாக் கழிந்த பேஎம்முதிர் மன்றத்து
 சிறுபூ நெருஞ்சியொடு அறுகை பம்பி”
-பட்டின. 255-256

அறுகை–அறுகம்புல் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : சைனோடான் (Cynodon)
தாவரச் சிற்றினப் பெயர் : டாக்டிலான் (dactylon)
சங்க இலக்கியப் பெயர் : அறுகை
தாவர இயல்பு : தோன்றிய நாள் தொட்டு உயிருடன் வாழும் ஒரே உயிர் இந்த அறுகம்புல்.
தண்டு : தரைக்கு அடியில் அறுகையின் வெண்ணிறத் தரை மட்டத் தண்டு மிகவும் நீண்டு வளர்ந்து கொண்டிருக்கும். தரைக்கு மேல் உள்ள ‘கல்ம்’ என்னும் தண்டு 2-18 அங். நீளம் வரை இருக்கும்.
இலை : புல்லின் இலையைத் தொல்காப்பியம் ‘ஓலை’ என்றும், மலரிதழைத் ‘தோடு’ என்றும் கூறும். (தொல். மரபியல் 9 : 88) அடியில் உள்ள இலை தட்டையானது. மேலே உள்ள இலைகள் 4-4.7 அங். நீளமும், 0.03-0.11 அகலமும் இருக்கும்.
மஞ்சரி : ‘ஸ்பைக்லெட்’ எனப்படும் பூந்துணர்.
மலர் : தனி மலர்கள், மலர்த்தண்டில் நேராக இணைந்துள்ளன. மாறி, மாறி இரு சுற்றடுக்கில் இருக்கும். மலர்கள் உண்டாகும் 2 ‘குளும்’ வெற்றுமிகள் ‘லெம்னா’ அகன்றவை; மிக மெல்லியவை; படகு வடிவானவை; 3 நரம்புகள் காணப்படும். ‘பாலியா’ இரு ‘கீல்’களை உடையது. இதில் இருபாலான மலர்கள் உள்ளன. இவற்றை மிகச் சிறிய இரு ‘லாடிகுயூல்’ என்ற மலர் உமிகள் மூடியிருக்கும்.
மகரந்த வட்டம் : 3 தாதிழைகள்
சூலக வட்டம் : அடியில் ஒரு செல் சூலறைச் சூலகம். சூல்தண்டு-2 பிரிந்திருக்கும்.
கனி : லெம்னா, பாலியா ஆகிய வெற்றுமிகளுக்குள் சற்று நீண்டு, தடித்த, மிகச் சிறிய கனி-விதை உண்டாகும்.

அறுகம்புல் பெரிதும் தரை அடிமட்டத் தண்டிலிருந்துதான் வளரும். நுனியில் குருத்து மேல்நோக்கி வளர்ந்து வரும், இப்புல் இறவாமல் என்றும் நிலைத்து வளர்ந்து வாழ்ந்து வருவது எதனால் என்பதை இந்நாளில் ருஷ்ய நாட்டு உயிரியல் அறிஞர்கள் ஆய்ந்து வருகின்றனர். இப்புல்லின் வளருங்குருத்தில் உள்ள செல்களை நுண்ணோக்கி மூலம் காணும் போது, அவற்றில் செல்லின் கரு ‘நியூக்ளியஸ்’ (Nucleus) காணப்படும். அதில் உள்ள ‘நியூக்கிளியோலஸ்’ (Nucleolus) என்ற உட்கருவை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மடங்கில் பெரியதாக்கிப் பார்க்குமிடத்து, அவற்றில் உள்ள குரோமோசோம்களின் (Chromosome) டி.என்.ஏ; ஆர்.என்.ஏ. என்னும் மூலக்கூற்று அமிலங்கள் தென்படும். அவற்றில் பாரம்பரியத்தைத் தொடரச் செய்யும் ஆர் என் ஏ அமிலத்தின் மூலக்கூறுகள் (molecules) கணந்தோறும் சிதைந்து கொண்டு வருவதையும், (damaged) அவற்றை உடனுக்குடன் சரிபார்த்து. சீர்படுத்தும் மிக அற்புதமான சுரப்பி நீர் (Hormones) இம்மூலக்கூற்று அமிலத்தாலேயே உண்டாக்கப் படுகின்றன என்பதையும், அவையே சிதைந்து மூப்பைத் தரும் ஆர் என் ஏ அமிலத்தின் மூலக்கூறுகளைச் சிதையாமல், கணந்தோறும் செப்பனிடுகின்றன (repair) என்பதையும் மிகத் துல்லியமாக ஆய்ந்து கண்டுள்ளனர். இந்த அற்புத சுரப்பிநீர் வேறு எந்தவிதமான உயிர்களின் ‘நியூக்கிளியோலஸ்’களிலும் உள்ள ஆர் என் ஏ அமிலத்திலும் உண்டாவதில்லையாம். அதனால் ஏனைய எல்லா உயிர்களும் மூப்படைந்து சாகின்றன. எங்ஙனமாவது இந்த அற்புத சுரப்பி நீரைச் சுரக்குமாறு மனிதக் கருவில் செய்து விட்டால், ‘ஆர் என் ஏ’ மூலக்கூறுகளைச் சிதையாமல் காக்கலாம் என்றும், அப்போதுதான் மனிதன் மூப்பு வராமல் வாழ்வான் என்றும், இதன் தொடர்பான பெரும் பேர் ஆய்வுகளை (Gerontology) நெடிது வாழும் வகை தேடும் ஆய்வுத் துறைகள் மேற்கொண்டுள்ளன என்றும் ‘குப்ரவிஷ்’ என்னும் பேராசிரியர் (பைலோ ரஷ்யன் அகடமி ஆப் சயன்ஸ்) கூறுகின்றார்.

அறுகம்புல் ஆடு, மாடு, மான், குதிரைகளுக்கு மிகச் சத்துள்ள உணவுப் பொருள் ஆகும். இதனை வெள்ள நீர், மழை நீர் நிலத்தை அரித்து விடாமல் காப்பதற்கு ஆங்காங்கே வளர்த்து வருகின்றனர்.

அறுகம்புல்லை மாலையாகத் தொடுத்துப் பிள்ளையாருக்குச் சூட்டுவர்.