சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/ருத்ராச்சாரியார்

விக்கிமூலம் இலிருந்து
3. ருத்ராச்சாரியார்


காஞ்சி நகரமானது முன்னம் மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல் கலைமகளும் திருமகளும் குதூகலமாகக் கொலுவீற்றிருக்கும் பெருநகரமாக இப்போது விளங்கியது. இருபுறமும் கம்பீரமான மாடமாளிகைகளையுடைய விசாலமான வீதிகளில் எப்போது பார்த்தாலும் 'ஜே ஜே' என்று ஜனக் கூட்டமாயிருந்தது. மாடு பூட்டிய வண்டிகளும், குதிரை பூட்டிய ரதங்களும் மனிதர் தூக்கிய சிவிகைகளும் ஒன்றையொன்று நெருங்கி வீதியையும் அடைத்தன. ஸ்திரீகளும் புருஷர்களும் விதவிதமான வர்ணப் பட்டாடைகளும் ஆபரணங்களும் அணிந்து அங்குமிங்கும் உலாவினார்கள்.

ஆலயங்களிலே பூஜாகாலத்து மணி ஓசையும் மங்கள வாத்தியங்களின் கோஷமும் இடைவிடாமற் கேட்டுக் கொண்டிருந்தன. சமஸ்கிருத கடிகைகளில் வேத மந்திரங்களின் கோஷமும் சைவத் தமிழ் மடங்களில் நாவுக்கரசரின் தெய்வீகமான தேவாரப் பாசுரங்களின் கானமும் எழுந்தன. சிற்ப மண்டபங்களில் கல்லுளியின் 'கல் கல்' ஒலியும், நடன மண்டபங்களில் பாதச் சதங்கையின் 'ஜல் ஜல்' ஒலியும் எழுந்து கலைப்பற்றுள்ளவர்களின் செவிகளுக்கு இன்பமளித்தன. வீதிகளை நிறைத்திருந்த ஜனக்கூட்டத்தில் இடையிடையே கத்தி கேடயங்களைத் தரித்த போர் வீரர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் எதிர்ப்புறமாக வரும் வீரர்களைச் சந்திக்கும்போதெல்லாம் ஒருவருடைய கத்தியை ஒருவர் தாக்கி முகமன் கூறிக் கொண்டார்கள். இவ்வாறு வீரர்கள் சந்திக்கும் இடங்களிலெல்லாம் ஜனங்கள் கூடி, "மாமல்லர் வாழ்க!", "புலிகேசி வீழ்க!" "காஞ்சி உயர்க!", "வாதாபி அழிக!" என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

கலகலப்பு நிறைந்த காஞ்சி நகரின் வீதிகளின் வழியாக மாமல்ல சக்கரவர்த்தியின் ரதம் சென்று, பிரசித்திபெற்ற ருத்ராச்சாரியாரைத் தலைமை ஆசிரியராகக் கொண்ட சம்ஸ்கிருத கடிகையின் வாசலை அடைந்து நின்றது. உள்ளேயிருந்து ஆசிரியரும் மாணாக்கருமாகச் சிலர் வெளிவந்து "ஜய விஜயீபவ!" என்று கோஷித்துச் சக்கரவர்த்தியை வரவேற்றார்கள். மாமல்லரும், மானவன்மனும் கடிகைக்குள்ளே பிரவேசித்தார்கள். அந்த நாளில் பரதகண்டத்திலேயே மிகப் பிரபலமாக விளங்கிய அந்தச் சர்வ கலாசாலையின் கட்டடம் மிக விஸ்தாரமாயிருந்தது. அழகான வேலைப்பாடமைந்த தூண்கள் தாங்கிய மண்டபங்களிலே ஆங்காங்கு வெவ்வேறு வகை வகுப்புக்கள் நடந்து கொண்டிருந்தன. ரிக் வேதம், யஜூர்வேதம், சாமவேதம் ஆகியவற்றை வெவ்வேறு மண்டபங்களில் தனித்தனியாக வித்தியார்த்திகள் அத்தியயனம் செய்து கொண்டிருந்தார்கள்.

வேதங்களிலும் வேதாகமங்களிலும் பூரணப் பயிற்சியுள்ள ஆசிரியர்கள் அந்தக் காலத்தில் காஞ்சி கடிகையிலேதான் உண்டு என்பது தேசமெங்கும் பிரசித்தமாயிருந்தது. இன்னும் வெவ்வேறு மண்டபங்களில் சாஸ்திர ஆராய்ச்சியும், காவிய படனமும் நடந்து கொண்டிருந்தன. ஒரு மண்டபத்தில் வியாகரண சாஸ்திரம் படித்துக் கொண்டிருந்தார்கள். மற்றொரு மண்டபத்தில் வால்மீகி இராமாயணம் படிக்கப்பட்டது. இன்னொரு மண்டபத்தில் பகவத் கீதை பாராயணம் நடந்தது. வேறொரு மண்டபத்தில் காளிதாசனுடைய சாகுந்தல நாடகத்தை மாணவர்கள் நாடகமாக நடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் மாமல்லரும் மானவன்மனும் மேலே சென்றார்கள். கடைசியாக அவர்கள் வந்து சேர்ந்த மண்டபம், சிறிதும் சந்தடியில்லாத நிசப்தமான ஒரு மூலையில் இருந்தது. அந்த மண்டபத்தின் மத்தியில் போட்டிருந்த கட்டிலில், கிருஷ்ணாஜினத்தின் மீது ஒரு தொண்டுக் கிழவர் சாய்ந்து படுத்திருந்தார். தும்பை மலர்போல நரைத்திருந்த அவருடைய தாடி நீண்டு வளர்ந்து தொப்புள் வரையில் வந்திருந்தது. அவருடைய சடா மகுடம் வெள்ளை வெளேரென்று இலங்கியது. இந்தக் கிழவர் தான் அந்தப் புகழ்பெற்ற சம்ஸ்கிருத கடிகையின் தலைவர் ருத்ராச்சாரியார். அவர் படுத்திருந்த கட்டிலுக்கருகில் ஆசிரியர்கள் நாலு பேர் தரையிலே உட்கார்ந்து தைத்திரீய உபநிஷதம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

மாமல்லரின் வருகையைப் பார்த்ததும் அவர்கள் பாடத்தை நிறுத்திவிட்டு எழுந்து சக்கரவர்த்திக்கு வணக்கம் செலுத்திவிட்டு அப்பால் சென்றார்கள். "பல்லவேந்திரா! தங்களை எழுந்து வரவேற்பதற்கும் அசக்தனாகப் போய் விட்டேன் மன்னிக்க வேண்டும். விஜயதசமி அன்று புறப்படுகிறீர்கள் அல்லவா?" என்று ஆச்சாரியார் கேட்டார். "புறப்படுவதற்கு எல்லா ஆயத்தமும் ஆகிவிட்டது. ஆனால், பாண்டிய குமாரன் இன்னும் வந்து சேரவில்லை. வராக நதிக் கரையிலேயே தங்கியிருக்கிறான். ஏதோ தேக அசௌக்கியம் நேர்ந்து விட்டதாம்!" "பிரபு! பாண்டியன் வந்தாலும், வராவிட்டாலும் நீங்கள் விஜயதசமியன்று கிளம்பத் தவற வேண்டாம். இந்த விஜயதசமி போன்ற கிரக நட்சத்திரச் சேர்க்கை ஆயிரம் வருஷத்துக்கு ஒரு தடவைதான் ஏற்படும். இராமபிரான் இலங்காபுரிக்குப் படையெடுத்துப் புறப்பட்டது இம்மாதிரி நாளிலேதான்."

"அப்படியானால் இராமபிரானைப் போலவே நானும் வெற்றியுடன் திரும்புவேன் அல்லவா?" என்று மாமல்லர் கேட்டார். "அவசியம் விஜய கோலாகலத்துடன் திரும்புவீர்கள். ஆனால், அதைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிட்டாது." "குருதேவா! அப்படிச் சொல்லக் கூடாது!" என்று மாமல்லர் பரிவுடனே கூறினார். "அதனால் என்ன? நான் இவ்வுலகை விட்டு மேல் உலகம் போன போதிலும் இந்தக் காஞ்சியையும் கடிகையையும் என்னால் மறந்திருக்க முடியாது. மாமல்லரே! தாங்கள் வாதாபியிலிருந்து திரும்பிவரும் நாளில் நான் தங்கள் தந்தை மகேந்திர சக்கரவர்த்தியையும் அழைத்துக் கொண்டு இந்தக் கடிகைக்கு மேலே வந்து நிற்பேன். நாங்கள் இருவரும் தேவலோகத்துப் பாரிஜாத மலர்களைத் தூவித் தங்களை வரவேற்போம்" என்று ருத்ராச்சாரியார் கூறியபோது மாமல்லரின் கண்கள் கலங்கிக் கண்ணீர் கசிந்தது.