உள்ளடக்கத்துக்குச் செல்

அன்பு வெள்ளம்/அன்பு வல்லந்தமாகக்

விக்கிமூலம் இலிருந்து

அன்பு வல்லந்தமாகக் கைப்பற்றுகிறது

"நீங்கள் ஏன் ஆப்பிரிக்க நாட்டுக்குப் போகிறீர்கள்?' என்று ஒருவர் ஆல்பர்ட் சுவைட்சரைக் கேட்டார். 'அன்பு என்னை அங்கே ஈர்த்தது. ஈர்த்த அன்பு என்னை துரத்தியது. அதனால் போகாமல் இருக்க முடியவில்லை"என்றார் அவர்.

இயேசுவின் அன்புக்கு ஆட்பட்ட ஒருவனுக்கு, உலகில் அதுபோன்ற ஆற்றல் வேறெதுவும் வந்து வாய்ப்பதில்லை. இயேசுவின் அன்பு நம்மைக் கட்டாயப்படுத்தி நம்முள் வந்து உறைகிறது - நிறைகிறது. அவ் அன்பு நம் உள்ளிருப்பது எதை எதைப் பேசிடக் கூடாதோ, எதை எதைச் செய்யக் கூடாதோ, அவற்றைச் சொல்லி நம்மைத் தடுத்து நிறுத்துகிறது. அதனால் நாம் எதைச் செய்யலாம், எதை வழங்கலாம் என்பதை நாம் அறிந்து செய்ய உதவுகிறது அன்பு!

இயேசுவின் அன்பு ஒருவரின் ஆவியினை அடக்கி ஆள்கிறது, இயக்குகிறது. எண்ணுவதுகூட அவர் அன்பினால்தான்் எனும்படி, ஒருவர் இயேசுவின் மாந்தராகிறார். தன்னையும் அறியாமல் அதே மாந்தர் எதை நினைத்தாலும் அன்பினை முதலாகக் கொண்டே நினைக்கிறார். இயேசுவின் அன்பினைப் பெற்று இயேசுவின் அன்பர் ஆன பின்பு முன்பு தான் நினைத்த படி, சொல்லியபடி செய்தது போன்று, இப்போது பேசுவதில்லை; செய்வதுமில்லை! இயேசுவின் அன்பிற்குப் ஆட்பட்டவர் ஒரு வாணிகம் செய்பவராக இருப்பதால் அவருடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இயேசுவின் அன்பே செயல்பட வைக்கிறது.

இன்னொருவர், ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவராக இருந்தால், அவர் இயேசு எப்படி எதையும் கண்ணுங் கருத்துமாகச் செய்தாரோ அப்படியே செய்ய வேண்டும் என்று கண்டு கொண்டு தொழில் புரிகிறார். அந்த நிறுவனம் தரும் நன்மை மேன்மையைக் கூடக் கருத்திக் கொள்ளாமல் மனமாரப் பணி ஆற்றுவார். மற்றவர் பார்வைக்குப் பணியாற்றுவது போன்ற பாசாங்கு வேலை செய்வது கிடையாது. தான் வாங்கும் ஊதியத்திற்கு ஆற்றிட வேண்டிய கடமையைவிட மேலாகவே பணியாற்றுவார். தனக்குத் தான் பணியாற்றும் நிறுவனமே கடன்பட்டிருக்கும் நிலைமையை உருவாக்கிக் கொள்கிறார்.

உதவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பின்பு, இயேசு கடைப்பிடித்தது போல, வாங்குவதை விட வழங்குவதையே வாடிக்கையாகக் கொள்கிறார். அந்தப் பண்பு 'எதையும் பிறரிடமிருந்து பெறுவது' என்பதைப் 'பிறருக்கு வழங்குவது' எனும் பாங்காக மாற்றிவிடுகிறது. தன்னால் ஆன மட்டும் ஒருவரை அடிமையாக்கிக் கொள்ளும் தன்னலம் என்பதைனை மேற் சொன்ன வழங்கும் பண்பு அழித்துவிடுகிறது.

அன்பு என்பது ஒரு புரட்சிகரமானது. அது பழமைப்பட்ட ஒன்றன்று! கரடுமுரடான மூலப் பொருள் போன்ற மானிடரைப் பத்தரை மாற்றுத் தங்கமாக மாற்றவல்லது அன்பு. ஓர் எளிய மனிதனை ஒப்பற்ற மாமனிதனாக்கிக் காட்டுகிறது.

கல்வி அறிவும் நல்ல வாழ்வியல் பயிற்சியும் அற்ற பலரை நாம் அறிவோம். அவர்கள் வறுமையில் உழல்பவர்கள்; வளம் வேண்டி நிற்பவர்கள். அவர்கள் பேசிடத் தொடங்கினால் அடடா! எத்தனை பேர் அமைதியாகக் கேட்கிறார்கள்! எப்படி? கல்லாத அவர்களுடைய பேச்சில் அப்படி என்னதான்் இருக்கிறது? அன்பு இருக்கிறது. ஆன்றவிந்தடங்கிய சான்றோரின் அன்பினை மேற் கொண்டு வாழ்ந்து வரும் பண்பு இருக்கிறது. வேறென்ன வேண்டும்?