உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68


வத்தை, செல்வாக்கை பொழியச் செய்யும்! அன்று பேரவையிலே பண்டார ரிஷ்லு பேசியதை, இன்று பட்டத்தரசனைப் பதுமையாக்கி, அரசியல் ஆதிக்கம் நடாத்தும் முதலமைச்சர் ரிஷ்லுவுக்குக் கவனப்படுத்துவதா? என்ன மந்தமதி!! அவர்கள் கண்டார்களா, ரிஷ்லுவின் இத்தகைய மனப்போக்கை. அவர்கள் எண்ணிக் கொண்டது, ஒரு சிறந்த கொள்கைக்காக, உத்தம நோக்கத்துக்காக, ஏசுவுக்காக, அரசியல் ஆதிக்கத்தை ரிஷ்லு பயன் படுத்துவார் என்று!

ரிஷ்லு, கொள்கையை முன்னால் வைத்து, கோட்டையைப் பிடிக்க வில்லை. ஒரு முதலமைச்சரின் கொள்க 'காவி கமண்டலங்களைக்' கொலு மண்டபத்துக்குக் கொண்டுவந்து, பாதபூஜை செய்வதாகவா இருக்க முடியும்! மற்ற அமைச்சர்கள், கைகட்டி வாய்பொத்தி நிற்க, அதிகாரிகள் குற்றேவல் புரிய, நீதிமன்றங்கள் குறிப்பறிந்து தீர்ப்பளிக்க, படை வீரர்கள் பகைவர் மீது பாய, ஆட்சிபுரிவது! ஏன் இந்தப் பூஜாரிகளுக்கு இது புரியவில்லை என்று எண்ணினான் ரிஷ்லு--அவர்களின் கோபத்தை ஒரு பொருட்டாகவும் மதிக்க வில்லை.

அவர்களிள் கோபத்தை மட்டுமா அவர்களின் ‘கண் கண்ட தெய்வம்' போப்பாண்டவரின் கோபத்தையே பொருட்படுத்தவில்லை.

வெளிநாட்டு நடவடிக்கை ஒன்றின்போது, போப் விரும்பாத காரியத்தை ரிஷ்லு துணிந்து செய்தார். அவருடைய செல்வாக்கு நிரம்பிய இடத்தைப் படை கொண்டு தாக்கி, அவர் வசமிருந்த இடத்தை விடுவித்தார்! அந்தப்படையும், பிரான்சு நாட்டுடையது அல்ல, பிராடெஸ்ட்டென்டுக்காரருடையது! அந்தப் படையை ஏவியதுடன், அதற்குப் பண உதவிசெய்து, போர்மூட்டி வெற்றியும் கண்டார்- போப் வெகுண்டார், நமது ஆசியைக் கோரி நின்றவன் செயலா இது என்று பதைத்தார். கார்டினல் ரிஷ்லுவா இப்படிக் கத்தோலிக்க உலகத்தின் தலைவரைத் துச்சமாக எண்ணி எதிர்ப்பது என்று கேட்டார். ரிஷ்லு, கார்டினல் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/68&oldid=1549051" இலிருந்து மீள்விக்கப்பட்டது