குறட்செல்வம்/செல்வத்துட் செல்வம்
30. செல்வத்துட் செல்வம்
உலகியல், அருளால் வந்த விளைவு. இவ்வுலகத்தின் தோற்றமும், வளர்ச்சியும்கூட அருள் ஆக்கத்தின் பொருட்டேயாம். இவ் உலகைக் கவிந்து எழிலும், இனிமையும் தரும் இயற்கை அருளின் சின்னம். இயற்கைக்கு எழிலும் வளமும் வழங்கும் வான் மழையே அருளின் பொழிவு.
'அருளென்னப் பொழியேலோர் எம்பாவாய்' என்பது மணிமொழி. இத்தகு அருட் செல்வம் பலவற்றுள்ளும் சிறந்ததாகும்.
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் செல்வத்தைப் பற்றிய தவறான கருத்து மக்கள் மன்றத்தில் நிலவியது. அஃதாவது நிலம், வீடு, பொன் ஆகியவைகளையே செல்வம் எனக் கருதினர். அதனாலன்றோ இன்றையப் புற உலகில் செல்வம் நன்றாக வளர்ந்திருக்கிறது.
அறிவுச் செல்வம், அருட் செல்வம் இரண்டும் செல்வம் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் வளர்க்கத் திருவள்ளுவர் முயற்சித்தார். அது செல்வம் மட்டுமல்ல. செல்வத்துள்ளும் சிறந்தது — தலையாயது என்று வலியுறுத்துகின்றார்.
பொருட் செல்வம் ஈட்டும் பொழுதும் துன்பம் தரும் — இழப்பிலும் துன்பந் தரும். அதுமட்டுமின்றி, பொருட் செல்வம் அருளோடு — அருள் உணர்வோடு உறவு கொள்ளாத பொழுது குவியும். பயன்படாதவர்களிடம் தேங்கும். அவ்வழி அழுக்காறு, அவா, வெகுளி போன்ற குணக்கேடுகள் தோன்றத் துணை செய்யும்.
அருட் செல்வமோ, எஞ்ஞான்றும் இன்பந் தருவது. உடையவருக்கும் இன்பம் தரும். மற்றோர்க்கும் இன்பம் தரும். அருட் செல்வத்தினால் — அருட் செல்வம் உடைமையினால் சான்றாண்மை வளரும்; புகழ் பெருகும். அருளுடையோர் நெஞ்சம் தண்ணென்றிருக்கும். அங்கு அன்பின் ஈரம், கருணையின் கசிவு, எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
இத்தகு அருட்செல்வம், பொருட் செல்வத்தைப் போல எளிதில் கிடைக்கக் கூடியதன்றி, பலகாலும் முயன்று பெற வேண்டிய பெரும் பேறு. அன்பு நெறியில் பல்லாண்டொழுகியவர்களுக்கே அருள் உணர்வு அரும்பும். உலகியலில் பொருள் உடையார் பலர். அருளுடையார் அருமையினும் அருமை.
எனினும், வள்ளுவர் காலத்திலேயே ஒரு பொய்வாதம் தோன்றி இருந்திருக்கிறது. செல்வம் உடைமை புண்ணியத்தின் பயன் — அருளின் ஆக்கம் என்றெல்லாம் பிழைபடக் கருதி வந்திருக்கின்றனர். இதனை, திருவள்ளுவர் கடுமையான குரலில் மறுக்கிறார்.
'பொருட்செல்வம் பூரியர் கண்ணும் உள’ என்று இடித்துக் கூறுவதன் மூலம், மனிதனின் தகுதிப்பாட்டுக்கு, பொருள் உடைமையைத் திருவள்ளுவர் அளவுகோலாகக் கையாள விரும்பவில்லை. திருவள்ளுவர் மனிதகுலத்தை ஒன்றாக இணைத்து 'ஒருலகம்' சமைப்பதையே இலட்சியமாகக் கொண்டவர்.
அத்தகைய இலட்சிய உலகத்தைப் படைப்பதற்கு அன்பும் அருளுமே இன்றியமையாத் தேவை. அவையே துணை செய்ய முடியும் என்று அவர் கருதினார். அந்த நம்பிக்கையில் தோன்றியதே திருக்குறள்.
வாழ்க்கையின் தொடக்க நிலை அன்பு. முழுநிலை அருள். இத்தகு அருள் உணர்வு துன்பத்தைக் கண்டால் துடிக்கும். துன்புறுத்தலுக்கு நாடு, இனி மொழி வேறுபாடு ஏது? யார் துன்புற்றாலும், எவ்வுயிர் துன்புற்றாலும், இதயம்கலந்த அருள் உணர்வோடு துன்பம் துடைப்பவனே மனிதன்.
அதனாலன்றோ, வாடிய பயிரிலிருந்து, வாட்டமுறும் மக்கள்வரை, வாட்டம் நீக்கி வளம் சேர்க்கும் வான்மழை அருளாயிற்று! பற்றுக் கோடின்றி பாரில் உள்ள உயிர் அனைத்தும் துய்த்து வாழ்ந்து தூநெறிசேரத் துணை நிற்கும் இறைவனின் கருணை அருளாயிற்று.
பொருட் செல்வம் தேடி அலையும் மனித உலகம் உடன் கருணையையும் நோக்கி அலையுமானால், பெரும் பயன்பெறும்; அமைதி நிலவும்; வந்த காரியமும் நிறைவுறும்.
ஈர நெஞ்சினர் இறைவனைக் காண்பார் என்றார் அப்பரடிகள். உமிழ்நீரால் தொண்டையை நனைத்து உலா வருதல் போல, பருகும் நீரால் வயிற்றை ஈரப்படுத்துவதுபோல, காய்ச்சற் பாட்டில் திகழும் இவ்வுடலை நீரில் அமிழ்த்தி நனைப்பதுபோல, நெஞ்சத்தையும் இனிய அருளில் நனைக்க முயற்சிப்போமாக!
☐☐☐