அய்யன் திருவள்ளுவர்/கிறித்துவரா?

விக்கிமூலம் இலிருந்து
அய்யன் திருவள்ளுவர் கிறித்துவரா?
கிறித்துவர்கள் நடத்திய
திருக்குறள் ஆய்வு மாநாடு
வரவேற்புரை!





பேரன்பு கொண்ட தமிழகப் பேரறிஞர்களே! செந்தமிழ் பால் உயிர் நாட்டங் கொண்ட சான்றோரே! எதிர்ப்பனைத்தும் எரி நெருப்பில் சுட்டு, தமிழ் காக்கும் படையாய், கடமை வீரராய், தமிழகத்தில் உலாவரும் பேரறிவாளர்களே, முனைவர்களே, பெரும் புலவர்களே, பேராசிரியப் பெருமக்களே! வணக்கம்.

கிறிஸ்தவத் தத்துவத்தின் வாயிலாகத் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும்.இன்று வரை கடனாற்றித் தன்னை உயர்த்திக் கொண்டு உயர்ந்தோரே,

கவிதையின் வாயிலாய், இயற்கையை மக்களிடையே எடுத்து வைக்கும் பேராற்றல் படைத்த கவிஞர்களே!

ஆய்வுரையைக் கேட்டுத் தெளிவு பெறவந்த எம் தமிழ்ப் பெருங்குடி மக்களே! சிந்தனையாளர்களே!

உங்களை எல்லாம் திருக்குறள் ஆய்வரங்கத்தின் சார்பாக வருக, வருகவென வரவேற்கிறேன்.

சென்னை எல்டாம்சு சாலையில் இயங்கும் கிறித்துவக் கலைத் தொடர்பு நிலையத்தின் சார்பாக - இரண்டு நாட் களுக்குரிய திருக்குறள் ஆய்வு மாநாடு இங்கே நடை பெறுகின்றது.

மொழி நூலறிஞரும் திருக்குறளுக்கு மரபுரை கண்டவரும், தனித் தமிழ் இயக்கத் தந்தையெனத் தமிழர்களால் போற்றிப் பாராட்டப்பட்டவருமான தமிழ்க்கடல் மறைமலையடிகளாருக்குப்  பிறகு, தனித் தமிழ் இயக்கத்தின் தலைவராக விளங்கி வருபவரும், திராவிட மொழி நூல் புலமையில் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்பவருமான, மூதறிஞர் பண்டித ஞா.தேவநேயப்பாவணர் எம். ஏ. அவர்கள், இந்த மாநாட்டுக்குச் சிறப்புத் தலைவராக அமர்ந்துள்ளார்.

அவர் ஒரு கிறித்துவர்தான் - என்றாலும், தமிழ் மக்களுக்கு நியாயமான - நேர்மையான - கடமையான நீதியை - தீர்ப்பை வழங்குவார் என்பதிலே, நம்மைப் பொறுத்தவரை நம்பிக்கை இருக்கின்றது.

புலவர் தெய்வ நாயகம் என்பவர், "அய்யன் திருவள்ளுவரைக் கிறித்துவர்” என்கிறார்.

அதற்காக, "திருவள்ளுவர் கிறித்துவரா? ஐந்தவித்தான் யார்? வான் எது? நீத்தார் யார்? எழு பிறப்பு, சான்றோர் யார்?" என்ற ஆறு, ஆய்வு நூல்களை எழுதியிருக்கின்றார்.

ஒவ்வொரு நூலுக்கும் அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும் 36 பேரறிஞர்கள் இங்கே வருகை தந்துள்ளீர்கள்:

அணி உறுப்பினர் ஐவரும், அவரவர் அணி நூலை நன்கு படித்து, அதனை ஆய்வு செய்து, அவருடைய கருத்தை எழுதித் தந்துள்ளார்கள்.

அவ்வாறு அவர்களால் தரப்பட்ட ஆய்வுக் கருத்துக்களை அணித் தலைவர்கள் படித்து, அவற்றின் மேல் அவரவரது ஆய்வையும் வழங்க வேண்டியுள்ளார்கள்.

வழங்கப்பட்ட அந்த அறுவரணியின் ஆய்வுகளை - நகல்கள் எடுத்து, இங்கே அமர்ந்துள்ள மற்ற அணிகளின்அறிஞர் பெருந்தகைகளுக்கும், சான்றோர்களுக்கும் அந்தந்த அணிகளின் நகல்களை எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு அணியினர் அனைவரும், அவரவர் ஆய்வுப் பொருளுக்கு ஏற்ப, தடை விடைகளுடன் இங்கே உங்கள் முன்பு தத்துமது கருத்துக்களை நாட்டி, வழக்காடி வாதமிடுவர்.

அந்த ஆய்வாளர்கள் கருத்துக்கள் மீது, இந்த ஆய்வு மாநாட்டின் தலைவர் மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவனர் பாவாணர் அவர்கள் தீர்ப்பு கூறுவார்.

திருவள்ளுவர் கிறித்தவரா? இல்லையா? என்ற தீர்ப்புக்காக, தமிழ்நாடு காத்திருக்கிறது.

இந்த மாநாட்டில் உங்களுடைய திருக்குறள் அறுவை சிகிச்சையால் விளைந்த அனுபவத்தைக் கேட்க, ஆய்வை அறிய ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேலான அறிஞர் பெருமக்கள் கூடியிருக்கின்றார்கள். இதற்கான விளம்பரங்கள் 'முரசொலி” "தினமணி " நாளேட்டில் வந்துள்ளதை அறிவீர்கள்.

'திருக்குறள் ஆய்வு மாநாடுக்காக அச்சடிக்கப்பட்டு வெளி வந்த அழைப்பு இதழ் நிகழ்வுகளைப் படிக்கின்றேன்.

'ஐந்தவித்தான் யார்? என்ற ஆய்வு நூலுக்கு திருக்குறள் பீடம் அழகரடிகள் அவர்கள் அணித் தலைவராகவும், டாக்டர் சி.பாலசுப்பிரமணியம்,எம்.ஏ.எம்.லிட், பிஹெச்.டி, பண்ணாராய்ச்சி வித்தகர் பேராசிரியர் பி.சுந்தரேசனார், சமண மதத்தைச் சேர்ந்த ஜீவபந்து டி.எஸ்.புரீபால், பேராசிரியர் வி.பா.க. சுந்தரம் எம்.ஏ., பேராசிரியை ப. தமிழ்ச்செல்வி எம்.ஏ., ஆகியவர்கள் அணி உறுப்பினர்களாக அமைந்து-ஐந்தவித்தான் யார்? என்ற நூலை ஆய்வு செய்திருக்கின்றார்கள்.

'வான் எது? என்ற ஆய்வு நூலுக்கு பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் எம்.ஏ., எல்.டி, விசாரத் (இந்தி) அவர்கள் - அணித்தலைவராகவும், டாக்டர் என்.சுப்பு ரெட்டியார் எம்.ஏ., பி.எச்.டி, டாக்டர் ஞானப்பிரகாசம் எம்.ஏ, பி.எச்.டி, பேராசிரியர் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், பேராசிரியர் கே.எஸ். மகாதேவன் எம்.ஏ, தத்துவக் கவிஞர் குடியரசு ஆகியோர் அணி உறுப்பினர்களாகக் கூடி, வான் எது? என்ற நூலை ஆய்வு செய்திருக்கின்றார்கள்.

'நீத்தார் யார்? என்ற ஆய்வு நூலுக்கு அணித் தலைவராக டாக்டர் வ.சுப. மாணிக்கம் எம்.ஏ., எம்.ஓ.எல். பி.எச்.டி, அவர்களும் உறுப்பினர்களாக, டாக்டர் மு.கோவிந்தசாமி எம்.ஏ., எம்.லிட், பி.எச்.டி. புலவர் மு. சண்முகம் பிள்ளை, பேராசியர் பொன்.ஆ. சத்தியசாட்சி எம்.ஏ.எம்.ஓ.எல், பேராசிரியர் சரசுவ, இராமநாதன் எம்.ஏ, பேராசிரியர் இ.சு.முத்துசாமி எம்.ஏ., பி.டி. ஆகியோர் கூடி, "நீத்தார் யார்?' என்பது பற்று ஆய்வு செய்துள்ளார்கள்.

"எழு பிறப்பு" என்ற ஆய்வு நூலுக்கு, அணித் தலைவராகத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எம்.எல்.சி அவர்களும், டாக்டர் இரா.சாரங்கபாணி எம்.ஏ., எம்.லிட், பி.எச்.டி, வித்வான் வை.இரத்தினசபாபதி பி.ஓ.எல்., எம்.ஏ., மகாவித்வான் ச.தண்டபாணி தேசிகர், ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி - வேங்கடசாமி, வித்வான் வி.பி.நடராசன் ஆகியோர் உறுப்பினர்களாக இணைந்து எழுபிறப்பு பற்றி ஆய்வு நடத்தியிருக்கின்றார்கள். இவ் விழாவில் அடிகளார் ஒருவர்தான் வரத் தவறிவிட்டார்.

"சான்றோர் யார்?’ என்ற ஆய்வு நூலுக்கு, இராவண காவியம்' ஆசிரியர் புலவர் குழந்தை அவர்கள் - அணித் தலைவராகவும், பேராசிரியர் புலவர் ம.நன்னன் எம்.ஏ., பேராசிரியர் மோசசு பொன்னையா எம்.ஏ., காவல்துறையைச் சார்ந்த சு.மி. டயசு ஐ.பி.எஸ், டி.ஐ.ஜி, பேராசிரியை சாரதா நம்பியாரூரான் எம்.ஏ. சோம. இளவரசு ஆகியோர் அணி உறுப்பினர்களாக சேர்ந்து, சான்றோர் யார்? என்பது பற்றி ஆய்வு செய்திருக்கின்றார்கள்.

"திருவள்ளுவர் கிறித்துவரா?” என்ற ஆய்வு நூலுக்கு அணித்தலைவராக டாக்டர் மெ. சுந்தரம் எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி, அவர்களும், பேராசிரியர் க.த. திருநாவுக்கரசு எம்.ஏ., (தமிழ்) எம்.ஏ., (வரலாறு) எம்.லிட், டாக்டர் இராம.பெரிய கருப்பன் எம்.ஏ. (வரலாறு) எம்.லிட், டாக்டர் இஸ்ரவேல் எம்.ஏ, பிஎச்டி, புலவர் க.வெள்ளைவாரணனார், பேராசிரியர் எழில் முதல்வன் எம்.ஏ., ஆகியோர் அணி உறுப்பினராக அமர்ந்து, திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற நூல் பற்றி ஆய்வு நடத்தியிருக்கின்றார்கள்.

இறுதியாக இரண்டு நாட்களிலும் திருக்குறளார் வீ.முனுசாமி பி.ஏ.பி.எல், சிறப்பு விருந்து ஆற்ற இருக்கின்றார்கள்.

இந்த மாநாடு, 1962, மே-3, 4ஆம் நாட்களில், எண் 3 எல்டாம்சு சாலையிலே உள்ள கிறித்துவ கலை - தொடர்பு நிலையத்தின் அரங்கத்தில், அரங்கத் தலைவர் அருட்திரு. சா.கவிசேஷ முத்து பிடி, எம்.டி.எச், அவர்கள் மேற்பார்வையில் நடைபெறுகின்றது.

திரு. புலவர் தெய்வநாயகம் அவர்கள், அய்யன் திருவள்ளுவரைக் கிறித்துவர் என்கிறார்.

அதற்கு ஆதாரமாக ஆறு ஆய்வு நூல்களைத் தீட்டியுள்ளார். அதற்காக நடைபெறுவதே இந்த ஆய்வு மாநாடு!

முத்தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வித்தகருமான, இந்த திருக்குறள், ஆய்வு மாநாடு வெற்றிகரமாக நடைபெற, என்னுடன் இணைந்து அல்லும் பகலும் அயராது உழைத்த எனது அருமை குடும்ப நண்பர், கவிஞர் முருகு வண்ணன் அவர்களுக்கு எனது நன்றியைக் கூறிக் கொண்டு எனது வரவேற்புரையை இங்கே ஆற்றுகின்றேன்.

இந்த ஆய்வரங்கம், திருக்குறளுக்கு ஏற்பட்ட சோதனை என்றோ அல்லது வேதனை என்றோ - எவரும் எண்ண வேண்டாம்.

திருக்குறளை யாத்த நமது திருவள்ளுவர் பெருமானுக்கு ஈராயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டு காலத்தில், இத்தகைய தொரு வேற்று மதச்சவால், இன்று வரை ஏற்பட்டதில்லை.

புலவர் தெய்வ நாயகத்தாலும், கிறித்துவ மதப் பிற பிரிவுகளாலும் ஒர் இக்கட்டான சூழ்நிலை சூழ்ந்துள்ளது. அந்த சவாலை ஏற்று இங்கே நாம் கூடியுள்ளோம்.

திருக்குறளைத் தொட்டு பொருள் கொண்ட மனம், இந்தப் நொடிப் பொழுது வரை உலகில் பிற்க்கவில்லை.

திருக்குறள் ஒரு மத நூலாயின், அந்நூலின் பொருள் உணர்ந்து, வரிக்கு வரி விளங்காமல் போனாலும் - நம்பிக்கைக் கொண்டு இப்பிறவி தப்பித்தால் போதும், வேறோர் பிறவி கிட்டாதா என்று ஏங்கித் தவிப்போர்போல் இருந்துவிடலாம்!

திருக்குறள், வாழ்க்கையில் ஏற்படும் சலனங்கள் அத்தனைக்கும் எப்படி வளைத்துப் பொருள் காண்பது என்பதற்குரிய ஒர் அகராதி!

குறள், பிறந்த நாள் முதல் - இன்று வரை, அதன் உள்ளே சென்றவன், தன் கருத்து, தன் தெய்வம், தன் மதம் இருக்கின்றதா என்று பார்க்கிறானே தவிர, அதன் உண்மையை உணர்ந்து பார்த்தது இல்லை. எந்த உரையாசிரியருடைய நூலை எடுத்துப் பார்த்தாலும், அதில் அவரவர் விருப்பு, வெறுப்பு, தன்னலம், தன்மதம் தாண்டவமாடுகின்றதே அன்றி எந்நாட்டவருக்கும், எம் மதத்தினருக்கும், எக்காலத்தவருக்கும் பொருந்துமாறு எழுதப்பட்டதாகப் புலப்படவில்லை.

திருக்குறளுக்கு உள்ளே சென்றவரின் பாவ மூட்டை எவ்வளவு கனமாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மதத்தின் புண்ணியத்தையும் அதிலிருந்து தேடிக் கொண்டார்கள்.

கடவுளாலேயே நேரிடையாகச் சொல்லப்பட்டு, இரண்டாவது ஆட்களாலே "second hand person" எழுதப் பெற்ற பகவத் கீதை, பைபிள், திருக்குரான் போன்றவை கூட, நேரிடையான பொருளை ஒர் இனத்திற்கோ, ஒரு மதத்திற்கோ கொடுத்து விடுகின்றது.

ஆனால் திருக்குறள் தமிழ்தான்! அதிலுள்ள எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்கள்தான். உலகத்திலுள்ள தத்துவங்கள் அத்தனையும் - மதத் தத்துவங்கள் அனைத்தும் - தங்களுடைய அடிப்படைகளுக்கு எதாவது கிடக்காதா என்று, குறளை மட்டும் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கின்றன என்றால் - திருக்குறளின் பெருமை என்னே!

தமிழ்நாட்டில், ஒவ்வொரு காலக் கட்டத்தில் தோன்றிய உரையாசிரியர்கள் அத்தனைபேரும், அவரவர் மதக் கண்ணோட்டத்தோடு குறளைப் பார்த்த பிறகும், இதற்குள்ளே இன்னும் வேறு ஏதோ பொருள் பொதிந்திருக்க வேண்டுமென்று, மேல் நாட்டுத் தத்துவவாதிகளும் பேராசிரியர்களும், அறிவு வெறி கொண்டு இங்கே பறந்து வருகிறார்கள் என்றால், குறளை ஒருவன் எழுதினான் என்பதற்குப் பதில், குறள் - இயற்கையாகவே தோன்றிய ஒன்று என்றுகூடச் சொல்லிவிடலாம்.

காலத்தைக் கடந்த ஒரு மத நூல் இதுவரையில் இல்லை. ஏனென்றால், அந்த மதத் தலைவரின் பிறப்பும் - இறப்பும் காலண்டரில் தெரிகிறது.

குறளாசிரியரின் எப்போது பிறந்தான்-எப்போது இறந்தான் என்று கூட இதுவரைத் தெரியவில்லை.

அதன் உரையாசிரியர்களும் - ஆய்வாளர்களும் அவரவர் முடிவுக்குக் கிட்டிய மதிப்பீட்டை வைத்துக் கொண்டுதான் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இப்படி, உட்பொருளைக் கொண்டு, புதைபொருள் ஆராய்ச்சிக்கு இலக்கண நூல் - உலகத்திலேயே ஒன்றுகூட இல்லை - திருக்குறள் தவிர !

இந்தக் குறளுக்கு இதுதான் பொருள் என்று வாய்மூடுமுன், ஏன்-இதுவாக இருக்கக்கூடாது என்ற கேள்வியே எழுகின்றது. வியப்பிற்குரிய பிறப்பை எடுக்காமல், சாதாரண அரச குடும்பத்திலே பிறந்த புத்தன் கூறிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெளத்தர்கள்கூட, அதற்கு முன்னாலே இருந்த சமணர்கள்கூட, திருக்குறளைப் பார்த்து, இதில் எங்கள் கருத்தும் இருக்கிறது என்று வாதிடுவதைப் பார்க்கும்போது,

திருக்குறள், சமண, பெளத்த மதக் காலங்களையும் தாண்டி ஒடுகின்றது என்பதை வியப்போடு கவனிக்க வேண்டியதாக இருக்கின்றது.

திருக்குறள் உருவான காலத்தை யாராவது அவசரப்பட்டுக் கூறிவிட்டால், அந்தக் கால கட்டத்தில் வந்து சேர்ந்த மதத்தவர்கள், இது எங்கள் நூல் என்று கூறிக்கொள்ள இப்போதும் தயாராக இருக்கின்றார்கள்.

அந்தந்தக் காலத்தில் உரை எழுதிய ஆசிரியர்கள், அவரவர் மதக் காலத்தை வைத்தே திருக்குறளின் காலத்தை நிர்ணயித்தார்கள். அதனால்தான், குறளுக்கு உரையாசிரியர்கள் இவ்வளவு வேகமாகப் பெருகலானார்கள்.

திருக்குறளின் காலம் இதுவரை தெரியவில்லை என்றே வைத்துக் கொள்வோம்.'அப்போது அது எந்த மதத்துக்குச் சொந்தம்?

உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ள காலம்தானா திருவள்ளுவர் காலம்? அந்த அறிவுக்கு திட்டவட்டமான கால வரம்பு கண்டதுண்டா?

திருக்குறளைப் பொறுத்தவரை காலம் கடந்த ஒன்றாக இருக்கும்போது, காலச் சக்கரத்தில் மதங்கள் அடிபடுகின்ற போது, தமிழன் என்ற முறையில்- எனக்கு மகிழ்ச்சி என்றாலும், ஆராய்ச்சி என்ற முறையில் அது வெறுப்பைத் தான் அளிக்கின்றது.

எனது திருக்குறளை யாரும் பாராட்டலாம் என்பது வேறு! எவனும் என்னுடையது என்று உரிமை கொண்டாடுவது வேறு!

பொதுச் சொத்தை எவனும் உரிமையாக்கிக் கொள்ளலாம் என்பது சமுதாயத் துரோகமும் - விரோதமும் ஆகாதா?

தெரியாது என்பதை, தெரியாது என்று கூறுவதில் யாரும் வெட்கப்பட வேண்டியதில்லை !

தெரியாத ஒன்றை, தெரிந்த ஒன்றோடு உவமைப் படுத்தும் போதுதான், ஆராய்ச்சியாளனுக்கு எரிச்சலும், கவிஞனுக்கு மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது.

இந்த நிலையில், திரு. புலவர் தெய்வநாயகம் அவர்கள் எழுதிய 'திருவள்ளுவர் கிறித்துவரா? ஐந்தவித்தான் யார்? நீத்தார் யார்? வான் எது? எழு பிறப்பு, சான்றோர் யார்?" என்று கிறித்துவ அடிப்படையில் எழுதப்பட்ட ஆறு நூல்களை ஆய்வதற்காக - அறிஞர்கள், பெரும் புலவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மொழி ஆய்வாளர்கள், டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அத்தனை பேரும் இங்கே வந்து கூடியிருக்கின்றீர்கள்.

உங்களுடைய வாய்வழியே வந்து தெறிக்கும் கருத்துக்கள் அத்தனையையும், பொது நோக்காக வைக்கப் போகின்றீர்களா? அல்லது குறிப்பிட்ட ஒர் எல்லைக்குள் நிறுத்தப் போகின்றீர்களா?

அது உங்களுடைய விருப்பம்!

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று பாரதியார் கூறினார். ஆனால், ஒரு மதத்திற்கே தந்து என்று அவர் கூறவில்லை என்பதைக் கவனத்திலிருத்த வேண்டுகின்றேன்.

இந்தக் காலத்தில் ஒரு பூஞ்செடியைக் கூட, ஒருவன் தனி உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால், இயற்கை முன்னே அது பொதுச் சொத்து.

மிருகத்தைவிட - உயர்ந்தவன் மனிதன் என்பது உண்மையானால், புழு பூச்சிகளைக் கொத்தித்தின்னும் பறவைகளைவிட - அவன் உயர்ந்தவன் என்பது உண்மையானால்,

தெய்வ லட்சணத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு - எனக்கே உரியது என்பது உண்மையானால்,

மனிதன் ஒரு கிளிஞ்சலைக்கூடத் தனது சொத்தாக உரிமை பாராட்ட முடியாது.

எவனுடைய விரல்களிலிருந்து எழுத்தாணி அசைந்தாலும் சரி, அவன் எழுதுகின்ற எழுத்து அவனது அடுக்களைக்குச் சொந்தமல்ல என்பதை - நீங்கள் உணர வேண்டும்.

அது, கட்டளையில்லாமல் வருகின்ற, காற்றில் கலக்க வேண்டிய பொதுச் சொத்தாகும்.

நேரிடையாகவே நான் கேட்கிறேன்.உங்களுடைய மதங்கள் கடவுளால் நேரிடையாகப் படைத்ததுதானே?

அதே கடவுளுடைய பொதுத் தன்மையில் ஒர் அனுகூட இருக்காதா மனிதனுக்கு?

ஆகவே, இங்கே ஆய்வுக்காக வந்திருக்கின்ற முப்பத்தெட்டுப் புலமையாளர்களையும் நான் தாள் பணிந்து கேட்கின்றேன்.

உங்களுடைய மதத்தைக் கடந்து, இனத்தைக் கடந்து-வெளி வருகின்ற ஆற்றல் படைத்த சிறகுகள், உங்களுக்கு முளைக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன்.

அப்படி முளைக்காவிட்டால், உங்களுடைய முட்டைகளை நீங்கள் சோதனையிடுங்கள். மனிதன் சரி பார்க்க முடியாத மிருகமல்ல. அத்தகையை நிலையிருந்தால், அவனைக் கடவுள் படைக்கவில்லை !

சிந்தனைகள் மிருகத்திற்கு இல்லாதபோது, மனிதனுக்கு மட்டும் இருக்கும்போது, உரிமைகள்- வேட்கைகள் இவற்றைத் தாண்டிச் சிந்திக்கின்ற அவனுக்கு, அந்த ஆற்றல் இல்லையென்றால், நீங்கள் வருத்தப்படக் கூடாது - அவனைக் கடவுள் படைக்கவில்லை.

திருக்குறள் என்பது - கையில் கிடைத்த பலகாரமல்ல, உங்களது விருப்பம் போல - பங்கீடு செய்து உண்பதற்கு.

 மாந்தரின் வாழ்க்கைக்கு அது ஒரு மா மருந்து நோய்க்கு ஏற்றபடி நீங்கள் அதை உட்கொள்ள வேண்டும்.

திருக்குறள் தொடங்கிய காலத்திலிருந்து, விளம்பரத்திற்காக உரையெழுதுகின்ற ஆசிரியர்கள் வரை, அதன் நுணுக்கம், முடியாத மர்மக் கதையாகவே இருக்கின்றது - நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

சூழ்நிலையின் காரணமாக நீங்கள் மாறி விட்டால், பிறக்கப் போகும் தொட்டில்கள், உங்களை மறந்து விடும்! எனவே, எச்சரிக்கையாக இருங்கள்.

ஏனென்றால், இனிமேல் பிறப்பவர்கள் உங்களைத் தூக்கி எறிபவர்களாகக் கூட இருக்கலாம் அல்லவா?

எவன் எந்தக் கோணத்திலே பிறந்து, புலவர் தெய்வ நாயகம் மறுத்ததைப் போல விதண்டாவாதமாக மறுப்பானோ என்பதை யார் அறிவார்?

எனவே, காலம் கடந்து சிந்தியுங்கள் - (without time) தொட்டில் குழந்தைகள் உங்களைத் தொடர்வதற்கேற்ப - சிந்தியுங்கள்.

1972 - மே-3,4 தேதிகளோடு - திருக்குறளின் விதி நிர்ணயிக்கப் படுவதல்ல.

உங்களுடைய விவாதங்கள் அனைத்தையும், அய்யன் திருவள்ளுவரது உயிர்ச் சொல்லோட்டக் குறள் நாதங்கள், காற்றிலேயிருந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றன.

அய்யன் திருவள்ளுவர் முன்னாலே - நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கக்கூடாது.அவர் எதிர்பார்த்த-முதிர்ச்சியடைந்த - முழு மனிதனை உங்களுடைய ஆய்விலே உருவாக்கிக் காட்டுங்கள்.

திருக்குறளாராய்ச்சியைப் பொறுத்தவரை, இந்த ஆய்வு மாநாடு, அண்ட அளவில் வைத்து மறந்த சிறுபுள்ளியாகவே கருதுகின்றேன்.

ஏனென்றால், அய்யன் திரு வள்ளுவன் அண்டத்தைவிட விரிந்தவன் என்பது பொதுமக்கள் கருத்து.

இந்தியாவிலே இருக்கின்ற ஏழெட்டு மதங்களுக்குச் சொந்தக்காரனாகவோ அல்லது பெத்தலகேமிலிருந்து புறப்பட்ட ஒரு மதத்துக்குச் சொந்தக் காரனாகவோ, அய்யன் திருவள்ளுவரை 1962 - ஆம் ஆண்டில் நீங்கள் நிர்ணயித்து விட்டால் கி.பி. மூன்றாயிரத்தில் என்ன சொல்லப் போகின்றீர்கள்?

அப்போது என்ன மதம் வருகின்றதோ - எந்த இனம் வருகின்றதோ, யாருக்கு என்ன தெரியும்?

இதுவரையில் எழுதிய குறள் உரையாசிரியர்கள், தங்களது பாடையைப் பார்த்துக் கொண்டு எழுதினார்கள். அவர்களுக்குப் பின் யார் வருவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

தன் கருத்தே எதிர் காலக் கருத்தென்று நினைப்பது, பொருள் மாற்ற விஞ்ஞானத்தை அறியாதவர்களின் செயல்.

பொருள் பீறிட்டு வேகமாக மாறுகின்ற போது - மனிதன் மட்டும் மாற மாட்டானா? காலச் சுழற்சி அல்லவா அது?

நேற்றைய கருத்தே இன்றைய கருத்து என்று கூறுவதற்குப் புது வருடம் எதற்காக? காலண்டர் ஏன்?

உங்களைத் தமிழ்நாடு கேட்பதாகவே நினைக்க வேண்டும். மணல் வீடு கட்டிக் கொண்டு, திருமணமே என்னவென்று தெரியாத குழந்தைகள் கேட்கின்றன.

அவர்களது தமிழ்நாடு முக்கடலையும் கடந்து, அமெரிக் காவையும் கடந்து செல்லலாம்.

ஏன், குறிப்பாகச் சற்றுத் தாண்டிச்சொல்கிறேன்.அவர்களின் தமிழ்நாடு, இராக்கெட்டின் துணையால் கோள் வட்டங்கள் வரை ஊடுருவலாம்.

பிறக்கின்ற செடிகளுக்கு நீங்கள் விதைகள் போகின்றவர்கள். இந்த நல்ல காரியத்தில் விதைகளாகச் சாகுங்கள்.

இனம் புரியாமல், அநீதியை நோக்குகின்ற குழந்தைகள், திருவள்ளுவரை நோக்கட்டும்.

புலவர் தெய்வநாயகம், தனது பெரு முயற்சியை, சிலுவை வழியாகத் திருக்குறளைப் பார்க்கச் செலவிட்டிருக்கிறார்.

இது தேவையா - தேவையில்லையா என்பதை - மதம் பிடிக்காதவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பரந்து நோக்கின் தத்துவத்தில் நாம் வளர்ந்தவர்கள்.

நமது திருக்குறள், எல்லோருக்கும் சொந்தமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஒருவருக்கே அது உரிமையாகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

சைவத்தின் கருத்து, வைணவத்தின் கருத்து, சமணத்தின் கருத்து, பெளதத்தின் கருத்து இசுலாமியத்தின் கருத்து, கிறித்துவர்களின் திருக்குறளிலே இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்ளலாமே தவிர, ஒவ்வொரு மதத்திற்கும் அது சொந்தம் என்று கூறும் துணிவுடையோர் இன்னும் பிறக்கவில்லை என்பதை உணர வேண்டும்.

ஏனென்றால், திருவள்ளுவரது சிந்தனை - கருத்து வண்ணங்கள் - இதுவரையில் ஆய்வு நிறக் கலையில் தேர்ந்தவனுக்கே தடுமாற்றத்தைத் தருகின்றது.

திருக்குறள் என்பது ஒரு வண்ண ஜாலம்! நாத மர்மம்! கருத்துச் சூழல் சிந்தனை மயக்கம்! அறிவின் சோதனை தேர்வு பெற முடியாத தேர்தல் குறி பார்த்தடிக்க முடியாத குறி.

விஞ்ஞான ஆய்வுக்கே ஏற்பட்ட பெரலட்டிக் - அதாவது பாரிசவாய்வு!

மேலும், ஒரு படி தாண்டிச் சொல்லப் போனால், மனிதன் உரை எழுதித் தெளிவு பெற வேண்டிய நூலல்ல - திருக்குறள்!

மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒருவன் - இனி பிறந்தால் பரவாயில்லை என்று நினைக்கின்றேன்! ஏனென்றால், உரைகள் கலவரத்தில் முடிகின்ற காரணத்தை வைத்து,

அய்யன் திருவள்ளுவருக்குப் பின் வந்த ஆராய்ச்சி நூல்கள், பொருள் விசாரணை நூல்கள், மனோதத்துவ நூல்கள், விஞ்ஞான நூல்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த ஒருவன் கூட - திருக்குறளுக்கு நேரிடையாகப் பொருள் கூற முடியவில்லையே - ஏன்?

ஏனென்றால், தமிழுக்கு உயிர் நூல்களை எழுதிய தன்னேரிலா அறிவு அரிமாக்கள் அனைவரும் - சூத்ர வடிவில் யாப்பு செய்யுள் வடிவில் நுட்பம் செறிந்த செஞ்சொற்களைப் பெய்து, மந்திரம்-மறை போன்ற பொருளாட்சிகளைப் புதையல் போல் வைத்துள்ளார்கள்.

எடுத்துக்காட்டாக, தொல்காப்பிய நூற்பா ஒன்றை எண்ணிப் பார்த்தாலே இந்த உண்மை புரியும். அதன் பொருட்சிக்கல் பேரறிஞர்களையே திணறடித்துள்ளது!

தன்னேரிலாத் தமிழில் சொல்லுக்கு, முதலில் வரும் எழுத்து என்றும், இறுதியில் வரும் எழுத்து என்றும் இரு வகை உண்டு. த் + உ = து, ந் + ஊ = நூ, வ் + உ = வு, வ் + ஊ = வூ என்ற நான்கு எழத்துக்களும் சொல்லின் இறுதியில் வாரா என்று காப்பிய சூத்திரம் செப்புகின்றது.

"உ, ஊ, காரம் ந, வ, வோடு நவிலா" என்பது தொல்காப்பிய நூற்பா, இதற்கு உரை மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

உரையாசிரியர்களுக்குள்ளேயே எழுந்த இந்த விடை - தடைநோக்கில், கதவு, களவு, உணவு, உளவு, புணர்வு, உணர்வு போன்ற சொற்களில் 'வு' என்ற எழுத்து சொல் இறுதியில் வந்துள்ளதே ஏன் - எப்படி என்ற கேள்விகளைச் சிலர் எழுப்பினர்!

அத்தகைய சான்றோர் சிலர் எழுப்பிய இந்தத் தடைக்கு விடையாக, 'நவிலா' என்ற சொல்லால் மேற்கண்டவாறு பொருள் கொள்ளலாம் என்றார்கள் - உரையாசிரியர்கள்!

ஆனால், இந்த நூற்பாவில் ஏதோ ஒரு பொருட் சிக்கல் உள்ளது போல தோன்றுகிறது என்ற ஐயம் இலக்கிய உலகில் இருந்தது. தொல்காப்பியம் இலக்கண நூலை எழுத்தெண்ணி படித்தவர்களை, எக்காலத்திலும் விரல் விட்டு எண்ணிவிடலாம்!

தொல்காப்பிய வித்தகக் குறைவு என்பதால், சர்ச்சை ஏதும் அந்நூற்பாவுக்கு அன்று எழவில்லை - அறிஞர்களிடையே!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்கள், ஒரு தமிழ் இலக்கிய மேதை அவர் இந்த நூற்பாவின் சிக்கலை நீண்டநாட்களாகவே உணர்ந்திருந்தார்.

அக்காலை, மதுரை தமிழ்ச் சங்கத்தின் பெரும்புலவரான சோழவந்தான் அரசன் சண்முகனாரை - வ.உ.சி. அடிக்கடி மதுரை மாநகரில் சந்தித்து இலக்கிய விளக்கம் கேட்டார். வ.உ.சி.

அதற்குப் பதில் கூறிய சண்முகனார், 'எந்த ஒரு நூற்பாவையும் 'நிரல் நிறை'யாகக் கொள்ள வேண்டும்' என்றார்.

"உ ஊ என்ற இரண்டும் ந, வு என்ற இரண்டோடும் சேராது"

"உ, என்பது, 'ந' வோடு மட்டும் சேர்ந்து, 'நு' என்று மட்டும் சொல்லின் இறுதியிலே வராது என்றார் சண்முகனார்!

"ஊ" என்பது, 'வ' வோடு சேர்ந்து 'வூ' என்று மட்டும் சொல்லின் இறுதியில் வராது.

"அதனால், கதவு, பணர்வு. உணர்வு, தளர்வு" என்ற சொற்களிலே உள்ள 'வு' சொல்லின் இறுதியில் வரலாம் என்றே தொல்காப்பியர் அனுமதித்துள்ளார். 'களவு ' என்பது சங்க கால இலக்கிய வழக்காறுகளையும் தாண்டி, தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உள்ள ஒரு சொல்.

"எனவே, இவ்வாறே பொருள் காணவேண்டும் என்று வித்தகர்கள் எழுப்பிய தடைகளுக்கு விடை விளம்பி உடைத்தெறிந்தார் - சண்முகனார்.

எனவே, மனிதன் என்பவன் எந்த நூலை எழுதினாலும், படித்தாலும், கேட்டாலும், மாசிலா மனமுடையவனாக இருந்தால் தான், எதை அவன் கேட்கிறானோ, அதன் உண்மைப் பொருளைக் காண முடியும்.

இவ்வாறான மறை பொருட்கள் திருக்குறளிலும் உண்டு!

அவற்றை ஆழ்ந்து கூர்ந்து, ஒர்ந்து படிக்க வேண்டிய பொறுப்பு தமிழறிவுடையார் கடமை அல்ல - உரிமை !

தமிழ்மொழியில் அத்தகைய சங்ககால நான்மறைகளும், தமிழ் மறைகளும், திருமந்திரங்களும், பாசுரங்களும், அறச் சொற்களும் ஏராளமாக உள்ளன. அவற்றின் உண்மைப் பொருளை அறிய வேண்டுமானால், அதாவது, மனிதன் மனம், முழுக் முழுக்க ஒன்றும் இல்லாமல் மாறினாலொழிய, தன் நெஞ்சில் ஒரு துளியும் மதக் கருத்து, சாதிக்கருத்து, நாகரிகக் கருத்து, பண்பாட்டுக் கருத்து இல்லாமல் மாறினாலொழிய, திருக்குறளுக்கு உண்மைப் பொருளைக் காண முடியாது.

ஏனென்றால், திருவள்ளுவர் ஒரு திறந்த வெளி! ஒன்று ("status of nothingness and total negation without identification, secured by full freedom based on emptyness") இருந்து எழுதியவர்.

எழுதிய அய்யன் திருவள்ளுவன் இல்லாத நிலையிலிருந்தால், உரையாசிரியன் இருக்கின்ற நிலையிலிருந்தால் - குறள் உரை தெளிவாக இருக்க முடியுமா?

அந்த நிலையில் எழுதப்பட்ட உரைகளையே புலவர் தெய்வ நாயகம் மறுத்திருக்கின்றார். அவர்களின் கூற்று சரியா? தவறா? என்பதைவிட, திருவள்ளுவம் என்றால் என்ன என்பதை நீங்கள் கூற வேண்டும். உங்களது எல்லையிலே இருந்து அது வராமல், உலக எல்லையிலே இருந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

இந்த பெரு முயற்சியை, அய்யன் திருவள்ளுவர்பால் நாட்டங் கொண்ட கிறித்துவ அன்பர்கள், புலவர் தெய்வ நாயகத்தின் புத்தக சந்தர்ப்பத்தின் வாயிலாகத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள்!அவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

குறிப்பாக, கிறித்துவக் கலை - தொடர்பு நிலையத்தின் இயக்குநர் - அருட்திரு சுவிசேஷ முத்து அவர்கள், இந்த அறிவு விளக்கப் போட்டிக்குப் பொருளைத் துச்சமாக மதித்து எடுத்த முயற்சிக்குத் தமிழகம் கடமைப் பட்டிருக்கின்றது!

இருப்பினும், அய்யன் திருவள்ளுவரை கிறித்துவராக்க அவருக்கும் ஒரு பேராசை! கிறித்துவத்தின் ஊழியரல்லவா அவர்?

இல்லாவிட்டால், சர்ச் ஆஃப் சவுத் இண்டியா, திருவள்ளுவரைக் கிறித்துவராக்க - நூல் எழுத, ரோமன் கத்தோலிக்க சென்னை திருச்சபைத் தலைமை அதை வெளியிட - தொகை உதவி செய்ய, பிராட்டஸ்டண்டு பிரிவு பல்லாயிரம் ரூபாயைச் செலவு செய்து இந்த மாநாட்டை நடத்துமா?

மதமே இல்லாத மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூலை, சக்தி வாய்ந்த ஒரு மதத்தின் முப்பிரிவுகள், அய்யன் திருவள்ளுவரைக் குறிப்பிட்ட ஒரு மதவாதியாக்க, அதுவும் - இயேசு நாதருக்குச்சீடராக்கி மகிழ்ந்திட அமெரிக்கப் பணமழையின் ஒருமைப்பாட்டோடு பணிகளாற்றுமா?

திருக்குறளுக்கு உரை கண்ட தொல்லாசிரியர்களான காளிங்கருக்கோ, மணக்குடவருக்கோ, பரிமேலழகருக்கோ, பிறருக்கோ இப்படிப்பட்ட விவாத மன்றங்கள் இன்று வரை கூடினவா?

பன்மொழிப் புலவர் அப்பாதுரையார், மொழி நூலறிஞர் பண்டித தேவநேயப் பாவாணர், திருக்குறள் பீடம் அழகரடிகள், திருக்குறளார் வீ. முனிசாமி, கப்பலோட்டிய வ.உ.சிதம்பரம் பிள்ளை, தமிழ்த்தென்றல் திரு.வி.க., பாவேந்தர் பாரதிதாசனார், நாமக்கல் கவிஞர் இராமலிங்க பிள்ளை, புலவர் குழந்தை, சாமி சிதம்பரனார், டாக்டர் மு. வரதராசனார் ஆகியோரது குறட் புலமைக்குக் கூட இத்தகைய ஆய்வரங்கம் இன்றுவரை ஏற்பட்டதில்லையே!

புலவர் தெய்வநாயகம் அவர்களுடைய ஆறு புத்தகங்களுக்கு ஏற்பட்ட இந்தப் பெரும் வாய்ப்பைக் காணுகின்ற நேரத்தில், மத ஒற்றுமை எவ்வளவு பலமாக, ஒருமைப் பாட்டுணர்வோடு, தனது மதத்தைப் பரப்பப் பணியாற்றுகின்றது என்பதுதான் தெரிகிறது.

இருந்தாலும் - இந்த நேரத்தில் இதே கிறித்துவ அன்பர்களும் தமிழ் அடிமைகளே - கால்டுவெல்லைப் போல - ஜி.யூ. போப்பைப் போல - வீரமாமுனிவரைப் போல!

கிறித்துவக் கண்ணோட்டம் திருக்குறளைப் பார்ப்பதினால் வேறொரு கோணத்தில் நோக்கும் போது, தமிழுக்கு உயர்வே கிட்டுகின்றது - அதை நாம் மறக்க முடியாது.

காலத்துக்குக் காலம் முப்பட்டை கண்ணாடி வழியாக ஊடுருவும் சூரியனைப் போல, ஒளிக்கற்றைகளை வீசுகின்ற திருக்குறளுக்கு, இருபதாம் நூற்றாண்டில் தெய்வநாயகம் ஒரு பிரச்சினையாக வந்தாரே தவிர, குறளால் வாழ்பவர்கள் - புது உரைகளை - விளக்கங்களை - மத சார்பற்றுக் காணவில்லை - காணாததற்கு அவரவர் மதம் தான் தடுக்கின்றதா?

இப்படிப்பட்ட ஐயப்பாடுகளுக்கு இந்த மாநாடு ஒரு தீர்வு காண வேண்டும் முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

வானொலி, தொலைக் காட்சிகள் வந்த பிறகு, மனித சமுதாயம் மாறியிருக்கின்றது என்றால், அதற்கேற்றபடி திருக்குறள் எப்படி இருக்கின்றது? - விளக்கம் தேவை.

இராக்கெட், சந்திர மண்டலத்தை அடைந்த பிறகு, உலகச் சமுதாயம் மாறியிருக்கின்றது என்பதை ஒப்புவீர்கள் என்று நம்புகிறேன். அதற்கேற்றபடி திருக்குறள் எப்படி மாறியிருக்கின்றது? விளக்கம் தேவை !

நிலவைக் கடவுளாக இதுவரை நினைத்தவர்கள் மனதுக்கு முன்னால் திருக்குறள் எப்படித் தெரிந்தது. தற்போது நிலவிலே மண் கொண்டு வந்த பிறகு, குறள் எப்படித் தெரிகின்றது? விளக்கம் தேவை !

இத்தகைய கோணங்கள் எல்லாம் உங்களது அறிவுக் கதிர்கள் சந்தித்து, புலவர் தெய்வநாயகத்தின் ஆறு நூற்களையும் விசாரணை செய்தாக வேண்டும் என்று தமிழகம் விரும்புவதில் வியப்பில்லை அல்லவா?

மடியிலே நமக்குக் கனமில்லை - வழியிலே திருடர்களைக் கண்டு பயப்பட! திருக்குறள் மத நூல் அல்ல, வாழ்க்கைக்குரிய சட்ட நூல் வள்ளுவம் கூறும் நீதிநூல்!

வேண்டுமானால் இவ்வாறு கூறலாம், அய்யன்திருவள்ளுவர் காலத்திலே ஆதிக்கம் பெற்றிருந்த வைதீக மத கருத்துக்களை ஏற்று, அவற்றை மறுத்து, மதச்சார்பற்ற தமிழர் நெறிகட்கு தனித்துவம் தந்துள்ளார் என்று. நீங்கள் தான் அதற்கு காட்ட வேண்டும் நியாய வரம்பு!

மதநூல் என்றால், அதிலே மாயம் இருக்கும். அற்புதம் கூத்தாடும். அறிவு நம்பாத ஆச்சரியங்கள் இருக்கும்! விஞ்ஞான வளர்ச்சிகள் அதைக் கண்டு விலா நோகச் சிரிக்கும்! திருக்குறள் அத்தகைய ஒரு நூலல்லவே!

வள்ளுவத்தின் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டுமென்ற நிலையில் வந்துள்ள நீங்கள், உங்கள் தலைவிதியை நிர்ணயிக்கத் திருக்குறள் வந்திருக்கிறது என்பதை உணர்ந்தீர்களா?

இதுவரையில், நீங்கள் தமிழகத்திற்குச் செய்த சேவையில் துளிர்த்த வியர்வையின் சாட்சியாகக் கேட்கின்றேன். அரசியல் மேடைகளைவிட - இது ஆபத்தான கருத்தரங்கம் என்பதைப் புரிந்தீர்களா?

மதமே கூடாது, என்பவனும், மதமே தேவை என்பவனும் திருவள்ளுவன் அல்லன். இவன் இரண்டுக்கும் இடையே, மலைக்கு நடுவே ஓடுகின்ற அருவி.

பொதுவாகப் பார்ப்பவன் மனிதனானான் - குறிப்பாகப்பார்ப்பவன் மதவாதியானான்.

'செரிக்காத ஆசைகளை வைத்திருந்தவன் சொர்க்கத்தை நாடுவது வாடிக்கை” என்றான் கார்ல் மார்க்ஸ்!

“தேவையான ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்பவன், திராணியுள்ள மனிதன் என்றான்- ஏஞ்சல்ஸ், ஆனால், அய்யன் திருவள்ளுவர்- மனக் கலவரத்திலே ஈடுபட்டு தன்னைத் தாக்குப் பிடிக்காதவர்களுக்கே திருக்குறள் செய்தார்.

மனம், என்ன என்பதை விளக்குவதற்குப் பதில், திருவள்ளுவர் அதிலிருந்து தப்பிப்பதற்குரிய வழிகளைச் சொன்னார். "மனத்தின் கண் மாசிலனாதல்" என்ற நிலையை உருவாக்க நினைத்தார்:

மனம் என்றால் என்ன என்பதைக் கூறிய பிரான்ஸ் நாட்டுத் தத்துவவாதிகளான ஆல்ஃபிரைட் கேமு வைவிட, ஜீன்பால் சாத்தேயைவிட, தப்பிக்க முடியா மனத்திலிருந்து, தப்பிக்க வழி கூறிய ஒரே ஒரு தத்துவவாதி - அய்யன் திருவள்ளுவரே!

வெறும் டைலக்ட்டிகல் அனாலிசஸ் என்று சொல்வார்களே, அதைத் அய்யன் திருவள்ளுவர் செய்யவில்லை.

அப்படிச் செய்திருந்தால், அவன் பாமர மக்களிடையே வந்து சேர்ந்திருக்கமாட்டான் - படித்தவர்களிடையே சென்று குவிந்திருப்பான்.

மனம் உள்ளவரை மாச்சர்யங்கள் உண்டு. அதன் அடிப் படையில் ஒழுக்கங்களைக் கற்பிப்பது இமாலயப் பிரச்சினை.

'நீங்கள் வெறுமனே இருங்கள்'("Be in nothingness") என்று கூறுவதற்குப் பிரெஞ்சு நாடு காத்திருக்கிறது.

ஆனால், 'எண்ணங்கள் உள்ளவரைதான் மனிதன்', என்ற தத்துவத்தை 1952 - ஆம் ஆண்டுக்கு முன்பேயே சிந்தித்துவிட்டான் திருவள்ளுவன்.

இவனுக்கு வால் நட்சத்திரம் முளைக்கவில்லை -மாட்டுக் கொட்டகை ஏதும் இல்லை.

என்ன இருந்தாலும், நம் நாட்டவர்கள் ஒரு மனிதனை தெய்வமாக்குவது இல்லை, அறிவிலே நுட்பஞானத்தைப் பாராட்டினர். அதற்கு வைதீகன் ஆன்மீக சாயம் பூசி விட்டான் அவ்வளவுதான்.

இப்படிப்பட்ட ஒப்பற்ற ஒரு தத்துவ விதையிலே இருந்து, உலக மூலச் சக்தியிலே பிறந்து, விளக்க முடியாத ஒருவராகி, தமிழ் எழுத்துக்களால் வாழ்வறிவு வண்ண மாயங்களைச் செய்த ஒரு மனிதரை புலவர் தெய்வநாயகம் மத விசாரணை விசாரிக்க வந்திருக்கிறார்.

இந்த விசாரணையில், நீங்கள் பெற்ற பட்டங்களை அடகு வைப்பீர்களோ ! - மீட்டுக் கொள்வீர்களோ! அது எனக்குத் தெரியாது.

மனித இனம் இருக்கின்றதே, இந்தியாவைப் பொறுத்தவரை ஏழாயிரம் - எண்ணாயிரம் ஆண்டுகளின் சரக்கு!

அதற்கு மேல் சரித்திரமில்லை-அதனால், இவனுக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. தங்களது வீட்டிலிருக்கின்ற குழந்தை, நேரடியாக ஒரு குருவைப் பார்த்து பொருள் புரிந்து கொள்வதைப் போல, தந்தையாக இருப்பவன் புரிந்து கொள்வதில்லை.

குழந்தையின் சிரிப்பைப் பார்த்து இவன் சிரித்தானே ஒழிய, அந்தக் குழந்தை ஏன் சிரித்தது என்று இவனுக்குத் தெரியாது.

இப்படிப்பட்ட சமுதாயக் குடும்ப அடிப்படையில் பிறந்த நாம், திருக்குறளைச் சந்திக்க வந்திருக்கின்றோம்.

திருக்குறளின் எழுத்துக்கள் - வைதீக அடிப்படையில், வானத்திலிருந்து வந்தவையென்று புளுக எனக்கு விருப்பமில்லை - என்னால் முடியாது.

மிருகத்தைவிட - ஒரு மனிதன், மனிதத்தில் ஒரு மனிதன் - இவ்வளவுதான் சிந்தித்திருப்பான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், திருக்குறளின் எழுத்துக்களில், நீண்ட காலச் சரித்திரமோ, குறுகிய கால இலக்கியமோ தெரிவதற்குப் பதில், இனி முட்டைக்குள் முட்டையாக இருந்து முகிழ்ப்பதற்குக் காலம் பார்த்துக் கொண்டிருக்கின்ற மனித வர்க்கத்தை, நீ இப்படித்தான், இருப்பாயென்று, அறுதியிட்டு உறுதியாகச் சொல்லுகின்ற ஆற்றல் - அந்த நெசவாளிக்கு மட்டும் எப்படி முடிந்தது?

அவருக்கென்று ஒரு மதம் இல்லை, அவ்வளவுதானே ஒழிய, வேறு என்னவாக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இத்தகைய அய்யன் திருவள்ளுவரை இந்த ஆய்வு மாநாடு என்ற போர்க்களத்தில் நீங்களும் சந்திக்கின்றீர்கள் - புலவர் தெய்வநாயகமும் சந்திக்கின்றார்.

நீங்கள் இருவரும், காலமாகிக் காணாமல், கலந்த காற்றிலே அய்யன் திருவள்ளுவரைத் தேடுவதற்காக முனைகின்றீர்கள்.

பார்வை ஒழுங்காக இருப்பவர்களுக்கு பாதாளம் தெரியும்' என்றான் அரிஸ்டாட்டில்.

திருக்குறள் ஆழத்தை நோக்கி இறங்குவதற்கு வந்திருக்கின்ற தண்டமிழ்ச் சான்றோர்களே !

உங்கள் முன்னால் விரிக்கப்பட்ட ஆறு கிறித்துவப் புத்தகங்கள் வழியாக, நீங்கள் உதிர்க்கின்ற கருத்துக்கள், இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவரைக் காட்டுவதற்காகவாவது அமைய வேண்டும் என்பது என் போன்றோரின் ஆசையாகும். பல நூற்றாண்டுகட்கு ஒரு வள்ளுவராகப் பிறப்பவர் தான் திருவள்ளுவர்!

இது வரையில், கடவுள் தான் நினைவில் நிற்பவன் என்று தத்துவங்கள் கூறுகின்றன.

வேதங்களையும் - அதற்குச் சாட்சியாகக் கோயிலையும் - பூசையையும் காட்டுகின்றனர் வேதாந்திகள்!

அருள் கூர்ந்து, நீங்கள் அய்யன் திருவள்ளுவரைக் கோயிலில் இல்லா இறைவனாக, பூசையில்லா இறைவனாக, மனித நேய மனிதத்தில் மணக்கும் மனமாகக் காட்ட வேண்டுமென்று விரும்புகின்றேன்.

புலவர் தெய்வ நாயகத்தின் ஆய்வுக் கண்ணோட்டங்கள், அவரின் மதத்தைச் சார்ந்ததுதான் என்பதைத் தெளிவாக உணர்ந்த நீங்கள், அரசியலால் வாய்ப்பு பெற்ற மதத்திற்கு அடிமையாக நினைக்கப் போகின்றீர்களா? அல்லது தென்றலைப் போலப் பொதுவாக்கப் போகின்றீர்களா? என்பது எனக்குத் தெரியாது.

ஆனால், இறுதியாக ஒன்றை மட்டும் கூறி எனது வரவேற்புரையை முடித்துக் கொள்கிறேன்.

படைப்புக் கதைகளில் மிகப் பழமையானது பாபிலோனிய, சுமேரிய கதைகள். இதன் கருத்து, யூதர்களின் யெகோவா படைப்புக் கதையாகும். (Creative litreature) இதைப் பின் பற்றியதுதான் கிறித்தவர்களின் பைபிள்.

இதே நேரத்தில், புருஷ சூக்தம், விஷ்ணு புராணத்தில் நாராய ணன் படைப்புக் கதை. இவற்றோடு, கால நிர்ணயமில்லாத தாந்திரி நூல்களில் காணப்படும் படைப்புக் கருத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.

வரலாற்றுக் காலத்துக்கு முன்னதாக, (Pre historic period) இவைகளை வைத்துக்கொண்டு, மனித நாகரிக வளர்ச்சியை ஒருவாறு அனுமானிக்க முடிகின்றதே தவிர, நிரூபிப்பதே கடினம்.

ஆனால், எந்த விதத்திலும், மனித நாகரிக வளர்ச்சி, இப்படித் தான் இருந்திருக்க வேண்டுமென்பதில், அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை கிடையாது.

1.கீழ்நிலை வேட்டைச் சமுதாயம்
2. மேல்நிலை வேட்டைச் சமுதாயம்
3. மேய்த்தல்
4. விவசாயம்

இவற்றில் முதல் தொழிலாக உணவு சேகரித்தல், அதாவது விவசாயமும், இரண்டாவதாக வேட்டையாடுதலும் - மீன் பிடித்தலும், மூன்றாவதாக, ஆடு, மாடுகளைப் பிடித்து வளர்த்தலும், இறுதியாக விவசாயமும் - மனித நாகரிகத்தின் வளர்ச்சிகளாகப் பங்கேற்கின்றன.

அதிலும், விவசாயம் - கலப்பையற்ற விவசாயம் என்றும் - கலப்பை விவசாயம் என்றும், ஆடு, மாடுகளுடன் விவசாயம் என்றும் பிரித்து வைக்கப்பட்டிருகின்றது.

மேற்கூறப்பட்ட மனித நாகரிக வளர்ச்சி, உலகின் எல்லாப் பகுதிகளிலும் நடந்து வந்திருக்கின்றன.

இருவகை வேட்டைச் சமுதாயங்களில் மனிதன் சிந்தித்துப் பகுத்தறிய வேண்டியதாக எதுவுமில்லை.

பெண்களும் - ஆண்களும் ஒரு வகையில் சரிசமமாக வாழ்ந்து வந்தார்கள் !குழந்தைகளைப் பெற்றுத் தரும் பெண்தான் - பெரியவள் என்ற கருத்தும் நிலவி இருக்கிறது.

அறிவு முதிர்ச்சியில்லா அக்கூட்டம், ஒரு பெண் கருவுற ஆண் தேவையில்லை என்றுதான் கருதியிருக்கிறது.

இந்த அடிப்படையில், கிரேக்க காலத்தில் யூரினோம் என்ற பெண் கடவுளானாள்! இதன்பின், கலப்பை விவசாயக் காலத்தில், ஆண்களின் பலம் உணரப்பட்டது.

பின்னர், பெண் கடவுள் இனம் பிரிக்க முடியாத ஆண்பால், பெண்பால் என்று இனம் பிரிக்க முடியாத யெகோவா ஆனது.

இங்கே ஒன்றை, விருப்பு வெறுப்பு இல்லாமல் கவனிக்க வேண்டும். ரிக் வேதத்தில் வருகின்ற சுலோககங்கள், பாபிலோனிய கிரேக்க படைப்புக் கவிதைகளை நினைவு கூர்கின்றன என்பதை, நாம் அறிய வேண்டியிருக்கின்றது.

கிரேக்கத்திலுள்ள மும்மைக் (Trinity) கொள்கையும் நமக்குத் தெரிந்ததே! எனவே, ரிக் வேதத்தில் வரும் மும்மைக் கொள்கை, அது ஏற்றுக்கொள்ளத் தக்கதோ - அல்லாததோ, அந்தச் சார்பு கொண்டிருப்பதில் வியப்பில்லை.

அதே நேரத்தில், ரிக் வேதக் கடவுள் கொள்கைக்குக் கிடைத்திருக்கின்ற பலத்த எதிர்ப்பை நாம் மறந்துவிடக் கூடாது.

வேதங்களின் ஆரண்யப் பகுதிகளாக விளங்கும் உபநிடதம், "பொருள் எப்போதும் பூரணமாக இருக்கும். ஆரம்பம் என்று ஒன்றுமில்லை” என்றெல்லாம் கூறியிருப்பதை நோக்க வேண்டும்.

ரிக் வேதக் கடவுள் கொள்கையை எதிர்க்கும் - இந்த வேதக்கொள்கையை யார் கூறியிருக்க முடியும்?

கடவுள் தேவையில்லை என்று கருதிய மக்கள் யாராக இருந்திருப்பார்கள்? தாங்கள் சிந்தித்ததைப் பயமின்றிக் கூறியவர் யார்?

அவர்கள், அக்காலத்தில், உலகின் மற்றைய பாகங்களில் நிலவி இருக்கின்ற எல்லா நாகரிகங்களையும் விட உச்ச நிலை பெற்றவர்கள் ஆவார்கள்.

அக்கால நாகரிகச் சமுதாயத்தில், அவர்கள், விவசாயத்தைக் கொண்டு, ஒரு நிலை பெற்ற வாழ்க்கையை அமைத்து - உலகைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி இருந்தார்கள.

இவ்வாறு வாழ்ந்த சிந்தனையாளர்களைத்தான்-"ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தை உடையவர்கள்" என்று சிந்துவெளி நாகரிகம் கூறுகிறது.

இந்த சமுதாய அம்சத்தில் உருவான அய்யன் திருவள்ளுவர், எப்படி ஏற்கனவே அறிந்து தேய்ந்து போன மும்மைக் கொள்கையை, வரவேற்றிருப்பார் என்பதை - தமிழறிஞர்களாகிய நீங்கள் உங்களது ஆய்வுரையில் சிந்தித்து, எமது சிந்தனைக்கும் விடை கூறிட வேண்டுகின்றேன்.

பேரன்பு படைத்த தமிழ்ப் பேரறிஞர் பெருமக்களே! திருக்குறள் ஆய்வு மாநாட்டில் குழுமியிருக்கின்ற அறிவாளர்களே, உங்களை இவ்வளவு நேரமாக எதையெதையே கூறி, காலத்தை வீணாக்கிவிட்டேனோ என்று அஞ்சுகின்றேன்.

வரவேற்பாளனாக இருக்கின்ற நான் - என் கடைமையைச் செய்ய வேண்டாமா? அதைத்தான் என் அறிவுக்குப் புலப்பட்ட கருத்துக்களைத் தங்கள் முன்பு படைத்தேன்.

திருக்குறள் ஆய்வு மாநாட்டிற்கு வருகை தந்துள்ள பேரறிஞர்கள் அனைவரும் இனி அவரவர் ஆய்வுக் கருத்துக்களை குற்றாலச் சாரல் பூ மழைபோல திரண்டுள்ள நம்மீது பொழிவார்கள் என்று கூறி உங்களையெல்லாம் வருக வருக என இரு கைகூப்பி வரவேற்கின்றேன் - வணக்கம்.