உள்ளடக்கத்துக்குச் செல்

அய்யன் திருவள்ளுவர்/பாரதிதாசன் பேசுகிறேன்

விக்கிமூலம் இலிருந்து




பாரதிதாசன் பேசுகிறேன்....



சுடர்விழிக் கதிரவன் படரும் உலகத்தீர்! கட்டுக் குலைந்த காரிருள். பட்டொளியால் பதுங்கிற்று.

எங்கும் இளமை - எங்கும் புதுமை - புரட்சியால் பூத்தப் புது மலர்கள் கோடி!

மிரட்சியால் ஒடும் மான்கள் இல்லை. தமிழகத்தின் வீதிகளிலே புவிநிகர் மாந்தர் கூட்டம் உலா வந்தன.

நான், விடுதலைக் கவிஞன் பாரதியாரால் உருவாக்கப்பட்டவன்,

எனது தொழில் பாடுவது -
புதிமையை நாடுவது -
சிர்திருத்தத்தோடு கூடுவது -
தமிழின்பம் தேடுவது -
அதை உண்டு ஆடுவது -
எதிர்ப்பு வந்தால் வாளெடுத்துப்
போருக்கு ஒடுவது -
வென்ற பிறகு வெற்றியை
நாட்டுக்குக் கூறுவது -
வெற்றியைப் பழித்த என்னைச் சீறுவது -
எதிரிக்கும் இறங்கி ஆறுவது -
கொண்ட கொள்கையை விட்டு
மாறுவது எனக்கு இல்லை!

சுப்பிரமணிய பாரதிக்குப் பிறகு பைந்தமிழ்த்
தேரை ஓட்ட ஒரு சாரதி தேவைப்பட்டான்!
அந்த சாரதி இடத்திலே நான் உட்கார்ந்தேன்!
சழக்கர்கள் வெட்டி வைத்த பள்ளம் -
கயவர்களைத் தடுப்பதற்காகப் போடப்பட்ட வேலி -

இதைத் தாண்டி நான் தமிழ்த் தேரை ஓட்டிச் செல்ல வேண்டும்.

பாரதியார், தமது கவிதையின் ஆயுதமாக, நிலவைத்தான் அதிக நேரம் வைத்துக் கொண்டிருந்தார்.

அவர் எனக்கு ஆயுதமாகத் தந்துவிட்டுச் சென்றது எதைத் தெரியுமா?

நெருப்பை!
கொதிக்கும் செம்பரப்பை!
வெடிக்கும் எரிமலையை!
சீறும் அம்பை!
பாயும் புலியை!
சாய்க்கும் புயலை!
கொந்தளிக்கும் கடலை!
இவற்றை வைத்துக் கொண்டு விளையாடு -
என்று என்னிடம் சொல்லிவிட்டு
அவர் காற்றைப் போல கடுகிப் பறந்து விட்டார்.

பாரதியாரோடு முரண்பட்டவர்கள், என்னிடம் வந்து சரண்பட்டார்கள்.

“கொலை வாளினை எடடா" என்று நான் கூறியதுதான் தாமதம். நிலை மாறிற்று. "எலி வளைக்குள் நுழையடா" என்று எதிரிகள் நுழைந்தனர்.

தமிழ் என்றால் என்ன என்று கேட்டார்கள்.

அடுத்த நிமிடம் 'தமிழுக்கு அமுதென்று பேர், அது எனது உயிருக்கு நேர்' என்று குறிப்பிட்டேன்.

தமிழ் எதிரிகள் தலையற்று வீழ்ந்து துடிதுடித்தனர்.

"தமிழர் என்று சொல்லுவோம் - தமிழ்ப் பகைதனை நடுங்க வைப்போம்”

"இமய வெற்றியின் முடிவில் தமிழ் கொடியை ஏற வைத்த நாங்கள்' - என்று எழுதியதுதான் தாமதம், உடனே மூளையில்" குத்திற்று பின்னேற்றக் கும்பல்.

"எமை நத்துவாயென எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்'

'தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்'

- என்று கூறியவுடனே வாலையாட்டிக் கொண்டு எதிரிலே வந்த வேற்றுமொழி, கால் பிடறியட ஒடிற்று.

வான்
மண்
கால்
எரி
வளி

எழுந்த ஓர் அசைவினாலே - வானோடு வெண்ணிலவும் - விரிகதிர் வானும் - எண்ணிலாதனவும் எழுந்தன.

எனது தொழிலை நோக்கி, நான் தொழ ஆரம்பித்ததும் - வழி வந்த பணத் திமிர்-பணக் கொழுப்பு-கவிதைச் சூட்டிலே உருக ஆரம்பித்தது.

கந்தையை அணிந்தாலும் - இரு கைகளைக் காட்டி -
மொந்தையின் கூழை மொய்த்துக் குடித்தோம்.
காடு களைந்தோம். கழனிகள் திருத்தி
நாடு நகரங்கள் ஆக்கினோம்.

பொற்றுக்களை, மணிக்குலத்தைப் போய் எடுக்க அடக்கிய மூச்சு எவரின் மூச்சு? எங்கள் மூச்சு என்று நான் வினா விளித்துக் கவிதைக் குரலின் கண்டத்தை உயர்த்தியதும், அதிகார போதை அந்தந்த இடத்திலேயே பொட்டென்று விழுந்தது.

எங்கும் புலமை - எங்கும் விடுதலை - எங்கும் புதுமை கண்டாய் நீதான்.

'அங்கு தமிழன் திறம் கண்டாய் - அங்கு தமிழன் தோளே கண்டாய்" என்று நான் தமிழரைத் துயில் நீக்கியபோது தமிழ்ப் பகைவர்கள் வைக்கோல் போர்போலக் குடை கவிழ்ந்தார்கள்.

“பாடாத தேனீக்கள் - உலவாத் தென்றல் - பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ?"

“மணவாளன் இறந்த பின் மங்கை நல்லாள் மணமுடித்தல் தீதோ?” என்று கருத்துப்பட நான் உரைத்தபின் வைதீகத்தின் விலா எலும்பு நொறுங்கியது!

“காட்டை அழிப்பதும் கூடும் - அலை
கடலைத் தூர்ப்பதும் கூடும் -
பேட்டை அகழ்வதும் கூடும் - விரி
விண்ணை அளப்பதும் கூடும் -
ஏட்டையும் நூலையும் தடுப்பதும் கூடும்!
உரிமை எண்ணத்தை மாற்றுதல் எப்படிக் கூடும்?
"கோட்டை நாற்காலி இன்றுண்டு நாளை,
கொண்டுபோய் விடுவான் திராவிடக் காளை"

-என்று கூறியவுடனேயே, தமிழ்ப் பகைவனுக்குக் குற்றவேல் செய்து வந்த இழி மக்கள் அந்த இடத்திலேயே இற்று விழுந்தனர்.

கடலினும் வானிலும், கவினுறு நிலத்திலும் -

வாழ் உயிர் அனைத்தும் மக்கட் கூட்டமும் வாழுமாறு-அன்பு மணிக்குடையின் கீழ் உலகினை ஆண்டார் உயர்வுற நம்மவர்புலவர்கள் உலகப் பொன் இலக்கியமாக்கினர் - மறவரோ, அறியாமையை அறிவு தாக்குமாறு - அமைதியைத் தாழாது காக்க -

கண்கள் ஊடாமல், எண்டிசைவைத்தும் - வன் கையை இடபுற வானில் வைத்தும்- அறம் புரிந்து இன்ப அறிவு சூடினார்.

இந்த உலகில் எண்ணிலா மதங்கள்-கந்தக வீட்டின் கனவின் கொள்ளிகள்.

'சாதிக்குச் சாவு மணியடிக்கப் பழம் நிகர்த் தமிழகம் வையத் தலையாய் அமையத் தொடங்குக அறம்' என்றேன்.

அறத்தை மறந்தவர்கள் இதைக் கேட்டதும், வாள் கண்ட கோழைகளைப் போல் நடுங்க ஆரம்பித்தனர்.

தமிழர்களின் எழுதுகோலுக்குச் சில அறிவுரைகளைச் சொன்னேன்.

பொதுமக்கள் நலம் நாடி புதுக் கருத்தைச் சொல்க.

புன்கருத்தைச் சொல்வதில் ஆயிரம் வந்தாலும், அதற்கு ஒப்ப வேண்டாம்.

'அந்தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால், எதிர்ப்பதொன்றே தமிழன் எழுதுகோல் வேலை.

இதனைக் கேட்டதும் எழுத்தாளர்கள் சிலர் என் மீது சீறி விழுந்தனர். - சிலர் என்னையும் மீறினர்-இறுதியில் தோற்றனர்.

புரட்சியால் உலகம் புது விழி கொண்டு - வரட்சியான அறிவைப் பார்த்துக் கிண்டல் செய்ய ஆரம்பித்தது.

வைதீக வாய்க்கால் ஒரம் சில பூண்டுகள் முளைத்தன.

அவற்றைப் பார்த்து சீர்திருத்தக் கருத்துக்கள் சிரித்தன.

புரட்சிக் கருத்துக்கும் சீர்திருத்தக் கருத்துக்கும் நான்தான் மூலம் என்று தெரிந்தவுடன், பாரதியார் மேல் பாய்ந்த அம்பு என் மீதும் பாய ஆரம்பித்தது.

ஈரோட்டுப் பாதை எடுப்பான பாதை. நேர் வழியில் செல்பவனுக்கு அப்பாதை சீர்வழி காட்டுகிறது.

அந்தப் பாதையில் விளைந்திருக்கும் அற்புதச் சக்திகள் மனிதனைச் சிறை பிடிக்கிறது.

விரைவான முன்னேற்றத்திற்கு அது வித்து.

நல்ல வாழ்க்கைக்கு அது பலம் தரும் சத்து.

இதுவரையில் இப்படி எவனும் சொல்லாத கருத்து முத்து.

அந்த முத்துக்களை நான் பொறுக்க ஆரம்பித்தேன் ஆரமாகக் கோர்த்தேன். அதை என் அன்னைத் தமிழுக்கே சூட்டினேன்.

தமிழின் வேரிலே வீழ்ந்த நச்சு நீரை அகற்ற ஆரம்பித்தேன்.

பழமையான - தூயக் கருத்துக்களை நீராகப் பாய்ச்சினேன்.

அது இலக்கிய உலகத்தில் மாபெரும் திட்பத்தை உண்டாக்கியது.

எனது எல்லா யாப்புகளிலும் சிக்கிய பாடல்கள் - தமிழுக்கு அணியாக விளங்குகின்றன.

புதிய கற்பனைகள் -
பதிய கவிதைகள் -
கவிதையில் புது பாணி!
செந்தமிழ்ச் சொல் ஆராய்ச்சி !
திருக்குறளுக்கு உரை!
சிற்றிலக்கிய விருந்துகள்!
பேரியக்கியப் படைப்புகள்!

இவை எல்லாம் என்னிடமிருந்து வரிசை வரிசையாகப் புறப்பட்டன.

தமிழன் உயர்வுக்காக ஆக்கப்பட்ட அறிவு நூல்கள் அத்தனையையும் - தமிழகத்திலேயே விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.

மொழி ஆதிக்கம் மேலோங்கி நின்று, தமிழின் விழி வரையில் கை நீட்டுகின்ற அளவுக்கு நம்மை வளமாக வளர்த்தது.

எதிரிகளின் விதண்டாவாதங்கள் - குறுகிய சோகங்கள் - தமிழைக் குப்புறக் கவிழ்ப்பதற்காகப் படையெடுத்து வந்தன.பொய்த்தது கோபம்! பூட்டிய இரும்புப் கூட்டின் கதவு திறக்கப்பட்டது.

"சிறுத்தையே வெளியே வா” என்று நான் அழைத்தேன். சிங்க இளைஞன் முகம் திருப்பி விழித்தான்.

"இங்குள்ள நாட்டுக்கு இழி கழுதைக் ஆட்சியா?" என்ற கேள்வியைக் கேட்டேன்.

"தமிழ் ஒரு பூங்கா - நான் அதில் ஒரு தும்பி” என்று அவன் பதில் கூறினான்.

"நீரோடை நிலங்கிழிக்க நெடுமரங்கள் பெரும் காடாக்க, பருக்கைக் கல்லின் பிலம் சேர, பாம்புக்கூட்டம் போராடிய பாழ் நிலத்தைப் புதுக்கியவன்' போருக்கே புறப்பட்டான்.

"இந்திக்கு தமிழ்நாட்டில் ஆதிக்கமா? நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே என்ற குரலைக் கொடுத்துக் கொண்டே - தமிழன் தொடுத்தான் மொழிப் போராட்டத்தை!

'புலியெனச் செயல் செயப் புறப்பட்டதால், எலியென இகழ்ந்தவர் நடுநடுங்கிச் செத்தார்.

தமிழக மண்ணிலே புதியதோர் கலிங்கத்துப் பரணி பாட வேண்டிய அளவுக்குப் புறநானூற்றுப் போர்ப்பறை முழங்கிற்று.

எதிரிகள் அடங்கினர். தமிழ் - தமிழ் என்ற இதயங்கள் தடந்தோள் தட்டி, அன்று முதல் இன்று வரை சூறாவளி போல் ஒலித்துக் கொண்டு வருகின்றன.

பிஞ்சுக் குழந்தைகள் முதல் வாழ்க்கையின் கிளையிலே பிய்ந்து விழ வேண்டிய நிலையிலே உள்ள கனியொத்தக் கிழவர்கள் வரை பொதிகை மலைத் தோளோடு, வடவரது மொழி ஆதிக்கத்தை முறியடித்து வருகின்றனர்.

பிழைத்தது தமிழ். அப்போது செஞ்சோற்றுக் கடனாற்ற எதிரியினிடம் சேவகம் புரிபவர்கள், வெஞ்சொல்லால் என்னை அளவுக்கு மீறித் தாக்கினர்.

விழி மடங்காவீரனாய் -பகை கண்டு மருளா செம்போத்துப் புலியாய் மாறினேன் நான்.

பாய்கின்ற ஈட்டியையே என் நெஞ்சம் பதம் பார்க்கும்.

நான் வைரக் கண்ணன் - எனது நாக்கு ஒரு நெருப்பு.

என்னுடைய எழுத்துக்கள் தமிழ்த் துரோகிகளுக்கு வெடி குண்டுகள்.

எனவே, இந்தி ஆதிக்க வெறியர்கள் என்னிடம் ஆட்டிய வாலை சுருக்கி மடக்கிக் கொண்டனர்.

திருக்குறளை மேலோங்க வைக்க அந்த நாளில் பலர் தயங்கினர். பாசுரப் பக்திக்குப் பலியாகித் திணறினர்.

அதிகாரம் இருந்த காரணத்தால் சிலர் அடிமைத் தனத்தோடு ஆமையாகிக் கிடந்தனர்.

திருக்குறள் ஒரு நூலா? அதனைப் போற்றுவதா? உரிய நூல்களே போதும் - சீரிய தமிழ் வேண்டாம்.என்ற குறுகிய நோக்கத்தில் சிலர் போராட முன்வந்தார்கள்.

அவர்களின் குறுக்கெலும்பை நான் எனது கவிதைகளாலேயே உடைத்தேன்.

இப்போதாவது என்னை யார் என்று புரிகிறதா?

எனது இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.

என்னுடைய ஆசிரியர் பெயரைச் சேர்த்து பாரதிதாசனாகவே திகழ்ந்தேன்.

எனது தாய்மொழிக்கு என்னால் இயன்ற சேவைகளைக் கவிதைகளாலும் - நூல்களாலும் - ஆராய்ச்சிகளாலும் - செய்து போர் முழக்கமிட்டேன்.

என்னைப் பின்பற்றுகின்ற தமிழகத்து சிங்கங்களே, நீங்கள் என்ன செய்தீர்கள்?

நான் மறைந்ததற்குப் பிறகும் இந்திப் போராட்டம் நடைபெறுகிறதா? அதை என்னைப் போலவே எதிர்க்கிறீர்களா?

வாழ்க! வளம் பெறுக!