உள்ளடக்கத்துக்குச் செல்

சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!

விக்கிமூலம் இலிருந்து

தீர்ப்பளியுங்கள்!


ன் நண்பர், மாஜிஸ்ட்ரேட் மருதவாணம் பிள்ளை, கோர்ட்டிலே மட்டுந்தான் கோபமாகக் காணப்படுவார். அதைக்கூட அவர் கோபமென்று ஒப்புக்கொள்வதில்லை. நீதியின் உருவம்! – என்று கூறுவார். “என்னமோ மருது! நீதி இப்படி மிரட்டும் உருவிலே இருப்பது எனக்குப் பிடிப்பதில்லை” என்று நான் கூறுவதுண்டு – கோர்ட்டு நேரத்தில் அல்ல.

அன்று மாலை, மருதவாணம் பிள்ளை, என்னைக் கண்டதும் “வா, வா! உன்னைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். நாளைக்கு ஒரு வழக்கிலே தீர்ப்பளிக்க வேண்டும். உன்னிடம் அதைக் கூறி, உன் தீர்ப்பு என்ன என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்.

“இதுதானா எனக்கு வேலை! உனக்குத்தான் சர்க்காரிலே சம்பளம் தருகிறார்கள். சட்டத்தைப் படித்துச் சம்பவங்களை அலசி, துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்ய. எனக்கேன் அந்த வேலை?” என்று நான் கேலியாகக் கூறினேன்.

“உனக்கே மாஜிஸ்ட்ரேட் வேலை கிடைத்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளேன்” என்றார் மருதவாணம். மாலை வேளையிலே அவருக்கு இயல்பாகவே மலரும் மகிழ்ச்சியுடன்.

“எனக்கு அந்த வேலை கிடைத்தால் தானே!” என்று நான் கொஞ்சம் கம்பீரமாகக் கூறினேன். மருதவாணர் மாஜிஸ்ட்ரேட் குரலிலே ஆரம்பித்தார்.

“பெயர் மகாலிங்கம்; வயது முப்பது. தொழில் நிலையாக ஒன்றுமில்லை; குற்றச்சாட்டு, பித்தளைச் சங்கிலியைத் தங்கச் சங்கிலி என்று ஏமாற்றி விற்றான் – இதுதான் வழக்கு, இதிலே தீர்ப்புக் கூற வேண்டும்.”

“சரி! மகாலிங்கத்தின் வாக்குமூலம் என்ன?” என்று கேட்டேன், ஒரு அதிகாரி போலவே.

“அதிலே சிக்கல் ஒன்றும் இல்லை. அவன் ஒப்புக் கொள்ளுகிறான்” என்றார் மருதவாணம்.

“இவ்வளவுதானா? இதிலே யோசனைக்கு என்ன இடமிருக்கிறது? குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொள்ளுகிறான். உடனே சட்டப் புத்தகத்திலே, அந்தக் குற்றத்திற்காகச் செக்ஷன் என்ன, அதற்கான தண்டனை என்ன என்று பார்க்க வேண்டியது தானே. இதற்கு என்னைப் பரீட்சிக்க என்ன இருக்கிறது?” என்று நான் கூறினேன்.

“தங்கச் சங்கிலி என்று முலாம் பூசியதை விற்றிருக்கிறான்; ஒப்புக்கொண்டுமிருக்கிறான். சாட்சியங்களும், அதே போல அப்பழுக்கு இல்லை என்றாலும் இது சிக்கலான பிரச்சனை” என்றார் மருதவாணர்.

“வேடிக்கையாகவன்றோ நீர் பேசுகிறீர்” என்று நான் கொஞ்சம் மரியாதையாகவே சொன்னேன், நண்பரின் முகத்திலே, கோர்ட்டுக்களை தட்டுவது கண்டு. கொஞ்ச நேரம் மௌனமாகவே இருந்தார் மருதவாணர். கவலையுடன் காணப்பட்டார். எனக்கு ஏதாவது பேசி வைப்போம் என்ற எண்ணம் உண்டாயிற்று.

“மகாலிங்கம் என்ற ஆள் தெரிந்தவனா!” என்றேன் நான். உடனே மருதவாணரின் உடல் குலுங்கிற்று. முள் தைத்தவர் அலறுவது போன்ற குரலிலே, “தெரிந்தவனானால் என்ன, தெரியாவிட்டால் என்ன? நீதியின் கண்களுக்குச் சிநேகிதன், பந்து, இவைகள் உண்டா? பைத்தியக்காரா! எனக்கு எப்போதும் அம்மாதிரி எண்ணம் வருவதே கிடையாது. யாருக்கும் வரக்கூடாது. நீதியின் சக்கரம் சாமான்யமானதல்ல” என்று கூறினார். இதேது, இன்று இரவு நெடு நேரம் வரையிலே இவருடைய உபதேசத்தைக் கேட்கவேண்டும் போலிருக்கிறதே” என்று நான் சற்று பயந்தேன்.

“மகாலிங்கம், கள்ளன், அயோக்கியன், குடியன். இவற்றிற்கு ருஜு இருக்கிறது” என்று தனக்குத் தானே கூறிக் கொள்பவர் போலப் பேசினார் என் நண்பர்.

“சரி! ருஜு இருக்கும்போது, கள்ளனை, அயோக்கியனைத் தண்டிக்க வேண்டியதுதானே. இதிலே தயவு தாட்சணியம் என்னமோ இல்லை, கூடாது. இன்னம் யோசனை ஏன்?” என்று நான் மாஜிஸ்ட்ரேட்டானேன். மாஜிஸ்ட்ரேட் மருதவாணம் பிள்ளையோ ஒரு விசித்திர வக்கீலானார்.

“மகாலிங்கம், கள்ளன் அயோக்யன், குடியன் என்பதற்கு எப்படி ஆதாரம் இருக்கிறதோ அதே போலவே அவன் சாது, யோக்யன், ஏமாந்தவன் என்ப தற்கும் ருஜு இருக்கிறது” என்றார்.

உண்மையிலேயே இது சிக்கலான பிரச்னைதான். என் நண்பர் கவலைப்படுவதற்குக் காரணம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன்.

“வேடிக்கையாக இருக்கிறதே சொல்வது! யோக்யன், அயோக்யன் என்று ஒரே ஆளை எப்படிக் கூறுவது? அமாவாசை பௌர்ணமி தினத்தில் எனக் கூறுவது போல் இருக்கிறதே!” என்று நான் உவமையை உதவிக்கு இழுத்தேன். மருதவாணர் அதிலும் சளைக்கவில்லை. “பச்சை ஓணான், அடிக்கடி நிறம்மாறும் தெரியுமா?” என்று கேட்டார். “ஆமாம்!” என்று நான் இழுத்தேன். “என்ன ஆமாம், எதற்கும் ஆமாம்சாமி போடுகிறாய். ஊரைக் கொளுத்துவது தவறுதானே?” என்று வேறோர் கேள்வியைக் கேட்டார். திடுக்கிட்டு, “நிச்சயமாகத் தவறுதான்” என்றேன். “தவறுதான்! ஆனால் இலங்காதகனம் புண்ய காரியமாகப் பாவிக்கப்படவில்லையா?” என்றார் நண்பர். இதேது வம்பு வளர்ந்தபடி இருக்கிறதே என்று அஞ்சி, “அதுவேறு விஷயம்! அரக்கனுடைய ஊரை அனுமார் கொளுத்தினார், அது…......” என்று முடிக்கவே அவசியமில்லாத வாசகத்தை வீசினேன். “அது கடவுள் விஷயம், அது தானே உன் வாதம்” என்று என் நண்பர் என் வாசகத்தை முடித்துவிட்டு, மேலே பேசலானார்: “மகாலிங்கம் யோக்யன்தான், அயோக்கியனுந்தான்! ஏமாற்றினான் என்பதும் உண்மை, ஏமாந்தான் என்பதும் உண்மைதான்!” என்றார்.

“எனக்கு விளங்கவில்லையே! கோர்ட்டிலே வந்த சாட்சிகள், அவன் யோக்யன், சாது, ஏமாந்தவன் என்றா சொன்னார்கள்?” என்று கேட்டேன். “அதுதானே கிடையாது! கோர்ட்டிலே அவ்வித சாட்சியே கிடையாது” என்று கூறிவிட்டு, உள்ளே சென்றார். சில கடிதங்களுடன் வந்து சேர்ந்தார். ஒன்றை எடுத்தார்.

“இதோ பார். இது குலாப்சந்த் சௌகார் சாட்சியம்.”

“நம்பள் கடையிலேதான் இந்த மனுஷன் வந்தான். கொஞ்சம் இருட்டு. நம்பள் கடையிலேயும் விளக்குச் சரியா இல்லை. எண்ணெய் ரேஷன் காலம். சங்கிலி கொடுத்தான். ‘எத்தனை சவரன்?’ இது நம்பள் கேட்டது. ‘எடை போட்டு பார் சேட்!’ அவன் சொன்னான். நம்பள்கி சந்தேகம். என்னா! சங்கிலி கொண்டாந்தவன் எடை சொல்லாமலே ஏன் இருக்கான்னு யோசிச்சான். நம்பள் சந்தேகம் வந்தாச்சா, உடனே போலீசுக்கு ஆள்விடுவான். பத்து வருஷமா நம்பள் வியாபாரம் இப்படித்தான். சாயா சாப்பிட்டு வர்ரேன்னு சொல்லிப் போனேன். 308 கான்ஸ்டபிள் மூலைக் கடை பக்கம் இருந்தான், கூப்பிட்டு வந்து காட்டினேன், லாக்கப் ஆனான். நம்பள், ராம்ஜி தயவிலே ஆபத்திலே மாட்டாமே தப்பினான்.”

இது மற்றொரு சாட்சி, சதாசிவம் வாக்குமூலம்:

“தங்க முலாம் பூசிய சங்கிலியை விற்றுத் தந்தால் எனக்குப் பாதி பாகம் தருவதாக மகாலிங்கம் என்னைக் கூப்பிட்டான், சங்கிலியையும் காட்டினான். நான் இம்மாதிரி திருட்டுக் காரியத்துக்கு உடந்தையாக இருக்க முடியாதென்று சொல்லிவிட்டேன்.”

308 நம்பர் கான்ஸ்டபிள், “சேட் வந்தழைத்ததும், நான் கடைக்குப் போனேன். என்னைப் பார்த்த உடனே இவன் முகத்திலே பயம் வந்துவிட்டது. ‘ஏதடா சங்கிலி’ என்று கேட்டேன். பதில் சொல்லாமல் மரம் போலிருந்தான். இதற்குள் சேட், உறைத்துப் பார்த்து: ‘அரரே! இது பொன் இல்லை, பித்தளை’ என்று சொன்னார். உடனே இவனை லாக்கப் செய்தேன்.” இப்படியே சாட்சியங்கள் உள்ளன— என்று மருதவாணர் கூறிவிட்டு, ஆயாசத்தோடு இருந்தார். இவ்வளவு வெள்ளையாக வழக்கு இருக்க இவர் ஏன் வேதனைப்படுகிறார் என்பது விளங்கவில்லை எனக்கு.

“சரியானபடி சிக்கிக்கொண்டிருக்கிறான். இனி என்ன இருக்கிறது நான் கூற” என்று சொன்னேன்.

“எனக்கோ கடுமையான ஜுரம்! வைத்தியர்கூட மிரண்டுவிட்டார். மார்புச்சளி அதிகமாக இருக்கிறது. சுவாசம் வருவதுகூடச் சிரமமாக இருக்கிறது என்று கூறினார். என் மனைவி என்ன செய்வாள்? அவள் மேலே, ஒரு நகையும் கிடையாது. இருந்தது ஒரு வளையல், அது போனமாதம் தீர்ந்துவிட்டது. வீட்டிலே பாத்திரங்கள்கூடக் கிடையாது. இந்த நிலையிலே, பத்து ரூபாயாகும் ஊசிபோட என்று டாக்டர் கூறிவிட்டார். கையிலே பணம் வந்தாக வேண்டும் என்றார். நிர்க்கதியாகி விடப்பட்ட நான், பிராண அவஸ்தையிலே இருப்பதை எடுத்துச்சொல்லி, நான் வண்டியோட்டும் முதலாளியிடம் போய் அழுதாள் என் மனைவி. பத்து நாளாகப் படுத்த படுக்கையாக இருக்கிறேனே பாதிப் பிராணன் போய் விட்டதே என்று ஈவு இரக்கம் கொஞ்சமும் இன்றி, அந்தக் கொலைகாரப் பாதகன், ஒரு பைசா கூடத் தரமுடியாது. அவன் ஏற்கனவே ஆறு ரூபாய் பாக்கி என்று கூறிவிட்டான். மாங்கலியப் பிச்சை தரவேண்டும் என்று என் மனைவி கேட்டாளாம். அதற்குக் கோயிலை சுற்று என்று சொல்லித் துரத்திவிட்டானாம்! மாடாக உழைத்தேன் உனக்கு, உயிர் போகிறது என்றால் பத்து ரூபாய் தர மறுத்துவிட்டான். இப்படிப்பட்ட கல்நெஞ்சர்கள் வாழ்கிறார்கள். கஷ்டாளிகள் கால்வயிற்றுக்குக் காலம் முழுவதும் உழைக்கிறார்கள். சரி, சாக வேண்டியதுதான் என்று எண்ணி ஏங்கினேன். நான் மாண்டுபோனால் மங்காவின் கதி என்னாகும்? என் ரங்கன், நாலு வயதுப் பையன், அவன் தெருவிலே அலைவான். இந்த லட்சணத்திலே அவள் எட்டாம் மாதம்! இந்த உலகிலே, என்னைக் காப்பாற்ற, மரணத்திலிருந்து என்னைத் தப்பவைக்க யாரும் இல்லை, மங்கா அழுதபடியே இருந்தாள். அந்த நேரத்திலே, புண்யமூர்த்தி மகாலிங்கம் வந்தான். அவன் பூர்ணாயுசுடன் நோய் நொடியின்றி வாழவேண்டும். “வரதா! உனக்கு இவ்வளவு அதிகமாக ஜுரம் என்று எனக்குத் தெரியாமல் போச்சே” என்று விசனித்தான். “அக்கா! அழாதே, ஆண்டவன் நல்வழி காட்டுவார்” என்று என் மனைவிக்குத் தேறுதல் கூறினான். அவனுடைய அன்பு எனக்கு ஆயிரம் டாக்டர்களின் உதவியைவிட மேலானதாக இருந்தது. உயிருக்கு ஊசலாடிக்கொண்டு, ஊரிலே ஒருவர் உதவியின்றி வேலை செய்துவந்த இடத்திலே கைவிடப்பட்ட இந்தத் தர்மக்கட்டையிடம் தயை காட்டி, ஆறுதல் கூறினான். அவனுடைய தர்ம சிந்தனையைப் பார்த்தபோது, கைதூக்கிக் கும்பிட்டேன். அதுவரையிலே அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக் கொட்டினாள், என் மனைவி.

“ஆண்டவன் எனக்கு என்ன வழியப்பா காட்டப் போகிறார்? ஆண்டவன் இருக்கிறானா? எங்கே இருக்கிறான்! இதோ என் புருஷர் வதைக்கிறார். கண்ணைத் திறக்கிறேன்! கலம் தண்ணீர் விடுகிறேன். தெய்வம் என்ன செய்கிறது? தெருவிலே ஏழைகளை அலையவைக்கிறது. தெய்வமாம் தெய்வம்! திக்கற்றவர்களுக்குத் தெய்வம் துணை என்பது பாட்டி கதை” என்று அழுதுகொண்டே கூறினாள்.

“அழாதே அக்கா! ஆண்டவன் இருந்துதான், என்னை இங்கே அனுப்பி வைத்தார்” என்று சொன்னான், அந்தச் சாந்தமூர்த்தி. “ஆமாம் உன்னைப்போல ஈரமுள்ள நெஞ்சு கொண்டவர்கள் வந்துதான் ஆண்டவனின் மானத்தைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது” என்று அவள் பதறிப் பேசினாள். பத்து ரூபாய் கேட்கிறார் டாக்டர் என்பதைக் கூறினேன். பத்து ரூபாய் என்றதும் பாவம், மகாலிங்கம் பயந்து போனான். அவனிடம் ஏது அவ்வளவு பணம்? அவன் என்னைப் போல் ஒரு ஏழை. எனக்காவது ஒரு குழந்தை அவனுக்கு நாலு. எனக்கு ஒரு இடம் இருந்தது வேலை செய்ய, அவனுக்கோ ஒரு வேலையும் நிலையாக இருப்பதில்லை. நோயாளி மனைவி, வயதான தாய், வருமானம் கட்டை. இந்த லட்சணத்திலே பத்து ரூபாய் தர முடியுமா அவனுக்கு? “அப்பா நீ பக்கத்திலேயே இருந்தால் போதும், பத்து ஆயிரம் கொடுத்த மாதிரிதான். என் பிராணன் போகிற சமயத்திலே, உன்னைப்போன்ற ஒரு உத்தம சினேகிதன், பக்கத்திலே இருந்தால், அதுவே என் மரண வேதனையைக் குறைக்கும்” என்று நான் ஈனக் குரலிலே கூறினேன். எழுந்தான், “இதோ வருகிறேன்” என்றான். வெளியே போனான். வேதனையைக் காணச் சகியாமல் வெளியே போனான் என்று நான் நினைத்தேன். அரைமணி நேரத்திற்கெள்ளாம், டாக்டருடன் வந்தான். ஊசி போட்டார். என்னைப் பணம் கேட்கவில்லை. அதிலிருந்து ஜுரம் படிப்படியாகக் குறையத் தொடங்கிற்று. நான் எழுந்து நடமாடும் சக்தி பெறுகிறவரையிலே, ரொட்டியும் அவன் தான் வாங்கித் தந்தான். ‘ஏது மகாலிங்கம் பணம்?’ என்று எத்தனையோ தடவை கேட்டேன். பதிலே சொல்லவில்லை அந்த தர்மசீலன், தயாளமூர்த்தி, புண்யாத்மா, அவதார புருஷன். என் உயிரைக் காப்பாற்றினான். ஏழை, எழைக்கு உதவி. ஏழையே, ஏழைக்கு உயிர் கொடுக்கும் தெய்வம். மகாலிங்கம், சாதாரண பிறப்பல்ல. அவன் தெய்வப் பிறப்பு.”

இது, வண்டிக்கார வரதன் வாக்குமூலம் – கோர்ட்டில் சொன்னதல்ல. என்னிடம் நேரில் சொன்னான். காலில் விழுந்து. “எப்படியாவது அந்தக் காருண்யவானைக் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டான். உண்மையிலேயே ஒரு டாக்டருக்கு, உயிர் போகுமே, நம்மாலான உதவி செய்வோம் என்ற எண்ணம் தோன்றவில்லை. நம்மிடம் நாய்போலக் கிடந்தானே, உயிருக்கு ஆபத்தாக இருக்கிறதாமே, ஒரு பத்துரூபாய் கடன் தருவோம் என்ற எண்ணம், ஒரு பணக்காரனுக்குத் தோன்றவில்லை. பராரி மகாலிங்கத்தின் மனதிலே, அவ்வளவு அன்பு ததும்ப இருந்தது. ஒரு உயிர் துடிப்பதைக் கண்டு அவன் துடித்தான். ஒரு குடும்பத்தின் கண்ணீரைக் கண்டு கலங்கினான். மகாலிங்கம் யோக்யன், தர்மவான், குணசீலன். அந்த வரதன் சொன்னதுபோல அவன் தெய்வப்பிறவி – என்று இந்த வாக்குமூலம் ஒன்றைக் கொண்டே சொல்லிவிடலாம்” என்று கூறிவிட்டுப் பெருமுச்செறிந்தார் மாஜிஸ்ட்ரேட். நான் ஆச்சரியத்தால் என்னையே மறந்தேன். மகாலிங்கம் எவ்வளவு பெரிய கர்மயோகி! அவன் மனதிலே எவ்வளவு கருணை! அவனுடைய செயல் எவ்வளவு சிலாக்கியமானது! என்று புகழ்ந்தேன்.

“ஆனால் மறந்துவிடாதே, மகாலிங்கம் செய்திருக்கும் குற்றத்தை” என்று மாஜிஸ்ட்ரேட் கவனப்படுத்தினார். “ஆம்! அவன் தண்டிக்கப்பட வேண்டியவன்” என்பதை நினைத்ததும், என் உடல் குலுங்கிற்று. இப்படிப்பட்டவனுக்குத் தண்டனை! அவன் காட்டிய சிநேக வாஞ்சை, மனிதாபிமானம், ஆபத்தில் உதவுதல், இவைகளுக்குப் பரிசு கிடையாதா? இவைகளைக் கவனிப்பவர் இல்லையா? இல்லை! ஏன்? அவன் திருடன்! தியாக புருஷன் திருடனானான்! பௌர்ணமியிலே அமாவாசை இருக்க முடியுமா என்று நான் கேட்டேன் பைத்தியக்காரத்தனமாக! இதோ இருக்கிறதே!! கருணையைப் பொழிந்த மகாலிங்கம், களவுமாடியிருக்கிறான்!!

“இன்னொரு வாக்குமூலம் கேள்: “தர்மதுரையே! மகாலிங்கம், மகாயோக்கியனுங்க. பெரிய குடும்பம். பிழைப்புக்காக, யார் காலால் இட்ட வேலையும் தலையால் செய்பவனுங்க என் மகன். அவன் சின்ன வயசிலிருந்தே யோக்யனுங்க. கஷ்ட ஜீவனம், அந்தக் கஷ்ட ஜீவனத்திலேயும், பசி என்று சொல்லி யாராவது வந்துவிட்டா போதுங்க, தன் வயிற்றுக்குப் போதாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லி, அவர்களுக்குச் சோறு போடுவாங்க. கெட்ட நினைப்பே கிடையாதுங்க. அவனை நீங்க காப்பாற்றாமபோனா, நாலு குழந்தையோடு அவன் பெண்ஜாதி நடுத்தெருவிலே நிற்கும். நானும் அப்படித்தான். வயசு அறுபதுக்கு மேலே ஆகுதுங்க” என்று கூறி என் காலில் விழுந்து அழுதாள் மகாலிங்கத்தின் தாய். அவள் வாக்குமூலத்திலிருந்து மகாலிங்கம், சாது, யோக்யன், அன்பு காட்டுபவன் என்று ஏற்படுகிறது. ஆனால் வழக்கோ விளக்கமாக இருக்கிறது. அவன் கள்ளன், அவனே குற்றத்தை ஒப்புக்கொண்டுமிருக்கிறான். இப்படிப்பட்ட யோக்யன் ஏன் அயோக்கியனானான்!” என்று மருதவாணர் கேட்டார். “எனக்குத் தலை சுழலுகிறது இதைக் கேட்க” என்று நான் சொன்னேன். உண்மையாகவே எனக்கு அப்படித்தான் இருந்தது.

“நம்ம வீட்டுத் தோட்டக்காரன் இருக்கிறானே துரைசாமி, அவன் சொன்னதோ இதை விட அதிகம். மகாலிங்கம் எப்போதும் ஏழைகளுக்கு உதவி செய்வானாம். யாராவது வீதியிலே, தூக்கமுடியாமல் பாரமான மூட்டையை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டால் அவன் தான் உதவிக்கு வருவானாம். போக்கிரி எவனாவது யாரிடமாவது வம்புக்குப் போனால் இவன் போய்ச் சமாதானம் செய்வானாம். அந்தப் போக்கிரி அடித்தால்கூடப் பட்டுக் கொள்வானாம். அனாதைகள் இருந்தால், வீடுவீடாகப் பிடிசோறு எடுத்து, அவர்களுக்கு உணவளிப்பானாம். ஒரு தடவை, நம்ப தோட்டத்திலே தேங்காய் திருடிவிட்டானாம் எவனோ. மகாலிங்கம்தான் திருடினான் என்று நினைத்துக் கொண்டு, துரைசாமி, மகாலிங்கத்தைச் சண்டைக்கு இழுத்துப் பலமாக அடித்துவிட்டானாம். மகாலிங்கம் அவ்வளவு அடியும் பட்டுக்கொண்டு, சத்தியமாக நான் திருடவில்லை என்று சொன்னானாம். கடைசியில் திருடன் வேறு ஒருவன் என்று தெரிந்ததாம். நம்ம துரைசாமிக்கு மனந்தாளாமல், மகாலிங்கத்திடம் போய் மன்னிப்புக் கேட்டானாம். “இது என்ன பிரமாதம்! என்னமோ விஷக்கடிவேளை” என்று மகாலிங்கம் பொறுமையாகப் பேசினானாம். அப்படிப்பட்ட பொறுமைசாலியை நான் கண்டதே கிடையாதுங்க. ரொம்ப யோக்யன், எப்போதாவது அதிகக் கஷ்டமான வேலை செய்தால் குடிப்பான். ஆனால் குடித்துவிட்டுக் கூத்தாடுகிறவனுமல்ல. ‘என் கையிலே பணம் ஏராளமாக இருந்தால் ஏழைகளுக்கெல்லாம் உபகாரம் செய்வேன். நான் இல்லாதவன், என்ன செய்வது’ என்று ஏக்கப்படுவானாம் மகாலிங்கம்” என்று கூறினார் மாஜிஸ்ட்ரேட், துரைசாமி சொன்னான் என்று.

“ஐயோ பாவம்! இப்படிப்பட்டவனுக்கு ஏன் கெட்ட எண்ணம் பிறந்தது” என்று நான் பரிதாபத்துடன் கேட்டேன்.

“அதை ஏன் கேட்கிறாய்! அதைச் சொன்னால் நீ மூர்ச்சையாகிவிடுவாய். எங்கெங்கு விசாரம் இருந்ததோ அங்கெல்லாம் மகாலிங்கம் முன்னாலே நின்று உதவி செய்வான். நோயாளிகளுக்கு மருந்து வாங்கித் தருவான். ஏழையின் வீடு இடிந்தால், இவன் கூலி இல்லாமல், வெறும் கூழுக்கே வேலை செய்வான். குழந்தை ஏதாவது தவறி வந்து விட்டது என்றால், வீடு கண்டுபிடித்துக் கொண்டு போய்ச் சேர்க்கிற வரையிலே, வேறு வேலையைக் கவனிக்க மாட்டான். இப்படி மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்ததால் அவனுக்குக் கிடைக்கும் வேலையும் நிலைப்பதில்லை. பரோபகாரி வருகிறார், இவருக்கு வேலை வெட்டி எதற்கு? என்று கண்டித்து அனுப்பிவிடுவார்கள். குடும்பமோ பெரிது. அதை நடத்திக்கொண்டு போவதே சிரமம். தன் சக்தியையும் உணராமல் உதவி செய்யும் சுபாவம். அதற்கு வேறு செலவு. இந்த நிலையிலே, நடந்திருக்கிறது இவன் வாழ்க்கை. இச் சமயத்திலே, இவன் அதிர்ஷ்டச் சீட்டு கட்டியிருந்தான். அதிலே நூறு ரூபாய் கிடைத்தது, ஆனந்தமடைந்தான். கடன் தீரும், குடும்பத்துக்குச் சௌகரியமாகும், மற்றவர்களுக்கு உதவி செய்யவும் முடியும் என்று மகிழ்ந்தான்.

அழுக்கு உடையும், தலைவிரி கோலத்துடனும் தள்ளாடி நடந்து கொண்டு, யாரோ ஒருவன், மகாலிங்கத்திடம் வந்து சேர்ந்தான் சனியன் போல. அவனுடைய நிலைமையைக் கண்டதும், மகாலிங்கத்தின் மனம் பாகாய் உருகிவிட்டது. “ஐயோ! சாப்பிட்டு எத்தனை நாளாயிற்றோ? பார்க்கவே பரிதாபமாக இருக்கிறதே” என்று சொல்லித் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறான். அவன் தண்டச் சோற்றைத் தாராளமாகத் தின்றுவிட்டு, “ஐயா! நான் பர்மாவிலிருந்து கால்நடையாக வந்தவன், ரங்கூனில் பெரிய வியாபாரி. போராத வேளையால் இந்தக் கோலம் வந்தது” என்று தன் கதையைக் கூறலானான். பர்மாவிலிருந்து பயங்கரமான ஆபத்துக்குள்ளாகிப் பல மக்கள் வதைப்பட்டதை மகாலிங்கம் ஏற்கனவே கேள்விப்பட்டவன். பத்து நாள் அன்னாகாரம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள், காட்டு ஜாதியாரால் கொலையுண்டவர்கள் என்று பல சோகச் சேதிகளைக் கேட்டிருந்தான். ஆகவே, பர்மாவிலிருந்து வந்தேன் என்று சொன்ன உடனே மகாலிங்கத்துக்குக் கண்ணிலே நீர் ததும்பிற்று.

வந்தவன், “என் குடும்பம் அடியோடு நாசமாகிவிட்டதப்பா!” என்றான். மகாலிங்கம் அழுதுவிட்டான் . எப்படியோ நான் வந்து சேர்ந்தேன். திக்கு இல்லை திசை தெரியவில்லை. நீ கிடைத்தாய் பழனியாண்டவர்போல” என்று சொல்லிக் கும்பிட்டான். “ஐயோ! பெரியவங்க நீங்க இந்தப் பஞ்சைப் பயலைக் கும்பிடக்கூடாதுங்க. நான் என்ன பிரமாதமான உதவி செய்துவிட்டேன் உங்களுக்கு” என்று மகாலிங்கம் கூறினான். அப்போதுதான், வந்தவன், மெதுவாக மடியிலிருந்து, சங்கிலியை எடுத்தான். “அப்பா இது முனு சவரன். இதை விற்க வேண்டும். விற்றால் நான், ஊர் சேர்ந்து ஏதாவது கடை வைத்துக்கொண்டு பிழைப்போம். இந்த ஊருக்கோ நான் புதியவன். கடைவீதிக்கு நகையை எடுத்துக் கொண்டு போனால், சுலபத்திலே வாங்கமாட்டார்கள். அதிலும் நான் இருக்கிற அலங்கோலத்தைக் கண்டால் இது திருட்டுச் சொத்தோ என்று கூடச் சந்தேகப்படுவார்கள். ஆகையினால் எனக்கொரு உபகாரம் செய். இது மூன்று சவரன். இன்றைய விலையிலே இருநூறு ரூபா தாளும். எனக்கு ஒரு நூறு ரூபாய் கொடு போதும், சங்கிலியை நீ எடுத்துக்கொள் என்று கெஞ்சினான். மகாலிங்கம் மறுக்கவில்லை. அதிர்ஷ்டச் சீட்டுப்பணத்தை அப்படியே அந்தப் பர்மா அகதிக்குக் கொடுத்தனுப்பிவிட்டான். அந்தச் சங்கிலியைத்தான் பிறகு மார்வாடிக் கடையிலே விற்க வந்தான், பிடிபட்டான். இது, மகாலிங்கத்தின் மனைவி, தன் நாலு மக்களோடு என் காலிலே விழுந்து சொன்ன வாக்கு மூலம்” என்றார். நான் சந்தோஷத்தால் துள்ளிக்குதித்து, “இந்த வாக்கு மூலத்தைக் கொண்டே, “மகாலிங்கத்தை விடுவித்து விடலாமே” என்று சொன்னேன். மருதவாணர் சிரித்துக் கொண்டே “எப்படி தீர்ப்பளிக்க முடியும்? சட்டம் இடந்தராதே. மேலும் பர்மா அகதியாக நடித்தவன் யார் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல முலாம் பூசுவதற்கான சாமான்கள் மகாலிங்கத்தின் வீட்டிலிருந்து போலீசார் கண்டுபிடித்து எடுத்திருக்கிறார்கள்” என்று கூறினார். “அந்தப் பர்மா அகதியாக வந்த புரட்டனே, முலாம் பூசும் சாமானை அங்கே வைத்திருப்பான்” என்று நான் கூறினேன். “இருக்கலாம்! ருஜு வேண்டாமா? மகாலிங்கம் நிரந்தரமான தொழிலற்றவன், அவன் முலாம் பூசிய நகையை விற்க முயற்சித்தான். அதை அவனே ஒப்புக்கொள்கிறான். அவன் வீட்டிலே முலாம் போடும் கருவி கிடைத்தது. தண்டனைக்கு ஏற்றபடி ருஜுகள் உள்ளனவே, நான் என்ன செய்வது?” என்று கேட்டார்.

“சிக்கலான பிரச்னைதான்!” என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. நானா தீர்ப்பளிக்க வேண்டியவன்! என் தீர்ப்பு நெடுநாட்களுக்கு முன்பே பதிவாகிவிட்டது. ஒரு வழக்குக்கு மட்டுமல்ல, பொதுவாகவே. அதாவது, ஏழைகள் செய்யும் குற்றங்களுக்குக் காரணம் அவர்களின் ஏழ்மை. ஆகவே தண்டிக்கப்படவேண்டியது ஆட்களல்ல, பொருளாதார பேத அமைப்பு முறை. இது என் தீர்ப்பு. ஆனால் மாஜிஸ்ட்ரேட் மருதவாணம் பிள்ளை, சட்டப்படி, இந்த மகாலிங்கம் வழக்கிலே, என்ன தீர்ப்பு அளிப்பது என்று கேட்கிறார்! சொல்லுங்கள் பார்ப்போம்!!