சங்க இலக்கியத் தாவரங்கள்/140-150

விக்கிமூலம் இலிருந்து
 

தருப்பை
சக்காரம் ஸ்பான்டேனியம்
(Sachaarum spontaneum, Linn.)

‘தருப்பை’ என்பது ஒரு வகையான நீளமான புல் ஆகும். இதனைக் கொண்டு கூரை வேயப்படும் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பாணாற்றுப் படையில்.

சங்க இலக்கியப் பெயர் : தருப்பை
உலக வழக்குப் பெயர் : தர்ப்பை, குசப்புல், தருப்பை, நாணல்
தாவரப் பெயர் : சக்காரம் ஸ்பான்டேனியம்
(Sachaarum spontaneum, Linn.)

தருப்பை இலக்கியம்

‘தருப்பை’ என்பது ஒரு வகைப் புல்; புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும்.

“வேழம் நிரைத்து வெண்கோடு விரைஇ
 தாழை முடித்து தருப்பை வேய்ந்த
 குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றில்””
-பெரும்பா. 263-265


என்ற அடிகளில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ‘தருப்பைப்’ புல்லைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வடிகளுக்கு நச்சினார்க்கினியர் பின்வருமாறு உரை கண்டார்:

‘வஞ்சி மரமும் காஞ்சி மரமுமாகிய வெள்ளிய கொம்புகளைக் கைகளுக்கு நடுவே கலந்து நாற்றி, வேழக்கோலை வரிச்சாக நிரைத்துத் தாழை நாரால் கட்டித் தருப்பைப் புல்லாலே வேயப்பட்ட குறிய இறப்பையுடைய குடிவினையும்’ என்பதால் கூரை வேய்தற்குத் தருப்பைப் புல் பயன்படுத்தப்பட்டது என்பதும் இவற்றை வேழக் கோலாலே வரிச்சை நிரைத்துத் தாழையின் நாரினால் கட்டுவர் என்பதும் அறியப்படும்.

தருப்பை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : சக்காரம் (Sachaarum)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்பான்டேனியம் (spontaneum)
சங்க இலக்கியப் பெயர் : தருப்பை
உலக வழக்குப் பெயர் : தருப்பை, நாணல்
தாவர இயல்பு : புதர்ச்செடி-புதராக வளரும் புல். பல்லாண்டு வாழும். தரை மட்டத் தண்டிலிருந்து, கிளைத்துச் செழித்து வளரும்.
தண்டு : ‘கல்ம்’ எனப்படும். 15 அடி உயரம் வரையில் வளரும்.
இலை : மிக நீளமானது. 1-4 அடி நீளமும், 0.2-0.5 அங்குல அகலமும் உள்ளது.
மஞ்சரி : 2 அடி நீளமான கலப்பு மஞ்சரி. வேழம், கரும்பு இவற்றின் மஞ்சரி போன்றது; கிளைத்திருக்கும்.
மலர் : கரும்பின் மலரை ஒத்தது. வெண்ணிறமானது. மஞ்சரிக் கிளைகளாகிய ‘பைக்லெட்’களில், பட்டிழை போன்ற நீண்ட, வெள்ளிய மயிர் அடர்ந்திருக்கும். மலர்கட்கு ‘பிளாரெட்’ என்று பெயர். இதனைத் தோல் போன்ற தடித்த உமி ‘குளும்’ மூடிக் கொண்டிருக்கும். இது அடியில் பழுப்பு நிறமானது. மேலே வெள்ளிய நிறமானது. ஏனைய இயல்புகள் கரும்பின் மலரை ஒத்தவை.