சங்க இலக்கியத் தாவரங்கள்/143-150

விக்கிமூலம் இலிருந்து
 

நரந்தம்–புல்
சிம்போபோகன் சிட்ரேட்டஸ்
(Cymbopogon citratus, Stapf.)

நரந்தம்–புல் இலக்கியம்

‘நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி’ (புறநா. 132 : 4) என்ற அடிக்கு நரந்தையையும், நறிய புல்லையும் என்று வேறு பிரித்து உரை கூறுவாராயினும், ‘பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்’ என்ற பதிற்றுப்பத்து (11 : 21) அடியில் காணப்படும் நரந்தம் என்பதற்கு ‘நரந்தம்புல்’ என்று உரை கூறுவர். இப்புல் நறுமணம் உடையது. இதிலிருந்து ஒருவகையான நறுமண நீர் வடித்தெடுக்கப்படுகிறது.

சங்க இலக்கியப் பெயர் : நரந்தம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : கற்பூரப்புல், வாசனைப்புல்
ஆங்கிலப் பெயர் : லெமன் கிராஸ் (Lemon grass)
தாவரப் பெயர் : சிம்போபோகன் சிட்ரேட்டஸ்
(Cymbopogon citratus, Stapf.)

நரந்தம்–புல் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : சிம்போபோகன் (Cymbopogon)
தாவரச் சிற்றினப் பெயர் : சிட்ரேட்டஸ் (citratus)
தாவர இயல்பு : இரண்டடி உயரம் வரை கலித்துத் தழைத்து வளரும் புல். இதில் நறுமணம் உண்டு. புல்லின் தண்டு, இலையிலெல்லாம் சுரப்பிகள் உள்ளன. பெரிதும் வறண்ட நிலப் பகுதிகளிலும், மலைப் பாங்கான பகுதிகளிலும் தாமாகவே செழித்துப் பல்லாண்டு வளரும். குத்துக் குத்தாகத் தோன்றும்
இலை : தட்டையானது; நீளமானது; சொரசொரப்பானது.
மஞ்சரி : இரண்டாகக் கிளைத்த நுனி வளர் பூந்துணர். பெரிதும் ஒரு கிளை இணர்க் காம்பின்றி இருக்கும். மற்றொன்று, நீண்ட காம்புடன் கிளைத்து, எழுந்து, கலப்பு மஞ்சரியாக வெளியில் விரிந்து வளரும்.
இலைக் காம்பு : இதில் ‘குளும்’ எனப்படும் இணர்க் கிளை உண்டாகும். விதையுண்டாகும் குளுமிற்குப் ‘பர்டைல் குளும்’ (Fertile glume) என்று பெயர்; இது நீளமாக இருக்கும்.
மலர் : இரு பாலானது; இதில் பாலியா இல்லை; ‘லாடி குயூல்ஸ்’ இரண்டு; தாதிழைகள் மூன்று; சூல்தண்டு இரு பிளவுள்ளது.
கனி : தானியம் எனப்படும் புல்லரிசி சற்று நீண்டும், அகன்றும், இரு முனைகளும் குறுகி இருக்கும்.

இப்புல்லை விலங்குகள், அதிலும் கவரிமான் விரும்பித் தின்னும்; இப்புல்லில் ஒருவகை நறுமண எண்ணெய் உள்ளது. அதனால் இப்புல் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.