சங்க இலக்கியத் தாவரங்கள்/137-150

விக்கிமூலம் இலிருந்து
 

ஊகு–ஊகம்புல்
அரிஸ்டிடா செட்டேசியா (Aristida setacea, Retz.)

புறநானூற்றில் கூறப்படும் ‘ஊகு’ என்பது ஒரு வகையான ‘புல்’ ஆகும்.

இப்புல்லின் குச்சிகளைத் தொகுத்துத் துடைப்பமாகப் பயன்படுத்துவர்.

சங்க இலக்கியப் பெயர் : ஊகு
தாவரப் பெயர் : அரிஸ்டிடா செட்டேசியா
(Aristida setacea, Retz.)

ஊகு–ஊகம்புல் இலக்கியம்

‘ஊகு’ என்பது ஒரு வகைப் புல் ஆகும். இதனை ‘ஊகம்புல்’ என்று வழங்குவர். இப்புல்லின் தண்டு-குச்சி வெள்ளியது; நீளமானது; இப்புல் 2-3 அடி உயரம் வரை ஓங்கி வளரும்; இதனைத் தொகுத்துத் துடைப்பமாகப் பயன்படுத்துவர். அதனால் இது துடைப்பம்புல் என்றும் கூறப்படும். ஈர்க்கு போன்ற இக்குச்சித் தொகுதியைக் கொண்டு கூரை வேய்தலும் உண்டு.

வேட்டுவக் குலச் சிறுவர் இதன் குச்சியை எடுத்து அதன் முனையில், ‘உடை’ எனப்படும் மரத்தில் உண்டாகும் துளையுள்ள முள்ளைச் செருகி அம்பு போலச் செய்து கொள்வர். இதனை வில்லில் ஏற்றி எலி முதலியவற்றை எய்வர். இவ்வுண்மையை ஆலத்தூர் கிழார் பாடியுள்ளார்.

“வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
 சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
 ஊக நுண்கோல் செறித்த அம்பின்
 வலாஅர் வல்வில் குலாவரக் கோலி
 பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்”

(குலாவர-வளைய; கருப்பை-எலி) -புறநா. 324 : 3-7

இப்புல் பாலைச் சுரத்தில் வளரும்; வெள்ளிய கொத்தான பூக்களை அவிழ்க்கும்; முதுகில் வரிகளைக் கொண்ட அணிலின் வால் போன்ற வடிவாகத் தோன்றும்; பூ மலர்ந்து முதிர்ந்து கனியாகி, பழுத்த பின்னர் கழன்று (விதையாக) உதிர்ந்து விடும். இவ்வாறு கழன்று வீழ்ந்த, இதன் முதுபூ-போர்க்களத்தில் களிறோடு பட்டு வீழ்ந்த மன்னனுடைய கரிய குடுமியில் தங்கியதென்கிறார் ஒரு புலவர்.

“வேனல்வரி அணில் வாலத்து அன்ன
 கான ஊகின் கழன்றுஉகு முதுவீ
 அரியல் வான்குழல் சுரியல் தங்க”
-புறநா. 307 : 4-6

ஊகு—ஊகம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : அரிஸ்டிடா (Aristida)
தாவரச் சிற்றினப் பெயர் : செட்டேசியா (setacea)
சங்க இலக்கியப் பெயர் : ஊகு
உலக வழக்குப் பெயர் : ஊகம் புல்; துடைப்பம் புல்
தாவர இயல்பு : ஒரு வகையான புல்; குத்துக் குத்தாக வளரும்; பல்லாண்டு வாழும்; ஆண்டுக்கொரு தரம் இதன் குச்சிகள்–கோல் ‘கல்ம்’ ஓங்கி, 4-48 அங். நீளம் வரை வளரும். மெல்லிய குச்சி வெண்மையானது.
இலை : 20 அங். நீளமான, மெல்லிய, பசிய இலை.
மஞ்சரி : கலப்பு மஞ்சரி; ‘ஸ்பைக்லெட்’ எனப்படும். பல மலர்கள் குச்சியின் நுனியில் கொத்தாக, அடர்ந்து பூக்கும்; வெண்மையானவை.
மலர் : புல் வகையான கரும்பில் உள்ளது போல் ‘லெம்னா’ நீளமானது, நுண் முள் போன்ற மெல்லிய ‘சீட்டே’ 1-15 அங்குல நீளமானது.
கனியும், விதையும் : மலர் முதிர்ந்து, ஒரு வித்துள்ள கனியாகி, அதுவே விதையாகிக் கழன்று உதிரும்.

இதன் குச்சிகளைத் தொகுத்து இல்லத்தைப் பெருக்கும் துடைப்பமாகப் பயன்படுத்துவர். இவற்றால் கூரை வேய்தலும் உண்டு.