உள்ளடக்கத்துக்குச் செல்

அன்பு வெள்ளம்/அன்புக் கட்டாயம்

விக்கிமூலம் இலிருந்து

அன்புக் கட்டாயம்

"கிறித்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” என்னும் 2 கொரிந்தியர் 5 : 14 உரையில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த சிந்தனை உள்ளடங்கியுள்ளது. அதனையே வேமௌத்து என்பார். "கிறித்துவினுடைய அன்பு நம்மை மேலாதிக்கம் செய்கிறது” என்று மொழி பெயர்த்துள்ளார்.

தூய பவுல் பற்றி ஒருவர் இப்படி குறிப்பிடுகிறார்; "அவரையும் அறியாமல், கிறித்துவின் அன்புக்கு ஆட்பட்டார், தூய பவுல்”

அப்படிக் குறிப்பிட்டது சரியானதுதான் என்பது போன்று "இயேசுவினுடைய அன்பினைப் போன்றே புதிய அன்பு என்னை அறியாமலேயே என்னை ஆட்கொண்டது; ஒர் உணர்ச்சியில் ஆழ்த்தியது; என்னை, அவ் அன்பு என் வாழ்வில் என்னை மேம்பாடு அடையச் செய்திருக்கிறது" இவ்வாறு ஒர் சான்றினைக் காட்டுகிறார்.

இத்தகு மறைமொழியான சொற்றொடர்களை எல்லாம் நாம் படிக்கும்போது, இதுவரை கண்டறியாத புதுவகையான அன்பினைக் கைகொள்ள எண்ணினாலே போதுமானது. முன்பு தூய பவுலை ஆட்கொண்டது போன்று நம்மையும் இயேசுவின் தெய்விக அன்பு ஆட்கொள்ளும்; இறைவனால் விரும்பப்பட்ட அன்பர்களைப்போலே நாமும் இறையன்பு கொண்டு எல்லா உயிர்களையும் விரும்புபவர்கள் ஆவோம்.

மானிடப் பிறவி எடுத்த எவரும் வாழ்வில் அஞ்சிட வேண்டியவை எத்தனையோ உள்ளன. ஆனால் இயேசுவில் வெளிப்பட்ட மன்னுயிர்க்கன்பு செய்யும் - இயேசுவின் அன்பிற்கு ஆட்பட்டவர்கள் எவருக்கும் என்றும் அஞ்சிடத் தேவையில்லை. ஆம் இயேசுவின் அன்பினைக் கைகொள்ளப் பெற்றவர்கள் யார் எவர் எனினும் அவர்கள் அஞ்சத்தக்க உலகில் உள்ள பேய்மைகள் அனைத்தையும் விரட்டியடிக்கப்படும். மேலும் இயேசுவின் அன்பு ஒருவகையில் நம்மை இயேசு போல் இணக்க வணக்க நடையுடையவராக-கணிவுள்ளவராக மாற்றி உயர்த்தும்; மற்றொரு வகையில் வெற்றி பெற்றவர்களாக்கும்.

நாம் கொண்ட அன்பு, நம் மூலமாக எல்லாரிடத்தும் எல்லாவுயிர்களிடத்தும் பரவிடத் தக்கது என்பதை அறிய வேண்டுதல் நலம். திருமறையிலிருந்து தாம் கற்ற - மேற்சொன்ன மெய்ம்மை, நம் அறிவுக்கு ஒளி சேர்க்கும்.

பிலிப்பி 1:9. "உங்கள் அன்பனாது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமாய்ப் பெருக வேண்டும்....... ”. என்னும் உரையும் ; அதே போன்று

பேதுரு 4:8 "எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்"

மேற்சொல்லப்பட்ட மெய் மொழிகளில் உள்ள 'ஊக்கமான' (Fervent) என்னும் சொல், உண்மையில் சொல்லப்போனால், 'சுடர்விட்டு ஒளிர்கிற அளவுக்கு வெப்பம்" (White-Heated) அல்லது "இரும்பினைப் பற்ற வைத்திடப் பற்றவைக்கும் இரும்பு பழுக்கக் காய்ச்சப்பட்ட நிலை அளவு வெப்பம்" என்று பொருள்படும். அதுபோன்று நமது அன்பும் பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டம் போன்று நெஞ்சத்தில் அன்பு கனிந்து, நெகிழ்ந்து ஒளி வீசும் அளவினை, நிலையினை அடையும்ேயானால் கிறித்துவத் திருச்சபைத் திருக்கூட்டம் தனித்தனி என்பது மாறி ஒட்டு மொத்தமாக ஒன்றோடு ஒன்று கலந்து இணைந்து ஒரே அவையாகும் அன்றோ!

கொல்லர், ஒளியில் உலோகத்தைச் சுடர்விடும் வரை பழுக்கக் காய்ச்சுகிறார். பற்ற வைத்திடவேண்டியவற்றின் இரு முனைகளையும் பொருத்திப் பழுக்கக் காய்ச்சிய உலோகத் துண்டினை வைத்துப் பற்ற வைப்பதைக் காண்கிறோம். அதுபோல, நெஞ்சம் அன்பினில் கனிந்து உருகி, நெகிழ்ந்திடு மேயானால், அவை வெவ்வேறு என்பது மாறி ஒரே திருச்சபை - ஒன்றுப்பட்ட திருச்சபை - அழகான திருச்சபை ஆகுமே. மூன்றாக இலங்கும் மும்மையும் ஒருமையாகி அருள் தந்தையாக நின்று நிலை பெறுவதனை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

தூயவற்றிலெல்லாம் தூயதான் கூடாரத்தை எப்படிப் பட்டவ்ர்களுக்காக எவ்வாறு அமைய வேண்டும் என்பதை, எந்தை கடவுள் அமைத்துத் தந்ததனை நாம் நினைவு கூர்ந்து பார்த்தால் தெரியும். அதுபோல, இயேசு கிறித்து இன்று நமது திருச்சபை ஒன்றுபட்ட திருச்சபையாக வேண்டும் என்று அதற்கான முறையினை வகுத்தளித்திருக்கிறார். என்ன முறை அது? அனைத்துத் திருச்சபைகளை ஒருசேர வைப்பது ஒன்றாக்குவது "நானும் எந்தையும் ஒருவரே என்பது போல, நீங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். ஒருவரே என்றாக வேண்டும் என்பதுதான் அந்த அமைப்புமுறை - வகை வடிவம்; திட்டம்.

எப்படி ஒன்று சேர்வது? ஒன்றாவது என்றால் அதற்குத்தான்் இயேசு காட்டிய அன்பினைப் போன்ற அன்பு இருக்கிறது.

நம் மனத்தின்கண் அன்பு வந்துள்ள கணமே, நம் உயிர் சுடர் விட்டொளிர்கிறது. நம்பிக்கையின் முழுமை - மொத்தம் நம்முள் நிரப்பப்டுவதை உணர்ந்திடலாம்.

இறைப் பற்றார்வத்திற்காகவும் ஆன்மிக வலிமைக்காகவும் நாம் வேண்டிய முறைகளும் நாள்களும் எண்ணற்றவை. ஆனால் மேற் சொல்லப்பட்ட ஒரே ஒரு மெய்மொழியைக் கடைப் பிடித்தால் இயேசுவில் நாம் கொள்ள வேண்டிய பற்றார்வமும் ஆன்மிக வலிமையும் ஒரு கணத்தில் நம்மை வந்தடைந்தாகக் கொள்ளலாம். அப்படிக் கொண்டால், நம்மில் இயேசு பற்றிய அன்பார்வமும் தெய்விக ஆற்றலும் வந்து நிரம்பி வழியும். அந்த நிறைவினை நாம் அடைந்தோம் என்றுணர்ந்திட, நம்மில் கடவுள் உறைகிறார் என்னும் உறுதியும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

        எங்கே உலகம் இரண்டற்று உழல்கிறதோ
        அங்குளதாம் அன்பின் உயிர்ப்பு.