பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - கள்ளாமை

181


களவு அறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும் - களவையே பயின்றவரின் உள்ளத்தில் வஞ்சனை நிலைத்து நிற்கும். பழக்கம் நிலைத்து நிற்கும் இயல்பினதென்பதும், பொருள்களின் இயல்பை அளந்தறிதல் துறவறத்திற்கு இன்றியமையாத தென்பதும், இங்குக் கூறப்பட்டன.

289. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்
.

(இ-ரை.) களவு அல்ல மற்றைய தேற்றாதவர் - களவல்லாத பிறவற்றை அறியாதவர்; அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் - வரம்பு கடந்த செயல்களைச் செய்து அப்பொழுதே அழிவர். வரம்பு கடந்த செயல்கள் பெருங்களவுகள். அப்பொழுதே அழிதல், கையும் மெய்யுமாகக் கண்டுபிடிக்கப்பட்டு அரசனாலும் மக்களாலும் தண்டனை யடைதலும் எரியுலகில் வீழ்தலும். தேற்றாதவர் என்பது தன்வினைப் பொருளில் வந்த பிறவினைச் சொல்.

290. கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.

(இ-ரை.) கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும் - களவு செய்வார்க்குத் தம்முடனேயே யுள்ள தம் சொந்த வுடம்பும் தவறும்; கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது - அது செய்யாதார்க்கு நெடுந்தொலைவிலுள்ள தேவருலகுந் தவறாது கிட்டும்.

உயிர்நிற்பது உயிர்நிலை. தாம் குடியிருக்கும் வீடுபோல்வது என்பதை யுணர்த்த 'உயிர்நிலை' யென்றார். உயிர்நிலை தள்ளுதலாவது அரசனால் தண்டிக்கப்படுதல்.

"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்" (குறள்.550)

"கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
வெள்வேற் கொற்றங் காண்." (சிலப்.20:64-5)