பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66


ரிஷ்லு, மன்னனுக்கு இந்த ஏற்பாடு செய்துதரக் கூடியவன் என்ற எண்ணம் பலமாக ஊரில் பரவி இருந்ததால், கதைகள் பல, அவன் காலத்திலும், பிற்காலத்திலும் கட்டிவிடப்பட்டன. நடிகை ஒருவளைச் சீமாட்டி வேடமிட்டு மன்னனைச் சொக்கச் செய்யும் ஏற்பாடு செய்தான் ரிஷ்லு, என்ற கதை போல், பலப் பல. இதனினும் மோசமான கதைகள் கட்டி விடப்பட்டன-மக்கள் அவைகளை விரும்பிக் கேட்டனர், சந்தேகமின்றி ஏற்றுக்கொண்டனர். டூமாஸ், ஹ்யூகோ எனும் கதாசிரியர்கள், ரிஷ்லுவைக் குறித்தும் அவன் கால நிகழ்ச்சிகளைப் பின்னியும் வகை வகையான கதைகள் தீட்டினர், அவைகளை வரலாற்றுச் சம்பவங்களுக்கு ஒப்ப மதிப்பளித்து மக்கள் வரவேற்றனர். ரிஷ்லுமீது மக்களின் வெறுப்புணர்ச்சி ஏறியவண்ணம் இருந்தது.

மேரியை ரிஷ்லு அடியோடு மறந்தே விட்டான்--அலட்சியப்படுத்தினான். அவள் சகாப்தம் முடிந்து விட்டது என்று தீர்மானித்தான். மன்னன், தன் சொற்கேட்டு ஆடும்போது, மேரியின் ஆதரவு ஏன்! மேரியோ, மன்னனைப் போல, ஒதுங்கி இருப்பவளல்ல, அதிகாரத்தில் ஆவல் உள்ளவள், எனவே அவளை அருகே இருக்க விடலாகாது!

பிரபுக்கள் பீதிகொண்டு ஒதுங்கிக் கொண்டனர்; மேரி விரட்டப்பட்டு விட்டாள்; மன்னனின் இளவல் தலையில் தட்டி உட்கார வைக்கப்பட்டான்; ஆன் காதலறியாது கண்ணீர் பொழிந்தபடி கிடந்தாள்!

அரச குடும்பத்தை இந்த நிலையில் வைத்துவிட்டு, ரிஷ்லு, தன் ஆதிக்கத்தை உச்சநிலைக்குக் கொண்டு சேர்த்தான்.

கத்தோலிக்கர்கள், ரிஷ்லுவின் உயர்வு கேட்டு, மகிழ்ந்தனர். இனிப் பிரான்சில் ஐரோப்பா முழுவதும் கத்தோலிக்க மார்க்கம் நல்ல நிலைமை பெறும் என்று நம்பினர். பேரவையில் ரிஷ்லு இடம் பெற்றதே கத்தோலிக்கரின் ஆதரவினால்தான். எனவே, ரிஷ்லு தங்கள் மார்க்கத்துக்கு அரண் அமைப்பான் என்று எண்ணினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/66&oldid=1549048" இலிருந்து மீள்விக்கப்பட்டது