உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லைக்காடு/தமிழர் எழுச்சி

விக்கிமூலம் இலிருந்து

தமிழர் எழுச்சி!

உயர்தமிழ் உயர்நடை உயர்தனி வீரம்
இங்கிவை தமிழரின் உடைமை!
அயர்வுகள் தீர்ந்தன புதுமையில் உலகை
ஆள்வது தமிழர்கள் கடமை!
புயல்நிகர் பகைமையும் வேரோடு மாளும்
தமிழர்கள் சமரிடைப் புகுந்தால்!
வெயில்முகம் சுளித்தால் அகிலம் தூளாம்

மேன்மையை முழக்குக முரசே!
பழமையில் இங்குள அன்புறு காதற்
பயனுறும் அகப்பொருள் காப்போம்!
அழகிய தமிழ்நடை யாற்புதி யனவாய்!
ஆயிரம் கலைநூல் சேர்ப்போம்!
அழுதிட ஒருவன்மற் றொருவனை மேய்க்கும்
அதருமம் அனைத்தையும் மாய்ப்போம்!

முழுதுல கப்பயன் உலகினர் சமம்பெற
அன்பினில் மனிதரைத் தோய்ப்போம்!
முழக்குக எங்கணும் முழக்குக முரசே
முழக்குக தமிழர்கள் பெருமை!
வழங்கிடும் அங்கையர் வாளுயர் தோளினர்
வாய்மையின் வாழ்பவர் தமிழர்!



எழுந்துள வீரம் தமிழரின் மூச்சில்
எழுந்தது வாமென முழக்கே!
அழுந்துதல் இல்லை உலகுள்ள வரைக்கும்
அன்புத் தமிழர்கள் வாழ்வு!

மணிமுடி மறவர்கள் முழுதுணர் மேலோர்
மாபெரும் கவிஞர்கள் கூட்டம்,
அணிமுடி காதல் மகளிர்கள் கூட்டம்
ஆவது தமிழர்கள் ஈட்டம்!
பணிகுதல் இல்லை அஞ்சுதல் இல்லை
பாய்ந்திடும் ஒற்றுமை யாலே!
தணியாக் காதல் நிறைவா மின்பம்
தமிழர்க் கிப்புவி மேலே!