உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடரங்கு/வாழ்க்கைப்

விக்கிமூலம் இலிருந்து

வாழ்க்கைப் பந்தயத்தில்

ராஜாவும் சிவசங்கரனும் முப்பது வருஷங்களாகச் சிநேகிதர்கள். அவர்கள் இருவரும் அந்தக் காலத்தில் ஒரு வகுப்பில் அல்ல, ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம். படிப்பிலும் ஒரு வகுப்பு வித்தியாசம். ராஜா பெரியவன் - ஆறாவது பாரத்தில் வாசித்துக்கொண் டிருந்தான். சிவசங்கரன் ஐந்தாவது பாரத்தில் வாசித்துக்கொண்டிருந்தான்.

பல வருஷங்களுக்குப் பிறகு அந்த நண்பர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். பேசுவதற்கு நிறையவே இருந்தன விஷயங்கள். முப்பது வருஷங்களில் அவர்கள் ஏழெட்டுத் தடவைகள் தான் சந்தித்திருப்பார்கள். கடைசியாகச் சந்தித்தது பத்து வருஷங்களுக்கு முன், 1940 வாக்கில், ஒருவருக்கு மற்றவருடைய க்ஷேமலாபங்கள் பொதுவாகத் தெரியும். பரஸ்பரம் நண்பர்கள் மூலமாக விசாரித்து அறிந்துகொள்வார்கள். கடிதம் எழுதிக்கொள்ளுகிற வழக்கம் மட்டும் கிடையாது. ஆனால் ஹிட்லர் யுத்தம் தொடங்கியதற்குப் பின் அவர்களுடைய தொடர்பு விட்டுப் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு சென்றுவிட்ட வருஷங்களில் அவர்கள் பரஸ்பர நண்பர்களில் கூட யாரையும் சந்திக்கச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. பேசுவதற்கு உண்மையிலேயே விஷயம் நிறையத் தான் இருந்தது. இளமைப் பருவத்து நினைவுகளுக்கு நடு வயதில்தான் - அதாவது நாற்பது வயது வரும்போதுதான்-சக்தி அதிகம் பிறப்பது போலத் தோன்றுகிறது. பலதரப்பட்ட சிந்தனைகளின் வேகம் மூண்டு மூண்டு அதிகப்படுவது அந்த நடு வயதுக் காலத்தில்தான்.

பள்ளியிலும் கலாசாலையிலும் இந்த இரண்டு நண்பர்களும் ஏறக் குறைய ஒரே படியில் இருந்தவர்கள். அவரவர்கள் வகுப்பில் அவரவர்கள் முதல்தான். அதாவது பள்ளியிலும், பிறகு கலாசாலைக் கடைசி வகுப்பை எட்டும் வரையிலும் இருவருக்குமே படிப்பிலே ஆர்வம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இன்டர்மீடியட் பாஸ் பண்ணிவிட்டு ராஜா பி.ஏ. வகுப்பில் சேர்ந்தான். அதற்கடுத்த வருஷம் சிவசங்கரன் அதே கலாசாலையில் வந்து ஆனர்ஸ் வகுப்பில் சேர்ந்தான். இருவருக்குமே கலாசாலையில் படிப்பில் கடைசி வருஷம் சப்பிட்டுவிட்டது. ராஜா இரண்டு வருஷம் பி.ஏ. யில் தவறிவிட்டு மூன்றாவது வருஷந்தான் தேறினான். சிவசங்கரன் ஆனர்ஸ் பரீக்ஷை முதல் வருஷம் பரீக்ஷை கொடுக்காமல் தள்ளிவிட்டு, மறு வருஷம் பரீக்ஷை கொடுத்தும் பாஸ் பண்ணாமல் பி. ஏ. டிக்ரியே பெற்றான். இரண்டு நண்பர்களுமே ஒரே கான்வகேஷனில் தான் பட்டம் பெற்றார்கள். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு நடந்த கல்யாணங்களும் ஒரே வருஷத்தில் ஒரே மாதத்தில் ஒரே முகூர்த்தத்தில்தான் நடந்தன; வெவ்வேறு ஊர்களில் நடந்தன என்பதால், ஒருவன் கல்யாணத்துக்கு மற்றவன் போகவில்லை.

ராஜாவுக்கு ஒரு தமக்கை மட்டும் உண்டு. சிவசங்கரனுக்கு ஒரு தங்கை மட்டும் உண்டு. அவர்கள் இருவருடைய தகப்பன்மார்களும் கூட ஒரே மாதிரியான சர்க்கார் உத்தியோகங்களில் ஒரே மாதிரியான சம்பளங்கள் வாங்கிக்கொண் டிருந்தார்கள். பிரதி வருஷமும் ஒரே மாதிரியான சம்பள உயர்வும் மூன்று வருஷங்களுக்கு ஒரு தரம் என்று ஒரே மாதிரியான மாற்றல்களும் பெற்று உத்தியோகம் பார்த்து வந்தார்கள். பொருளாதாரத் துறையில் இரண்டு குடும்பங்களுமே சரி சமம் என்று தான் சொல்லவேண்டும். கிராமத்தில் இரு குடும்பங்களுக்கும் சிறு வீடுகளும் ஏதோ கொஞ்சம் நிலபுலன்களும் இருந்தன.

ராஜாவுடைய தகப்பனாரும் சிவசங்கரனுடைய தகப்பனாரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில்தான் ரிடையரானார்கள். சற்றேறக்குறைய ஒரே மாதிரியான பென்ஷனும், இன்ஷ்யூரன்ஸ் பணமுந்தான் அவர்களுக்குக் கிடைத்தன, அந்த நாட்களில் அதாவது 1932, 1933 என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஐயாயிரம் ரொக்கமும் மாதாந்திரப் பென்ஷனும் ஒரே பிள்ளையும் கொண்ட குடும்பங்களைப் பணக்காரக் குடும்பங்கள் என்றுதான் பெருமையுடன் ஊரார் சொல்வார்கள்.

ராஜாவுக்கும் சிவசங்கரனுக்கும் கல்யாணமான இடங்களும் ஏதோ நல்ல இடங்கள்தாம். பரீஷை போய்விட்டது என்றாலுங்கூட இருவருக்குமே கெட்டிக்காரர்கள் என்று பெயர் உண்டு. இருவருமே குமாஸ்தாவாகப் போவது என்கிற ஆசையை விட்டொழித்தவர்கள். யாருக்காவது அடங்கி அடிமைப்பட்டுக் கைகட்டிச் சேவகம் செய்வது தங்கள் சுயமரியாதைக்கு உகக்காது என்று இருவருமே தீர்மானம் செய்து விட்டவர்கள். இருவருமே சுயேச்சையான வாழ்வை விரும்பினார்கள். சிவசங்கரன் ஏதோ சிறு தொழில் செய்வதில் முனைந்தான். ராஜா எழுத்தாளனானான்.

வாழ்க்கைப் பந்தயத்தை அன்றுவரை ராஜாவும் சிவசங்கரனும் ஒரேவிதமான அநுகூல பிரதிகூலங்களுடன் ஒரேவிதமான சாதன சாதனைகளுடன் தொடங்கினார்கள் என்கிற ஞாபகத்துடன் அவர்களுடைய பிற்கால வாழ்க்கையைக் கவனிக்க வேண்டியதாகிறது. காலம் 1933 முதல் 1949 வரை என்றும் கவனத்தில் வைக்கவேண்டும்.

சிவசங்கரன் கையில் அகப்பட்ட, தகப்பனார் கண்ணில் ரத்தம் தெறிக்கக் கொடுத்த முதலை வைத்துக்கொண்டு ஏதேதோ தொழில்கள் செய்தான். சற்றேறக்குறைய ஆறேழு வருஷங்களில் கையிலிருந்த பொருள் பூராவுமோ அல்லது முக்கால்வாசியுமோ கரைந்துவிட்டது. ராஜாவினுடைய நிலைமையுமே சற்றேறக்குறைய அதுதான். ஏழு வருஷங்களில் எழுதிக் குவித்ததெல்லாம் ஆத்ம திருப்திக்குத்தான் உபயோகப்பட்டது. பெயரும் புகழும் கிடைத்திருக்கலாம்; அதுபிற்காலத்தில் பெரு முதலாகப் பலன் தரலாம்? அதுபற்றி நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. பொருளீட்டாமற் சாப்பிட்ட செல்வம் கரைந்துவிட்டது. அதாவது ராஜாவின் தகப்பனார் நாற்பது வருஷங்கள் கஷ்டப்பட்டுச் சேர்த்ததெல்லாம் பூராவும். இல்லாவிட்டாலும் முக்கால் வாசியும் போய்விட்டது.

1940-ல் கடைசித் தடவையாக நண்பர்கள் இருவரும் சந்தித்தபோது நிலைமை இதுதான். இருவருக்குமே சற்றேறக் குறைய வயது முப்பதாகிவிட்டது. வாழ்விலே இருவரும் தோல்வியை - பொருளாதாரத் துறையில் தோல்வியை - எதிர்பார்த்து நின்றனர். அப்படி ஒன்றும் மகத்தான தோல்வியல்ல என்றாலும் தோல்விதான். வாழ்க்கையில் மற்றதெல்லாம் இருந்தென்ன? பொருளீட்டத் தெரியாதவன், தோல்வியுற்றவன்தானே!

ராஜா அந்தத் தடவை சிவசங்கரனைத் தேடிக்கொண்டு அவன் வீட்டுக்குப் போன சமயம் அவன் வீட்டிலில்லை. அவனுடைய தகப்பனார் மட்டும் இருந்தார். தன் பிள்ளையின் ஆப்த நண்பனிடம் சிவசங்கரனின் போக்கை எல்லாம் சவிஸ்தாரமாகக் கூறி அழாத குறையாக வருந்தினார், அவன் தகப்பனார். 'பணம் போய்விட்டதென்பதுகூட எனக்குப் பெரிதல்ல. பணம் அப்படி ஒன்றும் சாசுவதமல்ல. ஆனால் பணம் போனதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்களைத் தெரிந்துகொள்ளாதவனை அறிவாளி என்று எப்படிச் சொல்வது?' பத்திரிகைகளில் பெயர் பிரமாதமாக அடிபடுகிறதே, அதனால் ராஜா அறிவாளியாக இருப்பான் என்பது அவர் எண்ணம்போலும்! 'வருகிறது வருகிறது என்றிருந்த சண்டையும் வந்துவிட்டது. நிலைமை இன்னும் மோசமாகப் போகப்போகிறது! அதைத் தானாகவும் உணராமல், நான் சொன்னாலும் கேட்டுக்கொள்ளாமல் அவஸ்தைப்படப் போகிறான்' என்றார் சிவசங்கரனின் தகப்பனார்.

அதை ராஜா தன் நண்பனிடம் சொல்லவில்லை. பெரியவர் சொன்னதைத் தனக்கும் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இப்போது 1950-ல் சிவசங்கரன் தன்னைத் தேடிக்கொண்டு வந்தபோது அதை எல்லாம் ஞாபகம் வைத்துக்கொண்டே பேசிக்கொண் டிருந்தான். ஆனால் அதேபோல ஒரு ஞாபகம் சிவசங்கரனின் மனத்திலும் உறுத்திக்கொண் டிருந்தது என்பது பாவம், ராஜாவுக்குத் தெரியாது. சிவசங்கரனை ராஜா அந்தப் பத்து வருஷங்களிலும் சந்திக்கவில்லையே தவிர அவன் தகப்பனார் சந்தித்திருந்தார். ராஜாவிடம் அன்று சிவசங்கரனின் தகப்பனார் பேசிய மாதிரியே அழாத குறையாக ராஜாவின் தகப்பனாரும் சிவசங்கரனிடம் பேசியிருந்தார் என்பது பாவம், ராஜாவுக்குத் தெரியவே தெரியாது. இப்போது அதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் சிவசங்கரனும் தன்னுடைய முப்பது வருஷத்து நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தான்.

வீட்டில் குழந்தை குட்டிகளின் எண்ணிக்கை, சுக சௌகரியங்கள் எல்லாவற்றையும் பற்றிப் பொதுவாகப் பேசி ஆன பிற்பாடு சிவசங்கரன் சொன்னான்: "உன் கதைகளை எப்பவாவதுதான் பத்திரிகைகளில் பார்க்கிறேன்" என்று.

"ஆமாம்; எப்பவாவதுதான் ஏதாவது எழுதுகிறேன்" என்றான் ராஜா.

"ஏன் அதிகம் எழுதக் கூடாதோ? எழுதலாமே; பத்திரிகைகள்தாம் அதிகம் இருக்கின்றனவே!'

"பத்திரிகைகளும் அதிகந்தான். எழுதுகிறவர்களும் அதிகந்தான்" என்றான் ராஜா.

"ஆனாலும் உன்னைப் போன்ற எழுத்தாளன்......"

"இதோ பார், சங்கரா ! ஒரு விஷயம். நான் எழுதுவது யாருக்கு பிடிக்கிறது என்கிறாய்? யாருக்குப் புரிகிறது என்கிறாய்?' என்றான் ராஜா.

"நீயாகச் சொல்லவே, நான் சொல்கிறேன்; கோபித்துக் கொண்டு விடாதே !" என்றான் சிவசங்கரன்.

"சொல்லு."

சிவசங்கரன் சற்றுத் தயங்கினான்; பிறகு சொன்னான்: "நான் கூட உன்னைச் சந்திக்கும்போது கேட்க வேண்டும் என்று நினைத்தேன்." ஒரு பத்திரிகையின் பெயரைச் சொல்லி, "அந்தப் பத்திரிகையில் உன் கதை ஒன்றைப் படித்தேன். அதில் பல விஷயங்கள் முதல் தடவை படிக்கும்போது. எனக்கே புரியவில்லை. நான் இரண்டாவது தடவை படித்துப் பல விஷயங்களைத் தெளிவாக்கிக்கொண்டேன். சாதாரணமாகப் பத்திரிகை படிப்பவர்கள் இரண்டாவது தடவை படிப்பார்களா? அதுவும் தெளிவு இல்லாததை இரண்டாவது தடவை படிப்பார்களா?

ராஜா பதில் சொல்லவில்லை. ஓர் அசட்டுச் சிரிப்புடன் உட்கார்ந்திருந்தான்.

சிவசங்கரன் தொடர்ந்து சொன்னான்: "அந்தப் பத்திரிகையின் அதே இதழில் உள்ள மற்ற விஷயங்களையும் வேலை மெனக்கெட்டுப் படித்துப் பார்த்தேன். உன் கதை அந்தப் பத்திரிகையில் மற்ற விஷயங்களுடன் பொருந்தவில்லை என்று தான் எனக்குத் தோன்றிற்று."

ராஜா சிரித்தான். அந்தச் சிரிப்பு, துக்கம் நிறைந்த சிரிப்பாகத் தோன்றியது சிவசங்கரனுக்கு. "நானே வாழ்க்கையில் அவ்வளவாக மற்ற மனிதர்களுடன் பொருந்தாத மனிதனாகி விட்டேன்! என்னுடைய வாழ்வில் நான் பொருந்தாதவன். என் எழுத்தும் என் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கிறது என்றான் ராஜா.

“உன் அப்பாவைப் பார்த்தேன் நடுவில் ஒருதரம்" என்றான் சிவசங்கரன்; பேச்சை மாற்றுகிற உத்தேசத்துடன்.

"அப்படியா! அப்பா சொல்லவே யில்லையே."

"அப்பா சௌக்கியந்தானே ?"

"சௌக்கியத்தான். உன் அப்பா..."

"என் அப்பா இறந்து பதினெட்டு மாசங்கள் ஆகிவிட்டன " என்றான் சிவசங்கரன்.

"அடாடா அப்படியா? எனக்குத் தெரியாதே!" என்ஜான் ராஜா. என் அப்பாவுக்கு இப்போது எழுபதாகிவிட்டது. உன் அப்பாவுக்கும் எழுபதிருக்கும் இல்லையா?

"அவர் இறக்கும்போது அறுபத்து ஒன்பது" என்றான் சிவசங்கரன்.

"பாவம்! அவரும் ரொம்பவும் கஷ்டப்பட்டார். நான் 1940-ல் பார்த்ததுதான். அதற்குப் பிறகு அவரைப் பார்க்கவில்லை. அப்போது தன் பிள்ளையைப்பற்றி ரொம்பவும் துக்கமாக என்னிடம் குறை கூறிக்கொண் டிருந்தார்" என்றான் ராஜா.

"ஆனால் அவர் இறக்கும்போது அவருக்கு ஒரு குறையுமில்லை. மிகவும் சந்தோஷத்துடன்தான் இறந்து போனார்" என்றன் சிவசங்கரன்.

"அதைக் கேட்க எனக்கும் சந்தோஷந்தான்" என்றான் ராஜா.

"ஆமாம் தாம் ஆயுள் முழுவதும் கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்தை ஆறு வருஷங்களில் அழித்துவிட்ட அதே பிள்ளை ஏழெட்டு வருஷங்களில் அதைப்போல நாலு மடங்கு சம்பாதித்து விட்டான் என்று அவருக்குப் பரம திருப்தி. 'என் பிள்ளையைப் போலுண்டா!" என்று பெருமையுடன்தான் செத்தார்." என்றான் சிவசங்கரன்.

"ரொம்பவும் திருப்தி எனக்கு, இதைக் கேட்பதற்கு" என்றான் ராஜா.

"தன் பிள்ளை சின்னக் கார் வாங்கி இரண்டு வருஷம் ஓட்டிவிட்டு, அதை விற்றுப் பெரிய கார் வாங்கி ஓட்டத் தொடங்கிய பின்தான் இறந்தார்" என்றான் சிவசங்கரன். அதை அவன் தன் பெருமைக்காகக் கூறவில்லை. மிகவும் சாதாரணமாக அடக்கமாகத்தான் கூறினான்.

ராஜா மௌனமாக இருந்ததைக் கண்டு சிவசங்கரன் சொன்னான். "நான் மிலிட்டரி காண்டிராக்டுகள் எடுத்தேன். ஏதோ எப்படியோ பணம் சேர்ந்தது. ஜாக்கிரதையாக விட்டுவிடாமல் பார்த்துக்கொண்டு விட்டேன்" என்றான் சிவசங்கரன். தற்பெருமையாக இதுவும் சொன்னான். "என் தகப்பனார் நாலுவருஷங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தார்."

ராஜா ஒரு விநாடி யோசித்து விட்டுச் சொன்னான். “இப்போதிருக்கிற நிலைமையில், என் தகப்பனார் சந்தோஷத்துடன் இறப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை."

பிறகு நண்பர்கள் இருவரும் பழசு புதுசு எல்லாவற்றையும் பற்றி வெகு நேரம் பேசிக்கொண் டிருந்தார்கள். சிவசங்கரன் விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது ராஜா அவனுடன் பேசிக்கொண்டே வெளியே வந்தான். வெளியே நின்றது உண்மையிலேயே பெரிய கார்தான். சிவசங்கரனுடைய தகப்பனார் உண்மையிலேயே சந்தோஷமாகத்தான் இறந்திருப்பார் என்று ராஜாவுக்குத் தோன்றியது.


"https://ta.wikisource.org/w/index.php?title=ஆடரங்கு/வாழ்க்கைப்&oldid=1526868" இலிருந்து மீள்விக்கப்பட்டது