சங்க இலக்கியத் தாவரங்கள்/142-150

விக்கிமூலம் இலிருந்து
 

நெல்–ஐவனம்–தோரை
ஒரைசா சட்டைவா (Oryza sativa, Linn.)

சங்க இலக்கியங்களில் ‘நெல்’ பொதுவாகவும் ‘ஐவனம்’ என்ற வெண்ணெல்லும், செந்நெல்லும், ‘தோரை’ என்ற மலை வளர் நெல்லும் சிறப்பாகவும் பேசப்படுகின்றன. நெற்பயிர் 4 அடி உயரம் வரையில் வளரும் ஓராண்டுச் செடியாகும். 4-6 மாதங்களில் நெல்லை விளைவிக்கும் புதுப்புது நெல் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல் நமது இந்திய நாட்டில் அதிலும் தண் தமிழ்நாட்டில் தொன்று தொட்டுப் பயிரிடப்பட்டு வரும் உணவுப் பொருள்.

சங்க இலக்கியப் பெயர் : நெல்–ஐவனம்–தோரை
தாவரப் பெயர் : ஒரைசா சட்டைவா
(Oryza sativa, Linn.)

நெல்–ஐவனம்–தோரை இலக்கியம்

சங்க இலக்கியங்கள் ‘நெல்’, ‘ஐவனம்’, ‘வெண்ணெல்’, ‘செந்நெல்’, ‘தோரை’ என்ற சொற்களால் நெல்லைக் குறிப்பிடுகின்றன. மேலும், ‘அரி’ என்ற சொல்லும் காணப்படுகிறது.

“நெல் அரியும் இருந்தொழுவர்” -புறநா. 24 : 1
“கழைவளர் நெல்லின் அரிஉலை ஊழ்த்து” -மலைபடு. 180

மலைபடுகடாத்து இவ்வடிக்கு, ‘மூங்கிலிலே நின்று முற்றிய நெல்லின் அரிசியை உலையிலிட்டு’ என்று உரை கூறுவர். ஆகவே ‘அரி’ என்ற சொல் நெல்லரிசியைக் குறிப்பிடுகின்றது.

“ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி” -மதுரை. 288


என்ற இவ்வடிக்கு ‘ஐவன நெல்லென்னும் வெள்ளிய நெல்லோடே’ என்று நச்சினார்க்கினியர் இங்கு உரை கண்டுள்ளார். ஆகவே, ஐவனம் என்பது வெண்ணெல் என்று கொள்ள வேண்டும்.

“வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல்” -மலைபடு. 115


என்ற இந்த மலைபடு கடாத்தின் அடிக்கு ஐவன நெல்லும், வெண்ணெல்லும் என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். இங்கு இவரே ஐவன நெல்லையும், வெண்ணெல்லையும் வேறு பிரித்துக் கூறுகின்றார். எனினும் ‘ஐவன வெண்ணெல்’ என்றே இருவிடங்களிலும் பயிலப்படுதலின், இரண்டும் ஒன்றெனக் கோடலே பொருந்தும்.

இவையன்றி, ‘தோரை’ என்ற ஒரு வகையான மலை நெல்லும் பேசப்படுகின்றது. இந்நெல்லை விளைவிப்பதற்காக, மேட்டு நிலத்தில் வளர்ந்திருந்த அகில், சந்தனம் முதலிய மரங்களை வெட்டி, அதில் ‘தோரை’ நெல்லை விதைத்தனர் என்று கூறுவர் மாங்குடி மருதனார்.

“நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை. . . . . . . . . . . .”
-மதுரை. 286-287


தோரை என்பதற்குத் ‘தோரை நெல்’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர்.

“ புயற்புனிறு போகிய பூமலி புறவின்
அவற்பதங் கொண்டன அம்பொதித் தோரை”
-மலைபடு. 120-121


இவ்வடிகட்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘பூ மிக்க காட்டிடத்தே மழையால் ஈன்றணிமை தீர்ந்து முற்றிய அழகிய குலையினை உடைய மூங்கில் நெல் அவலிடிக்கும் செவ்வியைக் கொண்டன’ என்று உரை கூறுகின்றார் இவ்விடத்தில், ‘தோரை’ என்பதற்கு ‘மூங்கில் நெல்’ என்று உரை கூறுவது பொருந்துமாறில்லை. ஆகவே ‘தோரை’ என்பது ஒரு வகை ‘மலை நெல்’ எனக் கோடல் ஏற்புடைத்து.

“பகடுதரு செந்நெல் போரொடு நல்கி” -புறநா. 390: 22


என அவ்வையாரும்,

“செந்நெல் உண்டபைந் தோட்டு மஞ்ஞை” -புறநா. 344  : 1


என அடைநெடுங்கல்வியாரும் செந்நெல்லைக் கூறுவர்.

நெல் பெரிதும் மருத நில வயல்களில் விளைவிக்கப்படுவது. ஆதனுடைய போந்தையின் வளத்தைக் குன்றூர்க்கிழார் மகனார் சிறப்பாகப் பாடுகின்றார்.

“ஏர்பரந்த வயல்;நீர் பரந்த செறுவின்
 நெல்மலிந்த மனை; பொன்மலிந்த மறுகின்”
-புறநா. 338 : 1-2


காவிரி நாட்டில் நெல் விளைவதைக் கல்லாடனார் பாடுகின்றார்.

“காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
 நெல்விளை கழனி அம்பர் கிழேவோன்”
-புறநா. 385 : 8-9


நெல் முற்றுதற்கு முன்னுள்ள நிலைதான் நெல்லின் பூவாகும். இதனை மூடிக் கொண்டு இரண்டு மலட்டு உமிகள் இருக்கும். இதனை ‘எம்டி குளும்’ (Empty glume) என்று கூறுவர். இவற்றிற்குள் ‘லெம்னா’ என்ற மலர் உமி (Fertile glume) ‘பாலியா’ (Palea) இருக்கும். இதனுள் இரு பாலான நெல்லின் மலர்ப் பகுதிகள் காணப்படும். அவற்றில் 2 ‘லாடிகுயூல்’ (Lodicule) என்ற சிறு செதில்களும், 6 தாதிழைகளும், இரண்டாகப் பிரிந்த சூல் தண்டு இழையும், சூல் தண்டின் அடியில் சூலகமும் இருக்கும்.

நெல்லின் பூ மலரும் போது, நீளமான மலட்டு உமிகள் சற்று வாயவிழும். அப்போது, அதற்குள் காற்று புகும். காற்றில் மிதந்து வரும் மகரந்தங்கள் சூல்முடியில் பட்டு முளைத்துச் சூலகத்திற்குள் புகுந்து கருவுறும். இப்பூவில் உள்ள மகரந்தத் தாள்களின் தாது முதிர்ந்து, உள்ளே புகும் காற்றில் மிதந்து, வெளிப்பட்டு அயல் மகரந்தச் சேர்க்கை நிகழும். இங்ஙனம் அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்வதால், பால் கட்டிக் கரு முற்றி உண்டாகும் நெல் வளமாக முதிரும். நெல்லில் தன் மகரந்தச் சேர்க்கை பெரிதும் நிகழ்வதில்லை. காரணம், இதன் தாதுக்கள் முதிர்வதற்குள், மலர் விரிந்து காற்று உள்ளே புகுந்து விடும். ஒருக்கால், தன் மகரந்தச் சேர்க்கை நிகழுமாயின், அதனால் உண்டாகும் நெற்கனி அத்துணை வளப்பமாக இருப்பதில்லை. மகரந்தச் சேர்க்கை நிகழாத நெல் மலர் கருக்காயாக முதிர்ந்து விடும்.

இங்ஙனம், அயல் மகரந்தச் சேர்க்கை நிகழுதற்குத் துணையாக மலட்டு உமிகள் வாயவிழ்வதும் மலருக்குள் காற்று நுழைவதும் இயற்கையில் நடைபெறுகின்றன. இத்தாவரவியல் உண்மையைப் பெருங்கௌசிகனார் கூறுவது அறிந்து மகிழ்தற்பாலது.

“பால் வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு
 வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல்”
-மலைபடு. 114-115


இதற்கு ‘ஐவனம் என்ற வெண்ணெல் பலவாய்க் கவர்ந்த காற்றினாலே ஊடறுக்கப்பட்டுப் பால் கட்டி நன்றாக விளைந்தன’ என்று பொருள் கோடல் பொருந்தும்.

இனி, நெல்லின் பூக்கள் வரப்புகளில் உள்ள நண்டு வளையில் உதிர்ந்து நிறைந்துள்ளதை ஐங்குறு நூறு கூறும்.

“. . . . . . . . . . . . களவன்
 தண்ணக மண்அளை நிறைய நெல்லின்
 இரும்பூ உறைக்கும் ஊரற்கு இவள்”
-ஐங்கு. 30 : 1-3


மகளிர் வெண்ணெல்லை உரலில் இட்டு உலக்கையால் குத்தி அரிசியாக்கி, உலையிலிட்டுச் சோறாக்குவதைப் புறநானூறு கூறக் காணலாம்.

“அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
 தொடிமாண் உலக்கைப் பரூஉக்குற்று அரிசி
 காடி வெள்உலைக் கொளீஇ”
-புறநா. 399 : 1- 3


அதியமான் நெடுமான் அஞ்சி, ‘எருதுகள் உழைத்து விளைந்த செந்நெல்லைப் போரோடும் நல்கினான்’ என்பர் ஔவையார்.

“பகடுதரு செந்நெல் போரோடு நல்கி” -புறநா. 390 : 22


செந்நெல்லை மயில் உண்ணும் என்கிறார் அடைநெடுங் கல்வியார்.

“செந்நெல் உண்ட பைங்தோட்டு மஞ்ஞை” புறநா. 344 : 1


மாலைப் பொழுதில் பித்திகம் மலர்கின்றது. மகளிர் பொழுது அறிந்து, இரும்பினால் செய்த விளக்கில் நெய் தோய்த்த திரியைக் கொளுத்தி, விளக்கேற்றி நெல்லும், மலரும் தூவிக் கை தொழுது வணங்குவர் என்பதை நெடுநல்வாடை கூறும்.

“. . . . . . . . . . . .பித்திகத்து
 அவ்விதழ் அவிழ்பதம் கமழப்பொழு தறிந்து
 இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
 நெல்லும் மலரும் தூஉய்க்கை தொழுது”
-நெடுநல். 40-43


செந்நெல் அடித்த நெல்லின் கதிர்கள் உள்ள தாளைக் கொண்டு கூரை வேய்வர்.

“அலங்கு செந்நெற் கதிர் வேய்ந்த
 ஆய் கரும்பின் கொடிக் கூரை”
-புறநா. 22 : 14-15


இத்துணைச் சிறப்பிற்றாகிய நெல்லை, அரிசியாக்கி உணவாகக் கொள்வர். சோறு ஆக்கிய கொழுங்கஞ்சி யாறு போலப் பரந்து ஓடும் இயல்பினைப் பட்டினப்பாலை கூறக் காணலாம். பண்டைத் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு விளைவிக்கப்பட்டது நெல். நெல்லுக்குத் தாவரப் பேரினப் பெயர் ஓரைசா (oryza) என்பதாம். இச்சொல் இலத்தீன் மொழிச்சொல் என்றும், இச்சொல்லே ஆங்கிலத்தில் ரைஸ் (rice) என்றாகி, நெல்லின் அரிசியைக் குறித்தது என்றும் இலத்தீன் -ஆங்கில அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்—ஐவனம்—தோரை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : ஒரைசா (Oryza)
தாவரச் சிற்றினப் பெயர் : சட்டைவா (sativa)
சங்க இலக்கியப் பெயர் : நெல்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : ஐவனம், வெண்ணெல், செந்நெல், தோரை
தாவர இயல்பு : 4 அடி வரை உயரமாக வளரும் ஓராண்டுச் செடி. 5-6 மாதங்களில்
முதிர்ந்து விளையும் நெற்பயிர்களும் இந்நாளில் உருவாக்கப்பட்டுள்ளன. 2000 அடி உயரமான வரையிலும் வளர்கிறது. இதன் தண்டு தான் ‘கல்ம்’ எனப்படும்.
இலை : 4-22 அங். நீளம் வரையில் இருக்கும். அகலம் 1-3 அங்.
மஞ்சரி : கதிர் 2-5 முதல் 12 அங்குலம். வரை நீளமானது. பல ‘ஸ்பைக்லெட்’ இருக்கும்.
மலர் : இரு உமிகள் மலருறையாக இருக்கும். இவற்றிற்குள் லெம்னா இருக்கும். இதில் இரு பாலான மலர் உறுப்புகள் காணப்படும். 6 மகரந்தத் தாள்களும், ஒரு செல் சூலகம் இரண்டாகக் கிளைத்த சூல்தண்டும் உள்ளன.
கனி : பெரிதும் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். பால் கட்டி, அரிசி முதிர்ந்து, நெல்லாகி முதிரும்.

இந்நாளில் செயற்கை ஒட்டு முறையில் பல வகைப்பட்ட நெல் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் விளைதலும், சத்துக் குறையாமல் மிகுதலும், நோய் தாக்கப்படாதிருத்தலும், நீர் வளம், நில வளம், இவைகட்கு ஏற்ப நன்கு விளைதலும் ஆகிய பண்புகளைக் கொண்ட புதுப் புது நெல்வகைகள் நமது நாட்டிலும், பிலிப்பைன்ஸ், ஜப்பான் போன்ற அயல் நாடுகளிலும் உருவாக்கப்படுகின்றன.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என்று குவாடா (1940), மோர்னாகா, குரியாமா (1954), சென் (1963) முதலாகப் பலர் கணித்துள்ளனர்.

சோற்று உணவுக்காக நெல் நமது இந்திய நாட்டில் பண்டைக் காலந் தொட்டுப் பயிரிடப்பட்டு வருகிறது. அரிசியில் சர்க்கரைப் பொருள் மிகுதியாகவும், புரதச் சத்து மிகக் குறைவாகவும் இருக்கிறது.