பக்கம்:துங்கபத்திரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

தனர். அப்போது அரண்மனைக் காவலன், மக்களுக்கிடையே அமைக்கப்பட்டிருந்த ஒற்றையடிப் பாதை வழியாக மன்னரை நெருங்கிக் கொண்டிருந்தான். முன் வரிசையிலிருந்த பண்டிதர் ராஜா அய்யர்தான் முதலில் அவனைக் கவனித்தார். உடனே இதை அவர் நாகமரிடம் கூறினார். நாகமர் மன்னரைப் பார்த்தார். மன்னர் அவனைக் கவனிக்கு முள் அவன், அவரருகில் வந்துவிட்டான்.

"ருக்மாங்கதா, என்ன இப்படி வியர்க்க வியர்க்க வருகிறாய்? அரண்மனை யானைகள் அமைதியாகத்தானே இருக்கின்றன?” என்று கேட்டார் பண்டிதர் ராஜா அய்யர்.

"மதுரையிலிருந்து தூதர் வந்திருக்கிறார்; மன்னர் பிரானைச் சந்திக்க வேண்டுமாம்! அவசரமாம்! தூதர் துடிக்கிறார்" என்றார் ருக்மாங்கதன்.

ராயர் அவசர அவசரமாக அரண்மனைக்கு விரைந்தார். நாள் நட்சத்திரம், சாஸ்திரம் சம்பிரதாயம், சகுனம் இவை களின் ஏகப்பிரதிநிதியாக நிற்கும் இந்து சாம்ராஜ்யத்தின் தலைவராக இருக்கும் கிருஷ்ணதேவராயர் உள்ளத் தில் அன்று நடந்த சம்பவங்கள் மனத்தைக் குடைந்தன.

அரண்மனைக்குள் நுழைந்து, ராயர் நேராக விருந்தினர் விடுதிக்குப் போனார். அங்கே தூதுவன் இல்லை. பாண்டியமன்னன் சந்திரசேகரனே உட்கார்ந்திருந்தான். ராயர் திகைத்தார்.

"வருக சந்திர சேகரரே, நலம்தானே! மதுரையிலிருந்து தூதர் வந்திருப்பதாக அல்லவா சொன்னார்கள்! மடையன், தரம் அறியாதவன்! சேகரரே, வருத்தப்படாதீர்கள். காவலன் புதியவனாக இருக்கக் கூடும். அதனால் அவன் விபரம் அறியாது கூறியிருப்பான்" என்று வரவேற்புரையைத் தொடங்கினார் ராயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/17&oldid=1507257" இலிருந்து மீள்விக்கப்பட்டது