சங்க இலக்கியத் தாவரங்கள்/141-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

வேழம்
சக்காரம் அருண்டினேசியம்
(Saccharum arundinaceum, Retz.)

சங்க இலக்கியப் பெயர் : வேழம்
உலக வழக்குப் பெயர் : வேழக்கரும்பு, பேய்க்கரும்பு கொறுக்காந் தட்டை
தாவரப் பெயர் : சக்காரம் அருண்டினேசியம்
(Saccharum arundinaceurm, Retz.)

வேழம் இலக்கியம்

வேழம் என்பது இக்காலத்தில் ‘கொறுக்காந்தட்டை’ என்று வழங்கப்படும். வேழம் என்பது மூங்கில், கரும்பு, யானை முதலிய பொருள்களிலும் வழங்கப்படும். ‘வேழம்’ கரும்பிற்கு மிக நெருங்கியது எனினும் உட்கூடு உள்ளது; மெல்லியது; கரும்பு போன்று நீளமானது. தாவர இயலில் இதுவும் கரும்பும் ஒரே பேரினத்தைச் சார்ந்தவையாகும். வேழத்திலிருந்துதான் கரும்பு தோன்றியிருக்கக் கூடும் என்று கருதுவர் தாவரவியல் அறிஞர்கள். இதில் மூங்கிலைப் போல உட்கூடும் கணுக்களும் உள்ளமையின் வேழம் மூங்கிலுக்கும் பெயராதலன்றி மூங்கிலுடன் நெருங்கியது. வேழம், கரும்பு, மூங்கில் ஆகியவை புறக்காழ் உடையனவாதலின் ‘புல்’ எனப்படும். வேழம் தாவர இயலில் ஒருவகையான புல் (நாணற்புல்) ஆகும். வேழத்தின் தண்டில் உட்கூடு உண்டென்பதை ஐங்குறு நூறு கூறும்.

“நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
 காம்புகண்டன்ன தூம்புடை வேழம்”
-ஐங். 20 : 2-3

இனிய சாற்றைக் கொண்ட கரும்பு மென் கரும்பு என்றும், சாறில்லாத நாணலை, ‘வேழக் கரும்பு’ என்றும் கூறுவர். இதனைப் பேய்க்கரும்பு என்பாரும் உளர். இவ்வேழம் மூங்கில் அமைப்பில் குச்சியாக அமைந்திருப்பதால், வீட்டுக்கூரைக்கு வரிச்சுக் கம்பாகப் பயன்படுத்தினர்.

“வேழம் நிரைத்து வெண்கோடு விரைஇ
 தாழை முடித்து தருப்பை வேய்ந்த
 குறியிறைக் குரம்பை பறியுடை முன்றில்”
பெரும்பா. 263-265


வேழம் கரும்பை ஒத்த புதர்ச் செடி. இதுவும் வெள்ளிய துணர் விட்டுப் பூக்கும். மருத நிலத்தின் துறையில் வளர்ந்து, நீராடும் மகளிருக்குத் துணை நிற்கும். பூங்கொத்துக் கவரியைப் போன்றது என்றெல்லாம் புலவர் பாடுவர்.

“புதல்மிசை நுடங்கும் வேழ வெண்பூ” -ஐங். 17 : 1
“கரைசேர் வேழம் கரும்பின் பூக்கும்” -ஐங். 12 : 1
“புனல்ஆடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்
 வேழ மூதூர் ஊரன்”
-ஐங். 15 : 2-3
“பரியுடை நன்மான் பொங்குஉளை அன்ன
 அடைகரை வேழம்வெண்பூ”
-ஐங். 13 : 1-2

வேழத்தின் பூவும், கரும்பின் பூவைப் போல மணமற்றது. ஆதலின், இதனைச் சூடுவாரிலர். ஆயினும், பரத்தையர் தமக்கு இசைவாரை அறிய வேண்டி இதனைப் பயன்படுத்தினர். நள்ளிரவில் இப்பூவை விற்பது போல, இதனைக் கையிற் கொண்டு திரிவர். எதிர்ப்படும் ஆடவரிடம் இதனை விலை கூறுவது போலக் கொடுத்துப் பார்ப்பர். அவர் ஏற்றால், தமக்கு இசைந்ததாகக் கொள்வர். இதனை ஒரம்போகியார் பாடுகின்றார்.

“அடைகரை வேழம் வெண்பூப் பகரும்
 தண்துறை ஊரன் பெண்டிர் (பரத்தையர்)
 துஞ்சுஊர் யாமத்தும் துயில் அறியலரே”

(பகரும்-கொள்வார் குறித்துக் கொடுக்கும்) -ஐங். 13 : 1-4


வேழம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : சக்காரம் (Saccharum)
தாவரச் சிற்றினப் பெயர் : அருண்டினேசியம் (arundinaceum)
சங்க இலக்கியப் பெயர் : வேழம்
உலக வழக்குப் பெயர் : வேழக் கரும்பு, பேய்க் கரும்பு, கொறுக்காந் தட்டை, நாணல் கரும்பு
தாவர இயல்பு : புதர்ச் செடி, இது கரும்பஞ் செடியைப் பெரிதும் ஒத்தது. இதுவும் 20 அடி உயரம் வரை வளரும். கணுக்களை உடையது.
இலை : 6 அடி வரை நீளமும், 1-2 அங்குல அகலமும் உடையது.
மஞ்சரி : கரும்பைப் போன்றது. கலப்பு மஞ்சரி. இது ‘கல்ம்’ என்ற தண்டின் நுனியில் கிளைத்து வள்ரும். வெண் சாமரை போன்றிருக்கும்.
மலர் : வெண்ணிறமானது. எல்லா வகையிலும், கரும்பின் மலரை ஒத்தது

இதன் தண்டு ‘கல்ம்’ உட்கூடு உடையது. இதன் தண்டு என்ற குச்சிகள், கூரை வீட்டிற்குக் கட்டுக் குச்சிகளாகப் பயன்படும். தட்டி முதலியனவும் செய்யப்படுகின்றன. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 40, 60 எனப் பீரிமெர் (1925, 1934) கணக்கிட்டுள்ளார்.