உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67


மதத்துறை அலுவலர்களே இனி, ஆட்சியிலே தங்களுக்கு ஆதிக்கம் சிறக்கும், செல்வாக்கு வளரும் என்று நம்பினர். ரிஷ்லுவின் மார்க்க ஏடு அவர்களை மகிழ்வடையச் செய்தது, ஆட்சியிலே இடம் கிடைத்து விட்டதால் இனி, ரிஷ்லு அந்த வாய்ப்பைக் கொண்டு, மார்க்கத்தை மேம்பாடடையச் செய்யவும், மதத் துறையினருக்கு, செல்வாக்கு மிகுந்திடச் செய்யவும் பாடுபடுவார் என்று எண்ணினர்.

அவர்களின் எண்ணம் பலிக்க வில்லை. ரிஷ்லு, பொதுவாக மார்க்கத்தை, சிறப்பாக கத்தோலிக்க மார்க்கத்தை மேன்மை அடையச் செய்ய வேண்டும், என்பதை நோக்கமாகக் கொண்டில்லை.ஜோசப் பாதிரியாருக்கு, ரிஷ்லுவுக்குக் கிடைத்த வாய்ப்புத் தரப்பட்டிருந்தால், முடிகிறதோ இல்லையோ, அந்த நோக்குடன் பணியாற்றி இருப்பார். ரிஷ்லு அப்படிப்பட்ட எண்ணம் படைத்தவரல்ல.

மார்க்கத் துறையில் இடம் பெற்று, புகழ் பெற்று, அதன் மூலம் ஆட்சித் துறையிலே ஆதிக்கம் பெற வேண்டும் என்பதுதான் ரிஷ்லுவின் திட்டம். ஒழ்வொரு சம்பவமும், ஆதிக்கம் பெற வழி கோலவேண்டும் என்பது ரிஷ்லுவின்எண்ணம். கலம் ஏறிச் செல்வது கடற் காட்சி காணவா! வேறு பொருள் நாடியோ, வேறு இடம் தேடியோ தானே! அதே போலத்தான், ரிஷ்லுவுக்கு, மார்க்கம் ஒரு கலம்--கருவி!

முதல் பேரவைக் கூட்டத்திலே ரிஷ்லு, மதத்துறையினர் சார்பில் முழக்கமிட்டார். உண்மை! ஆட்சியாளர்கள், மதத்துறையினருக்குத் தக்க இடமளிக்க வேண்டும், அவர்தம் துணையை நாடிப்பெற்று, ஆட்சியைப் புனிதப் படுத்தவேண்டும், என்றெல்லாம் பேசினார். மார்க்கத் துறையினர் மகிழ்ந்தனர், நிமிர்ந்து நடந்தனர்! அப்போது ரிஷ்லு, லூகான் நகர தேவாலய அதிபர்! இப்போது? ஈடு எதிர்ப்பற்ற முதலமைச்சர்!! இந்த வித்தியாசத்தை மற்றவர்கள் உணரவில்லை! ரிஷ்லு இதனை மறக்கவில்லை. ஜெபமாலை தாங்கும் கரம் இப்போது பிரான்சை ஆட்டிப்படைக்கும் கரமாகி விட்டது! ரிஷ்லுவின் கோபம், எவரையும் பிணமாக்கும், நேசம், செல்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/67&oldid=1549049" இலிருந்து மீள்விக்கப்பட்டது