உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/ஒன்றரைக் கண்ணன்

விக்கிமூலம் இலிருந்து

ஒன்றரைக் கண்ணன்

ண்ணரைக் கண்ணன் வருகிறான், தூங்கப்பா தூங்கு, இது என் தாயார் நான்சிறு பிள்ளையாகத் தொட்டில் கிழிய உதைத்துத் தூங்காமல் அடம் பண்ணியபோது. என்னைப் பயமுறுத்தித் தூங்க வைப்பதற்காக உபயோகித்த பிரயோகம்.

ஒண்ணரைக்கண் டோரியா, சென்னைப் பட்டணம் வாரியா. இது நான் பள்ளிக்கூடச் சிறுவனாகக் கும்மாளி போட்டு விளையாடும்போது உபயோகித்த அர்த்தமில்லாத வார்த்தைகளைக் கொண்ட பாட்டு.

ஆனால் இப்போதுதான் அறிகிறேன் ஒன்றரைக் கண்ணன் என்ற பெயர் எல்லாம் வல்ல இறைவனாம் சிவபிரானுக்கு உரிய ஒரு பெயரென்று. உண்மையில் இதை நான் கேலியாகச் சொல்லவில்லை. அப்பர் பெருமானே இதை வெகு அழகாகச் சொல்கிறார்.

ஒரு பாட்டு

இன்று அரைக்கண் உடையார்
எங்கும் இல்லை, இமயம் என்றும்
குன்றரைக் கண்ணன் குலமகள்
பாவைக்கு கூறுஇட்ட அந்நாள்
அன்று அணுக் கரை கொடுத்து
உமையானையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர்
ஒற்றியூர் உறை உத்தமனே.

என்று கூறுயிருக்கிறார். உண்மை தான். எல்லோருக்கும் இரண்டு கண் என்றால் இந்தச் சிவபிரானுக்கு மட்டும் மூன்று கண். ஆனால் தன் இடப்பாகம் முழுவதையும் பார்வதிக்குப் பங்கிட்டுக் கொடுத்தபின்னர். மூன்றில் பாதிதானே அவருக்குச் சொந்தம். மூன்றில் பாதிஒன்றரை தானே? ஆதலால் சிவபெருமானை ஒன்றரைக் கண்ணன் என்று கூறுவதில் தவறு என்ன. அது சரியான கணக்காக அல்லவா இருக்கிறது.

பிறப்பு இறப்பு இல்லாத சிவபெருமானை எத்தனை எத்தனையோ பெயர் சொல்லி அழைக்கிறோம். எப்படி எப்படி எல்லாமோ வழிபடுகிறோம். அதிலெல்லாம் மாதிருக்கும் பாதியன். தோடுடைய செவியன், உமைபங்கன் என்று பாராட்டிப் போற்றுவதில் ஓர் உண்மையல்லவா பொதிந்து கிடக்கிறது. உலகத்திலே மக்களை யும், ஏன், எந்தப் பிராணி வர்க்கத்தையுமே எடுத்துக் கொண்டால் ஆணாகவும், பெண்ணாகவும் பார்க்கிறோமே யன்றி ஒரு பாதி ஆணாகவும், ஒரு பாதி பெண்ணாகவும் காண்கிறதில்லையே என்ற சந்தேகம் தான் இன்றையப் பகுத்தறிவாளர்களின் உள்ளத்தில் எழுகிற கேள்வி.

ஆனால் இவர்கள் மறந்து விடுகிறார்கள் மனித உடம்பின் அமைப்பையும், மற்றும் பௌதிகங்களின் அமைப்பையும் பார்த்தால் அவை இருவேறு ஒட்டுகளாக அமையப் பெற்றிருக்கும்; ஒன்று தாய்த் தன்மை, மற்றொன்று தந்தைத் தன்மை. இரண்டும் ஒன்றித்தான் உலக வளர்ச்சி ஏற்படுகிறது.

மின்சாரம் என்பது ஒரு சக்தி என்று தெரியும். அங்கும் ஆண் பெண் என்றும் இரண்டு சக்திகள் உண்டு - பாலிடிவ், நெகடிவ் (Positive, Negative) என்று இரண்டும் ஒன்று சேர்ந்தால்தான் மின்சார ஓட்டமே ஏற்படும் மக்கள் உடம்பிலும்.

மக்கள் உடம்பிலும் இந்த மின்சார சக்தி பரவியிருக்கிறது என்பதும். இதுவே உயிர் உடம்போடு ஒட்டிக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்றும் இன்றைய உடல் நூலார் கூறுகிறார்கள்.

இவ்வாறு உருவத்தாலும், சக்தியினாலும் இரண்டு தன்மைகள் ஒன்றாய்ச் சேர்ந்து இயங்குவதை எத்தனையோ ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாலேயே கண்டிருக்கிறார்கள் நம் முன்னோர். உலகெல்லாம் இறைவன் திரு உருவம் என்கிறார்கள். பார்க்குமிடங்களில் எல்லாம் அவன் பசிய நிறத்தையும், கேட்கும் ஒலியிலெல்லாம் அவன் கீதத்தையும் கேட்டவர்கள், சராசரங்கள் அத்தனையிலும் இறைவனுடைய திருவுருவத்தையே கண்டார்கள். உலகெல்லாம் அவன் தானும் தன் தையலுமாய் நின்ற தன்மையை விளக்கவே அவனை மாதிருக்கும் பாதியனாக அர்த்தநாரியாகக் கற்பனை பண்ணியிருக்கிறார்கள். கதை இது தான்.

பிருங்கி என்று ஒரு முனிவர், அவர் இறைவனிடத்து இடையறாத அன்பு பூண்டவர். அவர் கயிலாயத்துக்கு வருகிற பொழுதெல்லாம் இறைவனை மட்டுமே வலம் வருவார். பக்கத்தில் இருக்கும் பார்வதி தேவியைப் பார்ப்பதும் இல்லை. அவளையும் சேர்த்து வலம் வருவதும் இல்லை. அவள் தன் கடைக் கண் நோக்குக்குத் தவம் கிடப்பது மில்லை. இது அம்மைக்கு அவமான மாகப்பட்டது. அவன் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டாள் தனக்கும் அவர் உடலில் ஒரு பாதி கொடுக்க வேண்டும் என்று. உள்ளத்தால் ஒன்றிய இருவரும் அன்று முதல் உருவத்திலும் ஒன்றி நின்று ஓருருவில் காட்சி கொடுக்க ஆரம்பித்தார்கள்.

கதை இத்துடன் முடிந்து விடுகிறதா இல்லை. பிருங்கியின் பிடிவாதம் அப்போதும் தணியவில்லை வண்டு உருவெடுத்து. அந்த அம்மையப்பரது உடலை, அதன் நடுப்பாகத்தில் துளைத்து, அம்மையை, அம்மை அமர்ந்திருக்கும் பாகத்தை, வலம் வராமலேயே வெளிவந்து விட்டார்.

பின்னர் தன் உடலையே உதறிவிட்டு எலும்புருவில் என்றும் இறைவன் திருவடி அகலாது நின்று விட்டார். இந்தக் கதையிலும் ஓர் உண்மை. உலகவாழ்விலே பந்த பாசங்களிலேயே ஈடுபடாது, பற்றற்றான் பற்றினை மட்டும் பற்றி நிற்பவர்கள் அம்மையின் அருளுக்குப் பாத்திரர் ஆக வேண்டும் என்பதில்லை என்பது தெளிவாக விளக்கமுறுகின்றது.

இப்படியெல்லாம் தான் இறைவனுக்குப் பல்வேறு உருவங்களையும் அந்தந்த உருவங்களுக் கேற்ற முறையில் கதைகளையும் கற்பனைப் பண்ணியிருக்கிறார்கள். அன்றையத் தமிழர்கள். ஒரு நாமம், ஓர் உருவம் ஒன்றுமில்லாத இறைவன் இப்படித்தான் ஆயிரம் திரு நாமங்களுடனும், இன்னும் எண்ணற்ற உருவங்களுடனும் உருவாகியிருக்கிறான் மனிதனது கற்பனையிலே.

இப்படிக் கற்பனை செய்ததையெல்லாம் கல்லிலும், செம்பிலும் வடித்தெடுத்திருக்கிறார்கள் நம் நாட்டுச் சிற்பிகள். அப்படி அவர்கள் உருவாக்கிய சிற்ப வடிவங்களே இன்று நமது தமிழ் நாட்டுக் கோயில்களில் எல்லாம் நிறைந்திருக்கின்றன. மனிதன் கற்பனையோடு கலையும் சேர்ந்து வளர்ந்திருக்கிறது. அர்த்த நாரியின் சிலை அநேகமாய் எல்லா சிவன் கோயில்களிலும் இருக் கும். பொன்னியின் செல்வன் ராஜராஜன் காலத்துக்கு முன் எழுந்த கோயில்களில் எல்லாம் கர்ப்பக்கிருஹத்திற்கு நேரே பின்புறம், மேற்கே பார்த்த திருவுருவமாக அர்த்த நாரி அமைந்திருக்கும். அந்த இடத்திலேதான் பிந்திய சோழர், லிங்கோத்பவரை நிறுத்தியிருக்கிறார்கள். அதையும் மாற்றி அமைத்திருக்கிறார்கள், நாயக்கர்கள் விஷ்ணுவின் சிலையை வைத்து.

தமிழ்நாட்டில். இந்த அர்த்த நாரியின் சிலா உருவம் படிப்படியாக வளர்ந்திருக்கிறது. பாலாற்றின் மருங்கிலே கலை வளர்த்தவர்கள் பல்லவ அரசர்கள். அவர்களில் முதன்மையானவன் மாமல்லன் என்னும் நரசிம்ம வர்மன்.

அவன் உருவாக்கியதுதான் மாமல்லபுரம். அங்குள்ள பாண்டவர் ரதங்களில் முதலாக நிற்கும் தருமர் ரதத்தின் பின் பாகத்திலே அன்றையச் சிற்பி அர்த்த நாரியை உரு வாக்கியிருக்கிறான். உச்சந்தலையிலிருந்து உள்ளங் கால் வரை ஒரு கோடு இழுத்துக் கொண்டான் சிற்பி. வலப்பக்கம் ஆண் என்று ஒதுக்கிக் கொண்டான். மழுவையும் கையில் கொடுத்தான். குழையைக் காதில் பொருத்தினான். அபயகரத்தைத் தூக்கி நிறுத்தினான். இடப்பாகத்திலே பெண்ணின் தலையை யெல்லாம் ஏற்றினான். குழைக்குப் பதில்தோடு, ஒன்றும் இல்லாத மூக்கிலே ஒரு நத்து, கையிலே ஒரு செண்டு, எல்லாவற்றையும் விட விம்மிப் பெருத்த மார்பகம் என்றெல்லாம் அமைத்து உருவாக்கி விட்டான். இவனுக்கும் தெரிந்திருக்கிறது, பெண்ணின் இடை ஆணின் இடையை விடச் சிறுத்த தென்று. என்றாலும் அதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

இதற்கு அழுத்தம் கொடுக்கிறான் காவிரிக் கரையிலே பின்னால் தோன்றிய கலைஞன். சோழ சாம்ராஜ்யம் மகோன்னத நிலையில் இருந்தபோதுதான் சோழ வள நாட்டில் எண்ணிறந்த கோயில்கள் தோன்றியிருக்கின்றன. எண்தோள் ஈசனுக்கு எழில் மாடம் எழுபதல்லவா கட்டினான், சோழன். அவன் வழிவந்தவர்களும் கொஞ்சமும் சளைக்காமல் கல்லாலே கட்டி முடித்திருக்கிறார்கள் 'எத்தனை எத்தனையோ கோயில்களை. அதில் ஒரு கோயில் கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயில். அங்கும் கர்ப்பகிருஹத்தில் மேல்சுவரில் ஒரு சிலை; அர்த்தநாரியின் சிலை.

அந்தச் சிலை மிகவும் அற்புதமான சிலை. இடையை சிறிதாக்கி பிட்டியை, ஆம், பத்து மாதம் குழந்தையை ஏந்தி வளர்க்கும் (Pelvie gudle) ஐப் பெரிதாக்கி, நிற்கிற நிலையிலே ஓர் ஒய்யாரத்தையும் கொடுத்து உருவாக்கியிருக் கிறான் சிற்பி. இறைவனை விட்டு அகலாத நந்தியும் இருக்கிறது இங்கே.

வலப்பாகம் முழுவதும் ஆண்மையும், இடப்பாகத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் பெண்மையின் மென்மையையும் உணரலாம். ஆணும் பெண்ணும் இணைந்த திரு உரு என்பதை இத்தனை அழகோடு காட்டிய சிற்பி மிகவும் சிறந்த கலைஞனாகத்தான் இருக்க வேண்டும்.

கடல் மல்லையையும், காவிரித்திரு நதியையும் விட்டு கொங்கு நாட்டுக்குள் செல்லலாம். மலை நாட்டின் மலை மேலேயே ஏறலாம். திருச்செங்கோடு மலையைத் தூர இருந்து பார்த்தாலே இரண்டு சிகரங்களும், அவை ஒன்றை ஒன்று நன்கு தழுவி நிற்பதும் தெரியும். மலைமேலேயே மிக்க சிரமத்துடன் தான் ஏற வேண்டும்.

ஆ.பெ.அ.நெ-9

செங்கோட்டு வெற்பன் முருகனையும் தரிசித்து வணங்கி விட்டு கர்ப்ப கிருஹத்துக்குச் சென்றால் அங்கு ஓர் அதிசயம் காத்து நிற்கும். மூலவர் இருக்கின்ற இடத்திலே லிங்கத்திற்கு உரு இராது. பீடம் இராது ஆவுடையாரும் இராது.

அங்கே கம்பீரமாக, வெள்ளைக்கல் உருவிலே காட்சி கொடுப்பவர் அர்த்தநாரிதான். அந்த மூல மூர்த்தியைப் போலவே உற்சவ மூர்த்தியும், எல்லா இடத்தும் வடிவத்தால் பெண்மை மிகுந்திருந்தாலும், தலைமையாய் ஆண்மை மிகுந்திருப்பதைப் பார்க்கிறோம்.

இடப்பாகத்திலே இருக்கும் மிடுக்குக்கு வலப்பாகத்திலே உள்ள காம்பீரியம் குறைந்ததாக இல்லை. தலையை முடித்திருப்பதே தனி அழகு. எங்கெல்லாமோ தேடி அலைந்தும் காணக் கிடக்காத பிருங்கி இங்கே இருக்கிறார், வலப்பக்கத்திலே இறைவன் காலடியிலேதான். இது முந்திய இரண்டு சிலைகளுக்கும் காலத்தால் பிற்பட்ட தாய்த்தான் இருக்க வேண்டும் மக்கள். இனத்திலே ஆண்மை, பெண்மைக்கு அடங்கிய காலத்திலே உருவாகி யிருக்க வேண்டும். பெண்மை, ஆண்மையை அடக்கிய நிலை என்றுதான் இல்லை என்று கேட்பதுபோல் இந்த சிலை நின்று கொண்டிருக்கிறது அங்கே.

இப்படித்தான் கலையும் சிலையும் சேர்ந்து வளர்ந்திருக்கிறது, தமிழ் நாட்டிலே. அதை நன்றாக உணர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது நமக்கு இன்று.