உள்ளடக்கத்துக்குச் செல்

அய்யன் திருவள்ளுவர்/இயேசு

விக்கிமூலம் இலிருந்து


இயேசு ஒரு சீர்திருத்தவாதி

(சென்னையில் உள்ள கிரிஸ்துவக் கலை - தொடர்பு நிலையத்தின் இயக்குனராகப் பணிபுரியும் தமிழ் சான்றோர் அருட்டிரு. கவிசேச முத்து அவர்கள், இயேசு பிரானைப் பற்றி கவியரங்கம் ஒன்றை நடத்தினார். அக் கவியரங்கத்திற்கு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் அவர்களின் செல்வரும், 'அமெரிக்கன் ரிப்போர்ட்டர்' என்ற ஏட்டின் பொறுப்பாசிரியருமான வ.உ.சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமை ஏற்றார். அவ்வமயம் பன்னிரு கவிஞர் பெருமக்கள் இயேசுவுக்குப் பாமாலை சூட்டினர். அவற்றுள் சவுக்கடி. ஆசிரியரான, 'எரியீட்டி' என்.வி, கலைமணி அவர்கள் சூட்டிய பாமாலை இது.)

தமிழ்த்தாய் வாழ்த்து

'கண்ணேறு படுமென்று தமிழே! உன்னைக்
கண்ணாக நான்கழுந்தேன் தாயே! நெஞ்சப்
பண்ணென்று சொல்கின்ற உயிர்த்து டிப்பில்
பலகாலம் உன்சதங்கை ஒலியைக் கேட்டேன்.
மண்ணின்மேல் முதன் முதலாய் சப்த மிட்ட
மணிகண்டம் உன்கண்டம் நீயெனக்குக்
கண்நாடி வருகின்ற காட்சி யானாய்
கைக்குழந்தை நானம்மா காப்பாய் தாயே!

அறிஞர் அண்ணா வணக்கம்

அண்ணாவே! நீ வளர்த்த தமிழை, அந்த
அருந்தமிழில் புதைந்திருந்த கண்ணி யத்தை
மண்கவர்ந்த மாசற்ற அன்பைக் கண்டு

மயங்கின்தோல் எழுத்தாளன் ஆன என்னைக்
கொண்டுவந்து கவியரங்கில் நிறுத்தி விட்டார்
கூவாயோ குயிலேநீ என்றும் கேட்டார்
அண்ணாவே, உன் அறிவின் துளிஎ னக்கு
அருளாயோ பொருளோடு பாடு தற்கு!

உனைவிற்றுக் காசாக்கத் தெரிய வில்லை
ஒரத்தில் நிற்கவைத்தார் பொறுத்துக் கொண்டேன்
தனைவிற்றுத் தன்மானம் விற்று உள்ளச்
சாட்சியினைக் கடைத்தெருவில் விற்றுப் பல்லோர்
எனைபோல இங்குண்டோ என்று கேட்கும்
இழிநிலையைப் பார்த்தாலே விழிபாழாகும்
அனைத்தாகி நீயிருக்க எனக்கேன் அச்சம்?
அடிவைத்தேன் கவிதையிலே வாழ்த்தாய் அண்ணா!


வேறு

கவியரங்கத் தலைவருக்கு வணக்கம்


கொழித்தெழில் தமிழைத் தின்று
கொஞ்சிடும் கிளியின் பேச்சை
விழுங்கிடும் செவிகள் கொண்ட
வ.உ.சி. குறளை நோக்கி
முழுமையை நயந்து நின்றார்
சந்தனம் வழிய நாறும்
எழுதிய உரையால் நாட்டை
எனதென எடுத்துக் கொண்டார்.

ஒழுகியத் தேனை உண்டு
இன்னிசை உளறும் தும்பி
விழுந்தபின் அங்கோர் பக்கம்
விழியினைக் குவித்துத் தூங்கும்
வழக்கத்தை இவரும் கொண்டார்
வ.உ.சி. வடித்த தேனை
குழையவே குடித்த வாயான் இளந்தமிழ்ச் சிறகுத் தும்பி.

நெடும்புனல் வீங்கி வீங்கி
நெகிழ்ந்துயின் நீராய் பொங்கிப்
படுக்கிற பான்மை போல
பைந்தமிழ்க் குமிழை நெஞ்சில்
தொடுக்கிற சுப்பிரமண்யம்
தொடுகிற பண்பைக் கொண்டார்
வடுவிலா அன்பைப் பூக்கும்
வனப்புள வனத்தான் வாழி.


அருட்டிரு சுவிசேச முத்து
அவர்கட்கு வணக்கம்

கவிஞர்கள் விரவி வைத்த
கவிதையில் இயேசு நாதர்
குவியேழிற் பிழம்பில் சிக்கிக்
களித்திட நினைத்து ஞான
சுவிசேச முத்து இந்த
சுடர்க்கவி அரங்கம் கூட்டி
புவியினை வளைத்துக் கொண்ட
புதுமையே புதுமை யென்பேன்.


அவையோர்க்கு வேண்டுகோள்

அஞ்சுகம் புலம்பும் ஓசை
அடுத்துள மலர்த்துக் கத்தைக்
கொஞ்சமாய் நெகிழ்ந்து நாத
கூட்டிலே கிடக்க வைக்க
செஞ்சதைப் போல நானும்
செய்யவே கவிதை மீட்டி
கொஞ்சிட வந்தேன் நீங்கள்
குவிமலர், விழிப்பாய்க் கேளீர்


வேறு

இயேசு ஒரு சீர்திருத்தவாதி

இயேசுஓர் சீர்திருத்தச் செம்மல் என்ற
இலக்கணத்தின் இலக்கியமாய் பாட வந்தேன்

கூசுகின்ற கீழ்நிலைகள் இருக்கு மானால்
கோணவினை நிமிர்த்தாமல் விடுதல் தீது!
நீசநிலை நெருக்கடியில் நெருங்கிச் சாகும்
நிலத்திற்கு விடிவெள்ளி தேவை யன்றோ?
ஆசைநோய் குடிகொண்ட நெஞ்சை நாட்டில்
ஆற்றுகின்ற மருந்தின் பேர் சீர்தி ருத்தம்!


சீர்த்திருத்தம் வார்த்தையல்ல உயிரோட் டத்தால்
சீறிவரும் செயலின்பேர் கருத்தைச் சொல்ல
யார்வேண்டு மானாலும் வருவர்! ஆனால்,
கடனாற்ற யார்வருவர்? இதுதான் கேள்வி!
நீரெதிர்க்கும் புயலைப்போல் இருந்தால் தானே
நேற்றிருந்த கொள்கைகளை இன்று வீழ்த்தும்!
கார்பொத்தல் ஆக்குகின்ற மின்ன லைப்போல்
கடனாற்ற வந்தவர்தான் இயேசு அண்ணல்!

வேசியினைப் பாவியென்று குற்றஞ் சாட்டி
வீசவந்தார் கல்லாலே! அதனைக் கண்டு
இயேகமனம் புழுங்கிற்று!கூட்டத் தாரை
ஏறெடுத்துப் பார்த்துஒரு கேள்வி கேட்டார்.
"வேசியினைப் பாவியெனும் உங்களுக்குள்
விதிவிலக்காய் இதுவரையில் பாவம் செய்யா
மாசற்றோர் முதற்கல்லை எறிக” என்றார்.
மனமாற்றும் சீர்த்திருத்தம் இதுதான் அன்றோ!

மீன்பிடிக்கும் பேதுருவைக் கடலோ ரத்தில்
தேவசுதன் வலைவீசக் கண்டார்! நீங்கள்
நான்செல்லும் பாதையிலே வருவீ ரானால்
மனிதரினைப் பிடிப்போராய் செய்வேன் என்றார்.
தேன்மோழிகள் தித்திப்பைத் தருவ தோடு
திசைதிரும்பிப் போகாது! உடனே நெஞ்சக்
கூன்நிமிர்த்தும் ஆற்றலோடு வேலை செய்யும்
குனியாத சீர்திருத்தம் இதுதான் என்பேன்

"என்நிமித்தம் நீங்களெல்லாம் துன்பப் பட்டால்
என்நிமித்தம் நீங்களெல்லாம் பழிசு மந்தால்
புண்பட்டுப் போகாதீர் களிகூறுங்கள்
பொல்லாதோர், உங்களுக்கு முன்பிருந்த
நன்மைசெய் ஞானவானை இப்ப டித்தான்
நடுநடுங்கச் செய்தார்கள்!" என்று சொன்னார்.
இன்றல்ல, என்றுமிந்த உபதேசங்கள்
இறவாத சீர்திருத்த இதயப் பேச்சே!

ஆயக்கா ரர்பாவி இவர்களோடு
அமர்ந்திருந்தார் பந்தியிலே! அதனைக் கண்டு
வாயவிழ்த்தார் பரிசேயர்! "என்ன உங்கள்
போதகரே பாவியோடு விருந்துண்கின்றார்
நோயாளி களுக்கன்றோ மருத்துவர்கள்
இரக்கத்தை நாடி வந்தேன்! பாவி யைஅல்ல
தேயக்கால் நடப்பதெல்லாம் பாவி கட்கே
நிதிமானைத் தேடியல்ல!” என்றார் இயேசு!

இயேசுநாதர் சீடரினை அழைத்துச் சொன்னார்
“என்னுடைய அதிகாரத் தாலே நீங்கள்
பாசமுள்ளோர் வியாதிகளைக் குணமாக்குங்கள்
பணமட்டும் வாங்காதீர்” என்று ரைத்தார்
மாசற்ற சீர்திருத்த வாதி செய்யும்
மறுமலர்ச்சி இதுவன்றி வேறே தேனும்
தேசத்தில் கண்டதுண்டோ! "பணங்கா சுக்குச்
சேவையினைச் செய்யவேண்டாம்” என்றார் இயேசு!

அருள்முளைத்து பாவத்தின் வேரை வெட்டி
அப்பழுக்கை நீக்குமிடம் கோயில்! அங்கே
பொருள்கறக்கும் வாணிகர்கள் குவிந்து மக்கள்
புத்தியினைத் திசைத்திருப்பி கொள்ளை கொள்ளும்
திருடரினை இயேசுகண்டார்! பிரம்பெடுத்தார்
சிற்றினத்தை விரட்டிவிட்டார்! தெய்வ நாட்டம்
பெறுகின்ற வழிசொன்னார் சீர்த்தி ருத்த
பேரின்ப தாள்திறந்தார் இயேசு பெம்மான்!

ஏழைக்கும் கோழைக்கும் எடுத்தார் கையில்
இளைத்துருக்கும் பிள்ளைக்கும், தன்னைக் காக்கா
பாழைக்கும் பதங்குலைந்த வாழ்வில் சிக்கிப்
பரதவிக்கும் மோழைக்கும், நோயில் மாட்டி
ஈழையிலே சிக்குண்ட பிணியா ளர்க்கும்
இதயத்தைத் திறக்கின்ற நெஞ்சம் உண்டா?
பாழடைந்த கண்ணுக்கோர் ஒளியை ஊட்டப்
பணிசெய்யும் சீர்திருத்தம் எங்கே? எங்கே?


மேல்மட்டச் சீர்திருத்தம் மிகமட் டத்தில்
வேக்காட்டில் சாக்காட்டில் இருப்பவர்க்கு
கோல்கொடுக்க கைகொடுக்க வருமா என்றால்
குச்சுவீட்டில் நுழையாது மச்சு வீடு
பால்குடிப்போர் சீர்திருத்தம் உப்பே இல்லா
பழங்கஞ்சிக் கலயத்தில் நுழைவ தில்லை
கால்இருப்போன் முடவனுக்கு வழியைக் காட்டும்
கால்வழியில் பணக்காரன் வரவே மாட்டான்.


வாடையிலே வாடுகின்ற மனித ருக்கு
வெதவெதப்பு தருகின்ற இதயச்சூடு
கோடையிலே வசந்தத்தால் வந்த சூடு
கொடுப்பவனோ தெய்வத்தால் பிழிந்த சாறு.
பாடயிலே குழைகின்ற நாத நீட்டம்
பனிபடுத்த படுக்கையிலே மிதந்த சூடு
நாடயிலே அதைக்காண்போம் அந்தச் சூட்டை
நல்குகின்ற சீர்திருத்தம் செய்தவர் யார்?


பணம்படைத்தோர் சமுதாயச் சகதிச் சேற்றில்
பாதத்தை ஊன்றாமல் மேலி ருந்தே
தினம்செய்யும் சீர்திருத்தம் உண்டு! ஆனால்
தெருப்புழுதி யோடிருக்கும் ஏழை யோடு
மனம்ஒன்றி ஏழையாக மாறிக் கேட்டை
மாற்றுகின்ற சிர்திருத்த வாதி உண்டு.
குணம்நல்லக் குணங்கொண்ட இயேசு நாதர்
ஏழையாகி சீர்திருத்தம் குவித்தச் செம்மல்

வேறு


உயிர்த்திரி எண்ணெய் வற்றி,
ஒளியுற வறுத்துக் கண்கள்
மயிரிழை இழையாய்க் கீழே
மடங்கிடும் போது இயேசு
கயவரைத் தண்ணிர் கேட்டார்
காடியை வாயில் வைத்தார்
நயனில செய்தார் குற்றம்,
"நாயக பொறுப்பாய்” என்றார்.


வேறு


தத்துவத்தைக் கடைந்துயிர்க்கே உண்பிக் கின்ற
தருணத்தைத் தானேற்று மனித நஞ்சு
வித்திருக்கும் திக்கேறி விளக்கம் ஈந்து
வினையாற்றும் இயேசு நாதர், எதிரி தன்னைக்
"குத்தஒளி வாளெடுத்த பேது ருவை
"குத்தாதே வாளெடுப்போன் வாளால் வீழ்வான்"
சத்தான வாசகத்தைக் கேளாய் என்றார்
சாயாத சீர்திருத்தம் இதுதா னன்றோ!

கொலைமலிந்து தெய்வத்தின் பலிபீடத்தில்
கொடுமையெலாம் மலிந்திருந்த அந்த நாளில்
சிலைமலிந்து சிறுதெய்வம் பெருந்தெய்வங்கள்
தெருவுக்கு தெரு மலிந்தே இருந்த நாளில்
விலைமலிந்து போய்விட்ட போலி ஞான
போதகர்கள் மலிந்திருந்த அந்த நாளில்
சிலைமலிவை கொலைமலிவை ஒழித்துக் கட்ட
சீர்திருத்த வாதியாக இயேசு வந்தார்!

மண்ணிடையே பிறந்ததெல்லாம் மண்ணுக் கென்றார்
விண்ணிடையே பிறந்ததெல்லாம் விண்ணுக் கென்றார்
எண்ணத்தைப் பொருத்துத்தான் செயலும் சொல்லும்
எதிரிகளை நேசிக்க வேண்டும் என்றார்

அண்ணனுக்கும் தம்பிக்கும் தாய்தந் தைக்கும்
அளந்து வைத்த உறவைவிட இறைவனுக்கும்
மண்ணுக்கும் இருக்கின்ற உறவு நல்ல
உறவென்று சீர்த்திருத்த இயேசு சொன்னார்.

இடையரினை மூன்றுராஜா சந்தித்தார்கள்
இயேசுநாதர் உங்களுக்குப் பிறந்துவிட்டார்
விடைகாண முடியாத வினாவுக் கெல்லாம்
விடையளிக்க வந்துவிட்டார் என்று சொன்னார்
கடைநிலையில் இருப்பவரைத் திருத்து தற்கே
கிருத்துவந்தார் என்றெழுதி இருப்ப தாலே
படையலிட்டார் சீர்த்திருத்தம் அதனால் ஞானப்
பிதாவுக்குப் பிள்ளைகளை அளித்தார், காத்தார்.

உலகத்தில் அவர்செய்த சீர்தி ருத்தம்
உள்ளிருக்கும் ஆத்மாவின் சீர்த்தி ருத்தம்
கலகத்தின் கண்ணிரின் கேடு பாட்டின்
கலக்கத்தின் காரணங்கள் எங்கி ருந்து
இலங்குகின்ற தென்றவரும் கண்டு பூமி
இன்னலுக்குப் பொன்மொழிகள் உதிர்த்தார்,இந்த
உலகத்தை ஆதாய மாக்கினாலும்
ஆத்மாவை இழந்துவிட்டால் பயனே தென்றார்!

தனையழித்துப் பிறர் வாழ சீர்த்தி ருத்தம்
தரணியிலே விரவியவர் இயேசு நாதர்
முனையொடியா சீர்த்திருத்தம் பொதுநலத்தின்
முழுமைக்குள் முளைப்பதாலே! இயேசுநாதர்
வினையெல்லாம் பிறர்க்கு நன்மை செய்யும்
வினையாக மாற்றினார்கள் அவரின் நெஞ்சில்
சினையளவும் மாசுதூசு இருக்கவில்லை
சீர்த்திருத்த பரிசுத்த ஆவி ஏசு!

 வேறு

இயேசுவின் கண்கள் வைர விளக்கொளி
இயேசுவின் உதடுகள் திராட்சை இளங்கொடி
இயேசுவின் முகத்தில் ஞானப் பிழம்பொழி
இயேசுவின் அசைவுகள் எல்லாம் அறிவொளி!


கர்த்தர் விதையில் முளைத்த கனியே
காலத்தை வெல்லத் தழைத்த இறையே
சர்வ வல்லமை சத்தியம் நீயே
சரணடை யாத சாந்தம் நீயே


உன்விழி திறந்தால் பாவம் ஒடுங்கும்
உன்வாய் திறந்தால் கொடுமை நடுங்கும்
உன்கால் நடந்தால் அன்பு தொடங்கும்
உன்கை அசைந்தால் உலகே அடங்கும்

வேறு

கேடு களைத்திட கூடு தழைத்திட
நாடு பிழைத்திட
வந்ததுவே ஒரு தென்றல் - அது
இயேசுவெனும் மணமன்றல்
வீடு களித்திட நீடு சுகம்பெற
தேடு சுதந்திரம்
தந்ததுவே ஒரு தெய்வம் - அதைக்
கண்டுகளித்தது வையம்!
ஏடு இனிக்குது நாடு சுவைக்குது
மூடு பனித்திரை
நீக்கிடவே வந்த பாலன் - பாவம்
தாக்கிடவே வந்த சீலன்!
மேடு தகர்த்துப் பூங்காடு இயக்கியே
வீடு அளித்திடும்
நாயகனே நமதேசு - அவர்
நெஞ்சிலே ஏது மாசு?