தந்தை பெரியார், கருணானந்தம்/020-021
1973 - ஜனவரி 1-ந் தேதியும் பெரியார் புத்தாண்டுச் செய்தி வழங்கியருளினார். “1972 - ல் நமது தி.மு.க அரசு மக்களுக்கு உணவு, கல்வி, மற்ற வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுத்தது. அதனால் மக்கள் மனநிறைவோடு வாழ்ந்து வருகிறார்கள். ஆயினும் சில பேர் பொறாமையாலும், பதவி ஆசையாலும், சில தொல்லை கொடுத்து வருகிறார்கள் என்றாலும், அதையெல்லாம் சமாளித்து, அரசு பணியாற்றி வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் நமது ஆட்சியில் காணப்படும் அளவு பொறுப்பும் திறமையும், மேன்மையும் இருக்கவில்லை . மேலும் நமது அரசு, முற்போக்கான மக்கள் நலக்காரியங்களைச் செய்து வர வேண்டுமானால், 1973 லும் தொடர்ந்து நம்முடைய ஆதரவைத் தந்து வர வேண்டும்” என்பதுதான் பெரியாரின் புது வருட வாழ்த்து.
மாணவர்களின் அமைதியின்மைக்குக் காரணம் கல்வித் திட்டந்தான் என்பது பெரியாரின் அசைக்க முடியாத கருத்தாகும். “மாணவர்களுக்கு கல்வி இலவசமாகி விட்டது பலருக்குச் சாப்பாடும், புத்தகமும் கூட இலவசமாகக் கிடைக்கின்றன. நிர்வாகிகள், பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாகக் கருதியே பல தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள், சம்பளம் ஒழுங்காகக் கிடைத்தால் சரிதான், நமக்கென்ன? என்று இருந்து விடுகிறார்கள். வீட்டிலிருந்து தொந்தரவு தராமலிருந்தால் சரிதான் - என்று நினைக்கின்ற பெற்றோர்களுக்குப் பொறுப்பும் இல்லை; கவலையும் இருப்பதில்லை. உத்தியோகம் பார்ப்பதற்குத்தான் கல்வி என்ற நிலைமையை மாற்றித் தொழிலில் அக்கறை ஏற்பட, நிறையத் தொழிற் பயிற்சிப் பள்ளிகள் தேவை” என்று பெரியார் எழுதியிருந்தார். மலேசியாவில் கூட சு.ம. திருமணங்கள் செல்லும் என்றும், தலைவர் வைத்துத் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதித்ததைப் பெரியார் பாராட்டினார். 10 - ந் தேதி அண்ணாமலை நகரில் பேசும் போது “தி.மு.க. ஊழல் என்று ஊரெல்லாம் பேசுகிறார்களே - நான் கேட்கிறேன் - காந்தி, நேரு இராஜாஜி, காமராஜர், இந்திராகாந்தி இவர்களில் ஊழலில் சம்பந்தப்படாதவர் யார்? சொல்ல முடியுமா?” என்று வினாத் தொடுத்தார் பெரியார்.
கோபிச் செட்டிப்பாளையத்தை அடுத்த நம்பியூரில் பெரியார் 1-ந் தேதி பேசும்போது “இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தனியாகப் பிரிந்து விட வேண்டும் என்கிற பிரிவினை உணர்ச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா ஒரே நாடு என்று சொல்வதே பெரியதொரு புரட்டாகும். அதே போலத்தான் கடவுள் என்றால் காரித்துப்பு, என்று சிறுவர்களுக்கும் சொல்லித் தரவேண்டும்.” எனக் கருத்துரைத்தார். அவ்வாறே இராஜபாளையத்தில் “தசாவதாரம் என்கிறார்கள். 64 திருவிளையாடலுக்கும் அவதாரம் எடுத்தான் என்கிறார்கள். இப்படி ஆயிரக்கணக்காக அப்போது அவதாரம் எடுத்த கடவுள், இன்று செருப்பால் அடி வாங்கியும் வரக் கானோமே!” என்றார்.
பெரியாருடைய சுற்றுப்பயணங்கள் தடையின்றி நடைபெற வசதியாக அவருக்கு ஒரு வேன் வழங்க வேண்டுமென முயன்று, எஸ் குருசாமி, 1955 ல் ஒன்று ஏற்பாடு செய்தார். பின்னர் வேறொன்று 1961ல் சிதம்பரத்தில் வழங்கப்பட்டது. அந்த வேன் மூன்று முறை ரிப்பேராகி விட்டது. 1968 ல் கரூரில் அளித்த வேனும் சரியாக இல்லை என்று ஜி.டி. நாயுடுவிடம் தரப்பட்டது. இப்போது புதிதாக ஒன்று ஏற்பாடு செய்து, வேனில் அமர்ந்தபடியே அய்யா அவர்கள் பேசுமாறு வசதிகள் செய்ய வேண்டும். தோழர்கள், மாவட்டக் பொறுப்பாளர்கள், நன்கொடை திரட்டி உதவ வேண்டும். என்பதாக வீரமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். தஞ்சை கா.மா குப்புசாமி 25.1.73 அன்று, 2,000 ரூபாய் அன்பளிப்பாக வழங்கினார்; அதன் பின்னர் எல்லா ஊர்களிலும் போட்டி போட்டுக் கொண்டு கார் நிதி வழங்கிட முன் வந்தார்.
27.12.72 அன்று சென்னை “கலைமகள்” இதழின் சார்பில் திரு.பாணன் என்பவர் பெரியாரைப் பேட்டி கண்டார். அதில் ஓர் எழுத்துகூடக் குறைக்காமல் பிப்ரவரி 1973 இதழில் செளியிடப்பட்டிருந்தது; "நான் ஃ போர்த் ஸ்டாண்டர்டு வரைதான் படித்தேன், என் அண்ணன் லோயர் ஃபோர்த் ஃபார்ம் படித்தார். நான் கடையிலே மூட்டைக்கு விலாசம் போடுவது முதல் எல்லா வேலையும் பார்ப்பேன். குளிக்கவேனும்கிற ஞாபகம் வரதில்லே. இப்ப நான் குளிச்சு ஆறு நாளாச்சு. நான் ஒண்ணும் படிச்சோ ஆராய்ச்சி பண்ணியோ நாத்திகனாகலை, பகுத்தறிவுக்கு எட்டினதைச் சொல்றேன். சாப்பாடு - காலையிலே பெட் காஃபி சாப்பிடுவேன் ஆறரை மணிக்கு எழுந்திருப்பேன். படிப்பேன், இரண்டு இட்லி சாப்பிடுவேன். ரெண்டு மலைப்பழம் சாப்பிடுவேன். மத்தியானம் புலால் உணவு, ரெண்டு கப் தயிர், இரண்டு வாழைப்பழம், மாலையில் காஃபி, இரவிலே ரெண்டு இட்லி, மலைப்பழம். கூட்டம் இல்லாது போனால் எட்டரை மணிக்குப் படுப்பேன். ஆளும் கட்சியை நமக்கு வசப்படுத்தப் பார்ப்பேன். நம்ம கொள்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து ஆதரிப்பேன். எதிர்த்தால் ஒழிக்க முயற்சி செய்வேன். குடிப்பது தவறு இல்லை, கள் குடிச்சிச் செத்தவங்க எத்தனைபேர் சொல்லுங்க பார்ப்போம், ஜனங்க சோம்பேறியாய் ஆனதற்குக் காரணமே மது ஒழிப்புத்தான். கூலி உயரக் காரணமே இதுதான். சினிமாவுக்குப் போறதை விடக் குடி, நல்லது தான்.
தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னேன். என்ன தப்பு? ஒருத்தனோடு ஒருத்தன் சண்டை போட்டுகிட்டுத் திட்டறானே தமிழில்... சண்டைக்காரனை மட்டுமா திட்டறான். அவன் அம்மா அக்கா பொண்டாட்டி எல்லாரையும் இழுக்கறான்! இங்லீஷ்வே திட்டினா யூ ஃபூல் இடியட்னு திட்டுவான், அவ்வளவுதான். நான் மட்டுந்தான் குறளைத் திட்டறேன். ஏன்? பெண்ணை ஆணுக்கு அடிமை ஆக்குகிறதே! கட்டுப்பாடு எவையுமே தேவையில்லை என்பவன் நான். எதையும் பாவம் என்பதற்காகச் செய்யத் தயங்க மாட்டேன், ஏன் என்று யோசிப்பேன். சிந்தனைக்குப் பிடிபடாத எந்த விஷயத்தையும் நான் நம்புவதில்லை”. பெரியார் அளித்த பதிலின் சுருக்கம் இது.
இந்தப் போட்டியின் போது "விடுதலை" நிர்வாகி என். எஸ். சம்பந்தம் உடனிருந்து உதவியதாகக்"கலைமக"ளில் நன்றியுடன் குறிப்பிட்டிருந்தனர்.
3 - பிப்ரவரி; அன்று பேரறிஞர் அண்ணா நினைவுநாள். பெரியார் தமது வேனிலேயே மவுன ஊர்வலத்தில் சென்று, அண்ணா நினை விடத்தில் மலர் வளையம் வைத்தார். அன்று நள்ளிரவு மணியம்மையாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அரசினர் பொது மருத்துவமனையில், இருதய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். மறுநாள் காலை 11 மணிக்குச் சென்று, மணியம்மையாரைப் பார்த்து விட்டுப் பெரியார், அங்கு சிகிச்சையிலிருந்த சி.பி. சிற்றரசு, எஸ்.எஸ் ராஜேந்திரன், நாமக்கல் பழனிவேலன் எம்.எல்.ஏ., ஏ. பத்மநாதன் அய். ஏ.எஸ் ஆகியோரையும் கண்டு , நலம் விசாரித்துச் சென்றார். மறுநாள் முதல்வர் கலைஞர் மருத்துவமனை சென்று, மணியம்மையாரின் நலம் எவ்வாறுள்ளதெனக் கண்டுவந்தார். அடுத்த 15.3.73 அன்றுதான் அம்மையார் இல்லந்திரும்பி, மறுநாள் திருச்சி செல்ல முடிந்தது. 18.2.73 அன்று சேலத்திலிருந்த பெரியாருக்கு அதிகவலி ஏற்பட்டு, அங்கேயே சுந்தரம் நர்சிங்ஹோமில் சேர்க்கப்பட்டார். வேலூரிலிருந்து டாக்டர் பட், சேலம் சென்று, புதிய டியூப் மாற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்தவாறே 20 ந் தேதி திருச்சி சென்றார் பெரியார்.
சென்னை உயர்நீதி மன்றம் துவங்கிய 112 ஆண்டுகளில் நடைபெறாத ஓர் அதிசயம் கலைஞர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது. 14.2.1973 அன்று அய்க்கோர்ட் கூடுதல் நீதிபதியாகத், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நீதிபதி ஏ. வரதராஜன் நியமிக்கப்பட்டார். நீதிபதி எஸ். நடராஜனும் இன்னொரு ஜட்ஜாக நியமனம் பெற்றார். முத்தமிழ்க் கலாவித்துவரத்தின அவ்வை டி.கே சண்முகம் 15.2.73 அன்று சென்னையில் காலமானார். திருச்சியில் 4ந் தேதி “தமிழ்த்தாய் வாழ்த்து யாருக்காக, எதற்காகப் பாடுகிறீர்கள்? இப்போது ஆட்சியில் இருந்து கொண்டு, மக்களுக்கான நன்மைகளைச் செய்து வருகின்றவர்களை வாழ்த்துங்கள் அது போதும்! இன்றைய தினம் கலைஞரை எதிர்ப்பவர்கள் கூட, அவர் இன்னின்ன தவறுகள் செய்தார்; நாங்கள் வந்தால் அப்படித் தவறு செய்யாமல், இன்னின்ன நன்மை செய்வோம். என்று ஏதாவது சொல்ல இடமே இல்லையே இன்றைக்கு நிலவுகின்ற ஜாதி இழிவை ஒழிப்பதற்கான திட்டம் அவரிடம் தானே உள்ளது.!” என்று பேசினார் பெரியார்.
திருநெல்வேலியிலுள்ள ஶ்ரீ வைகுண்டம் நகரில் நான்கு புறமும் மதிற்சுவரால் சூழப்பட்ட பகுதி ஒன்றுள்ளது. அதற்குள், கோட்டைப் பிள்ளைமார் என்றோர் வகுப்பார், பல தலைமுறைகளாக வெளியுலகைப் பாராமலே வாழ்ந்து வருகிறார்கள். மூடநம்பிக்கையின் பாற்பட்ட அந்தப் பழைமையான சம்பிரதாயத்தை 8.2.73 அன்று உடைத்து நொறுக்கினர். அதனால் மகிழ்ச்சி கொண்டு, பகுத்தறிவுப் பகலவளாம் தந்தை பெரியாருக்கு, அந்தச் சமுகத்தினர் பாளையங்கோட்டை நகரில் 1.3.73 அன்று விமரிசையான விருந்தொன்று நடத்தினர். அங்கேயே சரஸ்வதி அம்மாள் என்பவர் பெருமனத்துடன் 1,001 ரூபாய் அன்பளிப்பு பெரியாருக்கு வழங்கினார்.
திருச்சியிலுள்ள கனரக பாய்லர் தொழிற்சாலைக்குப் பெரியார் 6.3.73 அன்று வருகை தந்து, அங்குள்ள பார்வையாளர் புத்தகத்திலும் பின்வருமாறு கருத்துப் பதிவு செய்தார்:- பாய்லர் தொழிற்சாலை இந்தியாவிலேயே மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்பதையும், அதன் நிர்வாகமும் திறமையும் மேல் நாட்டு வாய்ப்புகளுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்லாத அதிசயப்படும் தன்மையில் நடந்து வருவதும் கண்டு, மிக மிக மகிழ்ச்சியும், அந்த வாய்ப்புக் கிடைத்தற்குப் பெருமையும் அடைந்தேன்.
-ஈ.வெ. ராமசாமி.
சிவகங்கையிலுள்ள மன்னர் ராஜா துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் பெரியார் 8.3.73ல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றிச் சொற்பெருக்காற்றினர்:- “புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றித் தெளிவாகப் பேச வேண்டுமானால், பகுத்தறிவுக் கூட்டத்தில் தான் பேச முடியும். அப்படிக்கில்லாது, கடவுள், மதம், மூடநம்பிக்கைக்கு ஆட்பட்ட இடங்களில் பேசுவதென்றால், வழ வழா கொழ கொழா என்றுதான் பேச வேண்டி வரும்!
பாரதிதாசன் அவர்கள் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்திய முதல் கவியும், கடைசிக் கவிஞரும் ஆவார். அவருக்கு அடுத்து, அவருக்கு ஈடாக, வேறு எந்தக் கவிஞரும் தோன்றவேயில்லை! பாரதிதாசன் புதுமைக் கருத்துக்களையும் புரட்சிக் கருத்துக்களையும், மக்கள் சமுதாயத்திற்குத் தேவையான சமதர்மக் கருத்துகளையும் துணிந்து வெளியிட்டுள்ளார். அவருக்கு அனு சரணையாகச் சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் இருந்தன. அவர் கடவுள், மதம், சாஸ்திரம், பெண்ணடிமை, மூடநம்பிக்கை இவற்றைக் கண்டித்து நன்றாகப் பாடியுள்ளார்.
பாரதியாருக்கோ வள்ளுவருக்கோ கொடுக்கின்ற மரியாதை, நமது பாரதிதாசனுக்கு நம் மக்கள் கொடுக்கத் தவறி விட்டார்கள். காரணம், பாரதிதாசன் புதுமைக் கவிஞர், புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டவர் என்பதால்தான் மற்ற கவிஞர்கள் பழைமை விரும்பிகள் ஆனதனால், பழைமையில் பற்றுக் கொண்ட மக்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள்; போற்றுகின்றார்கள் பாரதியாரை எடுத்துக் கொண்டால், அவர் தாவாத கொள்கை இல்லை. கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் நடப்பு எல்லாம் கூறியுள்ளார்.
பாரதிதாசன் எந்த இடத்திலும், எந்தச் சந்தர்ப்பத்திலும், பகுத்தறிவுப் புறம்பான கருத்துக்களை எடுத்துப்பாட முற்படவே இல்லை. சமுதாய மாற்றத்துக்கான கருத்துக்களைத் துணித்து கூறிய பெரும்புலவர் ஆவார் அவர். இன்றைக்குப் பகுத்தறிவாளர்களுக்கு எடுத்துச் சொல்லத்தக்க சமாதானமாகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அமைந்துள்ளன.
நமது மக்கள், இப்படிப்பட்டவருக்குப் பாராட்டும் பெருமையும் அளிக்க வேண்டிய அளவுக்கு அளிக்காதது, வருந்தத் தக்கதாகும். காரணம், அவர் பகுத்தறிவு வாதியானபடியால், அவரது பணிக்குக் கிடைக்க வேண்டிய மதிப்புக் கிடைக்கவில்லை. பாரதிதாசனைப் போன்று புதிய கருத்துக்களை எடுத்துச் சொல்லிப் பரப்ப ஆளே இல்லையோ! பாரதிதாசன்போல நமது நாட்டில் புரட்சிப் புலவர்கள் தோன்றி இருந்திருப்பார்களேயானால், நமக்கு 2,000 3,000 ஆண்டுகளாக இருந்து வரும் இழிதன்மை இருந்திருக்குமா?"
வட ஆர்க்காடு மாவட்டம் ஆர்க்காடு நகரில் இருபெரும் மாநாடுகள் மிகச் சீரோடும் சிறப்போடும் ஏற்பாடாகி இருந்தன. 7.4.73 அன்று திராவிடர் கழக மாநாடு, வரவேற்புக் கழகத்தலைவர் ஆம்பூர் பெருமாள், மாநாட்டுத் தலைவர் பெரியார், திறப்பாளர் வீரமணி, கொடி உயர்த்தல் பிரபாவதி பி.ஏ., பி.எல்., - 8ந் தேதி பகுத்தறிவாளர் மாநாடு. வரவேற்புக் குழுத் தலைவர் வீராசாமி எம்.எல்.ஏ., தலைவர் அன்பில் தர்மலிங்கம், திறப்பாளர் பேராசிரியர் அன்பழகன், பெரியார் படத்திறப்பு எஸ்.ராமசந்திரன், கண்காட்சித் திறப்பு ப.உ. சண்முகம். ஆனால் வயிற்றெரிச்சல் கொண்ட வன்பகையாளர் சிலர், 6ந் தேதி நள்ளிரவில் மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்து, ஓடினர் பெருமளவு தீக்கரையாயிற்று எனினும், வரவேற்புக் குழுவினரின் அரிய முயற்சியால் காலையில் பந்தல் சரி செய்யப்பட்டது. ஊர்வலம் தொடங்குவதில் மாத்திரம் சிறிது தாமதம் நேர்ந்தது. பெரியார், வீரமணி, வீராசாமி ஆகியோர் அமர்ந்து ஊர்வலமாக வந்தனர். தி.மு.க ஆட்சியைப் பாதுகாப்போம்; திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்றே கூற வேண்டும்; சுதந்திரத் தமிழ்நாடு அடைந்தே தீருவோம்; கோயில்களைப் புறக்கணிப்போம் என்பன போன்றவை முக்கிய தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. 8 - ந் தேதி இரவு சென்னை திரும்புங்கால், தனது கார் மரத்தில் மோதியதால், காயமுற்று, ஓய்வில் இருந்த ஆர்க்காடு வீராசாமியைப் பெரியார் 17.4.73 காலையில் சென்று பார்த்து, நலம் விசாரித்தார்.
12.4.73 அன்று பெரியார் நெய்வேலியில் நடைபெற்ற இராவணன் விழாவிலும், சிதம்பரம் வட்டத்தில் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். “கிராமத்தான் உழைக்க நகரத்தான் அனுபவிப்பது என்பது கூடாது! அப்படியானால், கிராமத்தான் சூத்திரன்; நகரத்தான் பார்ப்பானா? யாரும் யாரையும் சுரண்டிப் பிழைக்க இடமிருத்தல் கூடாது. பலர் உழைத்துச் சிலர் சாப்பிடும் வர்க்க பேதம் அடியோடு ஒழிய வேண்டும். இதற்குத் துணையாகக் கூட்டுறவு உணர்வு வளர வேண்டும்" என்று பெரியார் கருத்தினைத் தெரிவித்துக் கொண்டார். தமிழக முதல்வர் கலைஞர் தஞ்சையில் 13 ந் தேதி நடைபெற்ற தி.மு.க பேரணி ஒன்றினைத் தஞ்சை கீழவீதி பெரியார் இல்லத்திலிருந்து, கண்டு மகிழ்ந்தார். அதனைக் குறிப்பிட்டு அவர் உரையாற்றுகையில் "நானும், பேராசிரியரும், மன்னையும் திராவிடர் கழகக் கட்டடத்திலிருந்து இன்றைய பேரணியைக் கண்டோம். தமிழ்ச் சமுதாயத்திற்கு ஓர் ஆபத்து வருமானால், அதைத் தவிர்பதற்கோ , அதிலிருந்து விடுபடுவதற்கோ, அதிலிருந்து தமிழ் சமுதாயத்தைக் காப்பதற்கோ தி.மு.க.வின் பாசறைக் களங்களிலே ஒன்றாகத் தி.க. இருக்கும் என்பதற்கு இது அடையாளமாகும்" என்றார். நாகையில் வி.பி.கே. காயாரோகணம் பிள்ளையின் சிலை திறப்பு விழாவில் பெரியார் கலந்து கொண்டு, அவர் தமது சிறந்த நண்பர்: நீதிக்கட்சிப் பிரமுகர் என நினைவு கூர்ந்தார், 22.4.73 ல்.
பெரியாரின் பாசஉணர்வினைத் தூண்டிவிட்ட நிகழ்ச்சி ஒன்று, 28.4.73 மாலை 5.30 மணிக்குத் திருச்சி பெரியார் மாளிகையில், ரா. நிர்மலா (ஆசிரியர்) இரா. சிவசுப்ரமணியம் D.E.E (பொறியாளர்) ரா. அலமேலுசு. இரத்தினம்.(மின் வாரியம்) ஆகியோருக்குத் திருமணம். அழைப்பாளர் யார் தெரியுமா? ஈ. வெ.ராமசாமி - ஈ.வெ.ரா. மணியம்மையார் வீட்டுத் திருமணம் இது? அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திருமணம்! ரா. நிர்மலா 14 ஆண்டுகளாய் அங்கு வளர்ந்து, அங்கேயே ஆசிரியப்பணிபுரியும் பெண். ரா. அலமேலு 12 ஆண்டுகளாய் இல்லத்தில் வளர்ந்த பெண். இவர்கள் திருமணமாகிப், போன பொழுதில் பெரியார் கண்கலங்கிய புதுமையை உலகு கண்டு வியந்தது “ஞானியரும் மறப்பரோ மக்கள்மேற் காதல்?” என்று!
30.4.73 அன்று புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 82 வது பிறந்த நாள் விழா. ஆளுநர் சேதிலால் கவிஞரின் சிலையினைத் திறந்து வைத்தார். 1.5.73 அன்று சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ் பேராசிரியரும், தலைசிறந்த பகுத்தறிவாளருமான சி. வெள்ளையன் அகால மரணமடைந்தார். அமைச்சர்கள் நாவலர் நெடுஞ்செழியன், ' பேராசிரியர் அன்பழகன் ஆகியோரும் இடுகாட்டில் இரங்கலுரையாற்றினார். மகளிர் பாலிடெக்னிக் பிரின்சிபலான அவரது துணைவியார் சுந்தரி வெள்ளையனுக்கு அன்பர்கள் அனுதாபம் தெரிவித்தனர். 13 - ந் தேதி ஆத்தூர் மாவட்டம் ஆரகளூரில் நடைபெற்ற நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். பண்டரிநாதன் அய்.ஏ.எஸ் தலைமையில், அமைச்சர் எஸ் ராமச்சந்திரன், வெள்ளையன் படத்தினைத் திறந்து வைத்தார். பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில், பேராசிரியர் வெள்ளையன் அறக் கட்டளை நிறுவுவதற்காகப் பெரியார் 29.8.73 அன்று 1,000 ரூபாய் வழங்கினார்.
“சேரன் போக்குவரத்துக்கழகம், தொழிலாளர்களுக்கு முதலீட்டிலும், நிர்வாகத்திலும் பங்கு அளிக்க எடுத்திருக்கிற துணிச்சலான ஒரு திட்டத்தைப் பற்றி அறிந்து, பெருமகிழ்ச்சி அடைகிறேன். தி.மு.க அரசாங்கம் சாதித்துவரும் பெரும் மவுனப் புரட்சிகளில் இது சரித்திர சாதனை என்பேன்.
நான் கடந்த 40 ஆண்டுகளாக இதை என்னுடைய கொள்கையாகச் சொல்லி வருகிறேன். 1944ல் சேலத்தில் நடத்திய மாநாட்டில் - இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கு வேண்டும். அவர்களுக்கு நிர்வாகத்திலும். உரிமை வேண்டும் என்னும்படியாக ஒரு தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறோம்.
இது ஒன்றுதான் வேலை நிறுத்தம், கதவடைப்பு போன்ற எல்லா வகையான கெடுதல்களுக்கும் முடிவான மருந்தாகும். இது தொழிலாளிகள் நடுவில் கட்டுப்பாட்டு உணர்ச்சியையும், பொறுப்பையும் ஏற்படுத்தும்; தொழிலாளி வர்க்கத்தை இனி யாரும் சுரண்ட முடியாது.
நம்முடை சேரன் போக்குவரத்துக் கழகத்திற்கும், ஆற்றலும் சொல்திறனும் ஒருங்கே அமைந்த நமது மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போலத் துடிப்பும் திறமையும் வாய்ந்த இளைஞர் நமது போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு எஸ். இராமச்சந்திரன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டைத் தெரிவிக்கிறேன்.
இது போன்ற செயற்கரிய காரியத்தை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். - ஈ.வெ. ராமசாமி."
5.5.73 அன்று பெரியாரின் இந்த வாழ்த்துச் செய்தி, கோவையிலுள்ள சேரன் போக்குவரத்துக் கழக மேனேஜிங் டைரக்டர் என். திருஞான சம்பந்தம் அவர்கட்கு அனுப்பி வைக்கப்பட்டது. .
சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து, 8ந் தேதி ஓய்வு பெற்ற ஜஸ்டிஸ் கே. எஸ். பழனிச்சாமிக் கவுண்டர், போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதுபோல், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் முன்சீப் தேர்வு நடைபெறும் முறைகளைப்பற்றி ஏதோ குறை கூறிப் பேசினாராம். “நம் கையே நம் கண்ணைக் குத்துவதா? தமிழர் சமுதாயம் சாண் ஏறினால் முழம் சறுக்குவது இதனால்தான்? தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடினாரே, அது இந்தக் குணந்தானா?" என்று கேட்டது “விடுதலை". சட்ட அமைச்சர் மாதவனும் இந்தத் தவறான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
13.5.73 அன்று ஈ.வெ.கி. சம்பத்துக்கு மார்வலி ஏற்பட்டுச் சென்னை அரசினர் பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த அவரது இரண்டாவது தம்பி கஜராஜ் அங்கேயே தனது 35 வது வயதில் அகால மரணமடைந்தார். அவரது சடலம் ஈரோடு கொண்டு செல்லப்பட்டது. செய்தி கிடைத்ததும், கொடைக்கானலில் இருந்த பெரியாரும் மணியம்மையாரும் உடனே புறப்பட்டு ஈரோடு சேர்ந்தனர். திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் கட்சியான அண்ணா தி.மு.க வேட்பாளா மாயத்தேவர் வெற்றி பெற்றார். வாக்கு விவரம் அ.தி.மு.க. 2, 60, 930; காமராஜர் காங்கிரஸ் 1, 19, 032; தி.மு.க 93, 496; இந்திரா காங்கிரஸ் 11,423."திண்டுக்கல் தீர்ப்பு என்பது திண்டுக்கல் மக்களின் தீர்ப்புதானே தவிர, நாட்டு மக்களின் தீர்ப்பாகி விடுமா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி, அரசியலில் அல்ல" என்றார் முதல்வர் கலைஞர். அமைச்சர் ப.உ. சண்முகம் "திண்டுக்கல் இடைத்தேர்தலில் வலது, இடது ஆகிய இரு கம்யூனிஸ்டுகளும் ஒரு நடிகரின் பின்னால் ஓடுவதா?” என்று கேட்டார்.
திண்டுக்கல் தேர்தல் முடிவு எதிர்பாராதது. காரணம் இன்னது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. நம்முடைய ஜனதாயகம் இப்படி எல்லாம் இருக்கிறது. இதைச் சகித்துத்தான் ஆக வேண்டும். ஒன்றும் முழுகிப் போகவில்லை . அதனால் பெரிதாக இதைப் பற்றியாரும் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் இதில் ஒன்றும் அரசியல் இல்லை ” என்று 22 ந் தேதி “விடுதலை" முதல் பக்கப்பெட்டிச் செய்தி கூறியது.
சென்னையில் பல்லவன் போக்குவரத்துக் கழகப் பொதுத் தொழிலாளர் சங்கச் சார்பில் வி.பி. ஹாலில், தொழிலாளருக்கு லாபத்தில் பங்கு தரும் செயலைப் பாராட்டும் விழா 25ந் தேதி நடந்தது. முதல்வர் கலைஞரும், அமைச்சர் எஸ். ராமசந்திரனும் பேசியதும், பெரியார், “எந்த மாநில அரசுமே செய்யத் துணியாத, லாபத்தில் - நிர்வாகத்தில் பங்கு தரும் திட்டத்தைத் தொழிலாளர் நலன் கருதும் தி.மு.க அரசு, தமிழ் நாட்டில் புரட்சித் திட்டமாக நிறைவேற்றி இருக்கிறது! நாட்டில் கடைசியாக ஒரு முதலாளி இருக்கின்ற வரையில், ஒரு தொழிலாளி இருப்பான். அதுபோல, ஒரு பார்ப்பான் இருக்கின்ற வரையில், ஒரு சூத்திரன் இருப்பான். எனவே இவற்றைக் கவனமாக ஒழிக்க வேண்டும். தொழிலாளிகள் லாபத்தில் பங்கு வாங்கினால் மட்டும் போதாது; மூட நம்பிக்கைகளைக் கைவிட்டுப் பகுத்தறிவு வாதிகளாக விளங்க வேண்டும்” என்று அறிவுரை புகன்றார்.
அடுத்த நாள் பெரியார் நெய்வேலியை அடுத்த காட்டுக் கூடலூரில், “பொது மக்களின் சிந்தனையைக் கெடுக்கும் சினிமா மோகம் அறவே ஒழிய வேண்டும். இது எவ்வளவு தூரம் முற்றியிருக்கிறது என்றால், திண்டுக்கல் தொகுதியில் எம்.ஜி.ஆரின் எச்சில் பட்ட சோடா, கலர் பானங்களைக் குடிக்கும் முட்டாள்தனமான ஒட்டர்கள் நாட்டில் இருக்கின்றார்களே - இந்தப் பைத்தியகாரத்தனம் வளர்ந்திருக்கிற நிலைக்கு நாடு கெட்டுப் போயிருக்கிறதே?" என்று பெரிதும் மனவேதனையுற்றார் பெரியார். 28.3.73 அன்று மணியம்மையாருக்கு, அரசினர் பொது மருத்துவ மனையில், டாக்டர் சரத்சந்திரா, ஹெர்ணியா ஆப்பரேஷன் செய்து, அம்மா நலமடைந்து வந்தார்.
1.6.73 அன்று பெரியாரின் கார் நிதிக்காகத் தஞ்சையில் பெரியாரிடம் 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. 5ந் தேதி கரூர் நகராட்சி, பெரியாருக்கு வரவேற்பு வழங்கியது. நகர தி.க பெரியாரின் கார் நிதிக்காக 5,000 ரூபாய்தந்தது 6ந் தேதி சேலம் 4,500 ரூபாய் அன்பளிப்பாய்த் தந்தது."விடுதலை" ஏடு 6.6.73 அன்று 36ம் வயதை எட்டிப் பிடித்தது திருமண விழாக்களில் பெருமளவாகப் பங்கேற்ற பெரியார், பெண்களின் அடிமைத்தனத்தை நாம் இன்னும் பேணுவதைச் சுட்டிக் காட்டிக் கண்டித்து, அவரவர்களே, மாப்பிள்ளை தேடிக் கொள்ளவேண்டும். 22வயது அடைந்த பின் திருமணம் செய்து கொள்வது நல்லது. அதிலும், பெண்கள் ஏதாவது வேலை செய்து, தம் காலில் நிற்கவும் பழக வேண்டும். மேலும், எதற்கெடுத்தாலும் பார்ப்பானைத் திட்டுவதால் மட்டும், அல்லது மதவாதிகளைப் பழைமை வாதிகளைக் கண்டிப்பதால் மட்டும், பயனேற்பட்டுவிடாது! கடவுள், மத சம்பிரதாயம், மூட நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் - என்று அறிவுறுத்தினார்.
8.6.73 அன்று காலை 10 மணிக்குத் திருசெங்கோட்டில் அண்ணா சிலையினைத் திறந்து வைத்தபோது - எதிரிகள் முளைக்க வேண்டுமானாலும் அண்ணா பெயரைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது என்று இடித்துக் காட்டினார் பெரியார். கலைஞரும், நாவலரும் தி.மு.கவில் தலைவர், பொதுச் செயலாளர், பொறுப்புகளிலிருந்து விலகி, மன்னை நாராயணசாமியைக் கட்சிப் பொறுப்பில் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் போவாதாக 13.6.73 ஒரு செய்தி. அமைச்சர் பதவி விலக மன்னை சம்மதித்து விட்டாராம். 15ந் தேதி “விடுதலை"யில் இது சம்பந்தமான பெரியதொரு பெட்டிச் செய்தி இடம் பெற்றது; பெரியார் திருச்சியிலிருந்து அனுப்பிய எழுத்தாகும் இது:- “திண்டுக்கல்லில் தி.மு.க தோல்வி அடைந்ததனால், கட்சியின் தற்போதைய தலைவரும், பொதுச் செயலாளரும் அந்தந்தப் பதவிகளிலிருந்தும் விலகி, வேறு ஒருவர் புதிய பொதுச் செயலாளராகும் ஒரு மாறுதல் செய்வது என்று உத்தேசிக்கப்பட்டுள்ளதாகப் பத்திரிகைகளில் பார்த்தேன். அந்தப்படிக்கான ஒரு மாறுதல் ஏற்படுவதனால், பெரிய பலன் ஏற்பட்டுவிடும் என்றும் நான் நினைக்கவில்லை. மாறாக, இம்மாறுதல் மூலம் பொது மக்கள், கட்சித் தலைமையிடம் ஏதோ பெரிய குறை இருப்பதாகத் தவறாக எண்ணக்கூடும். இது இன்றைய எதிரிகளுக்கு ஒரு வாய்ப்பாக ஆகிவிடும். மற்றபடி திண்டுக்கல் தோல்வி, அப்படி ஒரு கட்டுமீறிய அசாதாரண நிலை என்று. அளவுக்கு மீறிக் கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல!"
16, 17 தேதிகளில் கூடிய தி.மு.க பொதுக்குழுவில், தலைவர்கள் பதவிவிலகும் யோசனை திரும்பப் பெறப்பட்டது. துணைச் செயலாளர்கள் 7 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகளிலிருப்போர் எம். எல், ஏ, எம்.எல்.சி. ஆக இருக்கக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டு, அதன் விளைவாகப் பதவி நீங்கியோர்க்குப் பதிலாகப் பொறுப்பாளர்கள், 26ந் தேதி நியமிக்கப்பட்டனர்.
எம். ஜி.ஆர் கட்சியில் பச்சைப் பார்ப்பனரான, கே. எம். சுப்ரமணியம், டாக்டர் ஹண்டே போன்றார் சேர்ந்ததை எண்ணி, அ.தி.மு.க என்பது அக்ரகார தி.மு.க. வா? என “விடுதலை” கேட்டது . 23.ந் தேதி!.
பெரியார் சுற்றுப் பயணத்தை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கழகத் தோழர்கள், ஆங்காங்கு கார் நிதி வசூலித்துப் பெரியாரிடம் தந்து வந்தனர். ஜூன் 6 சீர்காழியில் ரூ.1,000; நாகை வட்டம் முதல் தவணை ரூ.1,028 , 2வது தவணை 11.7.73 அன்று ரூ.1, 231; 16ந் தேதி திருச்சி சிந்தனையாளர் கழகம், கோவிந்தராசலு மூலமாக ரூ.1000; 19 பட்டுக் கோட்டையில் ரூ.1,412; 20 ஒரத்தநாடு வட்டம் ரூ.1,415; 21 குடந்தை வட்டம் ரூ.3, 800; 22 காரைக்கால் ரூ.1,117; 23 திருத்துறைப் பூண்டியில் ரூ.1, 1500; 24 காரைக்குடியில் ரூ.1,000; 27 தேவக் கோட்டையில் ரூ.1,002; 30 இடைப்பாடியில், ரூ.1,000; திருச்செங்கோட்டில் ரூ.1,500; அடுத்து ஜூலை மாதம் 1ந் தேதி கரூரில் ரூ5,601; 8 மேட்டூரில் ரூ.3,000; 11 திருவாரூரில் ரூ.2, 275; 22 திருச்சியில் ரூ.2,000, குளித்தலையில் ரூ. 367, பாடாலூரில் ரூ.715; 25 மதுரையில் மேயர் முத்து ரூ.300; 29 மண்ணச்சநல்லூரில் ரூ 1, 310 27; 6.8.72 புதுச்சேரி வட்டம் ரூ.1, 425 50; 13.8.73 லால்குடி வட்ட ம் ரூ5,0000.
பெரியார் பட்டுகோட்டையில் 19.6.73 அன்று பேசுகையில், “செப்டம்பர் முதல் தேதியிலிருந்து மீண்டும் கள்ளுக்கடைகளை மூடுவது புத்திசாலித்தனமல்ல. மிகவும் முன்யோசனையற்ற காரியமாகும் இது. சினிமாவுக்குப் போகின்ற அயோக்கியத்தனத்தை விடவா, கள்குடிப்பது தீமை?" என்று ஆவேசத்துடன் கேட்டார். 24 ந் தேதி காரைக்குடியில் பெரியார் சிலை அமைப்புக் குழு கூடி, அப்போதே 10, 000 ரூபாய் திரட்டியது. 30.6.73 அன்று டாக்டர் கே. ராமச்சந்திரா பொது மருத்துவமனை சூபரிண்டெண்டெண்டாகவும், டாக்டர் எம். நாராயணன் மருத்துவக்கல்வி இயக்குநராகவும், நியமிக்கப் பெற்றனர். 1.7.73 அன்று மாடி ரோடு (Fly Over) எனப்படும் அண்ணா மேம்பாலம், சென்னை ஜெமினிமுனையில் திறக்கப்பட்டது. விழாவில் பிரதமப் பொறியாளர் சி.வி, பத்மநாபன் விவர அறிக்கை படித்தார். முதல்வர் கலைஞர், அமைச்சர்களான நாவலர், சாதிக் பாஷா பங்கேற்றனர். 2ந் தேதி தமிழக அமைச்சர்களின் இலாகாக்களில் சில மாறுதல்கள் செய்யப்பட்டத்தை ஆதரித்துப் பாராட்டிப் பெரியார் தமமு கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார். 5.7.73 அன்று இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து மணலி கந்தசாமி ஏ.கே சுப்பையா ஆகிய இரு சட்டமன்ற உறுப்பினர்களும் விலகினர்.
ஜூன் மாதம் 27 - ம் நாள் எடமேலையூரில் பெரியார் தலைமையில், மன்னை நாராயணசாமி முன்னிலையில், மாறுதலாள திருமணவிழா நடைபெற்றது. திருஞானம் - இளவரசி; சிவானந்தம் எம். எஸ்சி - மகாராணி ஆகிய மணமக்கள், தாலி அணியாமல், ஒருவருக்கொருவர் தமது இனிஷியல் பொறித்த டாலர் கோர்க்கப்பட்ட சங்கிலிகளை அணிவித்துக் கொண்டனர். பெரியார், இந்தப் புதுமை முறையை வரவேற்றதோடு ,"உலக நோக்கோடு பரந்த மனப் பான்மையில் வாழ வேண்டிய மனிதனைக் குடும்ப' வட்டத்துக்குள் அடக்குவதே இல்லறம் எனப்படுகிறது. கற்பு என்ற சொல்லையே அகராதியிலிருந்து நீக்கிவிட வேண்டும். ஒழுக்கம் என்பது இருவர்க்கும் பொதுவாக இருப்பது தேவை” என்ற தமது கருத்தையும் வலியுறுத்தினார். மதுரை மாநகராட்சியில் தந்தை பெரியார் திருவுருவப்படத்தினை மேயர் முத்து தலைமையில், அமைச்சர் என். வி. நடராசன் ஜூலை 25 ந் தேதி திறந்தார்.
23, 24 ஜூன் திங்களில் பெங்களூரில் பகுத்தறிவாளர். மாநாடு மிகச் சிறப்புடன் நடைபெற்றது. பேராசிரியர் நஞ்சுண்டசாமி வரவேற்றார். துணை சபாநாயகர் பாதக், டாக்டர் பசுவராஜ், பேராசிரியர் மல்லேஷ், பேராசிரியர் தர்மலிங்கம், விசாலக்குமி சிவலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் பேருரை நிகழ்த்தினார். பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகியவை முக்கிய இடம் பெற்ற கருத்துக்கள். “நான் எதிர்ப்புக்கு அஞ்சாதவன் மரணமே வந்தாலும் தளரமாட்டேன். என் கருத்தைத் தான் நான் கூறுவேன். தனிமனிதனாகத் தமிழ்நாட்டில் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கூறி. மக்களைப் பக்குவப்படுத்தினேன்.!
உலகில் அர்ச்சகன், மாந்திரிகன், சோதிடன் இவர்களை விடப் பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது. மதமும் கடவுளும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்திவிட்டன. பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்களேன். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று சொல்லி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபாதி எண்ணிக்கையுள்ள பெண்களை, நாம் நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டி போடும் கருவி என்றே நினைக்கிறோம். பெண்களும், கணவன்மார்கள் நல்ல நகை நட்டு துணிமணி வாங்கிக் கொடுத்தால் போதும் என்று, தங்களைக் குறுக்கி கொண்டார்கள்.
பிராமணன் - சூத்திரன் என்கிற பேத அமைப்புக்கும் புருஷன் - பொண்டாட்டி என்கிற பேத அமைப்புக்கும் எந்த வித வேறுபாடும் கிடையாதோ உலகத்திற்குப் பயன்படக் கூடிய பேர்பாதி மனித சக்தியைப் பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திய குற்றவாளிகளாகிறோம்..
இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால், கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும் இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே, கணவன் - மனைவி உறவு, பெண்ணடிமைத் தன்மை, குழந்தை குட்டிகள் பெறுவது, அவற்றுக்கு எப்படியாவது சொத்துச் சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன.
மந்திரியாகிறவன், கலெக்டராகிறவன் கூடப் பெண்டாட்டி பிள்ளையைக் காப்பாற்றும் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைக்கே ஈடுகொடுத்து வந்தால், சமுதாய உணர்ச்சியோ, பொது உணர்ச்சியோ, உலகத்தைப் பற்றிய கவலையோ எப்படி ஏற்படும்?
சாத்திரங்களில் சூத்திரனுக்குக் கலியாண முறையே இல்லை; இதையும் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான்! 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று தொல்காப்பியத்திலேயே கூறப்பட்டிருக்கிறதே பெரும் பகுதி மக்களை உடலுழைப்புக்காரர்களாக ஆக்க, எப்படிச் சூத்திரன் என்று பார்ப்பான் சாத்திரம் செய்தானோ, அதே போலப் பெண்களை அடிமைகளாக்கக், கலியாணம் என்ற முறையையும் ஏற்படுத்தினான். இதனால்தானே வள்ளுவனும் பெண் அடிமைக் கருத்தை எழுதினான்; 'தெய்வந்தொழாஅள கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை' என்று!
நமது புராண இதிகாசங்கள் வலியுறுத்துவது என்ன? ஒரு பெண் பதிவிரதையாக இருப்பதென்றால், அடிமை உணர்வு மிகுதியாக இருக்க வேண்டும் என்பது தானே? ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை இல்லாத நாட்டில், சுதந்தரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது? முஸ்லீமை எடுத்துக் கொண்டால், முகத்தை மூடி, உலகத்தில் நடமாட விடுகிறானே பெண்களை - இதை விடக் கொடுமை உண்டா?
நமது பெண்களுக்காவது உணர்ச்சி வரவேண்டாமா? ஜோடித்துக் கொள்வது - சிங்காரிப்பது - சினிமாவுக்குப் போவது - கோயிலுக்குப் போவது - என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் ஆண்களோடு சம உரிமை உள்ளவர்கள் என்கிற உணர்வு வரவேண்டாமா?
உலகில் மற்ற நாட்டுக்காரன் எல்லாம் எப்படி எப்படி முன்னேறி வருகிறான் வெள்ளைக்காரன் என்ன நம்மை விடப் புத்தி சாலியா? இயற்கையாகவே அவன் நம்மை விட அறிவில் குறைந்தவன் தானே! அவன் குளிர்தேசத்துக்காரன்; நாமோ உஷ்ண தேசத்துக்காரர். பாம்பில் கூட உஷ்ண தேசத்துப் பாம்புக்குத்தானே விஷம் அதிகம்! பூவில் கூட உஷ்ண தேசத்துப் பூவுக்குத்தானே மணமும் மதிப்பும் அதிகம்! ஆகவே நாமும் அறிவைப் பயன்படுத்தினால் அவனை விட வேகமாக முன்னேற்றமடையலாம்.
நான் 1932 ல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை யாரென்று விசாரித்தேன். தாங்கள் Proposed Husband and wife என்றார்கள்; தாங்கள் உண்மையான கணவன் மனைவி ஆவதற்காக, எட்டு மாதமாக இப்படி ஒன்றாகத் தங்கியிருந்து பயிற்சி பெறுவதாக கூறினார்கள்! எப்படியிருக்கிறது பாருங்கள்! அந்த மாதிரி நாடு முன்னேறுமா? சும்மா பதிவிரதப் பேசிப் பெண்களை அடிமையாக வைத்திருக்கும் நமது நாடு முன்னேறுமா? பதில் கூறுங்கள்!"
கரியாப்பட்டினத்தில் ஜூலை 11ம் நாள் பெரியார், “தி.மு.க.வை ஒழிக்க முயன்று தோற்றவர்களின் கையாள்தான் எம்.ஜி.ஆர். இவர் மக்களிடம் எதைச் சொன்னால் சுலபமாக ஏமாறுவார்களோ அதைச் சொல்கிறார்" என்றார். 24.7.73 காலை பெரியார், மணியம்மையார் துணையுடன் பொது மருத்துவமனை சென்று, தமக்கு அசதியும் சோர்வும் ஏப்பமும் இருப்பதாக டாக்டர் கே. ராமசந்திராவிடம் கூறி, ஆலோசனை பெற்றுக் கொண்டார். 19.8.73 அன்று தஞ்சையில் வைத்துப் பெரியாருக்குப் புது வேன் வழங்கப்படும் என்றும், கார் நிதிக்கு அதிக நன்கொடை அளித்த மாவட்டம் அதுதான் என்றும் - 1.8.73 "விடுதலை" பறையறைந்தது! தனிப்பட்டவர்களும் மனமுவந்து கார் நிதிக்கு நிறைய வழங்கியிருந்தனர். இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாளையொட்டி வெளியிடப்படும் அழகிய சிறு நூல் “உயர் எண்ணங்கள்” 15 காசு விலை என்றது, செய்தி ஒன்று!
8.8.73 அன்று சட்ட மன்றத்தில் ஒரு சுவையான நிகழ்ச்சி:அமைச்சரவையின் மீது கொணரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசும்போது டாக்டர் ஹண்டே, "சுயமரியாதையிருந்தால், முதல் அமைச்சர் பதவியிலுள்ள கலைஞருக்குச் சுயமரியாதையிருந்தால், அவர் தமது பதவியை ராஜினாமாச் செய்யட்டும்; சுயமரியாதை இருந்தால்...” என்று சொல்லிக் கொண்டே போனார். முதல்வர் கலைஞர் குறுக்கிட்டுப் பேசினார்:- “சுயமரியாதை" எங்கள் சொத்து. நாங்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். முழுக்க முழுக்கச் சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்தவர்கள் நாங்கள். இவர் இப்போது சென்றிருக்கும் கட்சியில் கூட, டாக்டர் ஹண்டேதான் சுயமரியாதை இயக்கத்திலிருந்து செல்லாதவர். இவருக்கு உண்மையிலேயே சுயமரியாதை இருந்தால், இவரது பழைய கட்சியாகிய சுதந்திராக் கட்சி கோருவது போல, இவர் தனது எம்.எல்.ஏ. பதவியை விட்டு விடட்டும்" என்று.
10 -ந் தேதி "தமிழர்களின் பொற்காலம்" என்ற "விடுதலை" தலையங்கம் வரலாற்றுச் சாதனை ஒன்றை ஒளிபொருந்தக் காட்டிற்று. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில், குரூப் 1 தேர்வில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரில் 22 பேர் வெற்றி பெற்றுப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில், சாதி முறையின் படியான சக்கலியர், பள்ளர், வண்ணார். மருத்துவர், சாணார், வலையர், குரும்பர் போன்ற வகுப்பைச் சார்ந்தவர்களும் உள்ளனர் என, இன்னும் விவரமாக, முதல்வரின் எடுத்துக் காட்டுக்களையும் குறிப்பிட்டிருந்தது "விடுதலை"
வழக்கம் போலவே "விடுதலை" 15.8.73 அன்று, இது 26 - வது துக்க நாள் என மகுடமிட்டிருந்தது. பெரியாரோடு நீங்கள் போராட வேண்டியதைத் தவிர்க்கவாவது, தாங்கள் கேட்கின்ற மாநில சுயாட்சியைத் தந்து விடுங்கள். நாங்கள் கேட்பது இந்தியாவைப் பிளவு படுத்த அல்ல. எங்கோ உட்கார்ந்து கொண்டு, எஜமானர்களாக மாநிலங்களை ஆள்கின்ற தன்மை மாறுவதற்குத்தான்" என்றார் முதல்வர் கலைஞர். அமைச்சர் எஸ் இராமசந்திரன் “ஒரே விதமான கருத்தைக் கூறுகிறார்கள் இருவர். ஒருவருக்கு நொபெல் பரிசு தருகிறார்கள்; அவர் பெயர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். அதே கருத்தைக் கூறுகிற இன்னொருவர் பெயர் பெரியார் ஈ.வெஇராமசாமி. அவருக்கு வகுப்புவாதிப் பட்டம் சூட்டுகிறார்களே!" என்றார். 2.4.8.73 செய்தியின் படிச் சேரன் போக்குவரத்துக் கழகத்தின் மூலதனத்தில் 14 சதவீதம் தொழிலாளரின் பங்கு என்றும், இயக்குநர்கள் 10 பேரில் 2 பேர் தொழிலாளர் என்றும் தெரிந்தது.
“நான் ஒரு சமத்துவத் தொண்டன். சமுதாய சமத்துவத்துக்காகப் பாடுபடுகிறவன். அதாவது ஜாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப்பாடுபடும் தொண்டன். எனக்கு ஏற்பட்டிருந்த சலிப்பை நீக்கிய ஆட்சி இது. இப்போது எங்கும் ஜாதி ஒழிப்பிற்கு எதிர்ப்பே கிடையாது. இனி நம்முடைய வேலை கோயில்களைப் புறக்கணித்தல்; நெற்றியில், உடம்பில் மதக்குறிகள் தரிப்பதை நீக்குதல்; பண்டிகை கொண்டாடாமல் இருத்தல் ஆகியவைகள்தான்." என்று பெரியார் “விடுதலை" யில் தலையங்கம் தீட்டினார், 18.8.73 அன்று. அதே நாளில் கிருஷ்ணராயபுரத்தில் பேசும் போது, “சேர சோழ பாண்டிய மன்னர்கள் தமிழ் நாட்டை ஆண்ட போதும், மனுதர்ம ஆட்சிதானே நடத்திவந்தார்கள்!" என்று கேட்டார்.
19.8.73 தஞ்சை மாநகரில் கோலாகலக் குதூகலப் பெருநாள்; திருநாள் பெரியதோர் ஊர்வலத்தில், யானை முன் செல்ல, கருஞ்சட்டையினர் அணிவகுத்து முழக்கமிட்டுப் பின்தொடர், அழகு ஒளி உமிழத் தஞ்சையின் தனிச்சிறப்புப் புகழ் வாய்ந்த முத்துப்பல்லக்கில் பெரியாரும், வீரமணியும் அமர்ந்து வந்த பவனி. பின்னர் திலகர் திடலில் மக்கள் வெள்ளத்தினிடையே மகத்தான பொதுக் கூட்டம். அமைச்சர் எஸ்.இராமசந்திரன் கூட்டத் தலைமை ஏற்றார். தஞ்சை மாவட்டக் கூட்டமெனினும், மாநிலச் சிறப்புப் பொருந்தியதாகையால், வீரமணி வரவேற்கட்டும் எனத் தோலி சுப்ரமணியம் உரைத்திட, வரவேற்புரை நிகழ்த்தினார் “விடுதலை” ஆசிரியரும், கார்நிதி அமைப்பாளருமான வீரமணி. அவர் கேட்டதோ ஒரு லட்சம். ஆனால் திரண்டதோ ஒன்றரை லட்சத்திற்கும் மேல்! மீதியில் 50 ஆயிரம் பெரியாரிடம் நிதியாக வழங்கப்பட்டது. 10 ஆயிரம் பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காகத் தரப்பட்டது. பெரியார்பால் கரிசனமிக்க மருத்துவ நிபுணர்களான டாக்டர்கள் கே. ராமச்சந்திரா, பட், ஜான்சன் ஆகியோருக்கு மாலை அணிவிக்கப்பட்டது. (ஆட்டோமாட்டிக்) தானியங்கிக் கடிகாரம் ஒன்றை விழாக்குழு சார்பில் அமைச்சர் மன்னை நாராயணசாமி பெரியாரிடம் தந்தார். ஒரு டேப் ரிக்கார்டர், தங்கத்தாலான கார் சாவி ஆகியவற்றைப் பெரியாரிடம் தந்து, பொன்னாடையும் , போர்த்தினார் முதல்வர் கலைஞர். ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு, வேனிலிருந்தவாறே பேசுவதற்கு ஏற்ற முறையில் இந்த வேனை அமைத்தவர்கள் எல்.ஜி. பாலகிருஷ்ணன் கம்பெனியார். விழாவில் வீரமணிக்கு மோதிரமும், ஓவியர் கருணாவிற்கு நல்லாடையும் பெரியாரால் அணிவிக்கப்பட்டன. வெடி முழக்கங்கள் விண்ணை எட்டின. 95 முறை அதிர் வேட்டுகள் கதிகலங்கச் செய்தன எதிரிகளை. “பெரியார் வாழ்க கலைஞர் வாழ்க! கடவுள் இல்லை ” என்ற எழுத்துக்கள் மத்தாப் பூவாய் எரிந்து ஒளி வீசின. “தோழர்களே! நான் செத்துப் போனாலும் நீங்கள் நினையுங்கள்! என்றைக்குக் கோயில், கடவுள், மதம் இவைகளுக்கு நாம் முழுக்குப் போடுகிறோமோ அன்றே நாம் மனிதர்களாவோம். யாருடைய நெற்றியிலாவது இனிமேல் நாமமோ விபூதியோ இருக்கக் கண்டால், காரித்துப்புங்கள் - அவர்கள் முகத்திலல்ல - கீழே" என்று பேசினார் பெரியார்.
25 -ந் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில், இந்தப் புதிய வேனில் உள்ள மேடையில் வீற்றிருந்தவாறே பெரியார் பேசினார். “நாமிருக்கும் இந்த தேசம் இந்தியா என்பதை நாம் ஏற்றுக் கொண்டால், நாம் இந்து என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். நாம் இந்து என்பதை ஏற்றுக் கொண்டால், நாமெல்லாரும் தாசி புத்திரர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த இழிவிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி தமிழ் நாடு தனி நாடாவதுதான் என்றார்.
28.8.73 காலை 11 மணியளவில் புதிய சபாநாயகர் புலவர் கோவிந்தன், பெரியாரை வந்து சந்தித்து, மாலை சூட்டி, மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார். 30 ந் தேதி காலையில் கூடலூரில் இ.தண்டபாணி (வீரமணியின் அண்ணன் மகள் தேன்மொழிக்கும், ஜெயராமனுக்கும் பெரியார் வாழ்க்கை ஒப்பந்தம் நடத்தி வைத்தார். மாலையில் "கலைஞர் கருணாநிதி குழந்தைகள் நூலக”த்தைத் திறந்து வைத்தார். 1.9.73 அன்று, திருச்சியை அடுத்த கரூரில், பெரியார் "இளைஞர்களே!" எதிர் காலம் உங்களுடையது. அதனால் நீங்கள் எதையும் முன்னோக்கியே பார்க்கப் பழகுங்கள். தாய் தந்தையாரே மூட நம்பிக்கைக் கருத்துக்களைச் சொன்னால், பணிவோடு அவற்றை உதாசீனப்படுத்துங்கள்! " என்று புதுமையுரை புகன்றார்.
“ஏற்கனவே சலவை செய்து போட்ட துணிகளை அலமாரியிலிருந்து எடுத்து, நாளாகி விட்டதே என்று மீண்டும் சலவைக்குப் போடுவோம்" என்று இடத்திற்குப் பொருத்தமான உவமை ஒன்றைக் கலைஞர், பேரறிவுத் திறனோடு கூறியிருந்தார். 26.8.73 அன்று நடந்த சலவையாளர் முன்னேற்ற சங்க மாநாடு அது. சமுதாயத்திலும் கல்வியாலும் பிற்படுத்தப்பட்டுக்கிடக்கின்ற சமுதாயம், அது எவ்வளவுதான் பொருளாதாரத்தில் முன்னேறினாலும், ஏற்கனவே மேல் மட்டத்துக்கு வந்து, கல்வியால் சமூக அமைப்பால் உயர் அந்தஸ்தில் இருக்கிற வகுப்பாருடன் சமநிலை எய்திட முடியாது என்பதை - முதல்வர் கலைஞர் வெகு அற்புதமாக எடுத்துக் காட்டினார். அந்த அடிப்படையில் ஆழமான நம்பிக்கையோடு அவர் காரிய மாற்றினார். 'முற்பட்டோரும் முதல்வர் பதிலும்' என்ற தலையங்கத்தின் வாயிலாக "விடுதலை" 1.9.73 ஏட்டில், ஆசிரியர் இக்கருத்துகளையும், முதல்வர் தந்த புள்ளி விவரங்களையும் அழகுற எடுத்துக் காட்டினார். இந்த ஆண்டு 16, 17 தேதிகளில் பெரியாரின் 95 வது பிறந்தநாள் விழாக்கள் சென்னையில் நடைபெறும்; மதுரை விழாக்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்ற அறிவிப்பு 3.9.73 அன்று வெளிவந்தது.
பெரியாரின் தலையங்கம் ஒன்றும் அதே நாளில் பிரசுரமானது: “இந்தியாவில் உழைப்பாளி - சுகபோகி" என்று இரண்டு வகுப்புகள் இருக்கின்றன. இவை பெரிதும் ஏழை - பணக்காரன் என்ற சமுதாயப் பிரிவுகளைப் பரிணமிக்கச் செய்கின்றன. உண்மையாக சமதர்மம் இந்தியாவில் நிலைநாட்டப்பட வேண்டுமானால், உழைப்பதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று. இவர்களது உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு வாழ்வதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று, என்று இருப்பதைக் கிள்ளி எறிய வேண்டும். நம் நாட்டின் சமூகப் பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும், பணக்காரனை மட்டும் குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும்'.
இன்றைய உழைப்பாளிகள் அனைவரும் கீழ் சாதியாகவும், சுக போகிகள் அனைவரும் மேல் சாதியாகவும் இருக்கிறார்கள். ஏதோ ஒரு புரட்சி மூலமோ, சர்வாதிகாரி ஏற்பட்டோ , நாட்டிலுள்ள பொருட்கள், அனைத்தும் மக்களுக்கும் பங்கிட்டுத் தரப்பட்டதாக வைத்துக் கொள்வோம். இந்தப் பிரகடனத்தால் பொருளாதார சமத்துவம் ஏற்படுமே ஒழிய, அதுவும் தற்கால சாத்தியாய் இருக்குமே சமூக சமுதாய சமதர்மம் ஏற்பட வழியில்லாததால் அது தனது காரியத்தை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மத்திலும் செய்து கொண்டே இருந்து, பழைய சீர்கேடே ஏற்பட்டுவிடும்.
பார்ப்பனரல்லாத சமூகத்தில் கீழ்சாதிக்காரர்கள் எவ்வளவு செல்வம் தேடி, கோடீஸ்வரரானாலும் அந்தஸ்தில் கீழ்தான் பார்ப்பனர் எவ்வளவு பாப்பரானாலும், சோம்பேறியாய் உழைக்காதவராய் இருந்தாலும், மனித சமூகத்தில் மேல் நிலைதான்! இதனால்தான் பார்ப்பனர் பொருளாதார சமதர்மத்தை எதிர்ப்பதுமாக இருக்கிறார்கள்!
இந்த நாட்டில் சாதி ஒரு கடுகளவு மீதியிருந்தாலும் எப்படிப்பட்ட சமதர்மமும் ஒரு விநாடியில் கவிழ்ந்து போகும். மேல் நாட்டைப் படித்துவிட்டுப் புத்தகப் பூச்சியாயிராமல், இந்த நாட்டின் நிலையுணர்ந்து அதற்கேற்றபடி, நடக்க வேண்டும்.
சாதியை ஒழிக்கும் முயற்சியால் ஈடுபட்டு, சாதிமுறையின் ஆணி வேராக இருக்கும் பார்ப்பனனை ஒழிக்கும் முயற்சியே சமதர்ம வாதிகளின் முதற் கடமை என்பது நமது அபிப்பிராயமாகும்."
“மாலை முரசு" ஏடு பெரியாரைப் பேட்டி கண்டு 16.9.73 அன்று விவரத்தை வெளியிட்டது. கேள்விகளும் பதில்களும் மிக்க ரசிக்கத்தக்கவையாக இருந்தன.
கேள்வி: உங்களுடைய அரசியல் வாரிசு யார்?
பதில் : எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது . என்னுடைய கொள்கைகளும் கருத்துகளும்தான் வாரிசு; வாரிசு என்பது தானாகவே ஏற்பட வேண்டும்.
கேள்வி: உங்களுடைய கொள்கைகள், கருத்துக்கள், எண்ணங்கள், கோட்பாடுகள் இவைகளைப் பரப்ப ஊர்தோறும் பகுத்தறிவுப் பிரச்சார நிலையங்கள் அமைக்கப் போகிறீர்களா?
பதில் : இதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் என்னென்னவோ செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் போராட்டம் தான் முக்கியமாகத் தெரிகிறது.
கேள்வி: முன்பு ஒரு முறை திருச்சியில் நடந்த சிலை திறப்பு விழாவில் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னீர்களே! அப்படியானால் தமிழர்கள் காட்டு மிராண்டிகளா?
பதில் : தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்கவழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில்தானே இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம். அந்தப் பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக் கொள்ளாமல், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே இன்னும் உதாரணம் காட்டிக் கொண்டுகண்ணை மூடிக் கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்?
கேள்வி: தமிழ் இலக்கியங்களை நீங்கள் குறை கூறுவது ஏன்?.
பதில் : தமிழ் இலக்கியங்களை எழுதிய புலவர்கள் அவற்றைக் கடவுளோடும் மதத்தோடும் இனத்தோடும் அணைத்து எழுதி வைத்திருக்கிறார்களே தவிர, தமிழ் வளர வேண்டும் என்பதற்காக என்ன செய்து வைத்திருக்கிறார்கள்? தமிழ் என்றாலே சைவம், மதம், கடவுள் என்று நினைக்கிறானே தவிர, மக்கள் வாழ்க்கைக்கு, வளர்வதற்கு எவனும் எதுவுமே சொல்லவில்லையே! அதை எப்படி, நம்முடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும்? ஏற்றுக் கொள்ள முடியும்? இன்னமும் அரசியல் சட்டத்திலும் கூட, மதமும் இனமும் சாதியும் வளர்க்கப்படுகிறதே தவிர, அதை மாற்ற எவன் என்ன வழி சொல்லியிருக்கிறான்?.
கேள்வி: தங்களைப் போல் 95 வயது வரை வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
பதில் : எப்போதும் ஆக்டிவ் (சுறுசுறுப்பு) வாக இருக்க வேண்டும்.
கேள்வி: இந்த வயதிலும் தாங்கள் பல மைல்கள் சுற்றுப்பயணம் செய்கிறீர்களே, உடல் நலம் பாதிக்காதா? .
பதில் : வயதிற்கும் இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை . என்னைப் பொறுத்தவரை சும்மா இருக்கப் பிடிக்காது. சுற்றுப் பயணம் செய்தால்தான் நன்றாக இருக்கிறது.
கேள்வி: மாமிசம் சாப்பிடுவதால் தங்கள் ஜீரணசக்தி பாதிக்கப் படவில்லையா?
பதில் : என்னைப் பொறுத்தவரை மற்ற உணவுப் பதார்த்தங்களை விட, மாமிசம் சாப்பிட்டால் ஜீரணமாகி விடுகிறது. அதனால் எந்தத் தொந்தரவும் கிடையாது. மாமிசம் இல்லாவிட்டால்தான் தொந்தரவு.
கேள்வி: கிளர்ச்சி, பேராட்டம் நடத்த வேண்டும் என்கிறீர்களே அது எப்படி இருக்கும்?
பதில் : என் உடல் வேண்டுமானால் தளர்ந்திருக்கலாம். ஆனால் நான் அவற்றில் நேரடியாகவே ஈடுபட நினைக்கிறேன். நான் என்ன சொல்லுகிறேனோ, அதை நானே முன்னின்று செய்தால்தானே நன்றாக இருக்கும்? ஒதுங்கிக் கொள்வது என்பது எனக்குப் பிடிக்காது!
17.9.1973 பெரியாரின் 95 - வது வயதை அழைத்துக் கொண்டு, குணதிசைப் பகலவன் பகுத்தறிவுக் கதிரவனைக் காண வந்து, தனது பொன்னாடை கொண்டு, தங்கநிற மேனியைத் தழுவினான், மகிழ்ந்தான், உவந்தான், பெருமூச்செறிந்தான் பின், அவன் அகற்றப்பட்டான்! ஏன்? பூக்கடைகளுக்கு இன்று போக்கிடமே பெரியார் திடல்தானே! ஆறு மணிக்கு, அன்றலர்ந்த மலர், வெண்தாடி வேந்தனது சந்தனத்து மேனியிலே தவழ்ந்து விளையாடியது. 6 மணி எப்போது அடிக்குமெனக் காத்திருந்த மக்கள் - அலை, மகிழ்ச்சிப் பேரொலியுடன், வரிசை வரிசையாய்ச் சாரை சாரையாய்ப் படையெடுத்தது. அமைச்சர் பெருமக்கள், மரியாதைக்குரிய நீதிபதிகள், மாண்புக்குரிய சட்டமன்றப் பேரவை - மேலவை உறுப்பினர்கள், தலைவர்கள், அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், தி.க கருஞ்சட்டையினர், தி.மு.க கருப்பு சிவப்புக் கரையினர் - வந்து, கண்டு, சென்ற வண்ணமிருந்தனர்.
பெரியார் திடலில், பகுத்தறிவுப் பாதை மாறாத உவமைக் கவிஞர் சுரதா தலைமையில் கவியரங்கம். வீரமணி வரவேற்றார். "விடுதலை" யின் ஆஸ்தான கவி கலிபூங்குன்றன், சுகிசிவம், குடிஅரசு, கவியரசு பொன்னி வளவன், கா. வேழவேந்தன் ஆகிய கவிஞர்களின் பாடல் முழக்கம். இறுதியில் பெரியார் சிற்றுரை:- “தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம், அது தோன்றிய காலம் அப்படி! வள்ளுவன்கூடக் காட்டுமிராண்டிதான்; அவன் தோன்றிய காலம் அப்படி!" என்று ஓதினார் பெரியார். மதியம் 500 பேருக்குரிய விருந்தில் இரு இடத்தை எடுத்துக் கொண்டனர் அமைச்சர்களான ப.உ. சண்முகமும், எஸ். இராமசந்திரனும்,
மாலையில் வீரமணி தலைமையில் பேராசிரியர்களான நன்னன், இராமநாதன், கணேசகோபால கிருஷ்ணன் ஆகியோரின் சொற்போர் அரங்கம் முடிவுற்றதும், நாதசுரச் சக்கரவர்த்தி நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன் குழுவினர் நாயள இசை மழை; இதில் நனைந்து போன பெரியார், பொன்னாடை போர்த்தினார் நாயனவேந்தருக்கு. பிறந்த நாள் பெருவிழா நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் மேயர் ஆறுமுகம் வரவேற்றார். புலவர் கோவிந்தன், சி.பி சிற்றரசு, தெ.து. சுந்தரவடிவேலு, ராஜாசர் முத்தையா செட்டியார், ஏ.பி ஜனார்த்தனம், கி.வீரமணி, அமைச்சர் எஸ். இராமசந்திரன், அமைச்சர் கே. ராஜாராம் வாழ்த்துரை வழங்க, ஆந்திர நாத்திகத்தலைவர் கோரா முழங்க, இறுதியில் தந்தை பெரியார் "அடுத்த போராட்டம் தமிழ்நாடு தமிழருக்கேதான் என்று பிரகடனம் செய்தார்.
பழைய சம்பவம் ஒன்றையும் பெரியார் நினைவு கூர்ந்தார். முன்னர் சாதிப்பித்தம் தலைக்கேறியிருந்த காலத்தில் செட்டிமார் நாட்டுத் திருமண ஊர்வலம் ஒன்றில், மதுரை சிவகொழுந்து நாதசுரம் வாசித்தார். அந்நாளைய சம்பிரதாயப்படி மேல் துண்டை இடுப்பில்தான் கட்டியிருந்தார். ஆனால் வியர்வை துடைக்கத் தோளில் ஒரு சிறு குட்டை போட்டிருந்தார். அதையும் எடுக்கச் சொன்னார்கள் அங்கிருந்த சாதி வெறியர்; மேளக்காரன் மேல்துண்டு போடலாமா என்றனர்! என்னோடு வந்திருந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமிக்கு விடாதே ஒரு கை பார் என்று ஜாடை காட்டினேன், "சிவகொழுத்து துண்டை எடுக்காதே" என்றார் அழகிரி. தானே அவரது வியர்வையைத் துடைத்து விட்டதோடு, வழிநெடுகிலும் விசிறிக் கொண்டே வந்தார். ஜாதி வெறியர் இருந்த இடம் தெரியாமல் அடங்கிப்போனார்கள் என்றார் பெரியார்.
இந்த ஆண்டு "விடுதலை" பெரியார் 95 - வது பிறந்த நாள் மலரின் விலை 3 ரூபாய், பிறந்தநாள் நினைவாக அலுவலக ஊழியர்களுக்கு, ஆளுக்கு 25 ரூபாய் அன்பளிப்பு வழங்கப்பட்டது. காலையில் புரட்சி நடிகர் எம்.ஜி. ராமசந்திரன் பெரியாரைச் சந்தித்து மாலை சூட்டி 5,000 ரூபாய் அன்பளிப்பு வழங்கித், தான் பெரியாருக்குச் சென்னையில் ஒரு சிலை அமைத்திட, அனுமதி கோரினார். அவருடன் மதியழகன், மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம். மா. முத்துசாமி. பி.டி. சரஸ்வதி ஆகியோரும் வந்திருக்கின்றனர். 1977 செப்டம்பர் 17 ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராகி, இதனை நிறைவேற்றிவிட்டார்.
“செயலும் சிந்தனையும் இணைந்த ஒரே உலகத் தலைவர் பெரியார்தான். தந்தை பெரியார் உலக அரங்கிலே நிறுத்தப்பட்டு அதனால் தமிழகம் புகழடையும் காலம் ஒன்று வரும்.” இவை அமைச்சர் ராமச்சந்திரனின் புகழ் மொழிகள்.
பெரியாருக்கு இனநலம் இதயம்; பகுத்தறிவு மூளை.
பார்ப்பானில் வைதிகப் பார்ப்பானே மேல்; காஸ்மா பாலிட்டன், பார்ப்பானைவிட - என்பது பெரியார் கருத்து.
பெரியாரின் 95 - ஆம் ஆண்டு பிறந்தநாள் செய்தி என்ன?
“ எனது 95 ஆம் ஆண்டு பிறந்தநாள் துவக்கத்துக்கு வழமை போல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரை எழுதவேண்டி இருக்கிறது. அதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன்.
அப்படி எழுதப்படும் இக்கட்டுரைகளில் இதுவே கடைசியான கட்டுரையாக இருந்தாலும் இருக்கலாம். ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், அடுத்த ஆண்டு மலரில் எழுத வேண்டிய காலத்தில் நான் இருப்பேனோ இல்லையோ என்கிற பிரச்சினை மாத்திரமல்லாமல், எழுதும்படியான வாய்ப்பு இருக்குமோ இருக்காதோ என்பதே முக்கிய காரியமாகும்.
ஏனெனில், இன்னமும் நாம் இருப்பது போலவே - அதாவது இந்திய ஆட்சிக்குள் பிரஜையாய் சமுதாயத்தில் நாலாஞ்சாதி சூத்திரனாய் - சட்டப்படி சாஸ்திரப்படி பார்ப்பானின் தாசிமகனாய் - நமது தாய்மார்கள் பார்ப்பானின் தாசிகளாய் - இருந்து வரும் அதே தன்மையிலேயே - இருப்போமோ என்கிற கருத்தைக் கொண்டே இப்படி எழுதுகிறேன்.
நாம் கிறிஸ்துவனாகவோ, முஸ்லீமாகவோ மதம் மாறிக் கொள்ளாமல் இந்துவாய் இருக்கும் வரை, நாம் நமது பண்டார சந்நிதிகள், சமணர், பவுத்தர், பகுத்தறிவுவாதி - எந்த நிலையிலிருந்தாலும் சூத்திரனாக, பார்ப்பானின் தாசி மக்களாக இருக்க வேண்டும்; இந்திய அரசியல் சட்டப்படி இந்தியப் பிரஜையாய் இருக்கும் வரையில்!
இந்த இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவோ, மாற்றவோ நம் மக்களுக்கு ஒரு நாளும் சக்தியோ உரிமையோ ஏற்படும் என்று கருதவே இடம் இல்லை . அதனால் இந்திய ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை விலக்கிக் கொள்ள முயற்சி செய்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயமான - நிர்ப்பந்தமான நிலையில் நாம் இருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்திய ஆட்சியில் இருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமா என்பது பற்றி நமக்கு முடிவு செய்து கொள்ள முடியாமல் இருந்தாலும், இம்முயற்சியில் நாம் பலர் சிறையில் இருக்க நேரிடலாம் என்கிறதாலேயேதான் இந்தப்படி எழுதுகிறேன்.
நமக்கு இந்திய ஆட்சியில் அரசியல் பிரச்சினை எப்படி இருந்தாலும், சமுதாயப் பிரச்சனையில் இன்றைய இழிவைப் போக்க ஏதாவது முயற்சி செய்துதான் ஆக வேண்டும். நமது மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள்; மதம் மாறுவதை இழிவாய்க் கருதுபவர்கள் ஆவார்கள்.
ஆதலால் நாம் உடனடியாக இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி விடுதலை பெற்று, சுதந்திரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம் முயற்சிக்கு இன்றைய தி.மு.க ஆட்சி இணங்கும் என்று கருதமுடியாது. ஏனெனில் தி.மு.க ஆட்சி விரும்புவதெல்லாம், இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுய ஆட்சிதான் அது விரும்புகிறது.
மாகாண சுயாட்சி என்றால் அரசியலில்தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாய் ஒரு காரியமும் செய்ய முடியாது.
இந்திய அரசியல் சட்டத்தில் சமுதாய (மத) சம்பந்தமான காரியங்களைப் பற்றிய பழைய மனுதர்ம நிலையை மிகப் பிரபலப்படுத்திக் கொண்டபடி இருக்கிறது. கர்ப்பக் கிரகத்திற்குள் பார்ப்பான் தவிர்த்துப், பண்டார சந்நிதி உள்ளிட்ட இந்து என்ற தலைப்பில் வரும் எந்தச் சூத்திரனும் செல்ல முடியாதென்று உச்ச நீதிமன்ற (சுப்ரீம் கோர்ட்) தீர்ப்பு இருப்பதனால், இன்னும் சாமி தரிசனத்துக்கு என்று கோயிலுக்குப் போகும் யாருமே, தீண்டத்தகாதவர்கள் போல், வாயில் படிக்கு வெளியில்தான் எட்டி நிற்க வேண்டும்.
இன்று அமுலில் இருக்கும் இந்து லா (Hindu Law) என்னும் சட்டத்திலும், பல உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பிலும், பார்ப்பனரல்லாத இந்து மக்கள் என்பவர்களை மிக இழிவாகக் கூறி, நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து என்னும் சொல்லுக்குச் சட்டத்தில் கொடுத்திருக்கும் விளக்கம் என்ன வென்றால் - கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள் - என்பதாகும். இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி, சூத்திரர், பார்ப்பானின் தாசி மக்கள், - என்று ஆகிவிடுகிறார்கள்.
நான் இந்து அல்ல என்று சொல்லிவிட்டால், இழிவு நீங்கிவிடும் என்றுதான் நான் முதலில் கருதினேன். பின்பு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகுதான், இது தெரிந்தது!. ஆதலாலேயே தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இன்று நம்நாட்டில் இந்துக்கள் எல்லோருக்குமே அரசியலில் தான் முக்கிய கவனம் இருக்கிறது. அன்றியும் நாட்டுப் பிரிவினை என்றால் எல்லா மக்களும் பயப்படுகிறார்கள். பதவி கிடைக்காதே என்கிற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்ல வேண்டுமே என்றும் பயப்படுகிறார்கள். 50 வருஷ காலமாகச் சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு, பல பதவி, சில உத்தியோகம் பெற நேர்ந்ததோடு, அரசியலில் பார்ப்பனரின் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்க முடிந்தது என்பதல்லாமல், சமுதாயத்துறையில் உள்ள அடிப்படை இழிவு, அப்படியே தங்கி, நல்ல அளவுக்குப் பலமும் பெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
எனவே, நாம் சட்டத்தைப்பற்றிப் பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும், சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டியது, ஒவ்வொரு தமிழனுக்கும் மிக அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக் கணக்கில் பேட்ஜுகளுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து, மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களே இளைஞர்களே! பள்ளி, கல்லூரி மாணவர்களே! மாணவிகளே! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள் உறுதி கொள்ளுங்கள்!"
30.9.1973 மதுரையில் கருஞ்சட்டைப்படை மாநாடு. 1948 -ல் கருஞ்சட்டைப்படை மாநாடு நடைபெற்றுகாலை பந்தலுக்குத் தீயிட்டு, வீண்பழி சுமத்திக், கருஞ்சட்டையணிந்த ஆடவரை மட்டுமன்றிப் பெண்டிரையும் அடித்துத் துரத்தி அலைக்கழித்தனர் கொலைக்கஞ்சாக் கொடியோர். இது பற்றிக் கலிங்கத்துப் பரணி நடையில் பேரறிஞர் அண்ணா 26.5.1946 "திராவிட நாடு" மரண சாசனம்" என்ற தலைப்பிட்டு எழுதிய அரிய கட்டுரையைப் படிக்குந்தொறும், கண்ணீர் ஊற்று வெடிக்கும்; கனிவான உள்ளமும் துடிக்கும்!
இப்போதைய மாநாட்டை வீரமணி திறந்து வைத்தார்; தலைமை ஏற்ற பெரியார் முழங்கினார் - “கழகத் தோழர்களே, நீங்கள் உயிருக்கு அஞ்சாதவர்கள் தியாகத்தின் சின்னமாகிய கருஞ்சட்டை அணிந்திருப்பவர்கள். சுதந்திரத் தமிழ்நாடு கேட்பது சமுதாய விடுதலை பெறுவதற்காகத்தான். கேட்பது, சட்ட விரோதந்தான்; ஆனால், நிநாய விரோதமல்ல! ஏழாண்டு சிறையிலிட்டால் பராவாயில்லை என நீங்கள் ஏற்க வேண்டும்" என்று.
மாலையில் மாபெரும் ஊர்வலம் கருஞ்சட்டைத் தோழர்களின் கங்குகரை காணாத எழுச்சிப் பேரணி, மக்கள் திரளால் மதுரை மாநகரே சிறுத்தது! மதுரை அவுட் போஸ்டில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை, இரவு 8.30 மணிக்குத் திறந்து வைக்கப்பட்டது. சிலையினைத் திறந்து வைக்க வேண்டிய முதல்வர் டாக்டர் கலைஞர், உடல் நலக் குறைவால் வர இயலவில்லை எனத் தந்தி அனுப்பியிருந்தார். டாக்டர் நாவலர் தலைமையில் அமைச்சர் எஸ்.இராமச்சந்திரன், மணலி கந்தசாமி, மேயர் முத்து, வீரமணி, பெரியார் ஆகியோர் பேசினார்கள்.
“பெரியாரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியலே இயங்கிட முடியாது. பழைமை வெறி பிடித்த உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூட ஈ.வெ.ராமசாமிப் பெரியார் துணிந்து நாத்திகப் பிரச்சாரம் செய்தவர்" என்று 5.10.73 “இந்துஸ்தான்டைம்ஸ்” ஏடு தந்தைப் பெரியாரைப் பாராட்டி எழுதிற்று. “தி.க., தி.மு.க இரண்டுக்குமே எதிரிகள் ஒருவரோ அதனால் நாமே ஒருவருக்கொருவர் அழித்திட நினைக்கக்கூடாது. பொது எதிரியை ஒழிக்க, அண்ணா சொன்னது போல், இரட்டைக் குழல் துப்பாக்கியாய்ச் செயல்பட வேண்டும் என்று திருவாரூரில் 10.10.73 அன்று முதலமைச்சர் கலைஞர் மொழிந்தார்.
தஞ்சை, தர்மபுரி போன்ற ஊர்களில் பெரியார் சிலைக்கு அடியிலுள்ள பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவை நீதிபதி எம்.எம் இஸ்மாயில் 11.10.73 அன்று தள்ளுபடி செய்தார். சிலைக்கு உரியவனின் கருத்துக்களை அடியில் பொறிப்பதில் தவறில்லை என்றார் ஜஸ்டிஸ்.
14 ந் தேதி சேலத்தில் உரையாற்றிய பெரியார் "மதச் சார்பற்ற நாட்டில் நேற்று ராவணனைக் கொளுத்தி, ராம் லீலா கொண்டாடலாமா? அப்போது நான் ஏன் இராமனைச் செருப்பால் அடிக்கக் கூடாது? ஆகவே, இந்தக் கிளர்ச்சியில் சிறைசெல்ல, மற்றும் உயிர்த் தியாகம் செய்யத் தயாராக உள்ளவர்கள் முன்வந்து பெயர் கொடுங்கள். வர இயலாத மற்றவர்கள் பொருளுதவியாவது செய்யுங்கள்” என்று வேண்டினார். மேலும் அன்றைய "விடுதலை" யிலும் “தமிழர்கள் சூத்திரர், பார்ப்பனரின் தாசி மக்கள் என்கிற இழிவு நீக்க மகாநாடு" என்னும் தலையங்கமும் வரைந்திருந்தார். “சென்னை அல்லது திருச்சியில் டிசம்பரில் கூட்டுவதாக இருக்கிறேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு இதில் அதிகாரமில்லாததால், நம்முடைய இந்தப் போராட்டம் இந்திய அரசாங்கத்திற்கு எதிராகத்தான். போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் - ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட - இதற்குப் பொருளுதவி வழங்கலாம்;" என்று விளக்கியிருந்தார் பெரியார்.
அக்டோபர் 16 ந் தேதி வெளியான செய்தி ஒன்று; உலகப் புகழ் பெற்ற அமெரிக்க பவுத்த குரு பிரடரிக் வி. லஸ்டிக் என்பார் 1954 ல் பர்மாவில் பெரியாரைச் சந்தித்தவர். உருவத்திலும் சிந்தனையிலும் அவர் சாக்ரட்டீசை ஒத்தவர். அன்னார் இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளில், பர்மா நாட்டில் பங்கேற்றவர். 30ந் தேதி மலேசியாவில் பெரியார் - அண்ணா பிறந்த நாள் விழாக்களில், முருகு ' சுப்ரமணியம் பெருமிதத்துடன் கலந்து கொண்டார்.
18 ந் தேதி பிரதமர் இந்திரா காந்தி, புவனேஸ்வரில் நிருபர்கள் கேட்ட போது, “தி.மு.க. தனிநாடு கேட்க வில்லை . ஆனால் தனிநாடு கேட்கின்ற ஈ.வெ. ராமசாமியை ஆதரிக்கிறது. கருணாநிதி கேட்பது மாநில சுய ஆட்சியை விட அதிகம்” என்று பதில் கூறியிருந்தார்.
"விடுதலை" யில், மாவட்டத் தலைவர்களுக்கு, என்று ஒரு பெட்டிச் செய்தி 17 ந் தேதி வெளியிடப்பட்டது:- “வட ஆர்க்காடு, தர்மபுரி, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கழக ஆக்க வேலைகளில் ஒரு முயற்சியும் நடைபெறவில்லை. என்னுடைய கூட்டங்களே ஏற்பாடு செய்யக் காணோம்! வர இருக்கின்ற இழிவு நீக்க மாநாடுகளுக்காவது, ஒத்துழைப்புத் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்! ஈ.வெ. ராமசாமி.”
அக்டோபர் 23 ல் முதல்வர் கலைஞர் ஆரணியில் பேசுகையில், “சுயமரியாதைக் கொள்கைகள்தான் தி.மு.க ஆட்சியின் கொள்கையாகும். தனக்கு கண்பார்வையில்லாததால் புறக்கணிக்கப் படுவோமோ என்ற தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதே கண்ணொளித் இட்டம்; சமுதாயத்தால் ஒதுக்கப்படுவோமோ என்ற அச்சத்தைப் போக்கி வாழ்வில் தன்னம்பிக்கை ஊட்டுவதே பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்; மனிதனை மனிதன் இழுக்கின்ற மானங்கெட்ட செயலைப் போக்குவதே கைரிக்ஷா ஒழித்து சைக்கிள்ரிஷா வழங்கும் திட்டம். இவை யாவுமே சுயமரியாதை அடிப்படையில்தான் செய்யப்படுகின்றன. அண்ணாவைத் தானைத் தளபதியாய்க் கொண்ட பெரியாரிசமே எங்களுக்கு வழிகாட்டுகிறது!" என்றார் இறும்பூது கொண்டு. அடுத்த 30 ந் தேதி சென்னையில் "தி.கவுக்கும் தி.மு.கவுக்கும் உள்ள உறவு தனித்தன்மை வாய்ந்ததாகும். திராவிடர் கழகத்தைத் தடைசெய்யத் தேவையில்லை என இந்திரா அம்மையாரே சொன்ன பிறகு, நான் என்ன சொல்ல இருக்கிறது?" என்று நிருபர்களுக்கு விடையளித்தார் கலைஞர்.
25.10.73 பகுத்தறிவாளர் கழகத்தில் பேசிய கம்யூனிஸ்டு (வலது) தோழர் தா.பாண்டியள் எம்.ஏ., பி.எல்., “தமிழ் நாட்டுக்குப் பகுத்தறிவு அடிப்படையில் ஆழமான சமூக சீர்திருத்தப்பணி தேவைப்படுகிறது. இதற்கு நாங்கள் எப்போதும் ஆதரவு தருவோம்" என்றவர்; இன்றளவும் வார்த்தையைக் காப்பாற்றி வருகின்றார்!
பெரியார் பேனாவை எடுத்து விட்டார். 23, 24, 25, 26 தேதிகளில் தொடர்ந்து "விடுதலை" யில் சிறப்பான தலையங்கக் கட்டுரைகள் வெளியாயின. முதல் நாள் நம் கடமை. "சென்னையில் டிசம்பர் 8,9 தேதிகளில் இழிவு ஒழிப்பு மாநாடுகள் நடைபெறும். மிகச் சமீபகாலம் வரையில் தமிழ் நாட்டில் நமது தஞ்சை, திருநெல்வேலி மாவட்டங்களில், பார்ப்பனர்கள் தங்கள் தெருக்களில் பஞ்சமர்களை நடக்க விடுவதில்லை. கக்கூஸ் எடுப்பதற்குக்கூட ஐந்தாம் சாதியினரை அனுமதிக்காமல், நாலாம் சாதி சூத்திரரையே கக்கூஸ் சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தி வந்தார்கள், எனக்குத் தெரியும். 1940 ஆம் ஆண்டு வரையில் ரயில் நிலையங்கள், சத்திரங்கள், பொது விடுதிகள், கோயில்களில் பார்ப்பனருக்குத் தனியிடம் என்பது இருந்தது. வெளிப்படையாகத் தெரியாமல் அதே நிலைமைகள் இப்போது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, உண்மையில் அதற்கான ஆதாரங்களில் மேலும் பலப்பட்டு வருகின்றன. அதாவது அரசியல் சட்டத்திலும் சாதிப்பிரிவு இடங்கொண்டு விட்டது. இந்த ஜாதிக்காரர்களோ, பதவிக்காரர்களோ, பிரபுக்களோ கவலைப் படுவதில்லை. நாம்தான் இழிவை நீக்கி மானம் பெறுவதற்கு ஆகப் போராட வேண்டும்."
இரண்டாம் நாள் “சிந்தித்து ஆவன செய்ய வாருங்கள்" என்பதும், முதல்நாள் போலவே அன்பழைப்பு. மூன்றாம் நாள் வருவது வரட்டும் “ பிரிவினை கேட்டால் ஏழாண்டு சிறைத் தண்டனை என்ற சட்டத்தை நிறைவேற்றியதே டில்லி அரசாங்கம். அதற்குத் தெரியாதா இது அநீதி என்று? அக்கிரம ஆட்சி நடத்துகிறோம் என்று தெரிந்துதான் செய்திருக்கிறது. அதனால்தான் நாம் கேட்கிறோம். நீ யார், நான் யார்? நீ வேறு நான்வேறு” என்று, நாலாம் நாளான 26.10.73 எனது கருத்து என்ன சொல்கிறது? "இப்போது டில்லி மூர்க்கத்தனமாக முனைந்து தி.மு.க ஆட்சிக்கும் தொல்லை கொடுக்கப் பார்க்கிறது. தி.மு.க ஆட்சி ஒழிக்கப்பட்டால் தி.க . தானே புகலிடம்! ஆட்சியிலிருந்து தி.மு.க விலக்கப்பட்டால், ஏதோ பலபட்டறைதான் ஆட்சிக்கு வரும். அல்லது, அம்மா இந்திராவே ஓர் ஆறுமாதம் ஆளும் பார்க்கலாமே அது எப்படி நடக்கும் என்பதை உங்களைச் சூத்திரனாக, இழிமகனான விட்டு விட்டு நான் சாகமாட்டேன்! இழிவு நீக்கப் போராட்டத்தில் நான்தான் முதலில் ஈடுபடுவேன் என்னைப் பொறுத்த வரையில், ஒண்டியாய் இருந்தாலும், சமுதாய இழிவு ஒழிப்புத் தொண்டு, எப்படியும் நடத்தப்பட வேண்டியதுதான்!,"
"தமிழர்களே! பிரிவினைக்காகப் பிரிவினை கேட்கவில்லை. நான் சூத்திரன், தாசிமகன் என்கிற இழிவு நீங்கப் பிரிவினை தவிர வேறு வழி என்ன?" இது 30.10.73 "விடுதலை" யின் பெட்டிச் செய்தி.
4.11.73 அன்று திருச்சி சிந்தனையாளர் கழகம் பெரியாரின் 95வது பிறந்த நாளைக் கொண்டாடியது. அமைச்சர்களான என்.வி. நடராசன், அன்பில் தர்மலிங்கம் இருவரும் கலந்து கொண்டு, தாங்களும் பதவியை உதறிவிட்டுப் பெரியாருடன் போராட்டத்தில் கலந்து கொள்வதாக, உணர்ச்சிமயமாகி அறிவித்தார்கள். “நீங்கள் பதவியிலே இருங்கள்; நாள் முதற்பலி ஆகிறேன்" என்று கூறிய பெரியார், உடல் நலமில்லாத நிலையிலேயே அரியதொரு பேருரை நிகழ்த்தினார்:“பெருமைக்குரிய தலைவர் அவர்களே! மாண்புமிகு அய்யா அமைச்சர் பெருமான் அவர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! சட்டசபை அங்கத்தினர்களே! இன்றைய தினம் என்னுடைய தொண்ணூற்றய்ந்தாவது பிறந்தநாள் விழா என்னும் பேரால் இம்மாபெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் அநேக நண்பர்கள் என்னைப் பற்றிச் சொன்னார்கள். நான் அவைகளைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை. அவர்களுக்கு நான் என்னுடைய மனப்பூர்த்தியான நன்றியறிதலை உள்ளன் போடு - மனதோடு - தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர்களே! எனக்கு உடல் நலமில்லை. மூன்று நாளாய் விடாமல் வயிற்றுப்போக்கு. இரண்டு நாளாய்ச் சாப்பாடு இல்லை இன்றைக்குத்தான் ஒரு இட்லி சாப்பிட்டேன். ஆனாலும் கலந்து கொள்கிறேன். இம்மாதிரியான மகிழ்ச்சியைப் பார்க்கிற போது, அடிக்கடி வந்தால் தேவலாம் என்கிற மாதிரி - ஆண்டு விழா வரணும் என்று தோன்றுகிறது. ஆனால், உடல் நிலையைப் பார்க்கிற போது இது எனக்குப் பெரிய தொந்தரவு மாதிரி தான் காணப்படுகிறது. எப்படி இருந்தாலும் சரி.
அடுத்த வருஷத்து விழாவுக்கு நான் இருப்பேனோ, இல்லையோ! இருந்தாலும் விழா இருக்கும்படியான வாய்ப்பு - நடை பெறும் படியான வாய்ப்பு - இருக்குமோ இல்லையோ; உண்மையைச் சொல்லுகிறேன். இதில் ஒன்றும் பெருமைக்காகச் சொல்லவில்லை. ஏன் வாழ்ந்த நாளெல்லாம் ஓர் அளவு மக்களுக்காகத்தான் தொண்டு செய்தேன் என்றாலும், ஏறக்குறைய ஐம்பது வருஷ காலம் பொதுத் தொண்டு நான் செய்தாலும், பெரும்பாலான மக்களுடைய அன்பும் பாராட்டுதலும் பெறும்படியான வாய்ப்புப் பெற்றிருந்தாலும், திருப்தியில்லாத பெரிய மனக்குறையோடுதான் வாழவேண்டியவனாக இருக்கிறேன்.
என்னுடைய தொண்டின் காரணமாக ஏற்பட்ட பல நல்ல காரியங்கள் பாராட்டுதலுக்குரியவை என்றே வைத்துக் கொள்ளுவோம். நம் மக்கள் எல்லோரும் ஏதோ நல்ல அந்தஸ்திலே இருக்கிறார்கள்; பெரும்பாலோருக்கு வெளிப்படையாய் இருந்த இழிவுகள் எல்லாம் நீங்கியும் நீங்கிக் கொண்டும் இருக்கிற ஒரு நல்ல வாய்ப்பிலே தான் இருக்கிறோம். அது யாராலே ஏற்பட்டிருந்தாலும் சரி நல்ல வாய்ப்பிலே இருக்கிறோம்.
ஆனால் ஒன்று சொல்லுகிறேன் - பொறுமையாகக் கேளுங்கள்! நமக்கு இருக்கிற சட்டம் “இந்து வா" என்பதிலே, இந்துக்கள் என்ற சமுதாயத்திலே, பார்ப்பனரைத் தவிர்த்த மற்ற மக்கள் சூத்திரர்கள். அவர்களுடைய தாய்மார்கள், மனைவிமார்கள், சகோதரிகள், மக்கள் ஆகிய பெண்கள் எல்லாம் பார்ப்பானனுக்குத் தாசிகள் என்று சட்டத்திலே இருக்கிறது! தப்புவதற்கே வழி இல்லை!
இது சம்மதம் தானா? இப்படியே இருக்க வேண்டியது தானா? மந்திரியாக ஆனால் போய் விடுகிறதா? இல்லை, கோடீஸ்வரன் ஆனால் போய்விடுகிறதா? இல்லை, பண்டார சந்நிதி - வெங்காயம் ஆனால் போய்விடுகிறதா? என்ன ஆனால் போகிறது? இந்த ஆட்சி ஒழிகிற வரைக்கும் போகாது! அப்புறம் என்ன நான் பிறக்கிறதற்கு முன்னேயே சூத்திரர்கள் நீங்கள்! நான்காவது சாதி நீங்கள்! இப்போது நாளைக்குச் சாகப் போகிறேன். சூத்திரனாய் விட்டு விட்டுத் தானே சாகிறேன். அப்புறம் என்ன என்னுடைய தொண்டு? சிந்திக்கணும் நீங்கள்; கொஞ்சம் கவலையோடு சிந்திக்க வேண்டும். நானும் போய்விட்டேனென்றால், அப்புறம் இதைப் பற்றிப் பேசுவதற்கு ஆள் எங்கே? யார் வருவார்? வந்தால் இவ்வளவுக்குக்கூட விட்டுக் கொண்டிருக்க மாட்டானே அரசாங்கம்!
நானாக இருக்கிறதினாலே கொஞ்சம் சும்மா இருக்கிறான். இன்னொருவன் பேச ஆரம்பித்தால் ஒழித்துப் போடுவான். இப்போதே நம் அரசாங்கத்து மேலே கண் வைத்திருக்கிறான். அது தெரிந்து விட்டது நம் தலைவருக்கு, முதல்வருக்கு அவர் என்கிட்ட வந்தார்:- இப்படி இருக்கிறது நிலைமை; வேலையை ஒழித்துப் போடுவான் போலத்தான் இருக்கிறது; எந்தச் சாக்காவது சொல்லி இல்லை, நானே விலகிக் கொள்ளட்டுமா? என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார். நான் சொன்னேன்: விலக வேண்டாம்; அவனாக விலக்குகிற வரைக்கும் அவனாக விலக்கினால் இன்னும் கொஞ்சம் ஆள் சேருவார்கள் நமக்கு. விலகாதீர்கள்; இருங்கள் - என்றேன்.
அது இன்னும் கொஞ்ச நாளில் நடக்கும், சீக்கிரத்திலே, இப்போதே சி.அய்.டி. ஆங்காங்கே வந்து ரிப்போர்ட் பண்ணுகிறான். இப்போது அய்யா அமைச்சர் அன்பில் இங்கே வந்தது எல்லாம், உடனே இப்போது போயிருக்கும் டில்லிக்கு! இவர் இங்கே இந்தக் கூட்டத்திலே இருந்தார்; இவரை வைத்துக் கொண்டுதான் இராமசாமி பேசினான் என்று! எனக்கும் இவருக்கும் இந்தப் பேச்சிலே ஒன்றும் சம்பந்தமில்லை; மற்ற பேச்செல்லாம் இருக்கலாம்; அதே மாதிரியே ஒப்பந்தம் எங்களுக்குள்ளே! நீங்கள் இதிலே கலந்து கொள்ளக்கூடாது; நானும் உங்களை எதிர்பார்க்கவில்லை என்று! ஆனாலும், அவன் புள்ளி போட்டுக் கொண்டு இருக்கிறான்.
சரி, அப்படி வந்தாலும் நான் அதற்காக ஒன்றும் கவலைப்படவில்லை . நம்மாலே வரக்கூடாது என்கிற எண்ணம்; வந்துவிட்டது! வேறே அவர்களுக்கு நாதி இல்லை; என்கிட்டேதான் வந்தாகணும் மந்திரி சபையை ஒழித்துவிட்டார்கள் என்றால் அவர்கள் எங்கே போவார்கள்? வந்தாக வேண்டும். அப்புறம் இன்னும் நன்றாக நடக்க வேண்டும்! இப்போது அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை.
நாம் என்ன பண்ணுவது இப்போது? இப்போது நாம் சமுதாயத்துப் பேரைச் சொல்லி, பார்ப்பானை ஒழித்துப் பதவிக்கு வந்து விட்டோம். நமக்கு அப்புறம்? நம்மிலே இருக்கிறார்கள் அநேகம் பேர் காட்டிக்கொடுக்கவும், மற்ற காரியங்கள் செய்யவும்! என்ன அவமானம் வந்தாலும் லட்சியம் செய்யாமல், பதவிதான் பெரிது என்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்; அவர்கள்தான் மெஜார்ட்டி!
நம்மை விட்டால், முன்னேற்றக் கழகம் ஒன்று மூணே முக்கால் பேர்; அவர்களும் நம்மிடம் வந்துவிடுவார்கள். கம்யூனிஸ்ட் எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறதுதான் அவன் வேலை. உலகத்திலேயே கொள்கை இல்லாத ஒரு கூட்டம் என்றால் நம் கம்யூனிஸ்டு தான். காங்கிரசு - என்ன பண்ணியாவது பதவிக்கு வரணும் என்கிறவன் அவனோடு போட்டி போடுகிற இன்னொரு காங்கிரசு. இப்போது துவக்கின ஒரு கட்சி இருக்கிறது. அண்ணா முன்னேற்றக் கழகம் என்று, அவர்களுக்கு என்ன வேலை? எதிரிக்கிட்டே பேசிக் கொண்டு, இவர்களை ஒழித்துவிட்டு வருகிறேன்; எனக்கு ஏதாவது எச்சல்கலை போடுகிறாயா? என்று கேட்கிறார்கள். அப்புறம் பார்ப்பான் கட்சி சுதந்தராக்கட்சி, ஜனசங்கக் கட்சி; வெங்காயக்கட்சி தமிழரசுக்கட்சி எவன் ஜெயிக்கிறானோ அவனோடு சேர்ந்து கொள்கிறது: முன்னேற்றக் கழகம் ஜெயித்தால் இவர்களோடே வேறு ஒன்று வந்தால் அவர்களோடே?
அருமைத் தோழர்களே இது நமக்குக் கடைசி முயற்சி என்று நினைக்கணும் இப்படியே சாகிறதைவிட ஈனத்தனம் வேறே இல்லை, ஆனதினாலே ஏதோ ஓர் கிளர்ச்சி செய்கிறேன் இப்போது நான். சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்று அடுத்த மாதம் கூட்டுகிறேன். ஒன்றும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது அல்ல, பெரிய இலாபம் அடைகிறதற்கு அல்ல, நமக்கு இருக்கிற இழிவு போகணும்; அவமானம் போகணும். இப்போது நாம்தான் ஆள்கிறோம்; என்ன செய்ய முடிந்தது?
நம் இயக்கத்தினுடைய இலட்சியம் இந்த (டெல்லி) ஆட்சியை ஒழிப்பது! இதிலிருந்து விலகணும் என்று எவனாவது நினைத்தால், ஏழு வருஷம் தண்டிப்பேன் என்று சட்டம் போட்டானே, எனக்கும் அண்ணாதுரைக்கும் பயந்துதானே, அந்த மாதிரி போட்டான்!
என்னுடைய ஆசையெல்லாம், ஜெயிலிலே செத்தால் மோட்சம் அடைவேன் - இன்பம் அடைவேன். பின்னே எனக்கு ஒன்றும் இல்லை , அருமைத் தோழர்களே! நமக்கு இது ஒரு பரீட்சைக்காலம். சும்மாவே இருந்தால் என்ன ஆகிறது? இந்து மதம் இல்லை என்று அவன் அரசியல் சட்டத்தைத் திருத்தட்டுமே! சட்டத்திலே எல்லாவற்றையும் கட்டிப் போட்டுவிட்டு, அது சொன்னால் தப்பு; இது செய்தால் தப்பு; ஏழு வருஷம் என்றால் எப்படி இது ஒரு நாடாகும்.?
பெரிய கிளர்ச்சி நடந்தால்தான் விஷயங்களைச் சரி பண்ணிக் கொள்ள முடியும். இந்தக் கிளர்ச்சியை ஆரம்பிக்கிற இடந்தான் தமிழ்நாடே ஒழிய, ஒரு வருஷத்துக்குள்ளே இந்தியாவிலே பல இடங்களிலே இந்த நெருப்புப் பிடித்துக் கொள்ளும்! ஆகவே, இங்கே ஒரு ஐயாயிரம் பேர் ஜெயிலுக்குப் போனோம் ஆனால், மற்ற இடங்களிலும் பற்றிக் கொள்ளும். நம் இளைஞர்கள் எல்லாம் துணியணும் எல்லாம் பெண்களாகவே ஜெயிலுக்குப் போகணும். இது சமுதாய சம்பந்தமானது. உங்கள் குடும்பமோ, பிழைப்போ கலந்து கொள்ள இடங்கொடுக்கவில்லை என்றால், நம்மாலான உதவி என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். மாநாடு நடத்த, உடனே நாம் ஒரு லட்ச ரூபாய் சேர்த்தாகணும்!
இன்று எனக்குப் புத்தி சுவாதீனம் இல்லை என்று கூடச் சொல்லுவேன்; என்ன பேசவேணும் என்று இருந்தேனோ ஒன்றும் ஞாபகத்திற்கு வரவில்லை. முந்தாநாள் பூரா ஒன்றுமில்லை; நேற்று ஒரு கப் கஞ்சி, தண்ணீர்கூட இல்லை. இன்று இன்னொரு இட்லி கொடு என்றேன். அம்மா முடியாது என்று சொல்லிவிட்டார்கள் நாசமாய்ப் போகட்டும் என்று சொல்லி விட்டு வந்தேன்.
இப்போது நீங்கள் எல்லாம் பொறுப்போடு வெளியே போகணும். நீங்கள் வந்து அந்த மாநாட்டில் கொடுக்கிற உற்சாகம் தான் மக்களுக்கு நல்லது ஆகும். சும்மா மாநாடு நடத்தி விட்டுப் போகிறதில்லை; நடந்த உடனே கிளர்ச்சி ஆரம்பிப்போம்! நாம் அவர்களுக்கு நோட்டீஸ் விடணும் - என்ன, இதை மாற்றுகிறதற்கு வழி பண்ணுகிறாயா? இல்லை, உன்னை ஒழிக்கிறதா? என்று மாநாட்டுத் தீர்மானம் அதுதான் வரும் அதில்லே time போடுவோம். அது ஆன உடனே, ஆரம்பித்துவிடுவோம்!
நான் ஒன்றும் சும்மா இருந்து கொண்டு அதிகாரம் பண்ணுகிறாற் போல் இல்லை. முதல் பலி நான். என்னைக் கொடுத்து விட்டுத்தான் உங்களைக் கூப்பிடுவேன். அருமைத் தோழர்களே! கொஞ்சம் சீரியஸாக, கொஞ்சம் தீவிரமாகச் சிந்தியுங்கள். என்னுடைய இஷ்டத்தைச் சொன்னேன். இன்னும் உங்களுக்குத் தோன்றுகிற தெல்லாம் சொல்லுங்கள்!
நான் இப்போதும், கடைசியாகவும் வேண்டிக்கொள்கிறேன். மந்திரிகளோ, முன்னேற்றக் கழகக்காரரோ இதில் கலந்து கொள்ளாமல் இருக்கணும். ஏதோ அவர்களாலே ஆன உதவியைச் செய்யட்டும்!
ஏன் என்றால், நான் முன்னமேயே சொன்னேன். "கடைசியாகவும் சொல்லுகிறேன். இது கடைசி முயற்சி, கடைசி முயற்சி; கடைசி முயற்சி வணக்கம்"
அடுத்து பெரியார் மேற்கொண்ட சுற்றுப் பயணத்திலும் இதே கருத்தை வெளிப்படுத்தி வந்தார். 10 ந் தேதி ஜெயங்கொண்டத்தில், முதலில் வடநாட்டார் கடைமுன் மறியல் செய்யலாம், என்றார். அடுத்த நாள் தாதம்பேட்டை பழுவூரில், வசதியுள்ளோர் பொருளுதவி செய்யுங்கள்; வசதியற்றவர் உடலுழைப்புத் தாருங்கள்; உணர்ச்சி உள்ளவர் சிறை செல்ல வாருங்கள் - என்றார்.
11.11.73 அன்று முக்கிய தெரிவிப்பு" என்ன வென்றால்...8, 9 மாநாடுகட்கு முன்பு பெரியார் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். மாநாடு ஒரு வேளை தடை செய்யப்படலாம். அதனால் பெயர்ப்பட்டியலும், பொருளுதவியும் நேரில் பெற வருவார்கள். நவம்பர் 18 முதல் 28 முடிய, 11 மாவட்டங்களில், மணியம்மையார், தோழர்கள் ஆனைமுத்து, செல்வேந்திரன், புலவர் இமயவரம்பன்; சில இடங்களில் வீரமணியும், பெரியாருடன் வருவார்கள். 18 திருச்சி, 19 மதுரை, 20 காரைக்குடி, 21 திருநெல்வேலி, 22 தஞ்சை , 23 சென்னை , 24 வேலூர், 25 கடலுர், 26 தர்மபுரி, 27 சேலம், 28 கோயமுத்தூர் ? இது தான் பயணத்திட்டம் இவ்வளவும் ஒரு அம்பாஸிடர் காரில்.
குணமென்னும் குன்றேறி நின்ற பெரியாரின் வெகுளி வெடித்துச் சிதறியது. 15 ந்தேதி தலையங்கமாய்? என்ன தலைப்பு தெரியுமா? "நமது நாட்டு அரசியல் வாதிகள் பெரிதும் மானங்கெட்ட முண்டங்களே!" சித்தரித்த விஷயமோ சித்திரை வெய்யிலைவிட வெப்பம்! “நாம் பிரிவினை கேட்கிறபடியால், ஏன் இவர்களைப் பிடித்து உள்ளே போடவில்லை ? என்று, தமிழனுக்குப் பிறந்ததாகச் சொல்லி கொள்ளும் தமிழனே துடிக்கிறான். தி.மு.க கட்சி மீதும் பழி சுமத்தி, ஆட்சியை ஒழிக்கப் பார்க்கிறான். என்ன செய்வது? தமிழரில் பலர், அல்லது சிலர், ஈனப்பிறவிகளாய் இருக்கிறார்கள். கலைஞர் மு. கருணாநிதி, சட்டப்படி இந்த நாட்டின் முதல் அமைச்சர். எல்லா விஷயங்களுக்கும் பொறுப்பும் முழு அதிகாரமும் உள்ளவர். அவர் எப்போதாவது பிரிவினை கேட்டாரா? சொல்லட்டும்! அயோக்கியப் பத்திரிக்கைகள், அவர்மீது ஏன் பாய்கிறார்கள்? மனித ஜென்மங்களாக இருந்தால், 1971-ல், எப்போது இவர்கள் கணிப்பையெல்லாம் கடந்து கலைஞர் பரிபூரண மெஜாரிட்டி பெற்றாரோ, அப்போதே இவர்களுக்கு மானம் வந்திருக்க வேண்டும். நானே கூடப் பிரிவினை கேட்கவில்லையே! எங்கள் மீது உள்ள இழிவு நீக்கப்படவில்லையானால், பிரிந்து போவது தவிர வேறு வழி இல்லை என்றுதான் சொல்லுகிறோம். நான் சாகத்துணிந்தவன்; எனக்குச் சமுத்திரம் முழங்கால் அளவுதான்! அட முட்டாள்களா! நான் உங்களுக்கு சேர்ந்துதானே பாடுபடுகிறேன்! டில்லி எழவு எடுப்பதற்கு முன் உங்களோடு எழவா? மானமுள்ளவர்களானால் என்னோடு சேர்ந்து கொண்டு, நீங்களும் போராட வாருங்கள்? மற்ற யோக்கியர் வாலை அடக்கிக் கொண்டு சும்மா வாழுங்கள்
16.11.73 அன்று கலைஞரும் இதே கருத்தை வெளியாக்கினார்:"தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்கச் சதித்திட்டம் தயாராகி, அதில் சில பெரிய மனிதர்களும் ஈடுபட்டுள்ளனர். சட்டத்தைத் திருத்த வேண்டிப் பிரதம மந்திரிக்குத் தாம் கடிதம் எழுதியிருப்பதாக, முதல்வர் கலைஞர் 2.12.73 சென்னையில் சட்ட மன்றத்தில் அறிவித்தார். பெரியாரின் கைப்பை காணாமல் போய்விட்டது. PERIYAR என்று அதில் பொறிக்கப்பட்டிருக்கும். சில தஸ்தாவேஜிகள் உள்ளன என்று 3.12.73 தேதியிட்டு வீரமணி பெயரில் ஓர் அறிவிப்பு வந்தது. சேலம் ரா. தண்டபாணியிடமிருப்பதாகத் தகவல் வந்து விட்டது என்று 6, 12.73 அன்றே செய்தி பிரசுரமாயிற்று.
டிசம்பர் 8,9 திேகளில் சென்னையில் நடக்கும் இழிவு ஒழிப்பு மாநாட்டுக்கு வரவேற்புக்குழு அமைக்கப் பெற்றது. தலைவர் கி. வீரமணி; செயலாளர்கள் என். எஸ். சம்பந்தம். ஜே. சீனிவாசன், புலவர் கோ. இமயவரம்பன். மாநாட்டுத் தலைவர் பெரியார்: திறப்பாளர் சிவகங்கை ஆர். சண்முகநாதன், கொடி உயர்த்துவோர் திருச்சி செல்வேந்திரன். மாநாட்டுக்காகப் பொருளுதவியும், அரிசி போன்ற பொருள்களும் அன்பளிப்பாக வழங்கக் கோரிப் பெரியாரே வேண்டுகோள் விடுத்தார் 1.12.73 அன்று.
2.12.73 அன்று செந்துறையில், தமது எழுபதாவது வயதில், சுயமரியாதைக் கொள்கைகளே உயிர் மூச்சாய்க் கொண்டு வாழ்ந்த புலவர் வை.பொன்னம்பலனார் இயற்கை எய்தினார். பெரியார் அன்னாரின் குடும்ப உதவி நிதிக்காக நூறு ரூபாய் வழங்கினார். புலவல் வை. பொன்னம்பலனார் தான் மட்டும் தன்மான வீரராக வாழ்ந்தவரன்று. அவர் ஒரு பெரிய Mint நாணயத் தொழிற்சாலை போல் பல தோழர்களை உருவாக்கினார். அவரை ஒரு துப்பாக்கித் தொழிற்சாலை என்றுகூடச் சொல்லலாம் திருச்சி மாவட்டம், தென்னார்க்காடு மாவட்டங்களில் அவரால் சுய மரியாதை இயக்கத்திற்குப் பல்லாயிரம் வீரர்கள் படைத்தளிக்கப்பட்டனர்! என்று, "விடுதலை" 7.12.73 துணைத்தலையங்கம் புகழ்ந்தது.
2.12. திருச்சியில் சொற்பொழிவாற்றிய பெரியார், “உலகத்தில் பிறந்த மனிதன் என்றைக்காவது ஒரு நாள் சாகத்தான் போகிறான்; அது ஒரு நல்ல காரியத்திற்காக நடக்கட்டுமே! ஆகவே, நாம் ஒரு துணிவான முடிவுக்கு வந்து விட்டோம். தி.மு.க ஆட்சி ஊழலாமே? அப்படியானால் ஊழல் இல்லாமலா இந்த அம்மையார் ஆட்சியைப் பிடித்தார்கள்? அம்மையாரிடத்தில் தெரிகிறதே அசல் பார்ப்பன வெறிக்கோலம்! முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், இந்நாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி இருவருமே பார்ப்பனர். தமிழ் நாடு தவிர மற்ற மாகாண முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பார்ப்பனர்கள்தான்! இதைச் சொல்ல எங்களுக்கு அச்சம் கிடையாது. காரணம், நாங்கள் ஓட்டுப் பிச்சை கேட்போரல்ல? இவர்கள் சொல்லுகிறார்கள் - நான் சாதாரண ஆளாம்! தடைசெய்து பார்! அப்போது தெரியும்! இந்தியா பூராவும் பற்றி எரியுமே எங்கள் பிரச்சனை ஆகையால் தூங்குவது போல் நடிக்காமல் வீண்குற்றம் சாட்டாமல், பிரச்சனைக்குச் சரியான பதிலை உடனே சொல்லுங்கள்!" என்று முரசடித்தார் பெரியார்
4.12.73 தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஒத்திவைப்புப் பிரேரணைகளுக்கு முதல்வர் கலைஞர், வெகு விளக்கமான திட்டவட்டமான பதிலைத் தெரிவித்தார்: “தடைசெய்யக்கூடிய அளவுக்குத் திராவிடர் கழகம் அவ்வளவு பெரிய கட்சியா என்ன? என்று தென் மாநிலங்களில் சுற்றுப்பிரயாணம் செய்த பிரதமர் சொல்லியிருக்கிறார். பெரியாரின் பிரிவினைக் கோரிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிவிட்டார். அப்படியிருக்க மாநில அரசு மாத்திரம் என் இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்? மேலும், நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளும் சில இருக்கின்றன. நீங்கள் அதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மதுரையில், பிரிவினை கோரும் மாநாடு ஒன்றைப் பெரியார் திறக்க இருந்தார்; அதைத் தடை செய்தோம். பெரியாருடன், அமைச்சர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அங்கு பிரிவினை பற்றிப் பேசப்பட்டால், இது எங்கள் கொள்கை அல்ல என்று நாங்கள் அங்கேயே மறுத்திருக்கிறோம். பெரியார் இப்போது மாத்திரமல்ல; காமராஜர், பக்தவத்சலம் காலத்திலும் பிரிவினை பற்றிப் பேசி வந்துதானிருக்கிறார். நான் இப்போதெல்லாம் தந்தை பெரியார் அவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசி வருகிறேன். இப்போது அவர் நிபந்தனையின் பேரில்தான் பிரிவினை கேட்கிறார். முன்பு பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் (இராஜாஜி) எழுதியதற்கும், நாம் நடவடிக்கை எடுக்கவில்லை . பெரியவர்கள் என்று விட்டுவிடுகின்றோம். இந்த மாநாட்டை ஒட்டி தி.க., ஊர்வலம் எதுவும் நடத்துவதாக இல்லை . ஆனால், நீங்கள் என்னுடன் வந்தால், கோவில்களில், தேவாலயங்களில், எப்படி ஆபாசமாகக் கடவுளர்கள் களங்கப் படுத்தப்பட்டுள்ளனர் என்று காட்ட முடியும்! என விளக்கவுரை புகன்றார் முதல்வர்.
இவ்வாறு பேசுமுன், பெரியார் திடலில் கலைஞர் பெரியாரைத் தனியே சந்தித்தார். மணியம்மையார், வீரமணி, சம்பந்தம், கருணானந்தம் உடனிருந்தார்கள். கர்ப்பக்கிரகக் கிளர்ச்சியைக் கைவிடுமாறு பெரியாரைக் கலைஞர் கேட்டார். நான் நடத்தாமலிருக்க முடியாது. நீங்கள் சட்டப்படி என்னைக் கைது செய்தால், நான் வருத்தப்படமாட்டேன் என்றார் பெரியார். கண்கள் புனல் சிந்தக் கலைஞர், நான் ராஜினாமா செய்து விடுகிறேன். நான் முதலமைச்சராயிருந்து அய்யாவைக் கைது செய்வதா? என்றார். பெரியாரும் கண்ணீர்மல்க உணர்ச்சி வயப்பட்டார். கலைஞர் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்து, அந்தப் பைத்தியக்கார எண்ணம் வேண்டாமென்றார்.
5.12.73 மயிலாப்பூரில் பேசும்போது, “இந்தச் சலசலப்பெல்லாம் எங்களிடம் காட்ட வேண்டாம்! எத்தனையோ வன்முறைகளைச் சந்தித்து, ஈடுகொடுத்து, எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்கள் நாங்கள்! எங்கள் உயிருக்கும் துணிந்துதான் இந்த முயற்சிகளை மேற்கொண் டிருக்கிறோம்" என்று கர்ச்சனை புரிந்தார் பெரியார். பூரிசங்கராச் சாரியார் மீது மகாராஷ்டிர அரசு, வழக்குக் போடப் போவதாக, முதல்வர் வி.பி நாயக், 6-ந் தேதி சொன்னார். திருச்சி மாவட்டம் தவிட்டுப் பாளையத்தில், கிராமப் பஞ்சாயத்து சார்பில், பெரியார் திருமண மண்டபம் கட்டப்பட்டிருந்தது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் எம். வைத்திலிங்கம் ஐ.ஏ.எஸ் 8.12.73 அன்று திறந்து வைத்தார்.
1973 டிசம்பர் 8,9 தேதிகளில் சென்னை பெரியார் திடலில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. முதல் நாள் காலையில் பெரியார் திடலுக்கு எதிரிலுள்ள சாலையில் ஒரு சிலா கருப்புக் கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் வீரமணி ஒரு ஜீப்பில் ஏறிக் கொண்டு, கையில் ஒலிபெருக்கியுடன், அங்கு சென்று பேசத் துவங்கினார். அவ்வளவுதான் அத்தனை கருப்புக் கொடியரும் ஓட்டம் பிடித்தனர் மாநாடு துவங்கியது பகல்12 மணியாவில், ஒரத்தநாடு திராவிடர் கழகச் செயலாளர் எஸ்.பி.சாமி அவர்களின் மகள் செல்வி மணிமொழி ஒரத்தநாடு திரு.சுந்தரராசன் மகன் செல்வன் துரைராஜ் ஆகியோரின் திருமண விழாவினைத் தந்தை பெரியார் நடத்தி முடித்து வைத்தார். வரவேற்புரையில் வீரமணி, அண்ணா "தமிழ்நாடு" தந்தார்; அய்யா அவர்களே, நீங்கள் “தமிழருக்கே!” தாருங்கள் என்று உணர்ச்சி பொங்கிடக் கேட்டார்.
அரசியல் சட்டம் மதச்சார்பின்மையை உண்மையாக்குமாறு திருத்தப்பட வேண்டும்; கிரிமனல் சட்டம் போல் Uniform civil code வேண்டும்; தீண்டாமைக்குப் பதிலாக 'சாதி' என்று அரசியல் சட்டம் 17 வது விதியில் திருத்த வேண்டும்; பார்ப்பனப்பத்திரிக்கைகளை பகிஷ்காரம் செய்தல், கடவுள் மறுப்பு, இந்து அறநிலைய இலாக்கா ஒழிப்பு - ஆகிய பல தீர்மானங்கள் மாநாட்டில் இயற்றப்பட்டன.
9.12.73 அன்று மாநாட்டில் இறுதியாகப் பெரியார் பேரூரை நிகழ்த்தினார்:- “பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர்களே! தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இங்கு எழுந்தருளியிருக்கும் பிரதி நிதிகளே! சொற்பொழிவாற்றிய பேரறிஞர்களே!
இப்போது நல்லசொற்பொழிவுகளைக் கேட்டு, ரொம்ப உணர்ச்சியோடு, பக்குவமான நிலையில் இருக்கிறீர்கள். நான் பேசுவதன் மூலம் எங்கே இது கலைந்து போய்விடுமோ என்று பயப்படுகிறேன். அவ்வளவு நல்ல தெளிவாக, யாருக்கும் விளங்கும் படியும், ஒவ்வொருவர் மனமும் உடனே காரியத்தில் இறங்கும் படியான உணர்ச்சி ஏற்படும்படியும், நல்லவண்ணம் அவர்கள் பேசினார்கள். எனக்கும் தெரியாத, இதுவரையிலும் நான் தெரிந்திருக்காத, அநேக அருமையான விஷயங்களை எல்லாம் பேசினார்கள். நாம் செய்வது ரொம்ப அவசியமான காரியம் - ஞாயமான காரியம் என்று கருதும்படி நல்லவண்ணம் விளக்கினார்கள். இனி நான் சம்பிராயத்துக்குத்தான் இரண்டொரு வார்த்தைகள் பேச வேண்டியிருக்கிறது.
தோழர்களே! நான் இந்த மாநாடு கூட்டி இருப்பதன் நோக்கம் போராட்டத்தை உத்தேசித்து அல்ல; அல்லது இந்த ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என்கிற எண்ணத்தை உத்தேசித்து அல்ல; மனித சமுதாயமாகிய நம், சமுதாயத்திலே ஈனப்பிறவிகளாக, அசிங்கமான கருத்தில் இன்னொரு சாதியனுக்கு, அதிலும் நம் நாட்டில் பிழைக்க வந்த ஒரு சிறு கூட்டத்தானுக்கும் அடிமைகளாக, தாசி மக்களாக இருந்து வருவதே ஆட்சியின் தன்மை, என்கிற இழிலான நிலைமையிலே இருந்து மாற வேண்டும் என்று கேட்கிறோம். இது இயற்கை!
இப்போது, நண்பர் நமது கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இந்தக் கோயில் அர்ச்சகர் வேலையாரும் பண்ணலாம் என்று தீர்மானம் பண்ணியுங்கூட, இந்த அரசாங்கம் செய்த சட்டம் செல்லாது என்று பண்ணி, நமது இழிநிலையைச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தி விட்டதனாலே, நமக்கு ஆத்திரம் கொஞ்சம் அதிகமாகிப் போயிற்று. அதனாலே உணர்ச்சி வந்தது. மாநாடு போட்டோம் இது ஒரு திருப்திகரமான மாநாடு. நமது ஆசைப்படி எல்லாமே நல்ல வண்ணம் நடந்து இருக்கிறது.
இப்போது நல்ல தீர்மானங்களைப் போட்டுவிட்டோம். அழகுக்காகத் தீர்மானம் போடவில்லை; கண்டிப்பாக இழிவு தீர வேணும், இது போகாவிட்டால் நம் கதி என்ன ஆகும் என்கிற நிலைமையிலே இந்தத் தீர்மானங்களைச் செய்து இருக்கிறோம். எனக்கு ஒரு பொறுப்புக் கொடுத்திருக்கிறார்கள்; எப்போது செய்கிறது என்கிறதைப் பற்றித் தலைவர் சொல்லுவார் என்று!
முதலாவதாக நான் தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன். மாநாடு முடிந்தவுடனே தீர்மானங்கள் மந்திரிகள், குடி அரசுத் தலைவர், இந்தியப் பிரதம மந்திரி இந்திரா அம்மாள் அவர்களுக்கும், மற்றும் பார்லிமென்ட் மெம்பர்களுக்கோ, நம் அரசாங்கத்துக்கோ, இன்னும் யார் யாருக்கோ அனுப்பி, அவர்கள் நம் சேதிகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று ஆதரவான பதிலை அனுப்பி வைக்க வேணும் என்று கேட்கப் போகிறோம். அது வந்த பிறகு, நம் மக்களுக்கு அனுகூலமாக இல்லாவிட்டால், கிளர்ச்சியில் இறங்குவது என்று திட்டம் போட்டு இருக்கிறோம். பெரிய காரியந்தான்!
தோழர்களே! நான் நினைக்கிறேன்; இவ்வளவு பெரிய காரியத்திற்கு நிபந்தனை போட, கொஞ்சம் வாய்தா கொடுத்துதான் ஆக வேண்டும் வருகிற ஜனவரி மாதம் குடியரசு நாளாகிய 26ந் தேதி வரைக்கும் வாய்தா கொடுக்கலாம். 45 நாள் இருக்கிறது; போதும். நமக்கும் பிரச்சாரம் பண்ண நாள் வேண்டியதுதான். அதற்குள்ளே நம் மக்களுக்கு உணர்ச்சி மறந்து போகாது. ஆதரவு அதிகமாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.
அன்றைய முதற்கொண்டே நாம் சொல்லி வருகிறோம். இது சுதந்தரநாள் அல்ல, துக்க நாள் மோசடி, நம்மை ஏமாற்றத் துரோகம் செய்கிற நாள் என்று. அதே போல், பிற்பாடு டாக்டர் அம்பேத்கரே ரொம்ப வருத்தப்பட்ட மாதிரி, அரசியல் சட்டமும் ஒரு மோசடி. அது ஒரு மனு தர்ம சாஸ்திரம். பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்ற காரியம் என்றெல்லாம் நான் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேன். யார் கவனிக்கிறார்கள்? அரசியல் வந்துவிட்டது என்றாலே, அவனவன் ஓட்டுக்கும், பதவிக்கும், மந்திரி வேலைக்கும் கவலையோடு இருந்தானே தவிர, சமுதாயத் துறையிலே நமக்கு இந்தக் கேடு இருக்கிறது என்று இன்றைக்கு யாருக்குக் கவலை இருக்கிறது.?
இன்றைக்கு நான் சொல்லுவேன் - நமது முன்னேற்றக் கழகத்துக்காரர் சரியாக இருக்கிறார் என்று சொல்ல மாட்டேன். ஏதோ சில பேருக்கு இருக்கலாம். மற்றவர்களுக்கு ஏதோ அவர்கள் பதவி பட்டம் அது இது அந்த மாதிரி ஆகிப்போயிற்று நிலைமை. இந்த அரசியல் அவ்வளவு கீழ்த்தரமாகிப் போனதனாலே, அதிலே பிரவேசிக்கிறவர்கள் யாரும் வெட்கப்படுவதற்கு இல்லாமல் - அது இது அந்த மாதிரி ஆகிப்போயிற்று நிலைமை. இந்த அரசியல் அவ்வளவு கீழ்த்தரமாகிப் போனதனாலே, அதிலே பிரவேசிக்கிறவர்கள் யாரும் வெட்கப்படுவதற்கு இல்லாமல் - அது மூலமாக ஒரு பரிகாரமும் செய்கிறதற்கு இல்லை. இப்போது நாம்தான் ஏதோ கத்திக் கொண்டிருக்கிறோம். நமக்கும் அவ்வப்போது சரி பண்ணிக் கொள்ளத்தான் முடிகிறதே தவிர, நிரந்தரமாய் இல்லை. மந்திரிமார்களிலேயும் சில பேருக்கெல்லாம் கொஞ்சம் உணர்ச்சி இருக்கிறது. சில பேர் பதவியை விட்டு வந்து விடுகிறேன் என்று கூடச் சொன்னார்கள். நண்பர்கள், போகட்டும்!
அநேகமாக நான் சொல்லுகிறேன், பார்ப்பானோடு போராடுகிற கடைசிப் போராட்டம் என்று இதை வைத்துக் கொள்ளணும். இதிலே வெற்றி பெறவில்லையானால், அப்புறம் நமக்கு வாய்ப்பே இல்லை! இப்போது. எப்படி இதை அடக்குகிறது. அழிக்கிறது என்று அவர்கள் ரொம்பத் திட்டம் போடுவார்கள். நாம் எவ்வளவு உறைப்பாக, துணிச்சலாக, கஷ்டத்தை ஏற்றுக்கொள்கிற தியாக உணர்ச்சியோடு இருக்கிறோமோ அதைப்பொறுத்துதான் இதற்கு ஏற்படுகிற மதிப்பு இருக்குமே தவிர, சும்மா வேஷத்தினாலே மதிப்பு ஏற்படும் என்று நினைக்க முடியாது. அந்த மாதிரி உணர்ச்சியோடு நமக்கு இதிலே வாய்ப்பு வந்து சாதாரணமான முறையிலே இதற்கு அடக்கு முறை வருகிறது என்றால், நமக்கு வெற்றியைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை .
நாம் கூடுமான வரைக்கும் பெண்களை இதிலே பூற வைக்கணும். ஆண்கள் தான் ரொம்பபேர் வர முடியும்; இருந்தாலும், ஆயிரம் பேர் போனார்கள் என்றால் அதிலே பெண்கள் 100 பேர் இருக்கணும். கிளர்ச்சிக்கு அது ரொம்பத் தூண்டுகோலாய் இருக்கும். பிடிக்கப் பிடிக்க அடுத்த அணி வந்து கொண்டே இருக்கவேணும்.
இயக்கத்துக்கு இறங்குகிறவர்கள், மன்னிக்கணும், ரொம்ப ஒழுக்கமாக இருக்கணும், இந்த கிளர்ச்சிக்கு ஒரு கவுரவம் இருக்க வேணும். நாணயம் இருக்க வேணும். பார்க்கிறவன் எல்லாம் கூட இதை மதிக்கணும். அதிலே ஒவ்வொருவரும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நம் மக்கள் எடுத்துக் கொள்கிற முயற்சி எந்த விதமான விரோத உணர்ச்சி அல்ல, குரோத உணர்ச்சி அல்ல, யார் பேரிலேயும் வருத்தம் இல்லை; நம் காரியத்துக்காகத்தான் நாம் செய்கிறோம் என்கிற மாதிரிதான் நடத்தை, காரியம் எல்லாம் இருக்க வேணும், மனதிலேயே வெற்றி பெறுகிறோமோ, தோல்வி அடைகிறோமோ என்கிற எண்ணமே இருக்கக்கூடாது. நமக்கு ஞாயம் இருக்கிறது. செய்கிறோம். மக்களும் தாராள மனப்பான்மையோடு இருக்கிறார்கள் - அரிசி, பணம், கேட்டதற்கு மேலேயே கிடைக்கிறது. இதை ஒரு தொந்தரவாக யாரும் நினைக்கிறவர்கள் இல்லை ; ஒருவர் கூட இல்லை .
மனதிலே நினைத்துக் கொள்ளுங்கள். நாம் ஒன்றும் தப்புப் பண்ணவில்லை. முன்னாடியே செய்திருக்க வேண்டிய காரியத்தைத்தான் இப்போது செய்கிறோம். இதைச் செய்யாததனாலே இன்னும் இழிவிலே இருக்கிறோம் என்கிற தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. நமது தோழர்கள் எல்லாரும் சொன்னதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறேன்.
இந்தப் பார்ப்பனப் பத்திரிக்கைக்காரர்களும் தங்களின் சுய நலத்தை உத்தேசித்தாவது யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டியது. இன்னமும் இப்படியே இருக்க வேணும் என்று அவர்கள் நினைத்தார்களானால், அது அவர்கள் தப்புத்தான். நாளா வட்டத்திலே அப்படியே போய்விடும் என்று கருத வேண்டாம் என்று - விஷயங்களை எல்லாம் உங்களுக்கு எடுத்துச் சொல்லி, நான் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன். இப்போது நேரம் இரவு 8 மணி ஆகிறது. முடிக்கிறேன் நான். தயவு செய்து நீங்கள் எல்லாம் நன்றாக, மனதிலே உற்சாகமாக, எங்களுக்கு உற்சாகம் ஏற்படும்படியான மாதிரியிலே, நீங்கள் மற்றும் தினம் அங்கங்கே நடைபெறும் காரியங்களிலிருந்து, இதற்கு ஒரு நல்ல நேரம் என்று கருதிச் செய்யணும். வேறே ஒன்றும் நான் அதிகமாகச் சொல்லவில்லை .
மற்றபடி, நீங்கள் இவ்வளவு நேரம் காது கொடுத்ததற்கும், இரண்டு நாளாக நீங்கள் உங்களுடைய வேலைவெட்டி எல்லாம் விட்டுவிட்டு வந்து உற்சாகமூட்டி இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு கொடுத்ததற்கும், மற்றும் பொது மக்கள் இதற்கு ஆதரவாய் என்னென்ன உதவி பண்ணவேணுமோ அவைகளை எல்லாம் செய்ததற்கும், தோழர்கள் சிலர் நம் இயக்கத்திற்காக ரொம்ப உற்சாகமாகப் பணியாற்றி உதவி செய்ததற்கும், நான் அவர்களுக்கெல்லாம் நன்றி செலுத்துகிறேன். அதிகமாகச் சொல்லவில்லை வணக்கம்"
10.12.73 அன்று பெரியார் “விடுதலை” யில் “அப்புறம் என்ன?" என்ற தலையங்கத்தை எழுதி முடித்தார். ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சி 24.1.1974 அன்று துவக்கம், 5 பிரச்சாரப் படைகள் புறப்படும். கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை, கடலூர், கோவை ஆகிய இடங்களிலிருந்தும், ஒவ்வொரு பிரச்சாரப் படையிலும் 5 முதல் 10 பேர் வரை புறப்படுவார்கள்; கருஞ்சட்டையணிந்து, கால்நடையாகவே, வழியெல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டும், 5 பைசாவிலிருந்து கிடைக்கும் அளவு நிதியோ மற்றும் பண்டங்களோ வசூல் செய்து கொண்டும், சென்னையை நோக்கி வருவார்கள்! வழியில், கிளர்ச்சியில் பங்கேற்ற தொண்டர்களையும் திரட்டுவார்கள். - என்று தெரிவித்தார் பெரியார். அத்துடன் தமது சுற்றுப் பயணத் திட்டத்தையும் இறுதியாக உறுதி செய்து விட்டார். டிசம்பர் 12 புகலூர், 16 திருச்சியில் தென்பகுதி ரயில்வேத் தொழிலாளர் யூனியன் நீண்ட நாட்களாய் நடத்தி வரும் பெரியார் பிறந்தநாள் விருந்தில் கலந்து கொள்வது, 17 கும்பகோணம், 21 திருவண்ணாமலை, 22 கந்திலி பஞ்சாயத்து யூனியனில் அண்ணா படத்திறப்பு, 23 வ.ஆ திருப்பத்தூர் - காலை 11 மணிக்குப் பகுத்தறிவாளர் கழகத் துவக்கம்; மாலை பொதுக்கூட்டம், 28 இரும்புலிக்குறிச்சி, 29 உறையூர்.
"கழகத்தில் சதியா?” என்ற தலைப்பில், 'ஆசிரியருக்குக் கடிதம்' பகுதியில், 14.12.73 "விடுதலை" யில், ஒன்று பிரசுரமாகியிருந்தது. மயிலாப்பூரில் நடிகவேள் எம்.ஆர். ராதா, வீரமணியைக் குறைகூறி வெளிப்படையாகப் பேசியதாகவும், ராதாவை முக்கியமாக வைத்து இரண்டொருவர் சேர்ந்து, 'பெரியார் திராவிடர் கழகம்' என ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்திருப்பதாகவும், செ. துரைசாமி எழுதியிருந்தார். 16ந் தேதி வில்லிவாக்கத்தில் பேசிய அமைச்சர் என்.வி. நடராசன், “பெரியாரின் பிரச்சினைதான் என்ன என்று அறியப் பிரதமர் இந்திராகாந்தி, பெரியாரைச் சந்தித்துப் பேசட்டுமே" என்று கூறினார். 20 ந்தேதி சென்னையில், “பெரியார் சொன்னது போல் நாங்களெல்லாம் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள். எங்களிடம் மிரட்டாதீர்கள். தாழ்த்தப்பட்டோர் ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வரலாம்; ஆனால் அர்ச்சகராக வரக்கூடாது என்றால் என்ன நியாயம்?” என்று கேட்டார் முதல்வர் கலைஞர். மலேசிய திராவிடர் கழகத் தலைவர் கே.ஆர். இராமசாமி, தமிழகம் வந்திருந்தவர் 19.12.73 அன்று, தந்தை பெரியாரையும், முதல்வர் கலைஞரையும் சந்தித்துப் பேசினார். பெரியாரின் புதுவேனில் பெட்ரோலுக்குப் பதில் டீசல் எண்ணெயில் ஓடுமாறு எஞ்சினை மாற்றிட உதவினார் அமைச்சர் ராஜாராம். 19ந் தேதி அவர் தம்மைப் பார்க்க வந்தபோது, "அய்யா வாங்க; திருச்சியிலிருந்து நான் இங்கு வர 400 ரூபாய் ஆகும். முன்னே , இப்போது 60 ரூபாயில் வந்து விட்டேன். நன்றிங்க!" என்றார் பெரியார். ராஜாராம் மிகுந்த உரிமைக் கோபத்துடன், யாரிடத்தில் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள், என்று கடிந்து கொண்டார்.
19.12.73 அன்று பெரியார் சென்னையில் இருந்தார். அடுத்து 21ந் தேதி திருவண்ணாமலை செல்ல வேண்டும். அன்று ஒரு நாள் ஏன் சும்மா இருக்க வேண்டும்? 12.10.1970 ல் தியாகராய நகரில் திடீர் பிள்ளையார் பற்றிப் பெரியார் பேச இருந்த கூட்டம் ஒத்திவைக்கப் பட்டு, அந்தத் தோழர்கள் கூட்டத்திற்காகத் தந்திருந்த பணம் பெரியாரிடமே இருந்தது. இது பெரியாரின் மனத்தை உறுத்திக் கொண்டே இருந்தது. வந்தது போலும் அதற்குத் திடீரென்று, இந்தப் பத்தொன்பதாந்தேதியை ஒதுக்கினார் பெரியார். மூன்றாண்டுகட்கு முன்னர் குறிப்பிடப்பட்ட அதே தியாகராயநகர் பேருந்து நிலையம் அருகில், அதே சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில், 19.12.73 அன்று, பெரியார் எனும் முதிர்ந்த போர்முரசம் அதிர்ந்தது. முத்து முத்தாய் உதிர்ந்தன கருத்துக்கள். விதிர்த்து நடுங்கிய வேதகால ஆதி மூடவைதிகம்!
பேருரை தொடங்குகிறது:- “பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! பெரியோர்களே!
இன்றைய தினம் இந்த இடத்திலே, சமுதாய இழிவு ஒழிப்பு சம்பந்தமாகச் சென்னையில் 10 நாட்களுக்கு முன்னால் நடந்த மாநாட்டுத் தீர்மானத்தை விளக்கவும், மற்றும் நம்முடைய கடமைகளை எடுத்து விளக்கவும் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படிப் பேரறிஞர்கள் பலர் அத்தீர்மானங்களை விளக்கியும், மற்றும் பல நல்ல அரிய விஷயங்களையும், எல்லாம் நல்ல வண்ணம் எடுத்து விளக்கினார்கள். என்னையும் ஒரு முக்கியப் பேச்சாளனாக இதிலே குறிப்பிட்டு இருக்கிறபடியினாலே, நானும் சில வார்த்தைகள் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தோழர்களே! நான் பேச்சுத் துவக்குவதற்கு முன்பாக, நமது நண்பர் உயர்திரு வீரமணி அவர்கள், நம்முடைய கழக லட்சியச் சொல்லை விளக்கினார்கள்! நானும் விளக்கும்படிக் கேட்டுக் கொண்டேன். அதிலே நம் கழகத் தோழர்களுக்கு ஒன்றும் கஷ்டம் இருக்காது. புதிதாக வருபவர்களுக்கும், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் மூட நம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கிறவர்களுக்கும் கொஞ்சம் சங்கடம் ஏற்பட்டு இருந்தாலும் இருக்கலாம்; என்னடா, கடவுளை இப்படி எல்லாம் சொல்லுகிறான் - என்று கடவுளைச் சொல்லுகிறதோடு இருக்காமல் கடவுளை நம்புகிறவர்களைக்கூட முட்டாள் பயல் என்று சொல்லுகிறானே இது என்னடா? என்று சில பேருக்குக் கோபம் வரலாம்.
கடவுள் சங்கதியை எடுத்தால் ஒருவனுக்கும் ஒருவன் நம்பிக்கைக்காரனும் நம்பிக்கை இல்லாதவனும் - அவனை இவள் முட்டாள் என்று சொல்லியாகணும், இவனை அவன் முட்டாள் என்று சொல்லித் தான் ஆகணும். ஆனாலும், நாங்கள் பகுத்தறிவை அடிப்படையாக வைத்துக் கடவுள் சங்கதி பேசுகிறதினாலே, கொஞ்சம் மரியாதையாக மானத்தோடு பேசுவோம். பகுத்தறிவு இல்லாதவர்கள் கொஞ்சம் கடுமையாகத்தான் பேசுவார்கள்; நம்மைவிட மோசமாக!
உதாரணமாகச் சொல்லுவேன், நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாடிய ஆழ்வார்கள், தேவார திருவாசகம் பாடிய நாயன்மார்கள் இவர்களைவிடக் கேவலமாக நாங்கள் சொல்லுவதில்லை; இதை மனத்திலே வையுங்கள். நாங்கள் இவனையோ, இவன் புத்தியையோதான் திட்டுவோம். இவனோ அவர்களது பெண்டாட்டி பிள்ளைகளையெல்லாம் திட்டுகிறான். தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்பவன், கடவுள் இல்லை என்கிறவனை எல்லாம் வெட்டு, வெட்டு என்கிறான். பாட்டிலேயே இப்படி என்றால், காரியத்திலே எப்படி? தேவாரம் பாடினானே சம்பந்தர் என்பவன், கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டியுடன் நான் சேரணும். “இசைத்து வை” என்று கடவுளையே கேட்கிறான். இவன் பக்தனாம், அயோக்கியப்பயல்! |
கடவுளைப் பற்றி அறிவைக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள்; சிந்தியுங்கள் என்றுதான் சொன்னான் புத்தன். அவனை வெட்டி, தலை வேறு முண்டம் வேறாகக் குவித்தார்கள். எல்லாமே கோயிலிலே சிற்பமாகச் சித்திரமாக அடித்து வைத்திருக்கிறானே. இன்னொரு அயோக்கியக் கூட்டம் சைவர்கள், 8,000 பேரைக் கழுவிலே நிர்வாணமாக்கி ஏற்றினார்கள் சமணர்களை, இதற்கும் புராணம் எல்லாம் இருக்கிறது.
மற்றும் இன்றைய தினம் அரசியலிலே இருக்கிற அயோக்கியர்களோ, அரசியல் சட்டம் செய்த காலத்திலே நம்மையெல்லாம் தாசி மக்கள், சூத்திரர்கள் என்று எழுதினார்கள். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவன், முஸ்லீம் பார்சி தவிர மற்றவனெல்லாம் இந்துவாம். இந்துவிலே 100க்கு 2% பேராக இருக்கிற பார்ப்பான் தவிர, பாக்கி 97¼ பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சட்டத்திலே எழுதி வைத்திருக்கிறான். என்ன காரணம் அவனைத் திரும்பக் கேட்காதது தான் காரணம்
நமது பெண்டுபிள்ளைகளை விட்டு, அரசியல் சட்டத்தைத் தெருவிலே போட்டுச் சீவுகட்டையால் குத்தினால், ஏன் என்று கேட்பானல்லனா? அப்போது சொல்லங்கள்: சும்மா கேட்டுச் சிரித்து விட்டுப் போவதால் என்ன பயன்? இது 2,000 வருஷமாய் இருக்கிறது, ஜனசாதி என்று. முஸ்லீம்களில் ஈனசாதி கிடையாது. ஒருவனுக்கு கொருவன் தொட்டுக் கொள்வான். ஒரே பீங்கானில் சாப்பிடுவான், எச்சில் கிடையாது. அவ்வளவு சகோதரத்துவம் இந்த மதத்தின் தன்மை. கிறிஸ்தவனும் கவலைப்படமாட்டான். சாதி என்று ஒருவனைக் குறைசொல்ல மாட்டான். பார்ப்பானும் அதே மாதிரி தங்களுக்குள்ளே மேல்சாதி கீழ்சாதி கிடையாது; எல்லாரும் ஒஸ்தி. நாம் எல்லோரும்தான் அவனுக்குத் தேவடியாள் மக்கள். இப்படி இருக்கக் காரணம் என்ன?
நண்பர்கள் சொன்னார்களே, அது போல, நாம் இந்த 50 வருஷமாய் உழைத்ததிலே ஏதோ கொஞ்சம் மாறுதல், நம் எதிரிலே சூத்திரன் என்று சொல்ல மாட்டான். வீட்டிலே எல்லாம் 'இந்த சூத்திரப் பயல்கள்' என்றுதான் பேசுவான். நாம் இந்த இழிவிலே இருந்துதான் நீங்கணும். சட்டத்திலே இருக்கிறதை என்ன பண்ணுகிறது? ஏதோ நாங்கள் கொஞ்சம் உணர்ச்சியோடு இருக்கிறோம். எங்களைத் தவிர நாதி இல்லையே இந்தநாட்டில்! எத்தனை நாளைக்கு நாம் இப்படியே கட்டிக் காத்துக்கிட்டு இருப்போம்? நாம் ஒழிந்தால் நாளைக்கே மாற்றிவிடுவானே!
நம்முடைய கலைஞர் கருணாநிதி அவர்கள், 'கல்தானே! யார் வேண்டுமானாலும் பூசை பண்ணலாம். ஆனால் முறைப்படி செய்யணும்' என்று யாவருக்குமே அனுமதி கொடுத்தார். பார்ப்பான் கோர்ட் - சுப்ரீம் கோர்ட் என்றால் பார்ப்பான் கோர்ட்தான் - பார்ப்பனத்தியால் நியமிக்கப்பட்டவர்கள் - கோயிலுக்குள்ளே போகிறது சாஸ்திரவிரோதம் - ஆகமப்படி செய்ய வேணும் என்றார்களே - எந்த ஆகமத்தை, எவன், எப்போது, எழுதினான்? யாருக்காவது தெரியுமா? எழுதியவனுக்கு வயது என்ன? யாராவது சொல்ல முடியுமா?
நாம் மிகப்பெரிய சமுதாயம். நாம் எவ்வளவு முன்னுக்கு வரவேண்டியவர்கள். நாதியற்றுப் போய்க் காட்டுமிராண்டியாக அல்லவா இருக்கிறோம்! வெள்ளைக்காரனைப் பாருங்கள்! நாம் வேட்டி கட்டிகிட்டு இருந்த போது, அம்மனமாய்த் திரிந்தவர்கள், ஆகாயத்துக்கு மேலேபோய், சந்திரனில் அல்லவா உட்கார்ந்து விட்டு வருகிறார்கள், இன்னும் அவர்கள் செய்கிற அதிசய அற்புதங்களைப் பார்த்தால், உங்களுக்குப் புரியக்கூடப் புரியாதே!
அருமைத்தோழிகள்! இப்போது நமக்கு மான உணர்ச்சி வேணும்; இழிவு நீங்கவேணும் அப்புறம் மேலே போகலாம்; போகணும் சுயமரியாதை இயக்கம் வராதிருந்தால் நமக்குப் படிப்பு ஏது சொல்லுங்கள், 100க்கு 10 பேர் கூடப் படிக்க வில்லையே! நாம் தான் ஆரம்பித்தோம் அறிவைப்பற்றி! சுயமரியாதை. இயக்கம் ஆரம்பித்துபோது அதற்கு என்ன கொள்கை தெரியுமா? ஐந்து கொள்கைகள்:- 1. கடவுள் ஒழியணும், 2. மதம் ஒழியணும், 3. காந்தி ஒழியணும், 4. காங்கிரசு ஒழியணும், 5. பார்ப்பான் ஒழியணும். அன்று முதல் இன்றைய வரைக்கும் இந்த 5 கொள்கைகள்தான் நடக்கின்றன.
காந்தியை ஒழித்துப் போட்டார்கள். காங்கிரசும் ஒழிந்தது. அது இனிமேல் உருப்படியாகாது. கடவுளும் தெருவிலே சிரிப்பாயச் சிரிக்கிறார். அதுதான் வீரமணி சொன்னாரே, கடவுளையே செருப்பால் அடித்தார்கள் என்று. என்ன ஆயிப்போயிற்று? கடவுளைச் செருப்பாலே அடித்தான். அதனாலே ஒட்டுப் பண்ண வேண்டாம் என்று காமராஜர் முதற்கொண்டு தப்பட்டை அடித்தார்களே - என்றைக்கும் வாராத அளவுக்கு மேலே வந்து விட்டார்கள்! முன்னேற்றக் கழகத்துக்காரன் 185 பேர். அவர்களை ஆதரிக்கிறவர்கள் 20 பேர். காங்கிரஸ் காந்தி கடவுள் வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20 பேர் கூட வரவில்லையே! ஆனதனாலே, மக்கள் அறிவு பெற்றுக் கொண்டுதான் வருகிறார்கள். பயன்படுத்திக் கொள்ள வேணும்; அவர்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லணும், தெரியாது வெகுபேருக்கு.
தீண்டாமை இல்லை என்று சட்டத்திலே எழுதிப் போட்டான். ஆனால் மதத்திற்கு மாத்திரம் உண்டு என்று அதிலே ஓர் நிபந்தனை. அதே மாதிரிதான், எல்லாருமே கோயிலுக்குப் போகலாம் என்று சட்டமே பண்ணினால், அந்தச் சட்டம் செல்லாது என்று ஆகிவிட்டதே! இவை போலத்தானே சாஸ்திரத்திற்கு விரோதமாய் இருக்கிற எந்தக் காரியமும் இனிமேல் செல்லாது என்று வரும்?
ஆகவே இதை மாற்றியாகணும்; பெரிய முயற்சி பண்ணனும். அரசியல் சட்டம் என்றால், ஓர் அரசாங்கம் நடத்துவதற்கு அது வேண்டியது தான், ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசாங்கம் நடக்கிறதற்கு சூத்திரன் இருக்க வேணுமா? பார்ப்பான் இருக்க வேணுமா? மனுஷன்தானே இருக்க வேணும்!
நேற்று நடந்த மாநாட்டுக்கு வேறே கட்சிக்காரர்களுடைய ஆதரவு ஒன்றும் வரவில்லையே! வரலாம் அல்லவா? டெல்லிக்காரன் சி.ஐ.டியை வேறு போட்டு விட்டான்; அதைப் பார்த்து, வேறு கட்சிகாரர் ஒருவருமே வரவில்லை ! இழிவு ஒழிய வேணும் என்றால், இழிவுக்கு ஆளானவன் எல்லாரும் வரணுமே, வந்து உதவி செய்ய வேணுமே; எங்களோடு சேர்ந்தால் ஓட்டுப் போய்விடுமோ என்று பயப்படுகிறார்கள். மானம் போவது பற்றி யாருக்கும் கவலையில்லையே! நாம் முன்னேற்றம் அடையணும். பள்ளத்திலே கிடக்கிறோம்; முதலில் எழுந்து நிலமட்டத்துக்கு வரணும். அப்புறம் மேலே ஏறணும். யாரும் கவனிக்கவில்லை . ஆனால், நாங்கள் ஒன்று போனால் ஒன்று, ஏதோ செய்து கொண்டே இருக்கிறோம்!
நம்முடைய கடவுள் என்கிறான், நம்முடைய மதம் என்கிறான், நம்முடைய சாஸ்திரம் என்கிறான், நம்முடைய மனுதர்மம் என்கிறான், என்ன என்று தெரியாது. ரூபாய்க்கு எத்தனை படி என்று கேட்போம். ஒன்றுமே தெரியாமல் ஏன் என்ன எப்படி என்று கேட்காமல், எல்லாம் நம்முடையது என்று அவன் சொல்லுவதால் அடிமையாக இருந்து, ஏற்றுக் கொள்ளுகிறோம்.
இப்போது நாங்கள் வந்து, இந்த பிரச்சனையிலே, கடவுளைக் கும்பிடாதீர்கள் என்று சொல்லவில்லை. கடவுள் இருக்கிறதாக நினைக்காதிர்கள் என்று சொல்லவில்லை. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். கடவுள் என்றால் என்ன என்று சொல்லுங்கள் - அவ்வளவுதான் நாங்கள் சொல்லுகிறோம். ஒன்றுமேயில்லாமல், எந்த முட்டாளோ சொன்னான் என்பதற்காக, மரம் மட்டை பாம்பு பல்லி வரையில் கடவுள் என்றால், அது முட்டாள் தனம், பைத்தியக்காரத்தனம் ஆகாதா? இவ்வளவும் பண்ணியும் இன்னும் தேவடியாள் மகன் என்ற பட்டம் நம் தலைமேல் அல்லவா இருக்கிறது!
ஆகவேதான் எந்தச் சங்கதி எப்படி ஆனாலும், இப்போது நாம் ஆரம்பித்துள்ள இழிவு ஒழிப்புக் கிளர்ச்சிக் காரியம் மிகவும் ஞாயமானது என்பதற்கு, நான் உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். இப்போது மகாநாடு நடந்து 10 நாள் ஆகிவிட்டது. பத்தாயிரக் கணக்கிலே மக்களும், 30க்கு மேலே பத்திரிக்கைக்காரர்களும் வந்தார்கள். சேதி பரவிவிட்டது. யாராவது இதுவரையில் எதிர்த்துப் பேசினார்களா? இல்லை, நாம் பண்ணினது அவ்வளவு நேர்மையான காரியம். எவன் சொல்லுவான் நான் தேவடியாள் மகனாகத்தான் இருக்கணும் என்று? நாம் தயாராய் இருக்கிறோம். அப்புறம் அவன் பரிகாரத்துக்கு வரணும். நீ போப்பா வெளியே உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2,000 மைலுக்கு அப்பால் இருக்கிறாய்; உன் பேச்சு வேறே; உன் பழக்கவழக்கம் வேறே, உன் நட்பு வேறே!
(இந்த இடத்தில் பெரியாருக்கு நோய்க்கொடுமை மிகுந்தது. வலி பொறுக்க முடியாமல் சிறிது நேரம் ம்.ம். அம்மா . ஆ.ஆ. அம்மா . என்று துடிக்கிறார். பின் இயல்பாகவே பேசுகிறார்.)
நீ மரியாதையாகப் போய்விடு. ரகளை வேணாம். நீ இல்லா விட்டால் எங்களுக்கு என்ன நஷ்டம்? உப்பு இல்லையா, தண்ணி இல்லையா, காடு இல்லையா, மலை இல்லையா, நெல் கம்பு விளையவில்லையா? நீ எங்களுக்கு இதுவரை பண்ணின நன்மை என்ன? மரியாதையாகப் போ.
இவ்வளவுதானே நாம் சொல்லப் போகிறோம்? 25ந் தேதி ஆரம்பிப்போம். மளமளவென்று சொல்கிறபடி நடக்கணும். நாம் கலகத்துக்குப் போக மாட்டோம். எவனையும் கையாலே தொடமாட்டோம். அடித்தாலும் பட்டுக் கொள்வோம்; திருப்பி அடிக்க மாட்டோம். ஆனதனாலே, நீங்கள் விஷயங்களைத் தீவிரமாய்க கவனிக்க வேணும். நான் சொல்கிறேன் என்று கேலி பண்ணாதீர்கள். நீ என்ன நாளைக்குச் சாகப் போகிறவன்தானே, துணிந்து வந்திருப்பாய் என்று நானே பண்ண வேணும் என்று இல்லை, நீங்கள் பண்ண வேண்டிய காரியத்தைத்தானே நான் செய்கிறேன். நாம் எல்லோருமே பாடுபட்டதாகத் தெரியணும்.
நாம் எடுத்துக் கொள்ளுகிற முயற்சியினாலே, நாம் செய்கிற தியாகத்தினாலே, மற்றவன் வருவான் நம் கூட 5,000 பேர் 10,000 பேர் ஜெயிலிலே இருக்கிறார்கள் என்றால், ஏனடா இருக்கிறார்கள்? என்று கேட்பான் அல்லவா? பார்ப்பானுடைய தேவடியாள் மகன் என்று இருக்கிறதுக்கு இஷ்டமில்லை என்று ஜெயிலில் இருக்கிறார்கள் என்றால், அவனும், அடடே நம்ம சங்கதி என்ன? என்று கவனிப்பானல்லவா? மலையாளிக்கே இப்போது உணர்ச்சி வந்து விட்டது; நானும் சேர்ந்து கொள்கிறேன் என்று எனக்கு எழுதியிருக்கிறான். பிறகு, தெலுங்கனும் கன்னடியனும் கவனிப்பான். ஒவ்வொருவனுக்கும் உணர்ச்சி வந்து ஆகணுமே!
தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால், ஒரு பத்து வருஷத்துக்குள்ளாக நாமெல்லாம் 100 வயது வாழ்வோம். ஒவ்வொருவரும் தனித்தனியே இறக்கை வைத்துக் கொண்டு பறப்போம். பெண்கள் இந்திரியம் ஒரு டப்பியிலே, ஆண்கள் இந்திரியம் ஒரு டப்பியிலே பேங்க்கிலே வைத்திருந்து, என்றைக்கும் பிள்ளை தேவையோ அன்றைக்குக் கலந்து, குஞ்சு பொரிப்பது போல் பிள்ளை பெறலாம். எல்லாம் நடக்குமா, நடக்காதா? தமிழன் இந்தியாவிலேயே முதல் நம்பராயிருப்பான். இந்தியாவுக்கே வழி காட்டக்கூடிய சக்தி உடையவனாகிவிடுவான்.
ஆகவே நாங்கள் உங்களை ஏய்க்கிறதற்காகப் பொய்யையும், பித்தலாட்டத்தையும், இட்டுக் கட்டிப் பேசவில்லை. நாங்கள் எதையும் சுய நலத்திற்காகச் சொல்லவில்லை . 2,000, 3,000 வருஷங்களுக்கு முன்னே, மனிதன் மடையனாய் இருந்த காலத்தில் கற்பித்த கடவுளையும், புராணங்களையும், கற்பனைக் கதைகளையும், இந்து மதத்தையும், ஜாதி அமைப்புகளையும் இன்றைக்கும் நம்பவேண்டுமென்று எதிர்பார்க்கலாமா? நாங்கள் எல்லா ஆதாரங்களையும் கையில் வைத்துக் கொண்டுதான் இப்படிப் பேசுகிறோம்!
எனவே, அருமைத் தோழர்களே! நேரமாயிற்று. மணி 10க்கு மேல் ஆகிவிட்டது. ஏதோ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். முக்கியமாய்ச் சொன்னதனுடைய கருத்தெல்லாம் நாளைக்கு நடக்கப் போகிற கிளர்ச்சியைப் பற்றி. அதனுடைய தத்துவம் என்ன? அவசியம் என்ன? என்கிறதை விளக்கினோம். நம் கடமை என்ன என்கிறதை நீங்கள் சிந்திக்க வேணும்.
உங்கள் கடமை என்றால், உங்கள் ஒருவரைப் பொறுத்தல்ல, தமிழர் என்று சொல்லுகிற நாம் இத்தனைக் கோடி மக்களையும் பொறுத்தது. பிறகு நாம் வட்டியும் முதலுமாய் உயரலாம். ஒன்றும் தேங்கிப் போகாது. நம் நாட்டு முன்னேற்றம் - என்று உங்களை வணக்கத்தோடெல்லாம் கேட்டுக் கொண்டு, இந்த ஏற்பாடு பண்ணி, இவ்வளவு நேரம் பொறுமையாய் இருந்ததற்கெல்லாம், என்னைக் காது கொடுத்துக் கேட்டதற்கு, என்னுடைய மனப்பூர்த்தியான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு, என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்.
வணக்கம்!”
கூட்டம் முடிந்து இல்லந் திரும்பினார் பெரியார். படுக்கச் சென்றவருக்கு வலி அதிகமாக இருந்திருக்கிறது. நள்ளிரவுக்கு மேல் சுமார் 2.30 மணியிலிருந்த தாங்க முடியாமல் இருந்த நோயை, மிகவும் சிரமப்பட்டுத் தாங்கிப் பொறுத்துக் கொண்டு, பொழுது விடிந்த பிறகு சொல்லலாம்; அதற்குள் ஏன் பிறரைத் தொந்தரவு செய்ய வேண்டும் என்று எண்ணியிருக்கிறார். ஆனால் 4.30 மணியளவில், வலி அவரது சக்திக்கும் பொறுமைக்கும் மீறிப் போனதால், மெல்லத் தயக்கத்துடன் வெளியில் சொன்னார். உடனே டாக்டர் கே. ராமசந்திராவுக்கு ஃபோன் செய்து வரவழைக்கப்பட்டார். டாக்டர் சரத் சந்திராவும் வந்து பார்த்தார். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்குப் பெரியார் சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திருவண்ணாமலைக்கு 21 ந்தேதி வர இயலாதென்று தந்தி கொடுத்துவிடலாம் என்று வீரமணியும் சம்பந்தமும் சொன்ன போது "அதெல்லாம் கூடாது. நீங்களா பேசப் போகிறீர்கள்? நான்தான்! அவசியம் போக வேண்டும்” என்றார் பெரியார்..
“மருத்துவமனையில் தந்தை பெரியார், சென்னை டிசம்பர் 21. நேற்று காலை முதல் இரணியா நோய்த் தொல்லையால் அவதிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், முதலில் சென்னை பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்கள். பின்னர், இன்று அவர்களின் விருப்பப்படியே, வேலுரில் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். டாக்டர் எச்.எஸ். பட் அவர்கள், பெரியார் அவர்களுக்கு ஒய்வு தேவை என்று கூறுவதால், திருவண்ணாமலை, திருப்பத்தூர் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தோழர்கள் பொறுத்தருள வேண்டும்” இதுதான் முதலில் வெளியான செய்தி, டிசம்பர் 22 ம் நாள் பெரியாருக்கு வலி குறைந்து உடல்நிலை தேறி வருகிறது என்று தகவல் தரப்பட்டது.
ஆனால் 22.12.73 இரவு பெரியாருக்கு வலி மிகுந்து விட்டது. தூக்கமில்லாமல் அவதிப்பட்டார். டாக்டர் பட்டும், டாக்டர் ஜான்சனும் அருகிலேயே இருந்து கவனித்தனர். இரவு 1 மணிக்கு டாக்டர் கே. ராமச்சந்திரா சென்னையிலிருந்து வந்து சேர்ந்தார். வேலூருக்கு. மூச்சுத் திணறல் இருந்தது. 4 மணி தொடர்ந்து சிகிச்சை செய்தனர். குறைவதும், மிகுவதுமாயிருந்தது. இந்தச் செய்தி 23 காலை, பத்திரிக்கைகளில் வந்தது.
23.12.73 ஞாயிற்றுக்கிழமை; சிறிது ஓய்வாக இருந்து வரலாம் என்று முதல்வர் கலைஞர் அப்போதுதான் மாமல்லபுரம் போய்ச் சேர்ந்திருப்பார்; அமைச்சர் ராஜாராம் சென்னையிலிருந்து தொலைபேசி வழியே அழைத்தார்கள். கருணானந்தம் அவரோடு பேசினார். இணைப்பு சரியாயில்லாததால் தெளிவாகப் பேச இயலவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது, ராஜாராம் சொன்னதில் பெரியாருக்கு வேலூரில் சீரியஸ் என்று. அடுத்த வினாடியே சென்னை திரும்பி, அமைச்சர்கள் ப.உ. சண்முகம், க. ராஜாராம் மற்றும் ஆர்க்காடு வீராசாமி, கருணானந்தம் ஆகியோருடன் முதல்வர் வேலூர் விரைந்தார். மதியம் 2 மணிக்குப் பெரியார் நினைவிழந்த நிலையிலேயே காணப்பட்டார். பிராணவாயுக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. அருகில் மணியம்மையார். வீரமணி. சம்பந்தம். ஈ.வெ.கி சம்பத் இருந்தனர். இரவு சென்னைக்குத் திரும்பி வரும் போது, கலைஞர் முகம் சோகத்தாலும், நம்பிக்கையின்மையாலும் களைத்துப் போயிருந்தது.
94 ஆவது வயதில் 98 நாட்கள் உயிர் வாழ்ந்த பெரியார் ஈ.வெ. ராமசாமி 24.12.1973 காலை 7.22 மணிக்கு உலக மக்கள் இதயமெல்லாம் நிறைந்தார். நேற்று திருச்சியிலிருந்தார். இன்று சென்னையிலிருக்கிறார். நாளை வேலூரிலிருப்பார் என்று இடங் குறிப்பிட்டு இனிமேல் சொல்ல இயலாதவாறு, அங்கு இங்கு என்னாதபடி, எங்கும் பிரகாசமாய், ஆனந்தம் பூர்த்தியாகி, அருளோடு நிறைந்தார்.
வானொலி நிலையம் அவல இசையை ஒலிபரப்பியது. உடனடியாக வேலூரிலும், தமிழகத்திலும் காட்டுத் தீயெனச் செய்தி பரவாயிற்று. முற்பகல் முழுதும் வேலூரில் மக்கள் அலை அலையாய்த் திரண்டு வீரவணக்கம் செலுத்தினர். மாலையில் சென்னை கொண்டுவர ஏற்பாடு. முதல்வர் கலைஞர் தலைமைச் செயலாளருடன் கலந்தாலோசித்தார். அரசு விடுமுறை அறிவிக்கவும், பெரியாரின் உடலைச் சகல அரசு மரியாதைகளுடனும் அடக்கம் செய்யவும். விழைந்தார். பெரியார் உண்மையிலேயே பெரிய தலைவர்தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை; ஆனால் எந்தக் காலத்திலும், அவர் அரசாங்கத்தில் சிறு பதவியும் வகித்ததில்லையே! அவருக்கு அரசு மரியாதைகள் தர விதிகள் இடந்தராதே?' என அதிகாரிகள் அய்யமுற்றனர். “இப்படித்தான் செய்தாக வேண்டும்! இதனால் எந்த விளைவுகள் நேர்ந்தாலும் நான் சந்திக்கத் தயார்" என்று தமது முடிவினையே ஆணையாக்கிவிட்டார் முதலமைச்சர், பிறகென்ன
கருப்பு கட்டமிட்ட தனி அரசிதழ் (அடுத்த பக்கம்) Black bordered special gazette வெளியிடப் பெற்றது. பெரியார் மறைவு குறித்து, அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; புதுவை அரசால், புதுச்சேரி மாநிலத்திலும்! காஞ்சிபுரம், கடலூர், புதுவை போன்ற நகரங்களிலும் மற்றும் பல ஊர்களிலும், செய்தி கேள்வியுற்றதும், வணிக நிலையங்கள் மூடப்பட்டன மரியாதை தெரிவிக்க. 24. ந் தேதி முற்பகலில் இராஜாஜி மண்டபம் பெரியாரை வரவேற்கத் தயார்படுத்தப் பெற்றது. பெரியார் திடலிலும், பெரியாரின் சடலம் அடக்கம் செய்யப்படும் இடம் எது என்று, அமைச்சர் பெருமக்கள் தேர்ந்தெடுத்தனர்.
பெரியாரின் அரவணைப்பில் வாழ்ந்து வரும். “விடுதலை” மாதத்தில் பாதி நாள் அவரெழுத்தால் நிறைந்திடும் தனது தலையங்கப் பகுதியை வெண்மையாக்கிக், கருப்புக் கட்டத்துடன், 24.12.73, 25, 12.73 இருநாட்களும் துக்கம் அனுசரித்துத், தனது 26 ந் தேதி வெளியீட்டை நிறுத்தியே வைத்தது, விடுமுறை என்பதற்காக!
தமிழ்நாடே சென்னைக்கு விரைந்தது. ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. பஸ்கள், லாரிகள், கார்கள் நிறைந்தன; பறந்தன சென்னை மாநகரம் நோக்கி. 24 மாலையில் தொடங்கி 25 மாலை, 24 மணி நேரத்தில், சுமார் 205 பேர் நிமிடத்துக்கு என்ற கணக்கில், மக்கள் இராஜாஜி மண்டபத்துக்கு வந்து, தந்தை பெரியாரைக் கண்டு சென்றனர். தமிழ்நாடு அரசின் செய்திப்படத் துறையினர் அனைத்தையும் சுருள்களில் அடைத்தனர். பெரியாரின் ஆஸ்தான புகைப்படக்காரர்களான குருசாமியும், சுந்தரமும் Photogenic ஆன பெரியோரை ஆசை தீரப் படமெடுத்தனர்.
டிரக் வண்டியில் சற்று உயர்த்திச் சாய்வாக அமைக்கப்பட்ட மேடையில், பெரியார் படுத்திருக்க, இருமருங்கிலும் மணியம்மையார், வீரமணி, கலைஞர், நாவலர், என்.வி நடராசன், ஈ.வெ.கி. சம்பத் அமர்ந்திருக்க, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் Punctuality கடைப்பிடித்த பெரியாரின் இறுதி ஊர்வலம், 25.12.73 மாலை 3 மணிக்கு இராஜாஜி மண்டபத்திலிருந்து கிளம்பிச் சரியாக 4.55 மணிக்குப் பெரியார் திடலை அடைந்தது. டிரக் வண்டியின் முன்னால், மலர் தூவிய வண்ணம் தோழர்கள் சென்றனர் தாய்மார்கள் கரங்களில், பாதி இறக்கிக் கட்டப்பட்ட கருங்கொடிகள், தாழ்த்திப் பிடிக்கப்பட்டிருந்தன. ஊர்வலத்தின் முன்னே அமைச்சர் பெருமக்கள், தலைவர்களான காமராஜர், ம.பொ.சி போன்றோர், நடிகவேள் எம்.ஆர்.ராதா, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தமிழ்நாடு
அச்சு
1973
பதிவெண் :
எம் 1
(வீலை 4 பை)
தமிழ்நாடு அரசிதழ்
சிறப்பு வெளியீடு
ஆணைப்படி வெளியிடப்பட்டது
எண்.2 சென்னை, திங்கட்கிழமை 1973 ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 24ஆம் நாள்
[ மார்கழி 10 பிரமாதீச (2004 - திருவள்ளுவர் ஆண்டு) ]
பகுதி II – பிரிவு I
அரசாங்க அறிவிக்கைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு
பொதுத் [அரசியல்] துறை
பெரியார் திரு.ஈ. வெ. ராமசாமி அவர்கள் மறைவு
அரசு ஆணை எண் 3398 நாள் :—24–12–73
இந்திய நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்த வாதியான பெரியார் – திரு. ஈ. வெ. ராமசாமி அவர்கள் வேலூரில் 24–12–1973ஆம் நாள் காலை 7–40 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை தமிழ்நாடு அரசு மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றது. சமுதாயத் தளைகளையும், சாதி வேறுபாடுகளையும் நீக்குவதில் அவர் ஆற்றிய அரும்பணியை அரசு பெரிதும் பாராட்டுகிறது. மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் முறையில் இன்று துக்க நாளாக அனுசரிக்கப்படுமென்றும், பொது விடுமுறை என்றும் அரசு அறிவிக்கின்றது.
தமிழ்நாடு அரசு அலுவலகங்களும், கல்வி நிலையங்களும் இன்று மூடப்பட்டிருக்கும். தேசியக் கொடிகள் இன்றும் (24—12—73), நாளையும் (25—12—73) அரைக்கம்பத்தில் பறக்கும். 25—12—73 அன்று இறுதி ஊர்வலம் சென்னையில் நடைபெறும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ப. சபாநாயகம்
தலைமைச் செயலாளர்
சரியாக 4.57 மணிக்குப் போலீசார் 36 குண்டுகள் வெடித்துத், துப்பாக்கியைத் தலை கீழாகப் பிடித்திட, போலீஸ் பேண்ட் சோக கீதம் இசைக்க, தேக்கு மரப் பெட்டியில் பெரியாரின் தேகம் வைக்கப்பட்டது. பெரியாரின் கண்ணாடியைக் கழற்றிக் கலைஞர் வீரமணியிடம் தந்தார். தேக்குப் பெட்டியின் மூலைகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை சம்பத், காமராஜ், கலைஞர், வீரமணி ஆகியோர் பிடித்துக் குழியில் இறக்கினர். காட்சி காணச் சகியாத கலைஞர் கோவென்று கதறியழக், காமராஜர் ஓடிவந்து, அணைத்துப் பிடித்து ஆறுதல் கூறினார். பெரியார் திடலில் நடைபெற்ற இத்தனையும் அண்மைத் தொலைக்காட்சி (Close Circuit TV)யில் காட்டப்பட்டதால் வெளியிலுள்ள பல்லாயிரம் மக்களும் நேரில் கண்ட நிறைவு பெற்றனர். டாக்டர் வா.செ. குழந்தைசாமியின் கவிதை வரிகள் "திராவிடத்தின் மண்ணோடும் வனியோடும் வானோடும் ஒன்றாகி வாழ்வாய் அய்யா!" எனப் பாடிய வண்ணமே, பெரியார் நிறைந்து விட்டார்!.
குடிஅரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பிறமாநில முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மன்றங்கள் அனுப்பிய அனுதாபத் தந்திகள் குவிந்த வண்ணமிருந்தன. சிறப்பானது, வைக்கம் நகர சபையின் இரங்கல் தீர்மானம், திருச்சி மருதமுத்து என்ற தோழர் தந்தை பெரியாரைக் கண்டு மனம் பொறாமல் மாரடைத்து மாண்டு போனார். முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 2,000 ரூபாய் அன்னாரின் குடும்பத்துக்குத் திருச்சி கலெக்டர் மூலமாக 28.12.73 அன்றே தரப்பட்டது.
27ந் தேதி கவனர் கே.கே. ஷா, ராஜா சர் முத்தையச் செட்டியார் ஆகியோர் பெரியார் திடலுக்கு வந்து மணியம்மையார், வீரமணி ஆகியோரைக் கண்டு விசாரித்தனர். அமைச்சர் ராஜாராம் இருந்து வரவேற்றார். அடுத்த 30ந் தேதி சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாசர் வந்து 15 நிமிட நேரம் தங்கியிருந்து சென்றார். அய்யா நினைவிடத்தைப் பார்த்தார். “அணி வகுப்போம், பணிமுடிப்போம்” என்று வீரமணியின் தலையங்கமும், “அடுத்து என்ன" என்று மணியம்மையாரின் பெட்டிச் செய்தியும், 28. 12.73 “விடுதலை”யில் இடம் பெற்றன.
"அன்புள்ள கழகத் தோழர்களுக்கு" என்ற தலையங்கத்தில் 29ந் தேதி ஈ.வெ.ரா மணியம்மையார், 6.1.74 அன்று திருச்சியில் கூடி முடிவெடுப்போம். என எழுதினர். 30ந் தேதி வீரமணி, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் என்ற தன்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், திராவிடர் கழக மாநிலப் பொது நிர்வாகிகள் கூட்டம், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தலைமையில், 6.1.74 காலை 10 மணிக்குத் திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெறும். அனைவரும் வருக என அழைத்திருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகச் சார்பில், நாடெங்கும் பெரியார் நினைவு நாள் 3.1.1974 அன்று கொண்டாடப்படும்; அதுவரையில் கழகக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இரைப்படப் பிரிவு, 30.12.73 அன்று, செய்தித்தொகுப்பு மலர் எண் 107 என்பதாக ஒரு செய்திப் படத்தைத், “தந்தை பெரியார்” என்ற தலைப்பில், தமிழகமெங்கும் திரையிட்டது. அதன் விவர விளக்கம், கேட்டபடியும், பார்த்தவாறும் பின்வருமாறு;–
ஓலி | காட்சி |
பெரியாரின் சொந்தக் குரல் ஒலிக்கிறது;– என்னமோ! அய்யா அப்படி எல்லாம் நினைக்கிறீங்க! கவுரவத்துக்காக! நான் என்னமோ என்னுடைய கடமையைச் செய்யறேன்! இருக்குறமே உசுரோட ஏதாவது பயன்படுத்தத் தகுந்த முறையிலே வாழவேணுமேன்னு இருக்குறேன்; அவ்வளவுதான்! | பெரியார் பேசும் காட்சி.பெரியார் மகிழ்ச்சியுடன் இருக்கின்ற பல காட்ரிகள் மாறி மாறி அண்மைக் காட்சிகளாகப் பல கோணங்களில் காட்டப்படுகின்றன. |
நானா இதை கவனிச்சேன்! இது அவர்களுக்கும் கணக்கில்லே! இருக்குறதுனாலே ஏதோ செஞ்சுக்கிட்டிருக்கேன்! அவ்வளவுதான்! |
பெரியார் சாப்பிடுவது, படிப்பது, எழுதுவது, பேசுவது, உறங்குவது, ஆகிய காட்சிகள் காண்பிக்கப் படுகின்றன. |
(விளக்கவுரையாளரின் குரல் ஒலிக்கிறது:) வயதில் அறிவில் முதியோர் நாட்டின் வாய்மைப் போருக்கென்றும் இளையார்! புரட்சிக் சுவிஞரின் எழுச்சிமிகுவரிகள்! ஆகா எவ்வளவு பொருத்தம்! |
தந்தை பெரியார் என்று தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களால் அன்புடன் அனழக்கப்படும் அய்யா மறைந்து விட்டார், அம்மாவோ என்னே இயற்கையின் கொடுமை! |
ராஜாஜி ஹாலில் உடன் கொண்டு வந்து வைக்கப்படுவது. |
கடந்த 19,12.73 அன்று மாலை சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் அய்யா உரையாற்றினார். |
பெரியார் பொதுக் கூட்டத்தில் பேசும் காட்சிகள். |
தமிழ் மக்களைக் கண்ணீர்க் கடலில் தத்தளிக்க விட்டு, 24-ம். நாள் காலை இயற்கை எய்தினார். |
ராஜாஜி ஹாலில், மக்கள் சாரை சாரையாய் வந்து அஞ்சலி செலுத்துதல். |
தமது 85வது பிறந்த நாள் விழாவைக், கடந்த செப்டம்பர் திங்கள் 17-ம் நாள் கொண்டாடினார் அய்யா. |
பிறந்த நாள் விழாக்காட்சிகள் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் நாயனம். |
அய்யோ அய்யோ என அலறித் துடிதுடித்து, அவரால் ஆளாக்கப்பட்ட பெரு மக்கள், துன்ப வெள்ளத்தில் அமிழ்ந்திட, நம்மை விட்டுப் பிரிந்தார். |
மக்கள், பெரியாரின் சடலத்தைக், கண்டு அலறி அழுதது நீண்ட கியூவில் மக்கள் கூட்டம். |
தேசியப் பாரம்பரியத்தில் வந்த, மிக மூத்த தலைவர்களில் பெரியார். ஒருவர்தான் மீதியிருந்தார். காந்தியடிகளோடு நாட்டு விடுதலைப் போராட்டத்தில், தமது துணைவியாருடன் ஈடுபட்டவர் அய்யா அவர்கள். அதற்காகப் பலமுறை சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். இதனைப் பாராட்டி இந்திய அரசு அவருக்குத் தாமிரப் பத்திர விருது வழங்கியது. தமிழக முதல்வர் கலைஞர், அதனைத் தலைவரின் இல்லம் சென்று, அளித்து வந்தார். |
சேலத்தில் 4.11.71 அன்று பெரியாருக்கு முதல்வர் கலைஞர் வெள்ளியினாலான சிம்மாசனம் வழங்குதல் பெரியார் கலைஞரைப் பிடித்து இழுத்து, அதில் அமர்த்துதல். தாமிரப்பத்திர விருதை முதல்வர் பெரியாரிடம் வழங்குதல். |
வைக்கம் வீரர் என்று சிறப்புப் பெயர் பெற்ற அய்யா, தண்டாமை ஒழிப்புக்காக இறுதிவரை அரும்பாடு பட்டுள்ளார். |
ராஜாஜி ஹாலில் மக்கள் அஞ்சலி. |
சுயமரியாதைத் திருமணம் என்கிற சீர்திருத்த முறையை நாட்டுக்கு அறிமுகம் செய்தவரே அவர்தாம். பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசு அதற்குச் சட்ட வடிவம் தந்துள்ளது. |
பெரியார் திடலில் நடைபெற்ற திருமணக் காட்சிகள் திருச்சியில் ஊர்வலம். பெரியாரும் அண்ணாவும். |
பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் தமது வாழ்நாள் முழுவதும் போராடினார். தமிழ் நாட்டில் அவர் கால் படாத ஊரே இல்லை. 60 ஆண்டுப் பொது வாழ்வு அவருக்கு எண்ணற்ற தொண்டர்களைத் திரட்டித் தந்துள்ளது. |
ராஜாஜி ஹாலில் மக்கள் கியூவில் வருவது. மணியம்மையார், வீரமனரி, சம்பந்தம். சோகமாய் இருப்பது. |
பழமைக் கருத்துகளைச் சாடுவதிலும், பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதிலும் அவருக்குத் தணியாத ஆர்வம் உண்டு. அதற்காக அவர் ஓய்வின்றி உழைத்தார். |
பெரியார் தமது வேனில் செல்வது. மதுரையில் ஊர்வலம். தொண்டர்கள் அணி வகுப்பு. |
சமுதாய இழிவு ஒழிய வேண்டும் என்பதற்காக அவரும் அவரது தொண்டர்களும் கருப்புச்சட்டை அணிந்தனர். |
ராஜாஜி ஹாலில் கருஞ்சட்டை அணிந்திருக்கும் தொண்டர்களின் இறுதி வணக்கம். |
ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற மேல் நாடுகளுக்கும், மலேசியா போன்ற கீழ்த்திசை நாடுகளுக்கும் அவர் சென்று வந்துள்ளார். அவரது புரட்சிகரமான கருத்துக்களுக்காகப் பலமுறை சிறைத்தண்டனை பெற்றுள்ளார். |
இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் இருந்து புறப்படுதல். |
அச்சம் என்பதே அறியாதவர் தந்தை பெரியார். தமது கொள்கையிலே தளராத பிடிவாதமுடையவர். எவ்வளவோ மாறுபாடுகளுக்கு இடையிலும், ராஜாஜியும் பெரியாரும் மிக நெருங்கிய நெடுங்கால நண்பர்கள். |
ஊர்வலம் செல்லும் வழியில் காட்சிகள். |
தமிழகத்தின் மூன்னாள் முதல்வர் காமராஜர், பெரியாருடன் தமிழ் நாட்டுத் தேசிய இயக்கங்களில் பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவும், இன்றைய முதல்வர் கலைஞரும், பிற அமைச்சர் பெருமக்களும், பெரியார் அமைத்த சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றில் பணியாற்றிவர்கள் ஆவர். |
பெரியாரும் ராஜாஜியும், பெரியாரும் காமராஜரும், பெரியாரும் அண்ணாவும், பெரியாரும் முதல்வர் கலைஞரும், பெரியாரும் அமைச்சர்களும் உள்ள காட்சிகள். |
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம்; எவர் சொன்ன சொல் எனினும் அதனை உன்றன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய்' - இதுதான் பெரியாரின் வாக்கு. சுயமாகச் சிந்தனை. செய்து, தெளிவாக முடிவுகளை வரையறுத்து, உலகச் சிந்தனையாளர்களும் ஒப்புக் கொள்ளும் விதமாகப் பெரியாரின் வாதங்கள் அமையும். பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் இன்று பெரியாரின் தத்துவங்களை ஆராய்ந்து வருகின்றனர். |
ஈரோட்டில் பெரியார் சிலை இறப்புவிழா- 17.9.71. கடலூரில் பெரியார் சிலை திறப்புவிழா 13.8.72. இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டம். |
மதத்துறை தலைவர்களும், மதமே கூடாது என்றுரைக்கும் பெரியாருக்கு. நண்பர்களாக உள்ளனர். தம்மிடம் வருகின்ற அனைவரிடத்தும் மரியாதையுடனும், அன்புடனும் அவர் உரையாடுவார். |
குன்றக்குடி அடிகளாருடன் பெரியார் உரையாடுவது. புத்தபிட்சுகளுடன் பெரியார்! எழுந்து நிற்பதும், வரவேற்பதும், உனரயாடுவதும். |
மிக நீண்ட நேரம் சொற்பொழிவாற்றினாலும், அவர் பேச்சை மக்கள் மிகவும் விரும்பிக் கேட்பது வழக்கம். |
கூட்டத்தில் சொற்பொழிவாற்றும் காட்சி. |
அய்யா அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர், தமிழகத்தில் பெரும் புரட்ரி உண்டாக்கிய குடிஅரசு, பகுத்தறிவு, விடுதலை ஆகிய ஏடுகள் அவரால் துவக்கப்பட்டவை. மலிவான விலையில் ஏராளமான நூல்களைப் பதிப்பித்து, அய்யா தமது கருத்துகளைப் பரப்புவது வழக்கமாகும். |
பெரியார் எழுதுவது பத்திரிகை படிப்பது-புத்தகம் விற்பது-ஆகிய பல காட்சிகள். |
தமது முதிர்ந்த வயதினையும், பல்வேறு உடல்நலக் குறைவுகளையும் பொருட்படுத்தாது, அந்தப் பெருமகன், மக்களின் நல வாழ்வு ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அவரது பிரிவு தமிழ் மக்களால் தாங்கவொண்ணாத இழப்பாகும். |
இறுதி ஊர்வலம் பெரியார்திடலை அடைவது. சடலம் பெட்டிக்குள் அடக்கம் செய்யப்படுவது. |
புத்தரைப் போன்றதொரு அற்புதத் தலைவர் இவரென அறிவார்ந்த பெருமக்கள் வியந்து உரைக்கின்றனர். |
பெரியாரின் அண்மைக்காட்சிகள் சிலவற்றில் அவர் முகம்; பெரியார் பேசுதல். |
தமிழ்நாடு. அரசு அந்தப் பேசறிவாளருக்கு நன்றிக் கடனாற்றியது. அன்னாரின் சடலம் ராஜாஜி மண்டபத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது. அரசு |
போலீஸ் பேண்ட்; 36 வெடி; மரியாதை, துப்பாக்கியைத் தலை கீழாகப் பிடித்து. |
மரியாதைகள் அனைத்தும் நடைபெற்றன. | |
சென்னை நகரமே இரு நாட்கள் சோக வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தது. பல்வேறு ஊர்களிலிருந்து, பெண்டிரும் ஆடவரும் வரிசை வரிசையாக வந்து, தம்மைத் தட்டியெழுப்பித் தன்மான உணர்வளித்த தனிப்பெருந்தகையாளருக்கு அஞ்சலி செலுத்தினர். |
மக்கள் அழுவது, கடைகள் மூடியிருப்பது. ஊர்வலம்-சில காட்சிகள். |
இதோ. இங்கிருந்துதான் அந்தப் பகுத்தறிவுப் பகலவன் ஒளி வீசி வந்தது. இன்று அந்த இடம் அந்தகாரத்தில் மூழ்கிக்கிடக்கின்றது. |
‘விடுதலை’ அலுவலகம். பெரியார் தங்கும் அறை. |
இதோ, இந்தப் பெரியார் திடலில்தான் அந்தச் சிந்தனைக் கருமேகம் கருத்து மழை பொழிந்தது. இன்று இங்கேதான் அந்தக் காலக் கருவூலம் புதையுண்டு போனது. |
பெரியார் திடலில் மக்கள் கூட்டம். பெட்டியைக் குழியில் இறக்கும் காட்சி. |
அகில உலகிலும், உள்ள அனைத்துக் கட்சிப் பெரு மக்களும், ஆட்சித் தலைமையாளர்களும் அந்த வெண்தாடி வேந்தனுக்குப் புகழாரம் சூட்டுகின்றனர். |
நினைவிடம் அருகில் பல கட்சித் தலைவர்கள். |
தமிழ்மொழிஉள்ளவரையில் தந்தை பெரியாரும் வாழ்வார்!" |
பெரியார் சிரிக்கும் Close up காட்சிகள். |
அச்சுத் ஆர்க்கிட்டெக்ட் எனப்படும் கட்டடக் கலை நிபுணர்களின் ஆலோசனைப்படி, பெரியார் நினைவிடத்தில் சிறிய மேடை ஒன்று கட்டப்பட்டு, நடுவில் அறிவுச் சுடரை ஏந்தி நிற்கும் கரம் ஒன்றின் வடிவமைப்பு அழகுற எழுச்சியுற அமைக்கப்பட்டது. இரு மருங்கிலும் தென்னை மரங்கள், பூச்செடிகள் வளர்க்கப்பட்டன. பெரியாரின் நூல்கள் போல, இரும்பில் செய்யப்பட்டு, நிலையாக இருக்குமாறு, விவரமாக வண்ணப் பூச்சுடன் வைக்கப்பட்டன. சென்னை வருவோர் அமைதியும், உணர்வும், புத்தெழுச்சியும் பெற இங்கு ஒருமுறை வருகை தரும் வாடிக்கை கொண்டனர். மாநகரில் உள்ளாரும், தமது வாழ்நாளின் சிறப்பான தினங்களில் வந்து செல்வதும் வழக்கமாகும். பெரியார் நினைவுப் பகுத்தறிவுப் படிப்பகம் -ஆய்வகம் ஒன்று இரு மாடிக் கட்டடமாக எழுப்பப் பெற்றுக், கழகத்தின் கருவூலமான நூல்களும், பத்திரிகை வால்யூம் தொகுப்புகளும், ஒழுங்குற அழகுறப் பேணிக் காக்கப்படுகின்றன. இன்றும் பெரியாரைப் பற்றியோ, திராவிட இயக்கம் பற்றியோ, பகுத்தறிவு - சுய மரியாதைக் கொள்கைகள் குறித்தோ ஆய்வு நடத்துவார்க்கு வழிகாட்டும் ஒரே இடமாக இது விளங்குகின்றது.
6.1.1974 திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக நிர்வாகிகள் குழுவில் ஈ.வெ.ரா. மணியம்மையார் தலைவராக ஒரு மனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கி.வீரமணி தொடர்ந்து பொதுச் செயலாளராக விளங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டார். அதே போன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன டிரஸ்டின் தலைவராக வீரமணியும், செயலாளராக மணியம்மையாரும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். பெரியார் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்ந்து திராவிடர் கழகம் நடைமுறைப்படுத்தி வரவேண்டுமெனக் கழகத் தோழர்கள் சூளுரைத்துக் கொண்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர், முன்னதாகப் பெரியார் திருமுன்னர் நிபந்தனையோடு கூடிய வாக்குறுதி ஒன்று தந்ததற்கேற்ப, ராஜாஜி மண்டபத்திற்கும் சிம்ப்சன் கம்பெனிக்கும் எதிர்ப்புறத்தில், சிற்பி கோவிந்தசாமியால் அமைக்கப்பட்ட, பெரியார் உட்கார்ந்திருக்கும் வடிவிலான அழகிய சிலை ஒன்றினை, நாவலர் தலைமையில் 25.12.74 மாலை 6.30 மணிக்குத் திறந்து வைத்தார். அவ்விழாவில் பேசிய பேராசிரியர் கே. அன்பழகன் வயதில் குறைந்தவர்களுக்குச் சிலை எழுப்புவது சரியல்ல என்று கருத்துரைத்தார். விழாவில் என்.வி. நடராசன், சி.பி. சிற்றரசு, மணியம்மையார். வீரமணி ஆகியோர் பேசினர். பெரியாரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவே, தான் உயிர் வாழ்வதாகக் கருதும் மணியம்மையார், அடுத்து கலைஞரின் சிலையினை நிறுவுவதற்கு, இக்கருத்து அனுசரணையாக இல்லையே எனக் கவலையுற்றார். வீரமணியைக் கலைஞரிடமும், பேராசிரியரிடமும் சமாதானத் தூதுவராக அனுப்பிப், பெரியாரின் எண்ணம் ஈடேற, எப்படியும் தான் கலைஞரின் சிலை அமைத்திட உறுதி பூண்டுள்ளதாக அறிவித்தார். சிற்பி எஸ். பி. பிள்ளை எனப்படும் பக்கிரிசாமி அவர்களால் வடிக்கப்பட்டு, சில காலமாகச் சந்தேகச் சூழ்நிலையால் தாமதப்பட்டு வந்த, கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் சிலையின் திறப்பு விழா, திராவிடர் கழகத்தினரால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 21.9.1975 ஞாயிறு மாலை 6 மணிக்கு மணியம்மையாரின் தலைமையில் குன்றக்குடி அடிகளார், சென்னை அண்ணாசாலை, புகாரி ஒட்டல் அருகில், இந்தச் சிலையினைத் திறந்து வைத்தார்கள். மாநிலமெங்கணும் இருந்து திராவிடர் கழகச் செயல் வீரர்களும், கருஞ்சட்டைத் தோழர்களும் விழா சிறக்க வருகை தந்தனர்.
ராஜா சர் முத்தையாச் செட்டியார் முன்னிலையில் மணலி கந்தசாமி உரையாற்றினார். முன்னதாக நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் குழுவினர் நாயன இசைமழை பொழிந்தனர். விழாவில் கி. வீரமணி சைதை எஸ்.பி. தட்சிணா மூர்த்தி, சி.பி. இராசமாணிக்கம், கு.கிருஷ்ணசாமி, அ.ஆறுமுகம், ஆம்பூர் ஏ.பெருமாள், டி.டி.வீரப்பா, பொத்தனூர் க.சண்முகம், கோவை இராமச்சந்திரன், எம்.என். நஞ்சையா, குமரிமாவட்டம் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர், இசைமணி சீர்காழி கோவிந்தராசன் கலைஞரைப் பற்றிய பாடல்கள் சில பாடி மகிழ்வித்தார்.
ஈரோட்டில் பெரியாரின் இல்லம் ஒன்றில், முன் பகுதியில் பெரியாரும், பின்பகுதியில் அண்ணாவும் ஒரு காலத்தில் வசித்து வந்தனர். மணியம்மையார் அனுமதியுடன் அந்த இல்லத்தை வாங்கிக் கலைஞர் ஆட்சியில், பெரியார்-அண்ணா நினைவகம் என்று அமைக்கப்பட்டது. இருவரின் சிறு சிலைகளும், புழங்கிய பொருள்களும், நூல்களும் காட்சியாக வைக்கப்பட்டன. 17.9.1975 அன்று மணியம்மையார் தலைமையில் கலைஞர் இதனைத் திறந்து வைத்தார்.
வடநாட்டில் ராம்லீலா என்ற விழா ராமநவமி நேரத்தில் நடைபெறுவதும், அப்போது இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் போன்றார் உருவங்களுக்குத் தீயிட்டு மகிழ்வதும், இந்த மதச்சார்பான விழாவில் குடி.அரசுத் தலைவர், தலைமை அமைச்சர் ஆகியோர் பங்கேற்பதும் கண்டு, பெரியார் பலமுறை கண்டித்துள்ளார்; நாம் ஏன் ராவண லீலா கொண்டாடக் கூடாது என்றும் கேட்டு, நடத்தியும் உள்ளார். அந்த வழியைப் பின்பற்றித், தந்தை பெரியார் கருத்துக் கேற்ப, ஈ.வெ.ரா. மணியம்மையாரும், பெரியார் திடலில் 25.12.74 புதன் மாலை 6.40 மணிக்கு ராவணலீலா நடத்தினார். இராமன், இலக்குமணன், சீதை ஆகியவர்களின் பெரிய பொம்மை உருவில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. மத உணர்ச்சியுள்ளவர்களின் மனத்தை இது புண்படுத்தியதாகக் கலைஞரின் அரசு, மணியம்மையார் மற்றும் தோழர்கள் மீது வழக்குத் தொடுத்தது. அன்று முன் கூட்டியே கி.வீரமணியும் மற்ற ஏழு தோழர்களும் கைது செய்யப்பட்டுவிட்டனர். எனினும் ராமன் முதலிய உருவங்கள் எப்படியும் கொளுத்தப்பட்டதால், மணியம்மையாருடன் மற்றும் 13 தோழர்களும், இரவு கைது செய்யப்பட்டனர். ஆனால் தி.மு.க. ஆட்சி இருந்த வரையில் வழக்கு நடைபெறவில்லை. அட்வைசர்களின் ஆட்சியில் வழக்கு நடைபெற்றது. 6 மாதத் தண்டனை வழங்கப்பட்டது. பிறகு சிட்டி சிவில் கோர்ட் அப்பீலில் இது தள்ளுபடி ஆயிற்று. ராவண லீலா நடத்தியது சரிதான் என்றும் கோர்ட் கூறியது.
அடுத்து, கழகத் தலைவரான அம்மையாரின் சாதனையாகப் பெரியார் பில்டிங்ஸ் எழுப்பப்பட்ட செய்தியினைக் கூறலாம். பெரியார் திடலின் முகப்பில், சுமார் 15 லட்ச ரூபாய் செலவில், பெரிய தொரு அடுக்கு மாடிக் கட்டடத்தைக் கட்டி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துச் சிறுமிகளால் (Foundlings) அது திறந்து வைக்கப்பட்டது. மாதம் ஏறக்குறைய 23 ஆயிரம் வாடகை தருமளவுக்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு, அதுவும் ஓர் சொத்தாக இணைக்கப்பட்டது. 1976 டிசம்பரில் வருமானவரி பாக்கிக்காக இக்கட்டடம் ஜப்தி செய்யப்பட்டதாக, நல்ல எண்ணம் படைத்த நம்தமிழ் ஏடுகள் சில செய்தியாகப் பரப்பின வதந்தியை! அஃது உண்மையன்று.
ஏற்கனவே திட்டமிட்டவாறு 17.9.1976 அன்று இக் கட்டடம் திறக்கப்பட இருந்தது. அட்வைசர்கள் ஆட்சி 16 முதல் 18 வரை அம்மா, புலவர் இமயவரம்பன் முதலியோரைக் கைது செய்து வைத்து விட்டதாலும், பெரியார் திடலில் யாரும் வரவிடாமல் செய்ததாலும், இவ்விழா ஒத்தி வைக்கப்பட்டு, 20.2.1977 அன்று பண்ணுருட்டி நடேசன் தலைமையில் அழகுமணி, கலைமணி, கண்மணி ஆகிய குழந்தைகளால் (Foundlings) திறந்து வைக்கப்பட்டது.
கழகக் கட்டுப்பாட்டை மீறியதாகத் தலைவர் மணியம்மையார் அவர்களால் நடவடிக்கைக்கு உள்ளாகி 27.12.74 அன்று சென்னை டி.எம்.சண்முகம், 23.9.75 அன்று திருவாரூர் கே. தங்கராசு, 16.11.75 அன்று திருச்சி வே.ஆனைமுத்து ஆகியோர் திராவிடர் கழகத்திலிருந்து விலக்கப்பட்டனர். 18.9.1975 அன்று திருவண்ணாமலையில் மணியம்மையார் தலைமையில் பெரியார் சிலையினை முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்.
1973 டிசம்பர் 8, 9 தேதிகளில் நடந்த சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்களுக்கு இணங்க, சாதிப் பிரிவை அரசியல் சட்டத்தினின்று அகற்றிடக் கோரி, அம்மையார் தலைமையில் வடநாட்டு மத்திய அமைச்சர்களுக்குக் கருப்புக்கொடி காட்டப்பட்டது. அஞ்சல்மனைகள் முன்பு மறியல் நடத்தப்பட்டது. மணியம்மையார் அண்ணாசாலை தலைமை அஞ்சல் நிலையத்தின்முன் மறியல் செய்தார்கள்.
காமராஜர் 1975 அக்டோபர் இரண்டாம் நாள் மறைந்தார். அண்ணாவுக்கும், இராஜாஜிக்கும், பெரியாருக்கும் நினைவிடங்கள் அமைத்துச் சிறப்பித்த கலைஞர், காமராசருக்கும் நினைவு மண்டபம் எழுப்பினார். அவரது மறைவுக்குப் பிரதமர் வந்து சென்றார்; என்ன முடிவோடு?!
சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தோற்றுவித்து 50 ஆண்டுகள் ஆயின. மகத்தான சமுதாயப் புரட்சியை விளைவித்த அப்பெரும் இயக்கத்திற்குப் பொன்விழா வேண்டாமா? பெரியார் இல்லாத குறை தெரியாவண்ணம் கொண்டாட வேண்டுமே! பெரியாரின் சுயமரியாதை இயக்கமெனும் பிராணவாயுவைச் சுவாசித்த புழுவும் புலியாகியிருக்கிறதே! புல்லும் மரமாகி யிருக்கிறதே! கல்லும் களிமண்ணும் நல்ல மனிதனாகியிருக்கிறதே! மறக்கலாமா? என்று அந்த விழாவினைத் தஞ்சைத் திருநகரில் கொண்டாட முடிவெடுத்தனர். 1975 டிசம்பர் மூன்றாம் வாரத்தில், 22 முதல் 24 முடிய தஞ்சை திலகர் திடலில் அமைக்கப்பட்ட பந்தலில் பெருவிழா; பொன்விழா முதல் வரும், அமைச்சர் பெருமக்களும், கழகத் தோழர்களும், கருஞ்சட்டை வீரர்களும் பங்கேற்க ஏற்பாடு. 50 ஆண்டுகளாகச் சுயமாயாதை இயக்கத்தில் இருந்து வந்தோர், இப்போது எத்தனை பேர் உயிருடனிருப்பர்? நாகை என்.பி. காளியப்பன் தவிர வேறு யாரும் நிலைத்திருப்பதாக நினைவுக்கு வரவில்லையே!
எனவே, குறைந்த பட்சம் வெள்ளிவிழாக் காணும் அளவுக்காவது - அதாவது ஓர் இருபத்தைந்தாண்டு - காலமாகவாவது - இயக்கத்தில் இருப்போர்க்குக் கேடயம் வழங்கவும் ஏற்பாடு. தஞ்சையில், சுயமரியாதை இயக்கப் பொன்விழா டெல்லியில், திராவிட இயக்கங்களுக்குக் குழிபறிக்கும் சதி விழா-இரண்டும் ஒரே நேரத்தில் அமைந்தன! தஞ்சை விழாவில் இருக்க வேண்டிய அளவு சிறப்பும் மகிழ்ச்சியும் காணப்படாமல், பீதியும் கலக்கமும் மிகுந்திருந்தன. முதல்வரும் உடல்நலிவால் பங்கேற்க முடியவில்லை!
எதிர்பார்த்தது நடந்துவிட்டது! 31.1.76ல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு, சட்ட மன்றம் கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. 31-ந் தேதி மாலை 7 மணிக்கு ஒரே நொடியில் சென்னை நகரத்தில் மட்டும் 2,000 தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன! பொழுது விடிவதற்குள் சிறைச்சாலைகள் நிரம்பின. சென்னைச் சிறைச்சாலை தனி வரலாறு படைத்து, “உலகப்புகழ்”(?) பெற்றது. திராவிடர் கழகத் தலைவர் மணியம்மையார் வெளியில் இருந்தார். பொதுச் செயலாளர் வீரமணி, "விடுதலை" மேலாளர் என்.எஸ். சம்பந்தம், மணியம்மையாரின் தம்பி தியாகராஜன், சைதை எஸ்.பி. தட்சணாமூர்த்தி, வக்கீல் துரைசாமி உள்ளிட்ட 33 தி.க. தோழர்கள் சென்னை மத்திய சிறையில் “மரியாதை" பெற்றவர்கள் பட்டியலில்!
1976 செப்டம்பர் 17. பெரியாரின் 96வது பிறந்த நாள் விழா. அவர் இருந்தால் எவ்வளவு குதூகலமாயிருந்திருக்கும்? ஒருவேளை, இந்த இருளே தமிழகத்தில் படர்ந்திருக்காதோ? அட்வைசர் ஆட்சி என ஒன்று வந்து, தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தை ஒரு நூற்றாண்டு பின்னோக்கித் தள்ளியிருக்காதல்லவா? எது நடந்தால் என்ன? கழகமும் கம்யூனிஸ்டுகளும் தான் பாதிக்கப்பட்டனர். தவறு. தவறு! திராவிடர் கழகம் துன்புறுத்தப்பட்டது. திருவாரூர் கே. தங்கராசு, சிதம்பரம் கு.கிருஷ்ணசாமி, இன்னும் சிலர் தாங்களும் திராவிடர் கழகம் என்று தனியே சென்று, அன்னை இந்திராகாந்தியின் ஆதரவும், பத்திரிகை-வானொலியும் விளம்பரமும் பெற்றனர். |
அதே போல, அண்ணா நிறுவிய திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாச் சோதனை, வேதனைகளுக்கும் உள்ளாயிற்று. இதிலிருந்து பிரிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விரிவடைந்து, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாகி, பிரதமர் இந்திராவின் ஆதரவுக்கு ஆட்பட்டது. வலதுசாரிக் கம்யூனிஸ்டுகளும் அம்மையாரின் கனிவுக்கு ஆளாயினர்.
இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாள் விழா நடக்க விடுவோமா என்று ஜனாதிபதி ஆட்சி (உண்மையில் பி.கே. தவே-ஆர். வி, சுப்ரமணிய அய்யர் ஆட்சி) சவால்விட்டது போல், 1976 செப்டம்பர் 16ந் தேதியே ஈ. வெ. ரா. மணியம்மையாரையும், புலவர் கோ. இமயவரம்பன் போன்றாரையும் கைது செய்து, சிறையிலடைத்தது. பெரியார் திடலில் யாராவது வந்து பெரியார் நினை விடத்தில், மலர் மாலைகளோ, மலர் வளையங்களோ வைத்து "அசிங்கம்" செய்து விடுவார்களோ என ஆட்சியாளர், இரண்டு மூன்று நாள் அந்தப் பக்கம் யாரையும் விடவில்லை! ஏற்கனவே இடுப் பொடிந்த என்.எஸ். சம்பந்தம் மாத்திரம், மிசாவில் உள்ளே இருந்தால் பழிவருமோ என்ற அச்சத்தால் வெளியே விடப்பட்டுப், பெரியார் திடலில் தனியாளாய் இருந்து வந்தார். மணியம்மையாருக்கு 3 நாள் சிறைவாசம் போது மென்று அனுப்பிவிட்டனர்.
1977 பிப்ரவரியில் பொதுத் தேர்தல்கள் பிறந்தன. சிறைக் கதவுகளும் திறந்தன. நாடாளுமன்றத் தேர்தல்களில் வடபுலத்தில் காங்கிரஸ் வேரொடும், வேரடி மண்ணோடும் களைந்தெறியப்பட்டது! சுதந்திரத்திற்குப் பின் காங்கிரசல்லாத ஆட்சி, மத்தியில் ஜனதா அரசாக மலர்ந்தது மகத்தான புரட்சியாகும். அதன் பின்னர், மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல்கள். தமிழகத்தில் அசாதாரண நிலை. திடீரென்று, திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எதிர்பாராத சிலர் பிரிந்து சென்று, மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்றனர். சிற்சில நாட்களிலேயே, முன்னர் தமிழ் தேசியக் கட்சி என ஒன்று, காங்கிரசில் ஐக்கியமானதுபோல், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து கொண்டது!
8.5.1977 அன்று தென்னார்க்காடு மாவட்டச் சார்பில் மணியம்மையாரின் வீரமிகு வெற்றிகளைப் பாராட்டு முகந்தான், கலைஞர் அவர்களால், அம்மையாருக்கு வெள்ளிவாள் கடலூரில் பரிசு வழங்கப்பட்டது.
தமிழ் நாட்டில் புதிய நிலைமை உருவாயிற்று. அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்று. மாண்புமிகு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைத்தது. 1967 முதல் ஆளுங்கட்சியாக விளங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், கலைஞர் தலைமையில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கியது.
1977 செப்டம்பர் 17ல் பெரியாரின் 97வது பிறந்த நாள் விழா, பரவாயில்லை ; பயமின்றி மூச்சுவிட முடிந்தது. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். முன்னர் பெரியாரிடம் கேட்டுக் கொண்டவாறு, இரண்டு மூன்று ஆண்டுகட்கு முன்னர் 17.9.74 அன்று அண்ணா மேம்பாலத்தருகில் அமைத்து வைத்திருந்த பீடத்தின்மீது, நிற்கும் நிலையிலுள்ள பெரியாரின் சிலையை, மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் அவர்களைக் கொண்டு திறந்து வைத்தார். விழாவில் கலந்து கொண்ட மணியம்மையார், “பெரியார் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்த ஒரு காரியம் நிறைவேறாமலே நிற்கிறது. அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் சட்டம், உச்ச நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்டது. அதற்கு உயிரூட்ட, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். மத்திய அரசின் உதவியோடு இக்காரியம் நடைபெற, நமது மாநில அரசு முயலவேண்டும்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இதற்குப் பதிலளித்த முதல்வர், "கடவுளே இல்லை என்று சொன்னவர் தந்தை பெரியார். மற்றவர்களைக் கோயிலுக்குப் போகாதீர்கள் என்று சொன்னவர் பெரியார். அப்படிப்பட்ட கொள்கை உடையவர், கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்யச் சொல்வதும், எல்லா சாதியாருக்கும் அந்த உரிமை வேண்டும் என்று சொல்வதும், உண்மையில் பெரியார் சொல்லியிருப்பாரா? என்று என்னால் நம்ப முடியவில்லையே" என்றார்.
1977 அக்டோபர் 30-ம் நாள் மணியம்மையார் கைது செய்யப்பட்டார். ஏன்? தெரியவில்லை! வழக்கொன்றும் தாக்கல் செய்யப்படவில்லை . பின், விடுதலை செய்யப்பட்டார்.
இந்திராகாந்தி 1977 அக்டோபர் 30-ஆம் நாள் தமிழகம் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது என திராவிடர் கழகம் முடிவெடுத்தது. மணியம்மையார் முன்னின்று நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இரண்டொரு நாட்களுக்குப் பின், தாங்களும் கருப்புக்கொடி காட்டப் போவதாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் முடிவெடுத்தனர். சென்னையில் கிண்டியருகில் வேனில் வந்த மணியம்மையாரை, இழிவாகவும் தரக்குறைவாகவும் பெரிய ஒரு போலீஸ் அதிகாரியும், போக்குவரத்து சார்ஜண்ட் ஒருவரும் பேசினர். வீரமணியையும் திட்டினார்கள். இதுவரையில் அவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை அம்மையாரும் வீரமணியும் கைது செய்யப்பட்டனர். வழக்கும் தொடரப்பட்டுப் பின்னர் என்ன காரணமோ திரும்பப் பெறப்பட்டது.
ஆளுநர் ஆட்சிக் காலத்தில், சென்னை சிறைச்சாலையில், மிசா கைதிகளிடத்தில் தவறாக நடந்த சிறையதிகாரிகள் நடவடிக்கை பற்றி விசாரித்தறிய, நீதிபதி இஸ்மாயில் கமிஷன் நியமிக்கப்பட்டது. அதனிடம் வீரமணியும், என். எஸ். சம்பந்தமும் சாட்சியமளித்தனர். தாங்கள் தாக்கப்பட்டதாகவும் கூறினர். கைதியாகவும் இருந்து, சாட்சியமளிக்க வேண்டியவரும் ஆன எஸ். துரைசாமியே வழக்கறிஞராக இருந்து வழக்குரைத்தார்!
இந்திராகாந்திக்குக் கருப்புக் கொடி காட்டக் குழுமிய இடத்தில், போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது பற்றி விசாரிக்க, நீதிபதி பி.எஸ். சோமசுந்தரம் கமிஷன் நியமிக்கப்பட்டது. அதுகூடத் தனது பரிந்துரையில், மணியம்மையாரை இழிவாகப் பேசிய அதிகாரிகள் மீது தமிழக அரசு தனி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளது. சென்னை நகரில் அப்போது துணைக் கமிஷனராக இருந்த அந்தப் போலீஸ் அதிகாரிக்குப் பதவி உயர்வு தந்து, தமிழக அரசு அவரைத் துணை ஐ.ஜி.யாக நியமித்துள்ளது!
1978 மார்ச் 16-ஆம் நாள் ஈ.வெ.ரா. மணியம்மையார் இருதய நோயால் இயற்கை எய்தினார். பெரியாருக்குப் பின்னர், அவர்களால் ஐந்தாண்டு உயிர் வாழ முடிந்ததே ஓர் அதிசயம்! அய்யா விட்டுச் சென்ற சில பணிகளை நிறைவேற்றிடத் தாம் எடுத்துக் கொண்ட சூளுரையின் வலிமையால்தான் அவர் வாழ்ந்திருக்க வேண்டும்!
பெரியாரின் நினைவிடத்துக்குப் பின்புறத்திலேயே அம்மையாரும் புதைக்கப்பட்டு, அவர்க்கும் நினைவு மேடை எழுப்பப்பட்டுள்ளது.
கி.வீரமணி நிரந்தரப் பொதுச் செயலாளராக, மணியம்மையார் எழுதி வைத்திருந்த கடிதத்தின்படி, ஒரே மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திராவிடர் கழகத்திற்கு இனித் தலைவர் கிடையாது என்றும், முடிவெடுக்கப்பட்டது. பொருளாளராகத் தஞ்சை கா.மா. குப்புசாமி, பிரச்சாரச் செயலாளராகத் திருச்சி என். செல்வேந்திரன், விவசாயப் பிரிவுச் செயலாளராக ஏ.எம். ஜோசப், அமைப்புச் செயலாளராகக் கள்ளக்குறிச்சி கோ. சாமிதுறை எம்.ஏ.பி.எல். தலைமைக் கழகச் செயலாளராக எஸ். துரைசாமி பி.ஏ.பி.எல்., இளைஞர் பிரிவுச் செயலாளராகக் கோவை கு.இராமகிருஷ்ணன் ஆகியோர் செயல்படுகின்றனர். சுயமரியாதை இயக்கப் பொன் விழாவுக்குப் பெரியார் இல்லாமை; பெரியார் நூற்றாண்டு விழாவுக்கும் மணியம்மையார் இல்லாமை; எனினும் பெரியார் தந்த சுயமரியாதைச் சுடர், பகுத்தறிவு ஒளி விளக்கு ஓயாமல் எரிந்து வெளிச்சத்தந்து வருகின்றது.
பெரியார் தொடங்கி நடத்திய பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள் திராவிடர் கழகத்தாரால் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. "விடுதலை", "உண்மை ", "The Modem Rationalist" போன்ற பத்திரிகைகள் - நூல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. சுயமரியாதைப் பிரச்சார டிரஸ்டின் தலைவராக சிவகங்கை சண்முகநாதனும், செயலாளராக வீரமணியும் உள்ளனர்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் திருச்சியில் ஆற்றிவரும் கல்விப் பணிகள்:
1. பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 2. நாகம்மையார் ஆசிரியைப் பயிற்சி நிறுவனம் 3. பெரியார் மணியம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளி 4. பெரியார் நடுநிலைப் பள்ளி 5. நாகம்மையார் குழந்தைகள் இல்லம். 6. பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகம். 7. தந்தை பெரியார் நூற்றாண்டு நர்சரி பள்ளி. 8. ரங்கம்மாள் சிதம்பரம் தையல் பயிற்சி நிலையம். 9. பெரியார் மணியம்மை மன்றம் ஆகியவற்றை நிறுவி நிருவகித்து வருவதாகும்.
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திலும், பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகத்திலும் இப்போது சுமார் 300 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவர்க்கும் வயிறார உணவு, மானமார உடை, அறிவாரக்கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள பிள்ளைகளில் 7 பேர் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பித்ததால், அவர்கள் ஆங்கிலப் போதனைப் பள்ளிகளில் (English medium schools) சேர்க்கப்பட்டுக், கட்டணம் செலுத்தி, ஆங்கில மூலமான கல்வி வழங்கப்படுகிறது. ஓரளவு படித்துவிட்ட பெண்கள், அல்லது பாதியில் படிப்பை விட்டு விட்ட வளர்ந்த பெண்கள், அங்கேயே பணியாளர்களாகவும், சமையல்காரர்களாகவும் நியமிக்கப்பட்டு, அவர்கள் சம்பளம் முழுவதும் அவரவர்கள் பெயர்களில் வங்கிகளில் அப்படியே சேமித்து வைக்கப்படுகின்றது. 25 பெண்களுக்குத் திருமகள் திருமணத்திட்டம் மூலமாகவும் பணம் சேமிக்கப்படுகின்றது வங்கியில்,
பெண்களுக்குத் தையல் பயிற்சி வகுப்புகளும், முதியோர் இல்லம் ஒன்றும் அண்மையில் துவங்கப்பட இருக்கின்றன. சில ஆண்டுகட்கு முன் துவங்கப் பெற்ற பெரியார் மணியம்மை குழந்தைகள் இல்லத்தில், 2 மாதத்திலிருந்து 7 வயது வரையில், பல குழந்தைகள் (Foundlings) வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் EVRM என்ற இனிஷியல் தரப்பட்டுள்ளது. கொழு கொழு குழந்தைகள் போட்டியில் இந்த இல்லத்திலுள்ள 2 வயது வைக்கமதி பரிசு பெற்றுள்ளது.
பெரியார் நடுநிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், மதிய உணவு வழங்கப்படுகின்றது. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்னும் பணி எவ்வளவு சிறப்பாகப் பெரியாரின் சந்ததியாரால் பேணப்படுகின்றது! “இமயமலை வெய்யிலிலே காய்கிறதே என்று குடை பிடிக்கக் கிளம்பியது போல்" என்று பெரியாரே குறிப்பிட்ட உவமையின் பிரகாரம், தாழ்ந்து வீழ்ந்த இனத்தின் தலை நிமிர்த்தப் பெரியார் நிறுவிய அறச்செயல்களின் திறமும் உரமும் எத்துணைச் சிறப்பானவை!
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துடைய சொத்துகளுக்கு வருமான வரித்துறையினர் பல லட்சம் வரிவிதித்து, டிரிப்யூனல் அப்பீலில் வரி விதிப்பு தள்ளுபடி செய்யப்பட்டது 1979-ல். பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டிப் பொதுச் செயலாளர் கி. வீரமணியிடம் 100 சவரனுக்குச் சமமான தொகை திரட்டித் தஞ்சையில் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் மகளிர் பாலிடெக்னிக் நிறுவிட இத்தொகை முன்னோட்டமாகச் செலவிடப்படும் என்றார் வீரமணி. பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க மலேசியா, சிங்கப்பூர், குவெய்த் போன்ற வெளிநாட்டுத் தோழர்கள் வந்திருந்தனர். சிங்கப்பூர் நாகரத்தினம், மலேசியா கே.ஆர். ராமசாமி, குவெய்த் செல்லப் பெருமாள், இலங்கைத் தோழர்கள் ஆகியோர் விழாக்களில் பங்கேற்றுச் சென்றனர். திருத்தணி, சென்னை, கன்னியாகுமரி, சிக்கில் ஆகிய இடங்களிலிருந்து கால் நடையாகப் பிரச்சாரம் படைகள் புறப்பட்டு வந்தன. நூற்றாண்டு நாயகர் பெரியார் என்ற ஒரு திரைப்படமும், சில இசைத் தட்டுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா திராவிடர் கழகச் சார்பில் எல்லா மாவட்டங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. தஞ்சையில் "பெரியார் பெருந்தொண்டர்" என்ற கேடயம், நெடு நாளையத் தொண்டர்களுக்குப் பொதுச் செயலாளரால் வழங்கப் பெற்றது.
பெரியார் பயன்படுத்திய பொருள்கள், அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்ற நன்கொடைப் பொருள்கள். வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஓவியங்கள் ஆகியவை பெரியார் திடலில் பெரியாரும், மணியம்மையாரும் தங்கியிருந்த அறையில் காட்சிக்கு வைக்கட்பட்டுள்ளன.“பெரியார் காட்சியகம்” திறப்பு விழாவும், பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனைக்கு நான்கு மாடிக் கட்டடம் ஒன்று பெரியார் திடலில் கட்டப்பட அடிக்கல் நாட்டலும், இந்தியப் பிரதமர் சவுதரி சரண்சிங் அவர்களால் 24.11.1979 நண்பகலில் நிகழ்த்தப் பெற்றன. (ஆளுநர் பிரதமரின் பணிகளை நிறைவேற்றினார்) 17.9.1979 அன்று திருச்சியில் மறைந்த நடிகவேள் எம்.ஆர். ராதா நினைவாகப், பெரியார் திடலில் அமைக்கப்பட்டிருந்த ராதா மன்றம் புதுப்பிக்கப் பெற்றது. பெரியார் மணியம்மையார் படங்கள் திறக்கப்பட்டன. வகுப்புரிமைக்குக் குழிபறித்த 2.7.1979 தேதியிட்ட அரசாணைக்குத் தீயிடும் கிளர்ச்சி 26.11.1979 அன்று நாடெங்கும் திராவிடர் கழகத்தால் நிகழ்த்தப் பெற்றது!