உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடரங்கு/சரோஜாவின்

விக்கிமூலம் இலிருந்து

சரோஜாவின் சவுரி

கும்பகோணத்தில் நான் ரெயிலைப் பிடிக்கும்போது ரெயில் புறப்பட மூன்றே நிமிஷங்கள்தான் இருந்தன. அவசர அவசரமாக டிக்கட் வாங்கிக்கொண்டு இரண்டாம் வகுப்புப் பெட்டியைத் தேடி நடந்தேன்.

முதலில் கண்ணில் பட்ட இரண்டாம் வகுப்புப் பெட்டியில் இரண்டே இரண்டு பெண்கள் மட்டும் உட்கார்ந்திருந்தார்கள். அடுத்த பெட்டியில் பார்த்தேன். ஸீட்டுக்கு ஐந்து பேர் உட்கார்த்திருந்தார்கள். வேறு துணையில்லாத பெண்களுடன் பிரயாணம் செய்ய என்னைப்போல் சங்கோஜப்பட்டவர்கள் தான் அன்று ரெயிலேறி இருந்தார்கள் போலும்!

ரெயில்வே கார்டை, "இது பெண்கள் வண்டியில்லையே!” என்று கேட்டுக்கொண்டு அந்தப் பெண்கள் இருவரும் மட்டும் தனித்திருந்த வண்டியில் ஏறிக்கொண்டேன். உடனேயே வண்டியும் கிளம்பிவிட்டது.

கும்பகோணம் ஸ்டேஷனைவிட்டு வண்டி நகர்ந்ததும், அந்தப் பெண்களைக் கவனித்தேன் நான். நான் அந்தப் பெட்டியில் பிரயாணம் செய்வதற்கு அவர்கள் ஆக்ஷேபிக்க வில்லை. இருவரும் படித்தவர்கள்; அல்லது படித்துக்கொண் டிருப்பவர்கள் என்று எனக்குத் தோன்றியது. படித்துக்கொண் டிருப்பவர்களாய் இராது என்று எண்ணினேன். ஏனென்றால் படித்துவிட்டு வாழ்க்கையில் புகுந்து விட்டவர்களிடம் மட்டுமே சாதாரணமாகக் காணப்படும் ஓர் அடக்கம் அவர்களிடம் காணப்பட்டது. ஆடை அலங்காரங்களும் சற்று எளியனவாகவே இருந்தன. அவர்கள் தங்களுக்குள் சற்று உரக்கவே பல விஷயங்களைப்பற்றி ஆங்கிலமும் தமிழும் கலந்த ஒரு பாஷையில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"எக்ஸ்யூஸ் மீ! நீங்கள் சிதம்பரத்தில் படித்தீர்களோ?” என்று அந்தப் பெண்களில் ஒருத்தியைப் பார்த்துக் கேட்டேன்.

இருவரில் பெரியவள் பதில் சொன்னாள். "ஆமாம். இவள் மூன்றாவது வருஷம் அண்ணாமலைச் சர்வகலாசாலையில் பி.ஏ.படித்தாள். நான் பட்டணத்தில் எம்.ஏ. படித்துவிட்டுச் சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன். 'என் பெயர் சரஸ்வதி. இவள் பெயர் கௌரி” என்று தொடர்ந்து நான் கேட்டிருக்கக் கூடிய கேள்விகளுக்கும் சேர்த்துப் பதில் அளித்தாள்.

"அப்படியா? தங்களை அறிந்துகொண்டதில் எனக்கு ரொம்பவும் சந்தோஷமே!" என்று நான் உபசாரமாகச் சொன்னேன்.

"சிதம்பரத்தில் உங்களுக்குப் புஸ்தகக் கடை இருக்கிறது, இல்லையா?" என்றாள் சிதம்பரத்தில் மூன்று வருஷங்களுக்கு முன் படித்த மாணவி கெளரி.

"ஆமாம், அதுதான் உங்களை எங்கோ பார்த்த மாதிரி யிருக்கிறதே என்று கேட்டேன்' என்றேன் நான்.

"புஸ்தகக் கடையா?" என்று கேட்டாள் சரஸ்வதி.

"ஆமாம், ஸார் அடிக்கடி தமிழ்ப் பத்திரிகைகளில் கதைகள் கூட எழுதுவார்" என்றாள் கௌரி.

அடாடா! தேவலையே; நம்ம புகழ் இவ்வளவு தூரம் எட்டியிருக்கிறதே! எனக்குத் திருப்தியாகத்தான் இருந்தது.

"எனக்கும் ஒரு ஜர்னலிஸ்டு ஆகிவிட வேணுமென்றுதான் ஆசை” என்றாள் சரஸ்வதி.

"ரொம்பவும் சிரமமான தொழில்தான். பொறுமையை ரொம்பவும் சோதித்துவிடும்" என்றேன்.

"பெண்களுக்குத்தான் பொறுமை சுபாவமாகவே உண்டே?" என்றாள் சரஸ்வதி.

அவள் என்னை ஏதோ கேலி செய்கிறமாதிரி தோன்றிற்று எனக்கு. நானும் கேலியாகவே சொன்னேன். "இந்த நாட்களில் பெண்களுக்கு எது சுபாவமான குணம், எது சுபாவமல்லாத குணம் என்பதுதான் ஸ்திரமாகவேயில்லையே! பாம்பு சட்டையை உரித்துவிடுகிற மாதிரி, பெண்கள்தாம் தங்களுக்குரிய சுபாவத்தை எல்லாம் உரித்துத் தூர வைத்துவிடுகிறார்களே!”

"நீங்கள் பெண் கல்வியை ஆதரிப்பவர் அல்ல என்று தெரிகிறது என்றாள் கௌரி.

"கோபித்துக்கொள்ளக் கூடாது. உங்களை என்று சொல்லவில்லை நான்.

"இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது?" என்றாள் கௌரி.

"எங்களைப் பார்த்தால் எவ்வளவோ தேவலை, மற்றவர்களை எல்லாம் விட, என்று உங்களுக்குத் தோன்றுகிறது, இல்லையா?" என்றாள் சரஸ்வதி.

உண்மையிலேயே அந்தப் பெண் கெட்டிக்காரிதான். அவள் கண்களிலும் சிரிப்பிலும் வார்த்தைகளிலுந்தான் எத்தனை கேலி தொனித்தது!

நான் அந்தக் கேலியைக் கவனியாதவன் போலவே சொன்னேன்: "வெறும் கட்சி கட்டுவதற்காகச் சொல்லவில்லை நான். ஆனால் இப்போதெல்லாம் படித்து விட்டுப் பட்டம் பெற்றுக்கொண்டு வருகிற பெண்களைப் பார்த்த பிறகும் யாருக்காவது பெண் கல்வியை ஆதரிக்கத் தோன்றுமா?"

"தோன்றாதுதான். ஓரளவு வரையில் நீங்கள் சொல்வது உண்மை!" என்று ஒப்புக்கொண்டாள் கௌரி. சரஸ்வதியும் ஒப்புக்கொள்ளத்தான் ஒப்புக்கொண்டாள். "ஆனால் எல்லோரையுமே கல்வி வீணாக்கி விடுகிறதா? ஒரு சிலருக்கு ......"

நான் குறுக்கிட்டேன். "நன்கு படித்து. நல்ல அறிவு பெற்றவர்கள் ஒரு சிலர் தவிர வேறு யார் இப்படிச் சிந்தனை செய்து பார்க்கிறார்கள்?" என்றேன்.

"ஜர்னலிஸ்டாக இருக்க வேண்டுமானால் சமயம் பார்த்து முகஸ்துதி செய்யவும் தெரியணும்போல் இருக்கு!" என்றாள் சரஸ்வதி.

உண்மையிலேயே அவள் கெட்டிக்காரிதான்.

நான் சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டேன்.

ண்டி திருநாகேசுவரம் தாண்டி விட்டது. அந்த இரண்டு பெண்களும் தங்களுக்குள்ளேயே பல பழைய ஞாபகங்களைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினார்கள். அவளைத் தெரியுமா? இவளைத் தெரியுமா? அவள் என்ன செய்கிறாள்? இவள் கல்யாணம் செய்துகொண்டு விட்டாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இப்படியாக அவர்கள் இருவரும் தங்களுடன் படித்த பல மாணவிகளையும் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள். எனக்காகப் பேசிய மாதிரியும் தோன்றவில்லை. ஒன்றிலிருந்து ஒன்று என்று நிரம்பவும் இயற்கையாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான் கையில் வைத்திருந்த புஸ்தகத்தில் ஈடுபட்டிருப்பவன் போலப் பாசாங்கு செய்தேனே தவிர, என் கவனமெல்லாம் அவர்கள் பேச்சில்தான் இருந்தது. என்ன சுவாரசியமான பேச்சு! அடாடா! எவ்வளவு திவ்வியமான வம்பு! அவர்கள் பேச்சில் எத்தனை கதைகளுக்கு விஷயம் இருந்தது?

"எங்கள் ஹாஸ்டலில் வார்டனுடன் சண்டை போட்டுக் கொண்டாளே, சரோஜா......" என்று சரஸ்வதி சொன்னதும், எனக்கும் அவர்கள் பேச்சில் கலந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

"அந்த சரோஜாவை எனக்கும் தெரியும். பட்டணத்தில் .....ஹாஸ்டலில் தங்கிப் பி. ஏ. படித்தாளே?" என்றேன் நான்.

"ஆமாம்" என்றாள் சரஸ்வதி. ஒரு விநாடி கழித்துச் சிரித்துவிட்டுச் சொன்னாள்; "ஜர்னலிஸ்டுகளுக்குப் பொறுமை ரொம்ப வேணும் என்று சொன்ன உங்களுக்கே பொறுமை அதிகம் இல்லையே!"

"எனக்குப் பொறுமை ஏது? நான் கேவலம் ஆண். தவிரவும் நான் ஜர்னலிஸ்டு அல்ல. எப்பொழுதாவது விஷயம் அகப்பட்டால் மட்டுந்தான் எழுதுவேன். இதையெல்லாம் விடச் சிறந்த காரணமுண்டு நான் பொறுமை இழந்ததற்கு. அந்த சரோஜா லேடி வார்டனுடன் சண்டை போட்டதெல்லாம் பற்றி அந்த நாட்களில் பத்திரிகைகளிலெல்லாம் வெளிவந்தது. லேடி வார்டன் ராஜிநாமாச் செய்துவிட்டது வரையில் செய்தி வந்தது. ஆனால் அந்தச் சண்டையின் காரணம் பற்றி எதுவும் வெளி வரவில்லை......" என்றேன் நான்.

"சரோஜாவைத்தான் தெரியுமென்றீர்களே? கேட்டுப் பார்க்கிறதுதானே?" என்றாள் சரஸ்வதி.

ஏது, நம்மை மடக்கிவிடுவாள்போல் இருக்கிறதே என்று எண்ணிக்கொண்டே நான் சொன்னேன்: "சரோஜாவைக் கேட்காமலா? கேட்டுப் பார்த்தேன். அவள் சொன்னால்தானே! 'யாரோ ஒருத்தியைக் கொணர்ந்து வார்டனாகப் போட்டுவிட்டார்கள்' என்று திரும்பத் திரும்பச் சொன்னாளே தவிர வேறு எதுவும் சொல்லமாட்டேன் என்று சொல்லி விட்டாள்!"

"சரோஜாதான் அந்த லேடி வார்டனைப் படாதபாடு படுத்தி ராஜீநாமாச் செய்கிற வரைக்கும் கொண்டுவந்து விட்டு விட்டாள்" என்றாள் சரஸ்வதி. ஒரு விநாடி கழித்துத் தொடர்ந்தாள்: "விஷயம் என்னவோ ரொம்பச் சின்ன விஷயந்தான்; அதை இப்போது நினைத்தால்கூடச் சிரிப்புத்தான் வருகிறது" என்றாள். "சொல்லேன் " என்றாள் கௌரி.

இதற்குள் ரெயில் ஆடுதுறையில் நின்றது. எங்கள் வண்டியில் ஹாட்டும் ஸுட்டுமாக ஒரு மனிதர் ஏறிக்கொண்டார்.

ரெயில் ஆடுதுறையை விட்டுக் கிளம்புகிற சமயம் அவர் கதவுப் பக்கம் நின்றுகொண்டு வெளியே நின்ற யாருக்கோ ஏதோ உத்தரவுகள் கொடுத்துக்கொண் டிருந்தார். யாரோ உத்தியோகஸ்தர் என்று எண்ணினேன்.

சரஸ்வதி சொன்னாள்: "ரொம்பவும் சின்னக் கதைதான். நான் என்ன கதாசிரியையா? ஐந்து நிமிஷக் கதையை ஐந்நூறு பக்கத்தில் சொல்வதற்கு?" என்றாள்.

"ஏது? என் புஸ்தகம் எதையோ படித்திருக்கிற மாதிரியே பேசுகிறீர்களே !" என்றேன் நான்.

என்னைப் பார்த்துச் சிரித்தபடியே சரஸ்வதி சொன்னாள்: " சரோஜாவுக்கும் வார்டனுக்கும் சண்டை எப்படித் தொடங்கியது என்று எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை! ஏதோ ரொம்பவும் சர்வ சாதாரணமான ஒரு வாக்கு வாதம். அவ்வளவுதான்."

"உங்களுக்கே மறந்து போய்விட்டது என்றால் மிகவும் சின்ன விஷயமாகத்தான் இருக்கவேண்டும்" என்றேன் நான்.

சரஸ்வதி சொன்னாள்: "சரோஜாவுக்கு எப்பவுமே தலையில் கூந்தல் அதிகம் கிடையாது. எங்கள் ஹாஸ்டலில் பல மாணவிகளுக்குக் கூந்தல் நீளமாகவும் அழகாகவும் இருக்கும். அதைப் பற்றி ரொம்பவும் பெருமைப்பட்டுக்கொள்வார்கள். சரோஜாவும் அரை டஜன் சவுரிகளை வாங்கிவைத்து, மாறி மாறி அணிந்துகொண்டு சர்வ ஜாக்கிரதையாகத் தன் நீண்ட கூந்தலைப் பற்றிப் பெருமை பேசிக்கொள்வாள். சக மாணவர்களுக்கே இந்த விஷயம் தெரியாது. முதலில் எனக்கே தெரியாது.

இது வரையில் வண்டிக் கதவண்டையிலேயே நின்று கொண்டிருந்த ஆடுதுறையில் ஏறிய மனிதர் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டார். அவரும் சரஸ்வதி மேலே சொன்ன கதையைக் கேட்டார்.

சரஸ்வதி சொன்னாள்; "சரோஜாவுக்கும் லேடி வார்டனுக்கும் ஏதோ ஒரு சிறு விஷயம் பற்றி வாக்குவாதம் முற்றியது. சரோஜாவைச் சமாதானப்படுத்துகிற முயற்சியில் லேடி வார்டன் அவளுடைய தோள் பட்டையைப் பிடித்தாள். தோள் பட்டை அவள் கையில் அகப்படவில்லை. சரோஜா நகர்ந்துவிட்டாள். அவளுடைய நீண்ட கூந்தல்தான் லேடி வார்டன் கையில் அகப்பட்டது."

"......உ......ம் " என்றேன் நான்.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆசாமியும் கதையைச் சுவைத்துக் கேட்பது மாதிரி இருந்தது.

சரஸ்வதி சொன்னாள்; "அவ்வளவுதான். சரோஜாவின் சவுரி வார்டன் கையில் இருந்தது. அப்போது சரோஜாவுக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே! அடாடா! அடாடா!" என்றாள் சரஸ்வதி.

இதைச் சொல்லி விட்டு சரஸ்வதி தன் பின்னலை எடுத்து முன்னால் விட்டுக்கொண்டாள். கை விரல்களால் தடவி விட்டுக்கொண்டாள். அவள் பின்னல் சாட்டை மாதிரி நீளமாக மேகம் போல இருண்டிருந்தது.

சரஸ்வதி சொன்னாள்: "சரோஜாவுக்கு உண்மையிலேயே தலை மயிர் ரொம்பவும் குறைச்சல்தான். எலி வால் மாதிரி ஒரு சாண்தான் இருக்கும்!" என்றாள்.

தியாகராஜபுரத்தில் ஒரு நிமிஷம் நின்றுவிட்டு வண்டி கிளம்பியது.

"அப்புறம் ?" என்றேன் நான்.

"சரோஜா வார்டனைப் படாத பாடு படுத்தி வைத்துவிட்டாள். இந்தச் சனியன் விட்டால் போதும் என்று லேடி வார்டன் தானாகவே ராஜீநாமாச் செய்துவிட்டுப் போய் விட்டாள்."

"இந்த மெதுவான ரெயிலையும் இவ்வளவு வேகமாகப் போகச் செய்துவிட்டீர்களே, சபாஷ்! அந்த உதவிக்கு என் நன்றி! நான் வருகிற ஸ்டேஷன் நரசிங்கன்பேட்டையில் இறங்குகிறேன்" என்றேன்.

நான் சொன்னதைக் காதில் வாங்காமல் சரஸ்வதி சொன்னாள்: "அந்த சரோஜாவை நான் அதற்கப்புறம் பார்க்கவில்லை. என்ன செய்கிறாளோ தெரியவில்லை" என்று கூறித் தன் தலைப் பின்னலைப் பின்னால் எடுத்து விட்டுக்கொண்டாள்.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த, ஆடுதுறையில் ஏறிய ஆசாமி ஏதாவது சொல்லலாமா வேண்டாமா என்று தயங்குபவர் போலச் சிறிது நேரம் இருந்தார். பிறகு சொன்னார்: "அந்தச் சரோஜா என்னைக் கல்யாணம் செய்துகொண்டாள். நான் ஒரு தாவர நூல் ஆராய்ச்சியாளன் " என்று தம்மையே அறிமுகம் செய்துகொண்டார்.

"அப்படியா? உங்களைச் சந்தித்தது பற்றி ரொம்பச் சந்தோஷம். சரோஜா சௌக்கியமா யிருக்கிறாளா? ரொம்ப நாளாகச் சரோஜாவைப் பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆவல்!" என்று விசாரித்தாள் சரஸ்வதி.

ரெயில் நரசிங்கன் பேட்டையில் நின்றுகொண் டிருந்தது.

ஆடுதுறை ஆசாமி சொன்னார்: "இன்னமும் சரோஜாவுக்கு அதே எலி வால் பின்னல்தான்!" என்று.

கௌரிக்கும் சரஸ்வதிக்கும், "நமஸ்காரம். வரட்டுமா? நான் இங்கே இறங்குகிறேன்" என்றேன்.

கௌரி உட்கார்ந்தபடியே கை கூப்பினாள்.

சரஸ்வதி எழுந்து கை கூப்பினாள். அவள் பின்னல் கண்ணாடி ஜன்னல் தாழ்ப்பாளில் சிக்கிக்கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை. எழுந்த வேகத்தில் அவள் தலைச் சவுரி ஜன்னல் தாழ்ப்பாளிலேயே சிக்கி நின்றுவிட்டது.

சரஸ்வதிக்கும் சுயத் தலைமயிர் அதிகம் இல்லைதான். எலி வாலுக்கும் ஓரங்குலம் அதிகம் இருக்கலாம்.

இதை எல்லாம் கவனித்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் நரசிங்கன்பேட்டையில் இறங்கி நான் என் வழி நடந்தேன்.


"https://ta.wikisource.org/w/index.php?title=ஆடரங்கு/சரோஜாவின்&oldid=1526870" இலிருந்து மீள்விக்கப்பட்டது