திருமந்திரம்/ஐந்தாம் தந்திரம்
ஐந்தாம் தந்திரம்
[தொகு]1.சுத்தசைவம்
[தொகு]1419.
ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடின்
மேருவும் மூவுல காளி யிலங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.
1420.
சத்தும் அசத்தும் சதசத்துந் தான்கண்டு
சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த
சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்ற
நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே.
1421.
கற்பனை கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
தொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.
1422.
வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்தம் போதாந்த மாகப் புனஞ்செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.
2.அசுத்தசைவம்
[தொகு]1423.
இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத்
திணையார் இணைக்குழை யீரணை முத்திரை
குணமார் இணைக்கண்ட மாலையுங் குன்றா
தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே
1424.
காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்
தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து வுபதேச மார்க்கராய்
ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.
1425.
கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டா யரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.
1426.
ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணென் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறுங்
கோனொடு தன்னையுங் காணுங் குணத்தரே.
3.மார்க்கசைவம்
[தொகு]1427.
பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதனம் மாஞான சாதனம்
துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே.
1428.
கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வப்பத்த நித்தனே.
1429.
ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன்
றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே
1430.
சுத்தம் அசுத்தந் துரியங்க ளோரேழும்
சத்தும் அசத்துந் தணந்த பராபரை
உத்த பராபரை யுள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாயெங்கு மாமே.
1431.
சத்தும் அசத்துந் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்துந் தெரியாச் சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சக்தியுள் மூழ்கினார்
சித்தியும் அங்கே சிறந்துவர் தானே.
1432.
தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே.
1433.
பூரணத் தன்னிலே வைத்தற்ற வப்போத
மாரண மந்த மதித்தானந் தத்தோடு
நேரென ஈராறு நீதி நெடும்போகம்
காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே
1434.
மாறாத ஞான மதிப்பற மாயோகம்
தேறாது சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே.
1435.
வேதாந்தங் கண்டோர் பிரமவித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மில்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணமன்ன சைவர் உபாயமே.
1436.
விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காம னெனப்படும்
அண்ணலைச் சென்றணு காப்பசு பாசமே.
1437.
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகார நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.
4.கடுஞ்சுத்தசைவம்
[தொகு]1438.
வேடங் கடந்து விகிர்தன்றன் பான்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்று
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடுஞ் சிவபோ தகர்சுத்த சைவரே.
1439.
உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்தும்
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே.
1440.
சுத்தச் சிவனுரை தானதில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
அத்தகை யான்மா அரனை அடைந்தத்தால்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.
1441.
நானென்றுந் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதம்
தானென்று நானென்ற தத்துவம் நல்கலால்
தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே
1442.
சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.
5.சரியை
[தொகு]1443.
நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்
றாய்ந்திடுங் காலங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே.
1444.
உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்பெறு மாவா கனப்புறப் பூசை
செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே.
1445.
நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மானென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே
1446.
பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்
அத்தகு தொண்டரருள்வேடத் தாகுவோர்
சுத்த இயமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானத் சென்றெய்து வோர்களே
1447.
சார்ந்தமெயஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே.
1448.
கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத் துயர்பூசை யாமே.
1449.
சரியாதி நான்குந் தருஞானம் நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.
1450.
சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபி டேகமே.
6.கிரியை
[தொகு]1451.
பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண்
டெத்திக்கி லவரில்லை என்ப தின்மலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணு மே.
1452.
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானூறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.
1453.
கோனக்கன் றாயே குலைகழல் ஏத்துமின்
ஞானககன் றாகிய நடுவே யுழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழும்
மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே.
1454.
இதுபணித் தெண்டிசை மண்டல மெல்லாம்
அதுபணி செய்கின் றவளொரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதபணி செய்வது பத்திமை காணே
1455.
பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தால்
சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே
1456.
அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன்
செம்பொன் செய்மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள்
என்பினுட் சோதி இலங்குகின் றானே.
7.யோகம்
[தொகு]1457.
நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலு மாமே.
1458.
வழிதோ றூாழி உணர்ந்தவர்க் கல்லது
ஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான்
ஆழி அமரும் அரியயன் என்றுளார்
ஊழி முயன்றும் ஒருச்சியு ளானே.
1459.
பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே.
1460.
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.
1461.
எழுத்தொடு பாடலும் எண்ணென் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே.
1462.
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.
1463.
பேணிற் பிறவா உலகருள் செய்திடுங்
காணில் தனது கலவியு ளேநிற்கும்
நாணில் நரக நெறிக்கே வழிசெயும்
ஊனில் சுடுமங்கி உத்தமன் தானே.
1464.
ஒத்தசெங் கோலர் உலப்பிலி மாதவர்
எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாம்
அத்தன் இவனென்றே அன்புறு வார்களே.
1465.
யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர்
ஆகத் தகுகிரி யாதி சரியையாம்
தாகத்தை விட்ட சரியையொன் றாமொன்றுள்
ஆதித்தன் பத்தியுன் அன்புவைத் தேனே.
1466.
யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே யுற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே.
8.ஞானம்
[தொகு]1467.
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.
1468.
சத்தமுஞ் சத்த மனனுந் தருமனம்
உய்த்த வுணர்வும் உணர்த்தும் அகந்தையும்
சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையும்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே
1469.
தன்பால் உலகுந் தனக்கரு காவதும்
அன்பா லெனக்கரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே
1470.
இருக்குஞ் சேம இடம்பிரம மாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகம்
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்துணர்ந்த தோர்க்கே
1471.
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே.
1472.
ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
ஏனம் விளைந்தெதி ரேகாண் வலிதொறுங்
கூனல் மதிமண்டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.
1473.
ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமாம்
மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து
மேனியற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுத்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.
1474.
ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.
1475.
நண்ணிய ஞானத்தின் ஞானதி நண்ணுவோன்
புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய ஞானங் கரைஞானங் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.
1476.
ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேக்மே நற்குரு பாதமே.
9.சன்மார்க்கம்
[தொகு]1477.
சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத்
தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.
1478.
சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத்து ளார்க்கு வகுத்துரைத் தானே.
1479.
தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத்
தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே.
1480.
தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சிவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதார் தீரார் பிறப்பே.
1481.
தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று
மோனம தாமொழிப் பான்முத்த ராவதும்
ஈனமில் ஞானானு பூதியில் இன்பமுந்
தானவ னாயுற லானசன் மார்க்கமே.
1482.
சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ்
சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தெரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.
1483.
சன்மார்க்க சாதனத் தான்ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க் காய்நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே.
1484.
சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப்
பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால்
நன்மார்க்கத் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.
1485.
அன்னிய பாசமும் ஆகுங் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.
1486.
பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்
தொசியாத வுண்மைச் சொருபோ துயத்துற்
றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே.
1487.
மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கஞ்சன் மார்க்க மெனு நெறி வைகாதோர்
மார்க்கங்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே.
10.சகமார்க்கம்
[தொகு]1488.
சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்க ஞானத் துறுதியு மாமே.
1489.
மருவுந் துவாதச மார்கமில் லாதார்
குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடார்
வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும்
உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே.
1490.
யோகச் சமாதியின் உள்ளே யகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி
யோகச் சமாதியின் உள்ளே யுளசக்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே.
1491.
யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடாத்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.
1492.
ஆதார சோதனை யானாடி சுத்திகள்
மேதாதி யீரெண் கலந்தது விண்ணொளி
போதா லயத்துப் புலன்கரணம்புந்தி
சாதா ரணங்கெட லாஞ்சக மார்க்கமே.
1493.
பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி யெறிவ னயிர்மன வாளால்
கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன்
வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.
1494.
வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்
உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.
11.சற்புத்திரமார்க்கம்
[தொகு]1495.
மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாஞ்சக மார்க்கஞ் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே.
1496.
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்ட டன்னமும் நீசுத்தி செய்தன்மற்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.
1497.
அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
மறுகா நரையன்னத் தாமரை நீலம்
குறுகா நறுமலர் கொய்வன கண்டும்
சிறுகால் அறநெறி சேரகி லாரே.
1498.
அருங்கரை யாவது அவ்வடி நீழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை
வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம்
ஒருங்கரை யாயுல கேழினொத் தானே.
1499.
உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்து பரிக்கிலப் பான்மைய னாமே.
1500.
நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தொறும்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.
1501.
திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை
உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே.
12.தாசமார்க்கம்
[தொகு]1502.
எளியனல் தீப மிடல்மலர் கொய்தல்
அளிதின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.
1503.
அதுவிது வாதிப் பரமென் றகல்வர்
இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடும்
அதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.
1504.
அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.
1505.
அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந் துண்ணின் றடிதொழக்
கண்ணவ னென்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.
1506.
வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசத் திருந்த நினைவறி யாரே.
13.சாலோகம்
[தொகு]1507.
சாலோக மாதி சரியாதி யிற்பெறும்
சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையாம்
மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்
பாலோகம் இல்லாப் பரனுரு வாமே.
1508.
சமயங் கிரியையிற் றன்மனங் கோயில்
சமய மனுமுறை தானே விசேடஞ்
சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்
சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.
14.சாமீபம்
[தொகு]1509.
பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
பாச மருளான தாகும்இச் சாமீபம்
பாசஞ் சிவமான தாகும்இச் சாரூபம்
பாசங் கரைபதி சாயுச் சியமே.
15.சாரூபம்
[தொகு]1510.
தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்
தங்குஞ் சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா
அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக விழிவற்ற யோகமே.
1511.
சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலம தாகுஞ் சராசரம் போலப்
பயிலுங் குருவின் பதிபுக்க போதே
கயிலை இறைவன் கதிர்வடி வாமே
16.சாயுச்சியம்
[தொகு]1512.
சைவஞ் சிவனுடன் சம்பந்த மாகுதல்
சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல்
சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல்
சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே.
1513.
சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்
சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதல்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியமனத் தானந்த சத்தியே.
17.சத்திநிபாதம் மந்ததரம்
[தொகு]1514.
இருட்டறை மூலை யிருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புரிந் தாளே.
1515.
தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்புல னாயறி வார்க்கமு தாய்நிற்குந்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புல னாடிய கொல்லையு மாமே.
1516.
இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே யாதி யருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள் நீங்கா இன்பப் புலம்பயின் றானே.
1517.
இருள்சூ ழறையில் இருந்தது நாடிற் பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போல்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.
மந்தம்
[தொகு]1518.
மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே.
1519.
கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.
1520.
செய்யன் கரியன் வெளியன்நற் பச்சையன்
எய்த வுணந்தவர் எய்யலர் இறைவனை
மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.
1521.
எய்திய காலங்கள் எத்தனை யாயினுந்
தையலுந் தானுந் தனிநா யகமென்பர்
வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.
1522.
கண்டுகொண் டோமிரண் டுந்தொடர்ந் தாங்கொளி
பண்டுபன் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.
தீவிரம்
[தொகு]1523.
அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும்
உண்ணிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக்
கண்ணுற்று நின்றக் கனியது வாகுமே,
1524.
பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கும் வழிபட வைக்கும்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.
1525.
தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே.
1526.
நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகினும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத வொருவன்
அணுகும் உலகெங்கு மாவியு மாமே.
தீவிரதரம்
[தொகு]1527.
இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமென ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.
1528.
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவன் செய்கின்ற குழலியை உன்னி
அரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி வாழும் பராபரை தானே.
1529.
மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சால விளங்குந் தனிச்சுடர் அண்ணலுள்
ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்
தூனை விளக்கி யுடனிருந் தானே.
18.புறச்சமய தூஷணம்
[தொகு]1530.
ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.
1531.
உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன்
வள்ளல் தலைமகன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே,
1532.
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்
குள்ளததும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.
1533.
ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே.
1534.
சிவமல்ல தில்லை யறையே சிவமாந்
தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்
கவமல்ல தில்லை அறுசமயங்கள்
தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே.
1535.
அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முண்ணின் றழியு முயன்றில ராதலான்
மண்ணின் றொழியும் வகையறி யார்களே.
1536.
சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை யாமே.
1537.
நூறு சமயம் உளவா நுவலுங்கால்
ஆறு சமயமவ் வாறுட் படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா
வீறு பரநெறி யில்லா நெறியன்றே.
1538.
சுத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவனெங்குத் தோய்வுற்று நிற்கின்றான்
குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டிப்
பித்தேறி நாளும் பிறந்தறிப் பாரே.
1539.
மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும்
முயங்கி யிருவினை முழைமுகப் பாய்ச்சி
இயங்கிப் பெறுவரே லீறது காட்டில்
பயங் கெட்டவர்க்கோர் பரநெறி யாமே.
1540.
சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயங்கிய மானுடராமவர்
காயம் விளைக்குங் கருத்தறி யார்களே.
1541.
வழியிரண் டுக்குமோர் வித்தது வான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
கழியது வாளன்றன் சொல்வழி முன்னின்
றழி வறி வார்நெறி நாடதில் லாரே.
1542.
மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்
நாதம தாக அறியப் படுநந்தி
பேதஞ்செய் யாதே பிரான் என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி யாகிநின் றானே.
1543.
அரனெறி யப்பனை யாதிப் பிரானை
உரநெறி யாகி யுளம்புகுந் தானைப்
பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரநெறி யாவிடிற் பல்வகைத் தூரமே.
1544.
பரிசற வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழுந்
துரிசற நீதினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே.
1545.
ஆன சமயம் அது இது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுபொழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த வுருவது வாமே.
1546.
அந்நெறி நாடி அமரர் முனிவருஞ்
சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின்
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.
1547.
உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
அறுமா றதுவான வங்கியு ளாங்கே
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.
1548.
வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
கழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.
1549.
வழி சென்ற மாதவம் வைகின்ற போது
பழி செல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்
டூழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே.
19.நிராகாரம்
[தொகு]1550.
இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.
1551.
பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.
1552.
இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும்
அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.
1553.
தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் றானுண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பார்கள்
நீரறி வார்நெடு மாமுகி லாமே.
1554.
அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டுங் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.
1555.
மன்னும் ஒருவன். மருவு மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.
1556.
ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழித் தார்களே.
20.உட்சமயம்
[தொகு]1557.
இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமையங்க ளாறுந்தன் தாளிணை நாட
அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே.
1558.
ஒன்றது பேரூர் வழியா றதற்குள
என்றது போல இருமுச் சமயமும்
நனறிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே.
1559.
சைவப் பெருமைத் தனிநா யகன் தன்னை
உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.
1560.
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்
பவனவன் வைத்த பழவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே.
1561.
ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதங்
காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமாறவ் வாதாரப் பூங்கொடி யாளே.
1562.
அரனெறி யாவ தறிந்தேனும் நானுஞ்
சிரநெறி தேடித்திரிந்த அந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.
1563.
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி யாமே.
1564.
ஈரு மனத்தை யிரண்டற வீசுமின்
ஊருஞ் சகாரத்தை ஓதுமின் ஓதியே
வாரு மரனெறி மன்னியே முன்னியத்
தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே.
1565.
மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
நயக்குறி காணில் அரனெறி யாமே.
1566.
ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி
பாய்ந்துணர் வார்அரன் சேவடி கைதொழு
தேர்ந்துணர் செய்யவோர் இன்பமு மாமே.
1567.
சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத்து ளார்க்கு வகுத்துவைத் தானே.
1568.
இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே.
1569.
ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாயிருர்
ஆமே பிரானுக் கதோமுக மாறுள
தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.
1570.
ஆதிப் பிரானுல கேழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களு மாய் நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கட் டெய்வமும் அந்தமும் மாமே.
1571.
ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி
ஆய்ந்தறித் தேனவன் சேவடி கைதொழு
ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே.
1572.
அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை
அறியவொண் ணாத அறுவகை யாக்கி அறியவொண் ணாத அறுவகைக் கோசத்
தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே.