சங்க இலக்கியத் தாவரங்கள்/143-150
Appearance
நரந்தம்–புல்
சிம்போபோகன் சிட்ரேட்டஸ்
(Cymbopogon citratus, Stapf.)
நரந்தம்–புல் இலக்கியம்
‘நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி’ (புறநா. 132 : 4) என்ற அடிக்கு நரந்தையையும், நறிய புல்லையும் என்று வேறு பிரித்து உரை கூறுவாராயினும், ‘பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்’ என்ற பதிற்றுப்பத்து (11 : 21) அடியில் காணப்படும் நரந்தம் என்பதற்கு ‘நரந்தம்புல்’ என்று உரை கூறுவர். இப்புல் நறுமணம் உடையது. இதிலிருந்து ஒருவகையான நறுமண நீர் வடித்தெடுக்கப்படுகிறது.
சங்க இலக்கியப் பெயர் | : | நரந்தம் |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் | : | கற்பூரப்புல், வாசனைப்புல் |
ஆங்கிலப் பெயர் | : | லெமன் கிராஸ் (Lemon grass) |
தாவரப் பெயர் | : | சிம்போபோகன் சிட்ரேட்டஸ் (Cymbopogon citratus, Stapf.) |
நரந்தம்–புல் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | குளுமேசி (Glumaceae) |
தாவரக் குடும்பம் | : | கிராமினே (Gramineae) |
தாவரப் பேரினப் பெயர் | : | சிம்போபோகன் (Cymbopogon) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | சிட்ரேட்டஸ் (citratus) |
தாவர இயல்பு | : | இரண்டடி உயரம் வரை கலித்துத் தழைத்து வளரும் புல். இதில் நறுமணம் உண்டு. புல்லின் தண்டு, இலையிலெல்லாம் சுரப்பிகள் உள்ளன. பெரிதும் வறண்ட நிலப் பகுதிகளிலும், மலைப் பாங்கான பகுதிகளிலும் தாமாகவே செழித்துப் பல்லாண்டு வளரும். குத்துக் குத்தாகத் தோன்றும் |
இலை | : | தட்டையானது; நீளமானது; சொரசொரப்பானது. |
மஞ்சரி | : | இரண்டாகக் கிளைத்த நுனி வளர் பூந்துணர். பெரிதும் ஒரு கிளை இணர்க் காம்பின்றி இருக்கும். மற்றொன்று, நீண்ட காம்புடன் கிளைத்து, எழுந்து, கலப்பு மஞ்சரியாக வெளியில் விரிந்து வளரும். |
இலைக் காம்பு | : | இதில் ‘குளும்’ எனப்படும் இணர்க் கிளை உண்டாகும். விதையுண்டாகும் குளுமிற்குப் ‘பர்டைல் குளும்’ (Fertile glume) என்று பெயர்; இது நீளமாக இருக்கும். |
மலர் | : | இரு பாலானது; இதில் பாலியா இல்லை; ‘லாடி குயூல்ஸ்’ இரண்டு; தாதிழைகள் மூன்று; சூல்தண்டு இரு பிளவுள்ளது. |
கனி | : | தானியம் எனப்படும் புல்லரிசி சற்று நீண்டும், அகன்றும், இரு முனைகளும் குறுகி இருக்கும். |
இப்புல்லை விலங்குகள், அதிலும் கவரிமான் விரும்பித் தின்னும்; இப்புல்லில் ஒருவகை நறுமண எண்ணெய் உள்ளது. அதனால் இப்புல் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.